By 24 December 2020 0 Comments

அமெரிக்காவிடம் கடும் நிபந்தணை – சிங்களப் புத்திஜீவிகள் பரிந்துரை!! (கட்டுரை)

மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்து 2015ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தை அமைப்பதற்குப் பாடுபட்டிருந்த பொது அமைப்புகளில் ஒன்றான தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெகான் பெரேரா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சிறந்த தலைவர் என்ற தொனியில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு நம்பிக்கையளித்து வருகிறார்.

இலங்கைத் தீவில் வாழும் சிறுபான்மை மக்கள் என்ற சொல்லாடல் மூலம் அதாவது தமிழ், முஸ்லிம் மக்கள் என்று குறிப்பிடாமல் சிறுபான்மை மக்களின் சின்னச் சின்னப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணக்கூடிய வகையில் கோட்டாபயவுடன் பேச்சு நடத்த முடியும் என்ற கருத்தை ஜெகான் பெரேரா முன்வைக்கிறார்.

சமாதானப் பேரவையின் இணையத்தளத்திலும் சமூகவலைத்தளத்திலும் ராஜபக்ச அரசாங்கம் தொடர்பாக ஜெகான் பெரேரா எழுதியுள்ள விடயங்கள், கோட்டபாய ராஜபக்சவின் அல்லது 2015ஆம் ஆண்டுக்கு முன்னரான மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் நடத்தப்பட்ட இறுதிப் போர், ஜனநாயக விரோத செயற்பாடுகள், மற்றும் அதிகாரத் துஸ்பிரயோகங்கள், குறித்த விமர்சனங்களைத் தவிர்த்து 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவிக்கு ராஜபக்சக்களின் ஆட்சி பற்றிய செயல்திறன்கள் பற்றியே அவர் புகழாரம் சூட்டுகிறார்.

2002 இல் இருந்து சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்ற காலத்தில் பேராசிரியர் றொகான் குணரட்ன முன்வைத்த இனவாதக் கருத்துக்களைக் கண்டித்துத் தன்தை சிங்கள மிதவாதியாகவும், சமாதானத்தை உருவாக்க முற்படுபவராகவும் காண்பித்திருந்த ஜெகான் பெரோரா, தற்போது றொகான் குணரட்னவின் செயற்பாடுகளை ஒத்த அரசியல் வேலைத் திட்டங்களில் ஈடுபடுகிறார் என்பதையே சமீபத்தில் அவர் வெளியிடும் கருத்துக்கள் வெளிக்காட்டுகின்றன.

சர்வதேச பயங்கரவாத செயற்பாடுகளை தடுப்பது என்ற போர்வையில் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு எதிராகச் செயற்பட்டு வரும் பேராசிரியர் றொகான் குணரட்ன, 2006ஆம் ஆண்டில் இருந்து போரை நடத்துவதற்கு கோட்டாபய ராஜபக்சவுக்கு சிறப்பு ஆலோசகராக விளங்கியிருந்தார். தற்போது ஜனாதிபதியான பின்னரும் அவர் ஆலோசகராகச் செயற்பட்டு வருகின்றார். அன்று இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஆதரவுகளை றொகான் குணரட்ன மேற்கொண்டிருந்தார்.

ஆனால் இறுதிப் போரின்போது சர்வதேச ரீதியாக இலங்கைக்கு எற்பட்டிருந்த அவப் பெயரை நீக்கி, இலங்கை ஓர் ஜனநாயக நாடு, மனித உரிமைகளைப் பேணும் நாடு என்ற தோற்றப்பாடுகளைக் காண்பிக்கத் தற்போது ஜெகான் பெரேரா முற்படுகிறாரா என்ற கேள்விகள் எழுகின்றன.

றொக்கான் குணரட்ன போன்ற சிங்கள பௌத்த தேசியவாதிகளோடு முரண்பட்டிருந்த ஜெகான் பெரேரா 2019ஆம் ஆண்டுக்குப் பின்னரான ராஜபக்சக்களின் ஆட்சியைப் புனிதப்படுத்தும் வேலைத் திட்டங்களில் இறங்கியிருப்பது, அதுவும் புலிகளின் கடந்தகால செயற்பாடுகளை விமர்சித்துக் கொண்டு கடந்தகால சிங்கள ஆட்சியாளர்களை நியாயப்படுத்தும் கருத்து வெளிப்பாடுகள் என்பது, ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலையைப் பயங்கரவாத கோசமாகப் பார்க்க வேண்டும் என்ற கோணத்தில் அமைந்ததாகவே நோக்க முடிகின்றது.

