புருவங்கள் நரைக்குமா? (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 1 Second

நரை என்பது மூப்பின் அடையாளம் என்பது மாறி, இன்று டீன் ஏஜ் பிள்ளைகளிடமும் அதைப் பார்க்க முடிகிறது. தலை நரைத்தால்கூட டை அடித்து மறைத்துக் கொள்ளலாம். சிலருக்கோ புருவ முடி, இமைகள், உடல் ரோமங்கள்கூட நரைப்பதைப் பார்க்கலாம். அப்படியொரு விசித்திர பிரச்னையின் பின்னணிக்கான காரணங்கள் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இந்த நிலையை போலியாசிஸ் (Poliosis) என்கிறோம்.

போலியாசிஸ் அல்லது Poliosis Circumscripta என அழைக்கப்படுகிற இந்தப் பிரச்னைக்கு அடிப்படை. தலை, புருவங்கள், இமைகள் போன்ற இடங்களில் உள்ள முடிகளில் மெலனின் எனப்படும் நிறமியானது அறவே இல்லாமலோ அல்லது குறைவாகவோ இருக்கும். சாதாரணமாக முடி நரைப்பதற்கும், இந்த போலியோசிஸ்க்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. கூந்தலின் கறுமை நிறத்துக்குக் காரணமான மெலனினை உற்பத்தி செய்கிற மெலனோசைட்ஸில் உண்டாகும் பிரச்னையே இரண்டுக்கும் காரணம். அதனால்தான் முடியானது நிறமே இல்லாமல் வெள்ளையாக வளரும். இது ஒரே ஒரு முடியை மட்டுமோ அல்லது கொத்தாகவோ வெள்ளையாக்கலாம்.

காரணங்கள்

கூந்தல் நுண்ணறைகள் பலவீனமாக இருப்பதால், முடிக்கற்றைகளுக்கு அடியில் உள்ள நிறமி செல்களில் ஏற்படுகிற ஆட்டோஇம்யூன் குறைபாட்டால், மெலனின் உற்பத்தியில் ஏற்படுகிற பிறவிக் கோளாறு போன்றவை இதற்குக் காரணங்கள்ஆக இருக்கலாம். இவை தவிர, வெண் சருமப் படலம், வெள்ளை வளையத்துடன் காணப்படுகிற ஒருவகையான மச்சம், Tuberous sclerosis எனப்படுகிற மரபியல் பிரச்னை போன்றவற்றுடன் போலியாசிஸ் பிரச்னையும் சேர்ந்து கொள்ளலாம் ஆபத்தில்லாத கட்டி அல்லது புற்றுநோய் கட்டி இரண்டுமே உடலின் ஒரு பகுதியில் மெலனோசைட் உற்பத்தியை முற்றிலும் தடை செய்யலாம்.
தீவிரமான பூஞ்சைத் தொற்றின் காரணமாக, சருமத்தின் ஒரு பகுதியில் உள்ள ரோமங்கள் நிரந்தரமாக வெள்ளையாக மாறலாம். மிகப்பெரிய காயத்துக்குப் பிறகும், அக்கி பாதிப்புக்குப் பிறகும், ரேடியோதெரபிக்கு பிறகும்கூட சருமத்தின் முடிகள் வெள்ளையாக மாறலாம்.

சிலருக்கு அதீத மன அழுத்தம், கவலை மற்றும் மனநலம் பாதிக்கப்படுவதன் விளைவாகவும் இப்படி முடிகள் வெள்ளையாகலாம். குழந்தைகளுக்கு ஏற்படுகிற வெள்ளை முடிப் பிரச்னையையும் அலட்சியப்படுத்தக்கூடாது. உடனடியாக மருத்துவரை அணுகி காரணம் கண்டறிய வேண்டும். அதை சாதாரண நரை என நினைத்து அலட்சியப்படுத்துகிறவர்களுக்கு, அதன் பின்னணியில் தீவிரமான தைராய்டு குறைபாடோ, வைட்டமின் பி 12 குறைபாடோ இருப்பது தெரிய வாய்ப்பில்லை.மெலனின் நிறமிகள், யூமெலனின் மற்றும் ஃபியோமெலனின் ஆகியவைதான் கூந்தலுக்கு கறுமை நிறத்தைக் கொடுப்பவை. இவற்றில் ஃபியோமெலனின் என்பவை ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தைக் கொடுப்பவை. யூ மெலனின் என்பது பிரவுன் அல்லது கறுப்பு நிறத்தைக் கொடுப்பவை. இவை எல்லாம் இணைந்துதான் கூந்தலுக்கு அதன் அசல் நிறம் வருகிறது. மெலனோசைட்ஸ் என்பவைதான் மெலனின் உற்பத்தி செல்கள். இவைதான் மெலனின் நிறமித் தொகுப்புக்குக் காரணம்.

எப்படி கண்டுபிடிப்பது?

இளவயதிலேயே ஏற்படுகிற நரை அல்லது தலைமுடி தவிர உடலின் மற்ற பகுதி ரோமங்களிலும் ஏற்படுகிற நரை என்றால் அலட்சியப்படுத்தாமல், மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. ஒட்டுமொத்த உடல் பரிசோதனை, உட்கொள்கிற உணவுகளின் தன்மை, ஹார்மோன் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, தேவைப்பட்டால் சருமம் மற்றும் நரம்புகளுக்கான சோதனை போன்றவற்றை செய்து பார்த்து போலியாசிஸ் இருந்தால் அதற்கான சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.

போலியாசிஸ் சிகிச்சைகள்…

சரியான காரணத்தைக் கண்டுபிடித்து விட்டால் சிகிச்சையும் எளிதாகும். ஒருவேளை பிறவிக் குறைபாடு காரணமாக ஏற்பட்டிருந்தால் தீர்வு
காண்பது சற்றே கடினம். செயற்கையாக ஏதேனும் செய்துதான் வெள்ளை முடிகளை மறைத்தாக வேண்டும்.

தடுப்பு நடவடிக்கைகள்…

மன அழுத்தமற்ற வாழ்க்கை முறைக்கு இன்றைய இளவயதினர் பழக வேண்டும். வேலையால் ஏற்படுகிற மன அழுத்தத்தை பேலன்ஸ் செய்து, மனதுக்கும் உடலுக்கும் அமைதி கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

தினமும் ஏதேனும் ஒரு உடற்பயிற்சி செய்வதைக் கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி மட்டும்தான் ஆரோக்கியத்துக்கான அஸ்திவாரம்.

ஆரோக்கியமான உணவு என்பது மிக மிக அவசியம். புரதம் நிறைந்த, அத்தியாவசிய தாதுச்சத்துகள் அடங்கிய சரிவிகித உணவு என்பது ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக முடி நரைப்பதைத் தவிர்க்கும். பால், ஈரல், கறுப்பு எள், காளான், பழங்கள் மற்றும் காய்கறிகள் அவசியமானவை.

சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொண்டு, அதற்கு மாற்றாக பனைவெல்லம், பனை சர்க்கரை, தேன் போன்றவற்றுக்குப் பழகலாம். மிருகக் கொழுப்பு அடங்கிய பொருட்களைக் கூடியவரையில் தவிர்ப்பதே சிறந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருவளையங்களுக்கான அழகு சாதனங்களும் சிகிச்சைகளும்!! (மகளிர் பக்கம்)
Next post ஆண்களுக்கு ‘ஜி ஸ்பாட்’ உண்டா? (அவ்வப்போது கிளாமர்)