தமிழ்த் தலைமைகளின் பேசாப்பொருள் ‘பொருளாதாரம்’! (கட்டுரை)

Read Time:13 Minute, 56 Second

சர்வதேச அங்கிகாரம்மிக்க கடன் மதீப்பீடுகளான ‘பிட்ச் ரேடிங்ஸ்’, ‘ஸ்டான்டர்ட்ஸ் அன்ட் புவர்ஸ்’, ‘மூடீஸ்’ ஆகியன, மீண்டும் இலங்கையின் கடன் மதிப்பீட்டைக் குறைத்துள்ளன. இதன் அர்த்தம், சுதந்திர இலங்கை அரசு, தனது கடனை மீளச் செலுத்த முடியாத, வங்குரோத்து சூழலை எதிர்கொள்ள வேண்டி வரலாம் என்பதாகும்.

முன்னாள் மத்திய வங்கி ஆளுநரும், இந்நாள், பணம் மற்றும் மூலதனச் சந்தை, மற்றும் அரச முயற்சியாண்மை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சருமான அஜித் நிவாட் கப்ரால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இயக்குநருமான பசில் ராஜபக்‌ஷ ஆகிய இருவரும், இலங்கை வங்குரோத்தாகும் என்ற கருத்தை முற்றாக மறுத்து வருகிறார்கள். மேற்குறித்த நிறுவனங்களின் தர மதிப்பீடுகளின் சுயாதீனத்தன்மையைக் கேள்விக்கு உட்படுத்திய அஜித் நிவாட் கப்ரால், இந்த நிறுவனங்களை “doomsayers” (அழிவை மட்டும் ஆரூடம் சொல்பவர்கள்) என்று விழித்திருக்கிறார்.

தற்போது இலங்கையை ஆளும் அரசாங்கமானது, உள்ளக அரசியலைக் கையாளும் அதே பொறிமுறையைப் பயன்படுத்தி, சர்வதேச அரசியல், பொருளாதார விடயங்களையும் கையாள விளைகிறது. அதாவது, பகட்டாரவாரப் பேச்சுகளை மட்டும் பயன்படுத்தி, எப்படி உள்ளக அரசியலைக் கையாள்கிறதோ, அதைப்போலவே வெற்றுப் பகட்டாரவாரத்தைப் பயன்படுத்தி, சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனங்களின் சுயாதீனத்தை, நோக்கங்களைக் கேள்வி எழுப்புவதன் மூலம், தன்னிலையை நியாயப்படுத்த விளைகிறது.

ஆனால், இது இலங்கைக்கு எந்த விதத்திலும் நன்மை பயப்பதாக இல்லை. சர்வதேச கடன் வழங்குநர்கள், தமது தீர்மானங்களை மேற்கொள்கையில், இந்த நிறுவனங்களின் தர மதிப்பீடுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். ஆகவே, கண்மூடித்தனமாக, உள்நாட்டு அரசியலில் காட்டும் பகட்டாரவார வார்த்தை ஜாலங்களால், குறித்த நிறுவனங்களின் நம்பகத்தன்மையை தகர்த்துவிடலாம் என்று இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது; இது அவர்களுக்கும் தெரியும்.

ஆனால், உள்நாட்டு மக்கள், இலங்கை வங்குரோத்து அடைந்துவிடும் என்ற செய்திகளால் பரபரப்படைவதைச் சமன் செய்ய, ‘playing to the gallery’ கருத்துகளாக இவற்றை முன்வைத்து வருகிறார்கள்.

தன்னைக் ‘காளி’ என்று சொல்லும் நபர் தயாரித்த பாணியால், ‘கோவிட்-19’ நோய் குணமாகிவிடும் என்று நம்பும் மக்கள் கூட்டம், இந்தப் பகட்டாரவாரப் பேச்சுகளையும் நம்பும். ஆழ்ந்த பாதுகாப்பின்மை உணர்வும், அட்லரின் கருத்தின்படியான, தாழ்வுமனப்பான்மையால் உருவான உயர்வுமனப்பான்மையைக் கொண்ட மக்கள் கூட்டம், இந்தப் பசப்புகளை ஆழமாக நம்பத்தொடங்கும்.

மறுபுறத்தில், பொருளாதார நெருக்கடியில் சிக்கி நிற்கும் இலங்கையை, வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுக்க, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியை நாடுவதை, இலங்கை தவிர்த்து வருகிறது. IMFஇன் உதவியை நாடினால், அதனுடைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். அதற்கு இந்த அரசாங்கம் தயாராக இல்லை.

