லேட்டஸ்ட் பேஸ்மேக்கர்!! (மருத்துவம்)

Read Time:12 Minute, 28 Second

இதயத் துடிப்பை முறைப்படுத்தும் பேஸ்மேக்கரில் லேட்டஸ்ட், சர்ஜரி இல்லாமலே பொருத்தும் குட்டியூண்டு கருவி. இதற்கு வயரே தேவையில்லை! பென்ஷன் வாங்கும் பெரியவர் ஒருவர் என்னிடம் வந்திருந்தார். ஏற்கனவே மூன்று டாக்டர்களைப் பார்த்திருந்தார். நான்காவதாக நான். பை நிறைய அவர் தூக்கி வந்திருந்த லேப் ரிப்போர்ட்களைப் பார்த்துவிட்டு, “சொல்லுங்கள்” என்றேன். “எனக்கு அடிக்கடி மயக்கம் வருது, களைப்பா இருக்குதுன்னு இந்த டாக்டர்களிடம் போனேன்.
எல்லோரும் சொல்லி வச்ச மாதிரி ‘பேஸ்மேக்கர் வைக்கணும்’னு சொல்றாங்க. எனக்கு வயது 70. இந்த வயசுல பேஸ்மேக்கர் அவசியமா? உடல் அதை ஏற்றுக்கொள்ளுமா?” என்றார்.

பிறகு, “அது கரன்ட் சப்ளை செய்ற மெஷின்னு என் பேத்தி சொன்னா. (உபயம்: விக்கிபீடியா). அதுல ஷார்ட் சர்க்யூட் ஆகி ஷாக் அடிச்சிடாதா?” என சந்தேகம் கிளப்பினார். “இதெல்லாம் வீணான சந்தேகங்கள். அவசியப்பட்டால் எந்த வயதிலும் பேஸ்மேக்கரைப் பொருத்திக்கொள்ளலாம். பிரச்னை ஏதும் வராது” என்பதை அவருக்குப் புரிய வைத்து அனுப்பினேன்.அது என்ன பேஸ்மேக்கர்?சிறிய தீப்பெட்டி சைஸில் இருக்கும் ஒரு ஜெனரேட்டர்தான் பேஸ்மேக்கர் (Pacemaker). இது இதயத் துடிப்பைச் சரி செய்கிற மெஷின். என்ன, ஆச்சரியமாகப் பார்க்கிறீர்கள்? ‘தானாகத் துடிக்கின்ற இதயத்தைக் கட்டுப்படுத்தவும் ஒரு மெஷினா? இது சாத்தியமா?’ இப்படித்தானே நினைக்கிறீர்கள்! பேஸ்மேக்கரைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், இதயத்தின் அறிவியல் அம்சங்களைக் கொஞ்சம் அறிமுகப்
படுத்திக்கொள்ள வேண்டும்.

இதயம் தானாகவே இயங்கும் தன்மையுள்ள விசேஷ ‘பம்ப்’. இதில் வலப்பக்கம் இரண்டு, இடப்பக்கம் இரண்டு என மொத்தம் நான்கு அறைகள் உண்டு. இதயத்தின் வலது பக்கத்தில் அசுத்த ரத்தமும், இடது பக்கத்தில் சுத்த ரத்தமும் ஓடுகின்றன. இதற்கு இதயத்தின் இயக்கம் உதவுகிறது. அதாவது, மேலறைகள் சுருங்கும்போது கீழறைகள் விரிகின்றன; கீழறைகள் சுருங்கும்போது மேலறைகள் விரிகின்றன. இப்படி ஒரு முறை இதயம் சுருங்கி விரிவதை ‘இதயத் துடிப்பு’ என்கிறோம். இதயம் ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் உடலிலிருந்து அசுத்த ரத்தத்தைப் பெறுவதும், சுத்த ரத்தத்தை உடலுக்குத் தருவதுமாக இருக்கிறது. இது ஓய்வில்லாத சுழற்சி. நம் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் எந்த நேரமும் கிடைத்துக் கொண்டிருப்பது இதனால்தான்.

நாம் உயிர் வாழ்வதற்கு இந்தத் துடிப்பும் ரத்த சுழற்சியும் மிகவும் அவசியம்.ஓர் இயந்திரம் இயங்க வேண்டுமானால் மின்சக்தி தேவைப்படுவதைப்போல, இதயம் துடிப்பதற்கும் சிறிதளவு மின்னோட்டம் தேவைப்படுகிறது. அதை இதயமே தயாரித்துக்கொள்கிறது என்பது இதன் அடுத்த ஸ்பெஷாலிட்டி. மாரடைப்பு, பிறவி இதயக்கோளாறு, தைராய்டு குறைவு, முதுமை என ஏதோ காரணங்களால் இப்படி இதயத்தில் மின்சாரம் பாயவில்லையென்றால், இதயம் துடிப்பது நிற்க வேண்டும். ஆனால், அப்படி நிற்காது. இது இதயத்தின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி. சூழலில் இதயத்தின் தசைநார்கள் தங்களது தனித்தன்மையால் தானாகவே இயங்க ஆரம்பிக்கின்றன.

