வலிப்பு நோயை வெல்ல முடியும்!! (மருத்துவம்)

Read Time:14 Minute, 37 Second

சற்று யோசித்தவாறே அவரது அருகில் சென்று அம்மா என்று தோளைத் தொட்டு கூப்பிட்டேன். வெறித்து என்னை பார்த்தாரே தவிர, அவரால் பேச முடியவில்லை. ஒரு சில வினாடிகளிலேயே அவரது வாய் ஒரு பக்கமாக கோண ஆரம்பித்தது; கை, கால்கள் வெட்ட ஆரம்பித்தன. வலிப்பு என்பதைப் புரிந்துகொண்டு அருகில் இருந்தவர்கள் தங்களுக்குத் தெரிந்த உதவிகளைச் செய்ய முயன்றார்கள். ஒருவர் தன்னிடம் இருந்த இரும்புச்சாவியை அவரது கையில் திணித்தார். ஒருவர் ஓடிச்சென்று வீட்டிலிருந்த சின்ன வெங்காயத்தை எடுத்து வந்து மூக்கின் அருகில் நீட்டினார். ‘நான் ஒரு டாக்டர்’ என்று உரக்கச் சொல்லிவிட்டு அவர்களது செய்கைகளை தவிர்த்தவாறே நோயாளிக்கு சற்று காற்றோட்டம் வருமாறு அருகிலிருந்தவர்களை சற்று புறந்தள்ளி நிற்கச் சொல்லி பின்பு முகத்தையும், உடலையும் ஒரு புறமாகச் சாய்த்துப்பிடித்துக் கொண்டேன். இவ்வாறு செய்வதால் வலிப்பின்போது நோயாளியின் வாயிலிருந்து வெளிவரும் நுரை தள்ளும் உமிழ்நீரை சுவாசக் குழாய்க்குள் புரைக்கு ஏறாமல் தவிர்க்க முடியும்.

சாவிக்கொத்தை கையில் தருவதோ, வெங்காயத்தை மூக்கின் முன் நீட்டுவதோ கூடாது. இவ்வாறு செய்வதற்கு எந்த அறிவியல் சான்றுகளும் இல்லை. வலிப்பின்போது நோயாளி தனது நாக்கை கடித்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். ஆனால், அதற்காக அவரது வாய்க்குள் விரலைச் சொருகுவது, ஸ்பூனை நுழைப்பது ஆகிய செயல்களைச் செய்யக்கூடாது. நாக்கை கடித்தே கொண்டாலும், நாக்கில் ஏற்பட்ட புண் வெகு சீக்கிரம் ஆறி விடும். ஏனெனில், நாக்கு மற்றும் உதடுகளில் ரத்த ஓட்டம் அதிகம். கை, கால்கள் வெட்டும்போது அவற்றை மிக கெட்டியாக பிடித்துக்கொள்வதும் தவறான செயல். ஏனெனில் வெட்டும்போது ஏற்படும் அதீத வேகத்தினை தடுக்கும் பொருட்டு செய்யும் செயலினால் தோள்பட்டை மற்றும் முழங்கை மூட்டு நழுவ வாய்ப்பு அதிகம். எப்படிப்பட்ட வலிப்பானாலும் 90 சதவீதம், இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குள் தானாகவே நின்றுவிடும்.

வலிப்பின்போது காயம் ஏற்படாமல் இருக்க அருகிலிருக்கும் கூர்மையான பொருட்கள், சாமான்களை அகற்றிவிடுவது நல்லது. வலிப்பின்போது நோயாளிகள் சுயநினைவின்றி இருப்பர். அந்நேரத்தில் அவர்களுக்கு சாப்பிட தண்ணீர் கொடுப்பதோ, உணவு கொடுப்பதோ கூடாது. ஏனெனில் தொண்டைக்குள் செல்லும் உணவுப்பொருள் உணவுக் குழாய்க்கு பதிலாக சுவாசக்குழாய்க்குள் சென்று மூச்சுத்திணறல் ஏற்படும் வாய்ப்பு அதிகம். கை கால்கள் வெட்டி வலிப்பு ஓய்ந்த பின், நோயாளிகள் சற்று குழப்பத்துடன் கூடிய மயக்க நிலையிலேயே இருப்பர். தெளிவான மன நிலையை அடைய 15 முதல் 30 நிமிடம் வரை நேரம் பிடிக்கும். அதன் பிறகே அவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதோ, உணவு கொடுப்பதோ நல்லது. விஷயம் தெரிந்தவுடன் வலிப்பு வந்த அம்மாவின் மகன் பார்க்கிற்கு ஓடி வந்தார்.

