By 24 January 2021 0 Comments

கூந்தல்!! (மகளிர் பக்கம்)

பாலிவுட் பிரபலங்களின் ஃபேவரைட் ஹேர் ஸ்டைலிஸ்ட்டான ஜாவெத் ஹபீப், தனது சலூன் திறப்பு விழாவுக்காக சென்னை வந்திருந்தார். வி.ஐ.பிக்களுக்கு நெருக்கமானவர் என்பதால் அவரது கூந்தல் பராமரிப்பு டிப்ஸும் காஸ்ட்லியானதாக இருக்கும் என நினைத்தால், எளிமையான குறிப்புகள் கொடுத்து அசத்துகிறார். ஆங்கிலத்தில் தான் எழுதிய `Hair Yoga’ புத்தகத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியிடவிருக்கும் தனது திட்டத்தையும் சொன்னார். அவரிடம் சில கூந்தல் சந்தேகங்கள்…நீங்கள் சிரித்தால் கூந்தலும் சிரிக்கும்!

அதென்ன Hair Yoga?

என்னைப் பொறுத்தவரைக்கும் யோகா என்பது ஒருவிதமான ரிலாக்சேஷன். நீங்கள் ரிலாக்ஸ்டாக இருக்கும் போது உங்கள் கூந்தலும் அப்படியே இருக்கும். கூந்தல் என்பது ஆரோக்கியமான உடல் மற்றும் மனத்தின் பிரதிபலிப்பு என்பதாலேயே என் புத்தகத்துக்கு இப்படியொரு பெயரை வைத்தேன். மற்றபடி இதற்கும் ஆசனங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம் என்பதே ஹேர் யோகாவின் மந்திரம்.’’ஆரோக்கியமான கூந்தலுக்கு

அடிப்படைதான் என்ன?

சுத்தமாக வைத்திருப்பதுதான் ரகசியமே. தினமும் ஷாம்பு குளியல் எடுங்கள். தினமும் ஷாம்பு உபயோகித்தால் கூந்தல் உதிராதா என்றும், ஷாம்புவில் கெமிக்கல் இருக்கிறதே என்றும் பலரும் கேட்கலாம். அப்படிப் பார்த்தால் நீங்கள் தினசரி உபயோகிக்கிற சோப்பில் கெமிக்கல் இல்லையா? தினமும் உடலையும் முகத்தையும் சோப் போட்டு சுத்தப்படுத்துகிற மாதிரிதான் கூந்தலுக்கு ஷாம்பு அவசியமாகிறது. அதிலுள்ள கெமிக்கல் உங்கள் கூந்தலை ஒன்றும் செய்யாது.’’

சரியான ஷாம்புவை தேர்ந்தெடுப்பது எப்படி? சீயக்காய் உபயோகிக்கலாமா?

இதுவரை எனக்கே விடை தெரியாத கேள்வி இது. எந்த ஷாம்புவை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். பொடுகு நீக்கும் ஷாம்பு மட்டும் வேண்டாம். தினசரி ஷாம்பு குளியல் எடுத்து, கூந்தலை சுத்தமாக வைத்திருந்தாலே பொடுகு வராது. சீயக்காய் உபயோகிக்கவெல்லாம் இன்று யாருக்கும் பொறுமை இல்லை. சீயக்காய் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் என உத்தரவாதமும் இல்லை.

ஷாம்புவை தண்ணீர்விட்டு நீர்க்கச் செய்துவிட்டால் அதன் வீரியம் குறைந்து விடும் என்றொரு தவறான நம்பிக்கை இருக்கிறது. அப்படியெதுவும் கிடையாது. கொஞ்சமாக ஷாம்புவை எடுத்து கைகளால் நன்றாகத் தேய்த்துத் தலையில் தடவிக் குளியுங்கள். முன்னந்தலையில் அதிக அழுக்கு சேரும் என்பதால் அதிக கவனம் கொடுத்துக் குளியுங்கள்.’’

தலைக்கு எண்ணெய் வைப்பது அவசியமா?

நிச்சயம் அவசியம். ஆனால், ஷாம்பு குளியலுக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன் எண்ணெய் வைத்துவிட்டுக் குளித்து விட வேண்டும். எண்ணெயை வைத்துக் கொண்டு அப்படியே வெளியில் செல்வதும், நாளெல்லாம் இருப்பதும்தான் தவறு.

கூந்தல் உதிர்வுக்கான முக்கியமான 3 காரணங்கள் என்ன தெரியுமா?

தினமும் ஷாம்பு குளியல் எடுக்காதது… அளவுக்கதிக எண்ணெய் உபயோகிப்பது… அதிகளவு கண்டிஷனர் உபயோகிப்பது.’’

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?

எந்த எண்ணெயும் ஓ.கே. தென்னிந்தியர்களுக்கு கடவுள் கொடுத்திருக்கிற மிகப் பெரிய வரம் தேங்காய் எண்ணெய். அதைப் போன்ற பிரமாதமான எண்ணெய் வேறு இல்லை. நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் என எதை வேண்டுமானாலும் உபயோகியுங்கள். போலியான உத்தரவாதங்களுடன் விளம்பரப்படுத்தப்படுகிற காஸ்ட்லியான எண்ணெயெல்லாம் வேண்டாம். எந்த எண்ணெயானாலும் வைத்த 5 நிமிடங்களில் ஷாம்பு குளியல் எடுத்து விடுங்கள்.’’

சரியான ஹேர் கலரை எப்படித் தேர்ந்தெடுப்பது?

ஹேர் கலர் பயன்படுத்தத் தொடங்கினாலே கூந்தல் வறண்டு போவதைத் தவிர்க்க முடியாது. அப்போது நரையை எப்படி மறைப்பது எனக் கேட்கலாம். சீக்கிரமே நரை வராமலிருக்கவும் தினசரி ஷாம்பு குளியல்தான் தீர்வு. நரையை மறைக்க ஹேர் கலரிங் உபயோகிக்கும் போது அமோனியா உள்ளதா? அது இல்லாததா என்கிற கேள்வி வரும். அமோனியா இல்லை என்றால் மெக்னீசியம் கலந்த வேறொரு கெமிக்கல் சேர்க்கப்பட்டிருக்கும். அவ்வளவுதான்.’’

கூந்தல் ஆரோக்கியத்துக்கு டிப்ஸ் ப்ளீஸ்…

தினசரி ஷாம்பு குளியல் அவசியம். நிறைய தண்ணீர் குடியுங்கள். பால் சேர்த்துக் கொள்ளுங்கள். அரிசி, கோதுமை உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூந்தலை ட்ரிம் செய்யுங்கள். எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு ரகசியம் சொல்லவா?எப்போதும் சிரித்த முகத்துடன் இருங்கள். சந்தோஷத்தில் உங்கள் கூந்தலும் சிரிக்கும்.’’Post a Comment

Protected by WP Anti Spam