மறுபுறத்தில், மேற்குலகைக் கடுமையாக விமர்சித்து அரசியல் செய்யும் இந்த அரசாங்கம், மேற்குலகின் கட்டுப்பாட்டிலுள்ள IMFஇன் கட்டளைப்படி நடப்பது உள்ளக அரசியலில் பின்னடைவுகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது.

மறுபுறத்தில், இந்த அரசாங்கம், இலங்கையின் மீட்பராகச் சீனாவைக் கருதுகிறது. இலங்கை வங்குரோத்து அடைவதிலிருந்து, சீனா தம்மைப் பாதுகாக்கும் என்று இலங்கை முழுமையாக நம்புகிறது. ஆனால், சீனாவின் ஆதரவு என்பது, எந்தப் பிடியுமில்லாமல் வரும் ஒன்றல்ல. ஆனால், எதையும் சீனாவிடம் அடகு வைக்கவும் கையளிக்கவும், இந்த அரசாங்கம் தயாராக இருப்பதாகவே தெரிகிறது.

“அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டு, நாட்டை விற்கமுடியாது” என்று ‘மிலேனியம் சலேஞ்ச் கோபரேஷன்’ (MCC) ஒப்பந்தத்துக்கு எதிராகக் கங்கணம் கட்டிக்கொண்டு நின்ற அரசாங்கம், சீனாவுடன் ஒப்பந்தம் போட்டு, எதையும் அடகுவைக்கத் தயராக இருக்கிறது என்பதுதான் இங்கு முரண்நகை.

பொருளாதாரத்தின் ஒவ்வோர் அசைவும், நாட்டு மக்களின் அன்றாட வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவனவாக அமையும். இன்றி, அதிகரித்து வரும் விலைவாசி, வாழ்க்கைச் செலவு ஆகிய மக்களின் வாழ்க்கைச் சுமையை அதிகரித்து வரும் அதேவேளை, கோவிட்-19 நோயின் தாக்கத்தால், பல நிறுவனங்கள், ஆலைகள் மூடப்பட்டு, பலரும் தொழில் இழப்புகளைச் சந்தித்து வருகிறார்கள்.

வருமான வீழ்ச்சி என்பது, பெரும் தொழிலதிபர்கள் முதல், கடைநிலை ஊழியர்வரை கடுமையாகப் பாதித்துவருகிறது. உல்லாசப்பிரயாணம் உள்ளிட்ட தொழிற்றுறைகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன. இன்றைய சூழலில், பொருளாதாரத்தின் எதிர்மறைப்போக்கை, மக்கள் தமது அன்றாட வாழ்வில் உணர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.

பெரும்பாலான இறக்குமதிகளைத் தடைசெய்து வைத்திருப்பதால், அமெரிக்க டொலரின் பெறுமதி 185 – 190 ரூபாய்கள் என்றளவில் தற்போது ஊசலாடிக் கொண்டிருக்கிறது. உற்பத்தித் தொழிற்றுறைகள் வளர்ச்சியடையாத, இறக்குமதிகளில் பெருமளவு தங்கிய இலங்கையில், இன்னும் எத்தனை காலத்துக்கு இறக்குமதிகளைத் தடைசெய்து வைத்திருக்க முடியும்? இப்படி நிறையக் கேள்விகள் தொக்கி நிற்கின்றன.

ஆனா, இதுபற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாத தலைமைகள் என்றால், அது தமிழ்த் தலைமைகள்தான். இலங்கையின் பொருளாதார நெருக்கடி, தமிழ் மக்களைப் பாதிக்காதா? ஏற்கெனவே, பொருளாதாரத்தில் மிகப்பின்தங்கிய கடைசி மாகாணங்களாக கிழக்கும் வடக்கும் காணப்படுகின்ற நிலையில், பொருளாதாரம் பற்றிப் பேசாத, அதைப்பற்றிக் கவலை கூடப்படாத தலைமைகளாகத் தமிழ்த் தலைமைகள் இருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்கு மட்டுமல்ல, ஒருவகையில் ஆச்சரியத்துக்கும் உரியது.

தமிழ்த் தலைமைகள் ஏறத்தாழ 65 வருடங்களாக, தமிழ்த் தேசியத்தை மையப்படுத்திய, பகட்டாரவார அரசியலையே நடத்தி வருகின்றன. தேசக்கட்டுமானத்தில், பொருளாதாரம் என்பது, அடிப்படையானதொன்று. ஆனால், விடுதலையைப் பற்றியும் சுயநிர்ணயத்தைப் பற்றியும் மட்டுமே தமிழ்த் தேசிய தலைமைகள் பேசி வருகின்றனவே அன்றி, பொருளாதாரம் பற்றிய பிரக்ஞையோ, அது பற்றிய திட்டங்களோ, தமிழ்த் தலைமைகளால் அக்கறையோடு முன்வைக்கப்பட்டதில்லை.