அவரிடம் இவருக்கு ஏற்கனவே வலிப்பு வருமா? வேறு ஏதும் தொந்தரவுகள் உள்ளதா என்று கேட்டேன். வலிப்பு இப்போதுதான் முதல் முறையாக வந்திருக்கிறது என்றும், அம்மாவுக்கு சர்க்கரை நோய் உள்ளதாகவும் அதற்காக ரெகுலராக மாத்திரை சாப்பிட்டு வருவதாகவும் கூறினார். இதைக் கேட்ட உடனேயே நான் என் மனைவிக்கு போன் செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவை நொடியில் கண்டுபிடிக்கும் குளுக்கோமீட்டரை பார்க்கிற்கு எடுத்து வரச் சொன்னேன். டெஸ்ட் செய்து பார்த்தால் சர்க்கரையின் அளவு 45mg என்று காட்டியது. ஹைபோகிளைசீமியா (Hypoglycemia) ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்ததே வலிப்புக்கான காரணம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காலை உணவுக்கு முன் போடும் சுகர் மாத்திரையினால் மதியம் 12 முதல் 2 மணி அளவில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய வாய்ப்புகள் அதிகம்.

அதுபோல் இரவு சாப்பாட்டிற்கு முன் போடும் மாத்திரையினால் விடிகாலை 4-5 மணியளவில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேற்கூறிய இவ்விரு நேரங்களில், முறையாக மருந்து எடுத்துக்கொள்ளும் சர்க்கரை நோயாளிகளின் குணாதிசயங்களில் சற்று மாறுபாடு ஏற்பட்டாலோ, தலைவலி ஏற்பட்டாலோ, வியர்த்தாலோ, அதிகமான பசி ஏற்பட்டாலோ, வலிப்பு வந்தாலோ ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து இருக்கலாம் என்ற எண்ணம் உடனடியாக மனதில் தோன்ற வேண்டும். ஏனெனில் இதற்கான தீர்வை அவர்களோ அல்லது அவரது உறவினர்களே செய்துவிட முடியும். உணவு சாப்பிடும் நேரமாக இருந்தால் உடனே சாப்பிட்டு விடுவது அல்லது சர்க்கரை கலந்த தண்ணீர், பால், குளுக்கோஸ் அல்லது ஏதேனும் ஒரு இனிப்பு பண்டத்தை உடனே கொடுப்பதன் மூலம் ஒரு சில நிமிடத்தில் சர்க்கரையின் அளவு உடம்பில் அதிகமாகி நோயாளிகள் சகஜ நிலைக்குத் திரும்புவர்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்போது கண்கள் மேலே சொருகி, கை கால்கள் வெட்டி வரும் வலிப்பினை ஜெனரலைஸ்ட் சீஸ்சர்ஸ்(Generalized seizures) என்று சொல்வோம். அதே நேரம் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகமாக இருந்தால் கூட(Hyperglycemia) வலிப்பு வரும் வாய்ப்பு அதிகம். அவ்வாறு வரும் வலிப்பில் பெரும்பாலும் முகம் (வாய் ஓர கன்னப்பகுதி) மட்டும் துடிக்கும் அல்லது முகமும் கையும் சேர்ந்து துடிக்கும். இவ்வாறு உடம்பின் ஒரு பகுதி மட்டும் துடிப்பதால் இதற்கு ஃபோக்கல் பிட்ஸ்(Focal Seizure) என்று பெயர். ஆகவே, உடம்பில் சர்க்கரை அளவு குறைந்தாலும் அதிகமானாலும் வலிப்பு ஏற்படலாம்.

வலிப்பு நோய்க்கான காரணங்கள்

வலிப்பு நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். சிறியவர்கள், பெரியவர்கள் ஆண்கள், பெண்கள் என்று வயது பாகுபாடோ அல்லது பாலின பாகுபாடோ கிடையாது. ஆனால், பெரும்பாலும் வலிப்பு நோயால் பாதிக்கப்படுவது சிறுவயது குழந்தைகள்தான். மரபணு மாற்றங்களினாலும், பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களினால் குழந்தையின் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் குறைந்து மூளையில் தாக்கம் ஏற்படுத்துவதினாலும், பிறக்கும்போதே மூளையின் அமைப்பில் மாறுபாடு ஏற்படுவதினாலும், காய்ச்சலினாலும் குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படலாம். 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு காய்ச்சலினால் வரும் வலிப்பு சகஜமான ஒன்றாகும். இதனை ஃபெப்ரைல் சீஸர்ஸ்(Febrile seizures) என்று சொல்வோம்.

ஸ்ட்ரோக், மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு அல்லது அதீத ரத்த கொதிப்பினால் மூளை ரத்தக்குழாய் வெடித்து ஏற்படும் ரத்தக்கசிவு ஆகியவற்றாலும் வலிப்பு ஏற்படலாம். அதுதவிர மூளைக்காய்ச்சல், மூளையில் இருக்கும் கட்டி(அது சாதாரண கட்டியாகவும் இருக்கலாம் கேன்சர் கட்டியாகவும் இருக்கலாம்). சாலை விபத்தில் தலையில் அடிபட்டு மூளைக்குள்ளும், மூளைக்கு வெளியே உள்ள சுவர்களிலும் ஏற்படும் ரத்தக் கசிவினால் வலிப்பு ஏற்படலாம். மெட்டபாலிக் சீஸர்ஸ்(Metabolic seizures) என்பது மேலே கூறியபடி ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் வலிப்பு வருவதாகும்.