இதயத்தின் ஏ.வி. நோடு நிமிடத்துக்கு 60 தடவையும், ஹிஸ் நார்க்கற்றைகள் 48 தடவையும் துடித்து, இதயச் செயல்பாட்டைத் தற்காலிகமாகத் தக்க வைக்கின்றன. மின்சாரம் இல்லாத நேரத்தில் இன்வெர்ட்டர் பயன்படுத்துவது போல தற்காலிக ஏற்பாடுதான் இது. ‘அதுதான் இதயம் துடிக்கிறதே! அது நிற்காத வரையில் ஆபத்து இல்லைதானே’ என்று அலட்சியமாக இருந்துவிடாமல், உடனே இதைச் சரி செய்ய வேண்டும். இயல்பான இதயம் நிமிடத்துக்கு சராசரியாக 72 தடவை துடிக்கிறது. என்றாலும், 60 முதல் 100 வரை துடிப்பதை ‘நார்மல்’ என்கிறோம். இது 60க்கும் கீழ் குறைந்தால், ‘குறைத் துடிப்பு’ (Bradycardia), 100க்கும் மேல் அதிகரித்தால், ‘மிகைத் துடிப்பு’ (Tachycardia).

இந்த மாற்றங்களை ‘இசிஜி’(ECG)யில் காணமுடியும். துடிப்பில் மாற்றம் ஏற்பட்டதற்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிய மார்பு எக்ஸ்ரே, எக்கோ, ட்ரட் மில், ‘ஹோல்டர் மானிட்டர்’ (Holter Monitor Test) பரிசோதனைகளோடு பொதுவான ரத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.
இதயத் துடிப்பு இயல்புக்குக் கீழே குறையும்போது, ஆரம்பத்தில் தலை சுற்றும்; பிறகு மயக்கம் வரும். மூச்சுத்திணறல் ஏற்படும். நெஞ்சு வலிக்கும். உடல் களைப்பாக இருக்கும். இந்த அறிகுறிகளைக் கவனிக்கத் தவறினால் இதயத்தசைகள், நுரையீரல், மூளை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு ரத்தம் செல்வது குறையும். இதனால் ஸ்ட்ரோக், ஹார்ட் ஃபெயிலியர், கிட்னி ஃபெயிலியர் என்று பல பாதிப்புகள் ஏற்படும். துடிப்பு குறைவாக இருப்பவர்களுக்கு, முதலில் மாத்திரைகள் தரப்படும். இதில் பிரச்னை சரியாகவில்லை என்றால், பேஸ்மேக்கரின் உதவி தேவைப்படும்.

பேஸ்மேக்கரில் ஜெனரேட்டர், பேட்டரி, மின்சார வயர் என மூன்று முக்கியப் பகுதிகள் உள்ளன. இதன் ஜெனரேட்டர், லித்தியம் பேட்டரியில் இயங்குகிறது. இது மின்தூண்டல்களை உற்பத்தி செய்கிறது. இதிலிருந்து கிளம்புகிற ஒன்று அல்லது இரண்டு மின் வயர்களை இதயத்தில் இணைக்கிறார்கள். பயனாளியின் தேவைக்கேற்ப தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் இது பொருத்தப்படும். தற்காலிக பேஸ்மேக்கர் இடுப்பில் இருக்கும். அதிலிருந்து புறப்படும் மின்வயரை கழுத்துச் சிரை (Carotid Vein) அல்லது தொடைச் சிரை (Femoral Vein) வழியாக இதயத்துக்கு அனுப்புவார்கள். மெஷினிலிருந்து புறப்படும் மின்தூண்டல்கள் இதயத் துடிப்பை சரிப்படுத்தும். பிரச்னை சரியானதும் பேஸ்மேக்கரைக் கழற்றி விடலாம்.