கடந்த நவம்பர் மாதம் சண்டே ஒப்சேவர் ஆங்கிலப் பத்திரிகைக்குக் நேர்காணல் வழங்கியிருந்த பேரரிசிரியர் றொகான் குணரட்ன, விடுதலைப் புலிகளை ஐக்கிய நாடுகள் சபை தடை செய்ய வேண்டுதென்ற தீர்மானத்தை இலங்கை முன்வைக்க வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார்.

வடக்குக்குக் கிழக்குத் தயகப் பிரதேசங்களில் ஆண்டுதோறும் இடம்பெறும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்க வேண்டுமெனவும், சிவப்பு, மஞ்சல் கொடிகள் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டுமெனவும் றொகான் குணரட்ன அந்த வலியுறுத்தியிருந்தார். அமெரிக்க அரசின் நீதித்துறைக்கு ஆலோசகராகப் பதவி வகித்திருந்த றொகான் குணரட்ன, இவ்வாறான ஆலோசனைகளை முன்வைக்கும்போது, நிச்சயமாக ஐ.நா அதனை ஏற்கும் நிலையுண்டு.

காரணம் எதுவுமேயின்றி இந்தியாவதைத் திருப்பித்திப்படுத்தும் நோக்கில் 1997ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்துக்கு அமெரிக்கா தடைவிதித்திருந்தது. அந்தத் தடை இன்றுவரை நீடிக்கிறது. இவ்வாறானதொரு நிலையில் அதுவும் கோட்டாபய ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் சூழலில், ஐ.நா புலிகளைத் தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்கிறார் றொகான் குணரட்ன.

அதற்கு வலுச்சேர்க்கும் வகையில், 1996ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முன்வைத்த தீர்வுப் பொதியை புலிகள் குழப்பியடித்தனர் என்றும் இல்லையேல் அன்றே இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்திருக்கும் என்ற தொனியிலும் ஜெகான் பெரேரா சமூகவலைத்தளத்தில் கூறியிருக்கிறார்.

ஆகவே 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் சிங்கள மிதவாதிகளாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட பலர், கோட்டபய ஜனாதிபதியான பின்னர், இலங்கை ஒற்றையாட்சி அரசின் யாப்புகளையும் அதன் சட்டங்களையும் பாதுகாக்க முற்படுகின்றனர்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளோடு இலங்கை உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்ற அடிப்படையில் கொழும்பில் இயங்கும் மாற்றுக் கொள்கை மையம், தேசிய சமாதானப் பேரவை போன்ற அரசசார்பற்ற நிறுவனங்கள் செயற்படுவதையே அவதானிக்க முடிகிறது.

2002ஆம் ஆண்டு சமதானப் பேச்சுக்கள் நடைபெற்ற போது ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகவும் சமதானப் பேச்சுக்கான முன்னோடியாகவும் தன்னைக் காண்பித்திருந்த மலிந்த மொறகொட, இன்று ராஜபக்சக்களின் விசுவாசியாக உள்ளார். இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராகவும் அவரது பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த மிலிந்த மொறகொடதான், இனப்பிரச்சினைத் தீர்வுக்காகக் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டுமெனவும் ஆலோசனை ஒன்றை முன்வைத்திருந்தார்.

மிலிந்த மொறகொடவின் ஏற்பாட்டிலேயே அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் சென்ற ஒக்ரோபர் மாத இறுதியில் கொழும்புக்கும் வந்து சென்றிருந்தார். 2002இல் ஏற்பாட்டாளராகச் செயற்பட்டிருந்த நோர்வேயும் இன்று இலங்கையின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஏற்றவாறு கதை சொல்கிறது.

2009இற்கும் முன்னர் தங்களை மிதவாதிகளாகக் காண்பித்த சிங்களப் புத்திஜீவிகள் எனப்படுவோர் அன்று தீவிர பௌத்த தேசியவாதிகளாகக் காண்பித்தவர்களோடு இன்று சமரசம் செய்து, இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற ஒரே புள்ளியில் சங்கமித்துள்ளனர். 2018ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத் தாபனத்தின் (Millennium Challenge Cooperation) (MCC)480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி ஒப்பந்தம், சென்ற வியாழக்கிழமை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. பௌத்த தேசியவாதிகளின் எதிர்ப்பினாலேயே இந்த ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டதாகக் காண்பித்து மிகவும் கடுமையான சில நிபந்தனைகளை இலங்கை அமெரிக்காவிடம் விதிக்கவுள்ளது.