வடமாகாண சபை, தனக்கு வந்த நிதியைக் கூட முழுமையாகப் பயன்படுத்தாது திருப்பி அனுப்பியது என்பதன் பின்னால், தமிழ்த் தலைமைகளின் இயலாமையும் திறனின்மையும் வௌிப்பட்டு நின்றது. இன்றும் கூட, நாடாளுமன்றத்தில் அனல்தெறிக்கும் பேச்சுகளைத் தமிழ்த் தலைமைகள் உணர்ச்சி பொங்க முன்வைத்தாலும், நாட்டின் பொருளாதாரம் பற்றியோ, ஏன், தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பொருளாதாரம் பற்றியோ, அவர்கள் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. நாட்டின் பாதுகாப்புக்கென இராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவை விமர்ச்சிக்க மட்டும், வடக்கு-கிழக்கின் பின்தங்கிய பொருளாதார நிலையை எடுத்தாளுவதைத் தாண்டி, தமது மக்களின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பில், பொருளாதாரப் பாதுகாப்பு தொடர்பில், அவர்கள் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.

தமிழரின் பிரதிநிதிகள் என்பவர்கள், தமிழ் மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்? குறைந்தபட்சம், அவர்களிடம் தூரநோக்குத் திட்டங்களாவது இருக்கின்றனவா? அதற்கான எந்த முயற்சியையாவது எடுத்திருக்கிறார்களா? இல்லை. இது மிகுந்த வருத்தத்துக்கு உரியதொரு நிலை.

கோவிட்-19 நோய்த்தொற்றால், பேலியகொடை மீன்சந்தை மூடப்பட்டபோது, கடலுணவு பற்றிய அச்சத்தால், மக்கள் கடலுணவைக் கொள்வனவு செய்வது குறைந்தபோது, அதனால் வடக்கு – கிழக்கின் மீனவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், இதைப்பற்றி எல்லாம் தமிழ்த் தலைமைகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தெற்கிலிருந்த மக்கள் பிரதிநிதிகள், கடலுணவு பற்றிய அச்சத்தை விலக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளில், ஒரு துளியையேனும் தமிழ்ப் பிரதிநிதிகள் எடுத்துக்கொள்ளவில்லை.

தாம், இலங்கையின் பொருளாதார ரீதியில் மிகப்பின்னடைந்த இரண்டு மாகாணங்களின் பிரதிநிதிகள் என்பதை, தமிழ்த் தலைமைகள் உணர்வதாகத் தெரியவில்லை. ஒருவேளை, மக்களுக்குப் பெரும்பணிகள் ஆற்றாமலேயே, வெற்று வாய்ஜாலத்தில் மட்டும் தேர்தலில் வெற்றிபெற்ற பழக்கத்தில், அதே நம்பிக்கையில், அவர்கள் தமது அரசியலைத் தொடர்ந்தும் கொண்டு நடத்தலாம் என்று எண்ணுகிறார்களோ தெரியவில்லை.

இலங்கையின் பொருளாதாரம் மோசமடைந்தால், இலங்கை பொருளாதார ரீதியில் வங்குரோத்தடைந்தால், ஏற்கெனவே பொருளாதாரத்தில் பின்னடைந்த வடக்கினதும் கிழக்கினதும் நிலைமை இன்னும் மோசமாகும். இதற்குத் தமிழ்த் தலைமைகள் எனப்படுவோர், என்ன செய்யப்போகிறார்கள் என்பதுதான் முக்கிய கேள்வி.

தமிழ் அரசியலை, இப்படியே வங்குரோத்து அரசியலாக, எத்தனை காலம் கொண்டு நடத்தப் போகிறீர்கள்? பொய்யும் பழங்கதையும் வெற்றுப்பெருமைகளும் பேசி, உங்களை நம்பி வாக்களித்த மக்களை, பிச்சைக்காரரைவிட மோசமான நிலைக்குக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறீர்கள். இனியேனும், தமிழ் மக்களின் பொருளாதாரம் பற்றியும் சிந்திக்கத் தொடங்குங்கள். பொருளாதாரம் பற்றிப் பேசத்தொடங்குங்கள். பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளை அடையாளம்கண்டு, அவற்றுக்கான தீர்வுகளை முன்னெடுக்க முயற்சியுங்கள். அப்போதுதான் உங்கள் தேசக்கட்டுமானம் அர்த்தமுடையதாகும். ‘இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு’.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post MGR இங்க தான் சிங்கம் வளர்த்தாரு! (வீடியோ)