அதுமட்டுமல்லாமல் உடலில் சோடியம் சத்து குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தாலும், கால்சியம் சத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தாலும், சிறுநீரகக் கோளாறினால் யூரியா, கிரியாட்டினின் போன்ற உப்புச் சத்துக்கள் ரத்தத்தில் அதிகமாக இருந்தாலோ மூளையில் தாக்கம் ஏற்பட்டு வலிப்பு ஏற்படலாம். இப்படி பல காரணங்கள் தெரிந்து வலிப்பு வருவதை சிம்ப்டமேட்டிக்(Symptomatic seizures) சீஸர்ஸ் என்று கூறுவோம். காரணத்தை கண்டுபிடித்து, அதற்கேற்ற சிகிச்சை அளித்தால் வலிப்பு வராமல் தடுக்க முடியும். எடுத்துக்காட்டாக கால்சியம் அளவு ரத்தத்தில் குறைவாக இருந்தால் கால்சியத்தை உடலில் செலுத்தியும், சோடியம் சத்து குறைவாக இருந்தால் சோடியத்தை உடலில் செலுத்தியும் வலிப்பு வருவதை தவிர்க்க முடியும்.

வலிப்பு நோயின் வகைகள்

வலிப்பு நோய் என்றாலே நம் நினைவுக்கு வருவது சினிமாவில் பார்ப்பது போல் வாய் ஒரு பக்கம் கோணிக் கொண்டு, கை கால்கள் வெட்டிக் கொள்வதுதான். ஆனால், இது மட்டுமல்லாமல் வலிப்பு நோயில் பல வகைகள் உள்ளன. திடீரென்று ஒருவருடைய குணாதிசயங்களில் மாறுபாடு ஏற்படுதல்… அதாவது, பேசிக்கொண்டிருக்கும்போதோ அல்லது வேறுசெயல் ஏதும் செய்து கொண்டிருக்கும்போதோ திடீரென்று வெறித்துப் பார்த்தல், வாயை சப்புக் கொட்டுவது போல் மெல்லுதல், கைகளைக் கொண்டு ஏதோ ஒன்றை துலாவுவது போல் செய்தல், எழுந்து நடக்க முற்படுதல், சம்பந்தமே இல்லாமல் எச்சில் துப்புதல், இச்செயல்களை செய்யும்போது தான் என்ன செய்கிறோம் என்ற உணர்வின்றி இருத்தல்.. இவ்வனைத்தும் வலிப்பு நோயின் ஒருவகைதான்.

இதனை காம்ப்ளக்ஸ் பார்சியல் சீஸர்ஸ்(Complex Partial Seizures) என்று சொல்வோம். நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை திடீரென்று மரம் சாய்ந்ததுபோல் பொத்தென்று கீழே விழுதல் அடானிக் சீஸர்(Atonic seizure); திடீரென்று உடம்பு கை,கழுத்து மற்றும் தலை பகுதிகள் ஜெர்க் ஆகி கையில் இருக்கும் பொருட்கள் கீழே விழுதல் மையோ க்ளோனிக்(Myoclonic) சீஸர்ஸ்; ஸ்கூலில் நன்றாக பாடம் கவனித்துக் கொண்டிருக்கும் குழந்தை திடீரென்று தன் நிலை மறந்து (5 முதல் 10 வினாடிகள்) வெறித்துப் பார்த்தல், கண்களை சிமிட்டுதல், வாய் சப்பு கொட்டுதல் பின்பு உடனே சகஜ நிலைக்குத் திரும்புதல், இவ்வாறு வருவதை ஆப்சன்ஸ் சீஸர் (Absence Seizure) என்று சொல்வோம்.

பெரும்பாலும் இவ்வகையான வலிப்பினை ஆசிரியர்கள்தான் முதலில் கண்டுபிடித்து பெற்றோரிடம் கூறுவர். ‘காலையில் வகுப்பறையிலேயே உங்களது குழந்தை கனவு காண்கிறான்’ என்று ஆசிரியர்கள் கூறினால், பெற்றோர்கள் சற்று கவனத்துடன் குழந்தையை கண்காணிப்பது நல்லது. அது வலிப்பு நோயின் ஒரு வகையாகவும் இருக்கலாம். வலிப்பு நோய்க்கான ஆய்வுகள் என்னென்ன, வலிப்பு நோயை குணப்படுத்துவதற்கான மருத்துவ வசதிகள் என்ன உள்ளன என்பதை வரும் தொடர்களில்
காண்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்!! (மருத்துவம்)
Next post உறுதியான தலை முடிக்கு……!! (மகளிர் பக்கம்)