காதல் மட்டும் போதுமா? (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 2 Second

இந்திய சமூகத்தில் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு மலர காதல் மட்டுமே போதுமானதா? இல்லை பொருளாதாரம், சாதி, மதம் போன்றவற்றில் சரிக்கு சமமான நிலையில் இருவருமே இருக்க வேண்டுமா? உண்மையில் இங்கே என்னதான் நடக்கிறது? போன்ற கேள்விகளுடன் அணுக வேண்டிய இந்திப் படம் ‘சார்’.

முதலாளிக்கும் வேலைக்கார பெண்ணுக்கும் இடையிலான அழகான காதல் கதையே இந்தப் படம். மகாராஷ்டிராவில் உள்ள குக்கிராமம். ஏழ்மை தாண்டவமாடும் ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள் ரத்னா. சுதந்திர தாகமும் சுயமரியாதை உணர்வும் கொண்டவள். திருமணமான சில மாதங்களிலேயே அவளுடைய கணவன் இறந்துவிடுகிறான். இளம் விதவை என்று முத்திரை குத்தப்படுகிறாள். வேலைக்குப் போய் தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதோடு தங்கையின் படிப்புச் செலவுக்கும் உதவுகிறாள். இதுபோக மாமியார் வீட்டுக்கும் பணம் அனுப்புகிறாள். இதற்கிடையில் ஃபேஷன் டிசைனர் ஆக வேண்டும் என்ற கனவு அவளைத் துரத்திக்கொண்டே இருக்கிறது.

இன்னொரு பக்கம் மும்பை மாநகரில் பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இளைஞன் அஸ்வின். எழுத்தாளர் ஆக வேண்டும் என்பது அவனது கனவு. அதனால் சில காலம் அமெரிக்காவில் தங்கியிருந்தான். அவனுக்கு ஒரு காதலி இருந்தாள். திருமணம் கூட முடிவாகிவிட்டது. காதலியுடனான முரண்பாட்டால் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி குடும்ப பிசினஸில் ஈடுபட்டு வருகிறான். மும்பையில் கடற்கரையை நோக்கியிருக்கும் சொகுசான ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறான்.

வனது வீட்டு வேலைகளைச் செய்வதற்காக மும்பைக்கு வருகிறாள் ரத்னா. அவள் தங்குவதற்காக வீட்டுக்குள்ளேயே அட்டைப்பெட்டி போன்ற ஓர் அறை ஒதுக்கப்படுகிறது. அவ்வளவு பெரிய வீட்டில் ஏராளமான பொருட்களுடன் அஸ்வினும் ரத்னாவும் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். அஸ்வினாவது வேலை, நண்பர்கள் சந்திப்பு, பார்ட்டி என்று வெளியே போய்விடுகிறான். ஆனால், ரத்னா 24 மணி நேரமும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய நிலை. வேலை முடிந்து ஓய்வாக இருக்கும்போது டெய்லரிங் பயிற்சி பெற வெளியில் போக அனுமதி கேட்கிறாள் ரத்னா. அவளின் விருப்பத்தை மதித்து, அனுமதி தருகிறான் அஸ்வின்.

வீட்டில் இருக்கும்போது தனிமையிலும் திருமணம் நின்று போன துயரத்திலும் இருக்கிறான் அஸ்வின். இதைக் கவனிக்கும் ரத்னா, அவனுக்கு ஆறுதலாக பேசுகிறாள். இது அஸ்வினுக்குப் பிடித்துப்போகிறது. இந்த உலகத்திலேயே தன்னைப் புரிந்துகொண்டது மற்றும் தனக்கு சரியான இணையாக ரத்னாவால் இருக்க முடியும் என்று உணர்கிறான்.

பொருளாதாரம், அந்தஸ்து, படிப்பு என சமூகம் வரையறுத்து வைத்திருக்கும் எல்லா அளவீடுகளிலும் தனக்கு எதிரான திசையில் இருக்கும் ரத்னாவிடம் தன் விருப்பத்தைச் சொல்கிறான். அஸ்வினும் ரத்னாவும் இணைய காதல் மட்டுமே போதுமா… இருவரும் இணைந்தார்களா… என்பதே மனதை தொடும் கிளைமேக்ஸ்.

அழகான காதலினூடாக நம் சமூகத்தில் நிலவும் ‘ஏழை – பணக்காரன்’ என்ற பேதத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது இந்தப் படம். அஸ்வினைச் சார்ந்த யாருமே அவனுடைய காதல் உணர்வை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை. மாறாக, வேலைக்காரியுடன் ஒரு முதலாளி காதல் கொள்வதா என்று அவனை ஏளனப்படுத்துகிறார்கள்; கிண்டலடிக்கிறார்கள்.

மனதின் ஓரத்தில் அஸ்வின் மீது ரத்னாவுக்கு நல்ல அபிப்ராயம் இருந்தாலும் அவளாலும் காதலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த விஷயம் வீட்டுக்குத் தெரிந்தால் பெரிய பிரச்னையாகிவிடும் என்று பயந்து வேலையையும் அஸ்வினையும் விட்டு கிளம்பிவிடுகிறாள். ரத்னாவாக கலக்கியிருக்கிறார் திலோத்தமா. அஸ்வின் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் விவேக் காம்பர். இப்படத்தின் இயக்குநரான ரோஹனா கெரா, முக்கியப் பெண் இயக்குநர்களில் ஒருவர். பல சர்வதேச விருதுகளை அள்ளிய இந்தப்படம், ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேஸ் அடுப்பு பராமரிப்பு!! (மகளிர் பக்கம்)
Next post சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “ஊரதீவு மயானப் புனரமைப்பு” பூர்த்தி.. வல்லன் மயான வேலை ஆரம்பம்.. (படங்கள் & வீடியோ)