நிரந்தர பேஸ்மேக்கரை இடது மார்பின் மேற்புறத்தில் காரை எலும்புக்கு (Clavicle) அருகில் மைனர் சர்ஜரி செய்து, தோலுக்கு அடியில் புதைத்துத் தைத்து விடுவார்கள். மின்வயரைக் கை அல்லது கழுத்துச் சிரைக்குழாய் வழியாக இதயத்துக்குள் செலுத்தி, வலது கீழறைத் தசைகளின்மீது இணைப்பார்கள். தீர்ந்தது பிரச்னை. எப்படி?‘இதயம் நிமிடத்துக்கு 72 தடவை துடிக்க வேண்டும்’ எனும் கட்டளையை எஸ்.ஏ.நோடு மின்துடிப்பு வடிவத்தில்தான் அனுப்புகிறது. அதேமாதிரியான வடிவத்தில் நிமிடத்துக்கு 72 மின்தூண்டல்களை உற்பத்தி செய்து இதயத்துக்கு அனுப்புவதுதான் பேஸ்மேக்கரின் வேலை.

என்றாலும் பயனாளியின் தேவையைப் பொறுத்து, அலாரத்தை செட் செய்வது போல, இதயம் எத்தனை தடவை துடிக்க வேண்டும் என பேஸ்மேக்கரில் செட் செய்துவிடுவார்கள். மெஷின் இயங்கத் தொடங்கியதும், குறிப்பிட்ட இடைவெளியில் மின்தூண்டல்கள் கிளம்பி, இதயத்தை அடைய, அது நார்மலாகத் துடிக்கும். பேஸ்மேக்கர் 6லிருந்து 10 ஆண்டுகளுக்கு வேலை செய்யும். அதற்குப் பிறகு பேட்டரியை மாற்றிக்கொள்ள வேண்டும். விலை, இந்திய பேஸ்மேக்கர் 30,000 ரூபாய். வெளிநாட்டு பேஸ்மேக்கர் 80,000லிருந்து ஒன்றரை லட்சம் வரை. இது தமிழகத்தில் பெரிய நகரங்களில் உள்ள இதயநல மருத்துவமனைகளில் கிடைக்கிறது.

தற்போது அமெரிக்காவில் ‘வயர் இல்லாத பேஸ்மேக்கர்’ வந்துவிட்டது. இதுதான் லேட்டஸ்ட். சிறிய வைட்டமின் மாத்திரை அளவில் உள்ள இந்த மெஷினும் பேட்டரியில்தான் இயங்குகிறது. ஆனால், வயர்கள் இல்லை. இதைப் பொருத்த சர்ஜரி தேவையில்லை. இதைப் பயனாளியின் தொடை ரத்தக்குழாய் வழியாக வலது இதயத்துக்கு அனுப்பி, நேரடியாக அதில் பொருத்திவிடுகிறார்கள். இது, இதயத் துடிப்பைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்கிறது. துடிப்பு குறையும்போது, இதிலிருந்து மின்தூண்டல்கள் கிளம்பி சரி செய்கிறது. சர்ஜரி இல்லாமல் பொருத்தப்படுவதால், இதற்குத்தான் இப்போது மவுசு அதிகம். விலை, இந்திய மதிப்பில் ரூ.8 லட்சம்.

இதயத்தின் எலெக்ட்ரிக் சர்க்யூட்!

இதயத்தின் வலது மேலறையின் வெளிப்பக்கத்தில் ‘எஸ்.ஏ. நோடு’ (Sino Atrial Node) என்று ஒரு புடைப்பு இருக்கிறது. இதில்தான் மின்சாரம் உற்பத்தியாகிறது. இதயத்தைத் துடிக்கச் செய்வதும் இதுதான். இரண்டு மேலறைகளுக்கும் இரண்டு கீழறைகளுக்கும் நடுவில் ‘ஏ.வி.நோடு’ (Atrio Ventricular Node) இருக்கிறது. இதற்குக் கீழே ‘ஹிஸ்பர்கின்ஜி நார்க்கற்றைகள்’ (Bundle of HisPurkinje) இதனுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. இவை கிளைகளாகப் பிரிந்து வலது, இடது கீழறைகளை அடைகின்றன. ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பை இதயத்தின் ‘எலெக்ட்ரிக் சர்க்யூட்’ எனச் சொல்லலாம். எஸ்.ஏ.நோடில் நிமிடத்துக்கு 72 தடவை மின்தூண்டல்கள் உற்பத்தியாகி, ஏ.வி.நோடுக்குப் பாய்கிறது. இந்த சர்க்யூட் மூலம் முறைப்படி இதயத்தசைகளுக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுவதால், இதயம் சீராகத் துடிக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்களால் தொட முடியுமா?!! (மருத்துவம்)
Next post சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இலங்கை தனது இறைமையை உறுதிப்படுத்தினால் மாத்திரமே எதிர்காலத்தில் நிதி உதவி- அமெரிக்கா!! (கட்டுரை)