By 26 January 2021 0 Comments

பாலும் பால் சார்ந்த பொருட்களும்…!! (மருத்துவம்)

பால்… ஒரு முழுமையான உணவு நாம் மிகவும் அதிகமாகப் பருகும் பானமாக இருக்கும் பால் பெரு மற்றும் சிறு நுண்ணூட்டச் சத்துக்கள் (Macro & Micro Nutrients) நிறைந்தது. குழந்தைப் பருவம் முதல் இளமைப் பருவம் வரை அனைவருக்கும் அவசியமான பானமான பால் ஒரு முழுமையான உணவுப் பொருளாக(Complete food) போற்றப்படுகிறது. 100 மில்லி அளவுள்ள பசும்பாலில் ஆற்றல் 73 Kcal, மாவுச்சத்து 5g, புரதசத்து 3g, கொழுப்புச்சத்து 4g, மொத்த நிறைவுற்ற கொழுப்பு அமிலம் 3g, ஒற்றை நிறைவுறாத கொழுப்பு அமிலம் 1g, சோடியம் 25 mg, பொட்டாசியம் 115mg, பாஸ்பரஸ் 97mg, கால்சியம் 120mg அளவிலும் இருக்கிறது.

மாவுச்சத்து:

லாக்டோஸ்(Lactose) என்பது ஒரு வகையான மாவுச்சத்து. அதுவே பாலின் இனிப்புச் சுவைக்கு காரணமாக உள்ளது. நம்மில் பெரும்பாலானோர் காலையில் எடுத்துக்கொள்ளும் முதல் உணவாக பால் இருப்பதோடு, ஒரு நாளுக்குத் தேவையான முழு ஆற்றலையும், புத்துணர்ச்சியையும் நமக்குத்
தருகிறது.

புரதச்சத்து:

பாலிலுள்ள புரதச்சத்தில் இருக்கும் அதிகப்படியான அமினோ அமிலங்கள் உடலில் இருக்கும் திசுக்களை வலுவடையச் செய்கிறது. மேலும் சேதம் அடைந்த செல்களைச் சரி செய்கிறது.

கொழுப்புச்சத்து:

பாலில் உள்ள ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலம் (MUFA-Monounsaturated Fatty Acid) மற்றும் பிற கொழுப்பு அமிலங்களால்(Fatty acids) நம் உடலில் ஏற்படும் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

சுண்ணாம்புச்சத்து:

பாலில் சுண்ணாம்புச்சத்து அதிகமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இச்சத்து நம் உடலில் உள்ள பற்கள், எலும்புகளை வலுவாக்கவும், எலும்பு தேய்மானத்தை(Osteoarthritis) தடுக்கவும் உதவுகிறது.

வைட்டமின்கள்:

பாலில் உள்ள வைட்டமின் B மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான A, D, E, K போன்றவை நம் உடலுக்கு பல வகையான நன்மைகளைத் தருகிறது. உதாரணமாக இதிலுள்ள வைட்டமின் B12 என்பது நம் உடலில் உள்ள நரம்பு மண்டலம் மற்றும் மூளையை வலுவாக்க உதவுகிறது.

தயிர்:

பாலைப் போன்று பாலிலிருந்து பெறப்படும் பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய் மற்றும் யோகர்ட் போன்றவற்றிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் பல உள்ளன. காய்ச்சாத பால் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் மற்றும் நுண்ணுயிரிகள்(Bacteria) பாலில் இருந்து தயிர் தயாரிக்க உதவுகிறது.

தயிரின் பலன்கள்:

தயிரில் உள்ள சார்பு உயிரிகள்(Probiotics) நம் குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. இது நம் வயிற்று உபாதைகளை சரி செய்ய உதவுகிறது. இதிலுள்ள அதிகப்படியான சுண்ணாம்புச்சத்து நம் எலும்புகளை வலுவடையச் செய்கிறது. தயிர் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நம் தோலில் உள்ள ஈரப்பதமூட்டும் விளைவுகளை உண்டாக்கி, சருமம் வறட்சி அடையாமல் தடுக்கிறது.

யோகர்ட்:

பாலுடன் Lactobacillus bulgaricus மற்றும் Streptococcus thermophiles இவை இரண்டும் இணைந்து புளிப்புத் தன்மையை ஏற்படுத்துவதால் உருவாகும் ஒரு வகை தயிர் யோகர்ட் என்று அழைக்கப்படுகிறது. இது பல சுவைகளில் தயார் செய்யப்படுகிறது. இது நம் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது.