அதாவது மைக் பொம்பியோ கொழும்புக்கு வந்தபோது இலங்கையிடம் இருந்து சாதகமான கருத்துக்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், தற்போது எம்எம்சி எனப்படும் ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதால், இலங்கையின் முக்கியமான நிபந்தனை ஒன்றை அமெரிக்கா ஏற்கும் நிலமை வரலாம்.

பேராசிரியர் றொகான் குணரட்ன பரிந்துரை செய்ததுபோன்று, புலிகளை ஐ.நா தடை செய்ய வேண்டும் என்பதும், போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் போன்ற சர்வதேச விசாரணைகளில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டுமெனவும் இலங்கை கேட்கக்கூடும். அதற்கு இந்தியாவும் ஒத்துழைக்லாம். ஏனெனில், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய கொள்கலன் இறங்குதுறையை அபிவிருத்தி செய்ய இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ராஜபக்சவின் அமைச்சரவை சென்ற திங்கட்கிழமை அனுமதித்துள்ளது.

ஆகவே இந்தோ- பசுபிக் பாதுகாப்பு மற்றும் MCC எனப்படும் ஒப்பந்தம் அல்லது அதற்கு ஈடான மற்றுமொரு ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் இலங்கை செய்ய வேண்டுமானால், ஐ.நாவில் புலிகளைத் தடை செய்வது அல்லது, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை புலிகள் மீது விதித்துள்ள தடைகளை நீக்காமல் தொடருவது போன்ற நடவடிக்கைகளை அமெரிக்கா செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் எழலாம்;.

30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்குவதில் இருந்து ராஜபக்ச அரசாங்கம் விலகியுள்ள நிலையில், அதனை மீண்டும் செயற்படுத்த அல்லது மார்ச் மாதம் நடைபெற்றவுள்ள கூட்டத் தொடரில் புதிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றத் தனது நட்பு நாடுகள் மூலமாக அமெரிக்க முற்படவும்கூடும். சென்ற வியாழக்கிழமை ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனைச் சந்தித்து உரையாடிய கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்ணா, 30/1 தீர்மானம் தொடர்பாகப் பேசியிருக்கிறார். இது குறித்துத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியோடும் சந்தித்துப் பேசும் வாய்ப்புகளும் உண்டு.

ஆகவே ஈழத்தமிழர் விவகாரத்தைப் பயன்படுத்தி இலங்கைக்குக் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தும் இலங்கை கேட்பதைச் செய்தும் தனது நலனை அமெரிக்கா பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களே அதிகம். அதில் இந்தியாவும் குளிர்காயும். இது பட்டறிவு.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தோடு நெருக்கமாகவும் நம்பிக்கைக்குரிய நபர்களாகவும் செயற்பட்டு வரும் பேராசிரியர் றொகான் குணரட்ன, கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆலோசகராகவும் மிலிந்த மொறகொட இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராகவும், பாலித கோகண்ண சீனாவுக்கான இலங்கைத் தூதுவராகவும் நியமிக்கப்பட்டிருப்பது, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களை முற்றாகவே இல்லாதொழிப்பதற்கான இலங்கையின் மூலோபாயமாகும்.

இந்த மூலோபாயத்தையே இலங்கையில் அடுத்து வரும் சிங்கள ஆட்சியாளர்களும் கையாளுவர். அமெரிக்காவில் ஜனவரியில் பதவியேற்கவுள்ள ஜே பைடன் நிர்வாகம், 2016ஆம் ஆண்டுக்கு முன்னர்; ஒபாமா நிர்வாகம், இலங்கை தொடர்பாகக் கையாண்ட அணுகுமுறைகளையே கையாளும் என்பதும் வெளிப்படை.

ஆகவே ஜே பைடன் நிர்வாகம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் மீளவும் இணைந்து இலங்கைக்குக் கடும் அழுத்தம் கொடுக்கும் என்றோ, குறைந்தபட்சம் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணை நடக்கும் என்றோ எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால் ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானம் ஒன்றுக்கான முன்மொழிவுக்கு ஈழத்தமிழர்கள் தயாராகி, இலங்கை மேற்கொண்ட குற்றங்கள் அனைத்தினதும் குற்றங்களுக்கான சர்வதேச நீதியைக் கோரத் தலைப்பட வேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam