ஸ்வீட் எடு கொண்டாடு!! (மருத்துவம்)
‘எந்த ஒரு நல்ல ஆரம்பத்திற்கு முன்பும் எங்கம்மா ஸ்வீட் சாப்பிடச் சொன்னாங்க…. ம்ம்ம்…’ என்று கண்களை மூடிக்கொண்டு சாக்லெட் சாப்பிடுபவரா நீங்கள்? உங்களுக்காகவே ஒரு சாக்லெட் செய்தி!
‘சாக்லெட்டோடு தொடங்கும் விஷயங்கள் சரியாக இருப்பதோடு, அது உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லது செய்கிறது’ என்கின்றனர் அமெரிக்காவின் அபர்டீன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். சாக்லெட் சாப்பிடுவதால் மனதில் புத்துணர்ச்சி தோன்றி மன அழுத்தம் குறையும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
செரட்டோனின் அளவைத் தூண்டி மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சீரடைந்து மூளையின் திறனும் அதிகரிக்கிறது.மற்றவர்களோடு ஒப்பிடுகையில், தினமும் 100 கிராம் சாக்லெட் சாப்பிடுபவர்களுக்கு இதயநோய் வருவதற்கான வாய்ப்பு 11 சதவிகிதமும், மாரடைப்பினால் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 25சதவிகிதமும் கட்டுப்படுவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இதயத்திற்கு கொண்டு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் ரத்தஓட்டத்தை சீர் செய்வதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 9 சதவிகிதமும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 23 சதவிகிதமும் குறைகிறதாம். என்ன? ஒரு நாளைக்கு 100 கிராம் சாக்லெட்டோடு நிறுத்திக் கொண்டால் நல்லது. அதனால் ஸ்வீட் எடுப்போம்! கொண்டாடுவோம்!