மோர்:

நீரினில் தயிரைக் கலந்து கடைந்தால் கிடைப்பதை மோர் என்று சொல்கிறோம். இது கோடை காலத்தில் உடலுக்கு குளிரூட்டும் பானமாகத் திகழ்கிறது.

மோரின் பலன்கள்:

மோர் உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கான சிறந்த குளிரூட்டியாகத் திகழ்கிறது. இது வயிற்றின் அமிலத் தன்மையைக் குறைக்க உதவுகிறது. வாயிலுள்ள தோலின் அணுக்களை கிருமித் தாக்கத்திலிருந்து (Anti inflammatory effect) பாதுகாக்கிறது. மோருடன் இஞ்சி, சீரகம், மிளகு சேர்த்து பருகுவதால் குடல் உபாதைகள் விலகி செரிமானத்திற்கு உதவுகிறது. வியாதியஸ்தர்கள் நடுவேளையில் வரும் பசியை அடக்குவதற்கு மோர் பருகுவதன் மூலமாக உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. மேலும் அது உடலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

வெண்ணெய்:

பாலிலிருந்து பெறப்படும் மற்றொரு பொருள் வெண்ணெய். பாலிலுள்ள கொழுப்புகள் உடைக்கப்பட்டு பின்பு சேர்க்கப்பட்டு வெண்ணெய்க்கான திடத்தன்மை பெறுகிறது. தயிரிலிருந்தும் வெண்ணெய் தயார் செய்யலாம்.

வெண்ணெயின் பலன்கள்:

வெண்ணெயில் அதிகளவு உள்ள வைட்டமின் A தைராய்டு மற்றும் அட்ரினல் சுரப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதிலுள்ள வைட்டமின் D மூலமாக கால்சியம் சத்து நம் உடலில் சேர்வதற்கு (Absorption) உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நம் உடலில் உள்ள செல்கள் தீவிர சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது. வெண்ணெய் உடலில் உள்ள ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தும் தன்மை கொண்டது. இது வாயில் ஏற்படும் புண்களை ஆற்ற உதவுகிறது.

நெய்:

உருக்கப்பட்ட வெண்ணெய்தான் நெய் என்று அழைக்கப்படுகிறது. அந்நாட்களில் நெய்யை சமையல் எண்ணெயாக பெரும்பாலானோர் பயன்படுத்தினர். நெய் ஆரோக்கியமான கொழுப்பு சத்து உடையது.

நெய்யின் பலன்கள்:

நெய் நமது உணவில் ருசியைச் சேர்ப்பதுடன், நிறைவாய் உணவு உட்கொண்ட திருப்தியைக் கொடுக்கிறது. இது Glycemic index அளவை நம் உணவில் குறைப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு உணவின் மூலம் அதிகரிக்கும் சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. நமது உணவில் தினமும் 2 அல்லது 3 தேக்கரண்டி நெய் சேர்த்து சாப்பிட்டால் அதிலுள்ள நிறைவுறா கொழுப்பு (Saturated fat) நமது மூளை திறம்பட செயல்பட உதவுகிறது. மேலும் இது நமது சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் வைக்க உதவுகிறது. இது மலச்சிக்கலை கட்டுப்படுத்துகிறது.

மேற்சொன்ன பொருட்களைத் தவிர பாலிலிருந்து பனீர், சீஸ், ஐஸ்கிரீம் மற்றும் பல வகை இனிப்பு பண்டங்களும் தயாரிக்கப்படுகிறது. நமது அனுதின உணவில் பால் ஒரு இன்றியமையாத பங்கு வகிக்கிறது. எனவே பால் மற்றும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை ஏதாவது ஒரு வகையில் அன்றாட உணவில் எடுத்துக்கொள்வது நல்லது.

