By 2 February 2021 0 Comments

கூந்தல்!! (மகளிர் பக்கம்)

தலைப்பின் பெயரில் பாதியே குறிப்பு கொடுத்திருக்கும். யெஸ்… டென்ஷன் அல்லது தீவிர மன அழுத்தம் காரணமாக முடியைப் பிடுங்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. தெரிந்தோ தெரியாமலோ இப்படிச் செய்வதன் பெயர்தான் ட்ரைகோடில்லோமேனியா (Trichotillomania).

மனதின் உந்துதல் அல்லது உளவியல் ரீதியான பாதிப்பின் காரணமாக கூந்தலைப் பிடித்து இழுத்துப் பிய்த்தெறிய வேண்டும் என்கிற எண்ணம் எழும். இதன் விளைவாக தலையில் உள்ள முடிகளை மட்டுமின்றி, புருவங்கள், இமைகள், மூக்கு, அந்தரங்க உறுப்புகள் என எங்கிருந்தும் ரோமங்களைப் பிடுங்கிப் போடுவார்கள். பிரச்னை தீவிரமான சிலர், கொத்துக் கொத்தாக தலையிலிருந்தும் புருவங்களில் இருந்தும் முடிக் கற்றைகளைப் பிடுங்கி எறிவார்கள். அதனால் அந்த இடங்களில் அவர்களுக்கு வழுக்கை போன்ற தோற்றம் தெரியும். ஒருசிலர், ஒரே ஒரு முடியை மட்டும் பிடுங்குவார்கள்.

பிடுங்கிய முடியை ஆராய்ச்சி செய்வது, அதை வைத்து விளையாடுவது என்கிற அளவுக்குப் போகிறவர்களும் உண்டு. இதில் என்ன கொடுமை தெரியுமா? ட்ரைகோடில்லோமேனியா உள்ளவர்களில் பாதிக்கும் மேலானவர்கள், பிடுங்குகிற முடிக் கற்றைகளை வாய்க்குள் போட்டுக் கொள்வார்கள்.இந்த விசித்திரமான பிரச்னை பெரும்பாலும் டீன் ஏஜிலேயே ஆரம்பமாகிறது. இது இளைஞர்களைவிட, இளம்பெண்களையே அதிகம் தாக்குகிறது. 1 வயதுக் குழந்தைக்குக் கூட இந்தப் பிரச்னை வரலாம்.

அந்த வயதில் குழந்தையானது முடியை தன் விரலில் சுற்றிக்கொண்டு இழுக்கும். இந்தப் பழக்கம் குழந்தையின் விரல் சூப்பும் பழக்கத்தைக் கூட மறக்கடிக்கச் செய்யலாம்.மன அழுத்தமும் மனச் சோர்வும் இந்தப் பிரச்னையைத் தீவிரப்படுத்தும் விஷயங்கள். பிரச்னை உள்ள மனிதர்கள் பார்ப்பதற்கு சாதாரணமானவர்களாகவே தெரிவார்கள். ஆனால், அவர்களது தலையிலும், புருவங்களிலும் உடலெங்கும் ஆங்காங்கே ரோமங்கள் அற்ற திட்டுத்திட்டான பகுதிகள் காணப்படும்.

இந்த பாதிப்புள்ளவர்களுக்கு நகங்களைக் கடிப்பது, தோலைப் பிய்த்தெடுப்பது போன்ற வேறு பிரச்னைகளும் இருக்கலாம். சிலருக்கு படபடப்பு, மனச் சோர்வு மற்றும் ஓசிடி எனப்படுகிற Obsessive compulsive disorder பிரச்னைகளும் சேர்ந்து கொள்ளலாம். அரிதாக ஒருசிலருக்கு இந்தப் பிரச்னை பரம்பரை வழியாகவும் தொடரலாம்.

Tonsure trichotillomania ட்ரைகோடில்லோமேனியாவிலேயே இது இன்னும் தீவிரமான ஒரு பாதிப்பு. முடியைப் பிடுங்கிய பிறகுதான் நிம்மதியாக உணர்கிற ஒரு நிலை. தீவிரமான இந்தப் பிரச்னையில் முடிகள் முழுக்கவும் பிடுங்கப்படும். 11 முதல் 40 வயதுக்காரர்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் 11 முதல் 17 வயது பெண்களின் எண்ணிக்கை அதிகம்.