லாக்டோஸ் இன்டாலரன்ஸ் (Lactose Intolerance):

பாலில் உள்ள லாக்டோஸ் ஜீரணம் ஆவதற்கு நமது குடலில் லாக்டேஸ் என்கிற திரவம் சுரக்க வேண்டும். இந்த லாக்டேஸ் குறைபாடு உள்ளவர்கள் பால் உட்கொண்டால், அவர்களுக்கு வயிறு உபாதைகள், வயிற்று வலி, வயிறு உப்புதல் (Bloating), வாயு மற்றும் வாந்தி போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படும். இந்த பிரச்னை உள்ளவர்கள் முதன்மை லாக்டோஸ் இன்டாலரன்ஸ் (Primary Lactose Intolerance), இரண்டாம் லாக்டோஸ் இன்டாலரன்ஸ் (Secondary Lactose Intolerance) என்று இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறார்கள். Primary Lactose Intolerance இந்த வகை பிரச்னை உள்ளவர்களுக்கு பிறப்பிலேயே லாக்டோஸ் திரவம் சுரக்காமல் இருக்கும் அல்லது அவர்கள் வளரும்போது அந்த திரவ அளவு குறைவுபடும்.

Secondary Lactose Intolerance:

இவர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சை அல்லது சிறுகுடலில் ஏற்பட்ட வியாதியின் நிமித்தமாக லாக்டோஸ் திரவம் சுரக்கும் அளவு குறைவுபடும். இந்த இருவகைப் பிரிவினரில் சிலருக்கு பாலிலிருந்து தயாரிக்கப்படும் மற்ற உணவுப் பொருட்கள் ஒத்துக்கொள்ளும் தன்மையுடையதாக இருக்கும். ஆனால் முற்றிலும் ஒவ்வாமை உள்ளவர்கள் சோயா பால், பாதாம் பால், தேங்காய் பால் மற்றும் பிற பல வகையான பாலை உட்கொள்ளலாம்.

பால் இல்லா உணவுமுறை:

Reddit என்கிற இணையதள பக்கத்தில் அசைவ உணவு முறையைத் தவிர்த்து, வீகன் உணவு முறையைப் பின்பற்றுவது மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள் குறித்தும் Veganuary என்ற பெயரில் பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரசாரத்தில் இந்த புத்தாண்டின் முதல் ஒரு மாதம் முழுவதற்கும் இதைப் பின்பற்றும்படி பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரசாரம் இங்கிலாந்து உள்ளிட்ட ஐக்கிய ராஜ்ஜியங்களில் (United Kingdom) 2014-ம் ஆண்டில் Jane Land, Matthew Glover என்கிற கணவன் மற்றும் மனைவி ஆகியோரால் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பிரசாரத்தின்படி 192 நாடுகளைச் சேர்ந்த 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் அசைவ உணவுமுறையைத் தவிர்த்து வீகன் உணவுமுறையை ஒரு மாதத்திற்கு பின்பற்றுவது என்ற உறுதிமொழியை 2020-ம் ஆண்டின் நவநாகரீக தீர்மானங்களில் ஒன்றாக எடுத்து இந்த உணவுமுறையில் இணைந்துள்ளனர். தாவரங்கள் மற்றும் அதிலிருந்து பெறப்படும் பொருட்களான காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள் மற்றும் பழங்கள் போன்ற சைவ வகை உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்கிற உணவுமுறைக்கு வீகன் டயட்(Vegan diet) என்று பெயர்.

இந்த உணவுமுறையைப் பின்பற்றுபவர்கள் விலங்குகளின் இறைச்சி மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் பால், முட்டை போன்ற பொருட்களை எடுத்துக் கொள்வதில்லை. ஹாலிவுட் நட்சத்திரங்களான Joaquin Phoenix, Alicia Silverstone, Mayim Bialik ஆகியோர் இந்த பிரசாரத்தில் தங்கள் பெயரை இணைத்துக் கொண்டுள்ளனர். மேலும் Natalie Portman என்ற நட்சத்திரம் புத்தாண்டு தினத்தன்று தன்னை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் 59 லட்சம் பேரையும் இந்த உறுதிமொழியை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

Veganuary மூலம் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஒரு மாதத்திற்கு இறைச்சி, பால் ஆகியவற்றை கைவிடுவதன் மூலம், 45 ஆயிரம் டன் அளவிலான கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக, உணவு உற்பத்தியின் சுற்றுச்சூழல் தாக்கத்தை ஆய்வு செய்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் Joseph Poore என்பவர் தெரிவித்துள்ளார். எனினும் வீகன் உணவு முறையைப் பின்பற்றுபவர்கள் இறைச்சி மற்றும் மாட்டுப் பால் அருந்தமாட்டார்கள். இதனால் உடலில் பல ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. எனவே, இவர்கள் உணவியல் அல்லது ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைப்படி தங்கள் உணவுமுறையை சீராக அமைத்துக் கொள்வது நல்லது.Post a Comment

Protected by WP Anti Spam