ட்ரைகோடில்லோமேனியா பாதித்தோரில் இள வயதுக்காரர்கள் தங்களை அறியாமலும் மெல்ல மெல்லவும் இந்தப் பழக்கத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். முன்னந்தலைப் பகுதியிலுள்ள முடிகளே அடிக்கடி பிடுங்கப்படுகின்றன. அதன் விளைவாக மற்ற முடிகள் முறுக்கிக் கொண்டும், உடைந்தும் காணப்படும். ட்ரைகாலஜிஸ்ட் பாதிக்கப்பட்டவரது மண்டைப் பகுதியை ஆராயும் போது ஆங்காங்கே கீறல்களும் காயங்களும் இருப்பதைக் கண்டுபிடிப்பார். முடி பிடுங்கப்பட்ட பகுதியானது ஜியாமெட்ரிகல் வடிவத்தில் காணப்படும். வழக்கமாக வழுக்கை விழுந்த பகுதிக்கும் இதற்கும் வித்தியாசம் தெரியும்.

குழந்தையானது இப்படிப் பிடுங்கும் முடியை விழுங்கவோ மெல்லவோ கூடும். குழந்தையின் வாயை சோதனை செய்வதன் மூலம் இதைக் கண்டுபிடிக்கலாம். கூடவே குழந்தைக்கு வாந்தியோ, வயிற்று வலியோ, ரத்தசோகையோ இருக்கிறதா என்கிற கேள்வி களும் கேட்டு அறியப்படும். ட்ரைகோடில்லோமேனியா பாதித்த குழந்தைகளில் 10 சதவிகிதம் பேருக்கு இந்த அறிகுறிகள் இருக்கும். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தை விழுங்கிய கூந்தல் சேர்க்கைக்கு trichobozear என்று பெயர். இது வயிற்றுப் பகுதியில் காணப்படும். இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகிற பயங்கரமான பிரச்னை.

சிகிச்சை

குழந்தைகளிடம் காணப்படுகிற இந்தப் பிரச்னையை அவர்கள் மனநலம் பாதிக்கப்படாத பட்சத்தில் எளிதில் குணப்படுத்தி விடலாம். அந்தக் குழந்தையிடமும், பெற்றோரி டமும் பேச வேண்டியது முக்கியம்.பேச்சு தெரபி மற்றும் சில மருத்துவ சிகிச்சைகளின் மூலம் இந்தப் பிரச்னையை சரி செய்து விட முடியும். முடியைப் பிடுங்குவது நின்றதும் மீண்டும் அந்தப் பகுதியில் முடி வளர ஆரம்பிக்கும்.தீவிரமான நிலையில், இந்தப் பழக்கத்தை நிறுத்துவதற்கான சிகிச்சைக்கு சிலர் தயாராக இருக்க மாட்டார்கள்.

அதைப் பற்றிச் சொன்னால் அதிக டென்ஷனாவார்கள். அப்போது நிபுணர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில், இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்ய வேண்டும்.HRT எனப்படுகிற Habit reversal training இவர்களுக்குப் பெரிய அளவில் உதவும். இந்தப் பயிற்சியில் மருத்துவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது பிரச்னையை புரிந்து கொள்ள உதவுவார்கள். கூடவே அதிலிருந்து வெளியே வர வேண்டியதன் அவசியத்தையும் அதற்கான வழிகளையும் காட்டுவார்கள்.

முடியைப் பிடுங்கத் துடிக்கிற கைகளுக்கு எப்போதும் ஏதேனும் வேலையைக் கொடுப்பதும் இதிலிருந்து விடுபடுவதற்கான இன்னொரு வழியாக சொல்லப்படுகிறது. உதாரணத்துக்கு ஸ்ட்ரெஸ்சை குறைக்கிற பந்தை அமுக்குவது, ஓவியம் வரைவது போன்றவற்றைச் செய்ய வைக்கலாம். டி.வி. பார்க்கும் போது ஸ்வெட்டர் பின்னுவது, கூடை முடைவது போன்ற வேலைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் முடியைப் பிடுங்க நினைக்கிற கைகளையும் மனதையும் திசைத்திருப்பலாம்.இந்தப் பிரச்னைக்கான பிரத்யேக மருந்துகள் உள்ளன. அவையும் நல்ல முன்னேற்றம் காட்டும்.Post a Comment

Protected by WP Anti Spam