By 22 February 2021 0 Comments

பிங்க் ஆட்டோ பெண்களுக்காக பெண்களால்!! (மகளிர் பக்கம்)

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பெண்களே இயக்குவதுதான் ‘பிங்க் ஆட்டோ’. பெங்களூர், ஒடிசா, குஜராத், உத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களின் முக்கிய நகரங்களில் இந்த சேவை செயல்பாட்டில் உள்ள நிலையில், சென்னையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

‘‘நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த இடத்தைக் குறிப்பதால் ‘ரோட்டரி கிளப் ஆஃப் நெய்தல்’ எனப் பெயரிட்டுள்ளோம். நான் இதில் கம்யூனிட்டி சர்வீஸ் டெவலப்மென்ட் இயக்குநர். எங்கள் ரோட்டரி மூலமாக 200 பெண்கள் பிங்க் ஆட்டோ ஓட்ட பயிற்சியில் இருக்கிறார்கள். முதல் கட்ட முயற்சியில் 8 பெண்கள் இதில் களம் இறங்கியுள்ளனர்’’ என பேச ஆரம்பித்தார் ரோட்டேரியன் சாந்தி.

சமீபகாலமாக பெண்கள், பெண் குழந்தைகள் மீதான குற்றச் செயல்கள் பரவலாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. இரவு நேரங்களில் பெண்கள் தனியாகப் பயணிப்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே பெண்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு பெண் ஆட்டோ டிரைவர்களை உருவாக்கவும், நலிவடைந்த பெண்களின் வாழ்வாதாரத்திற்கு வழி காட்டவும் 2019-20ல் பிங்க் ஆட்டோ திட்டம் ரோட்டரி கவர்னர் சந்திரமோகனால் உருவாக்கப்பட்டு செயல் வடிவம் பெற்றது. திடீரென ஏற்பட்ட கொரோனா லாக்டவுனில் திட்டம் உடனடியாக அமலுக்கு வர முடியாமல் அப்படியே நின்று போனது.

தற்போது இந்தத் திட்டத்தை நாங்கள் கையில் எடுத்து, ரோட்டரி கிளப் ஆஃப் நெய்தல் மூலம், இதை நிரந்தரத் திட்டமாக்க கவர்னரிடம் அனுமதி பெற்றுள்ளோம். பிரதம மந்திரியின் முத்ரா கடன் திட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி மூலமாக 75 சதவிகிதம் நிதியினை கடனாகவும், மீதி 25 சதவிகிதம் நிதியினை ரோட்டரி மூலமாகவும் வழங்கி 8 ஆட்டோக்களை இதுவரை வாங்கிக் கொடுத்துள்ளோம். லைசென்ஸ் வித் பேட்ஜ் உடன் முறையான ஓட்டுநர் உரிமத்தையும் அவர்களைப் பெற வைத்துள்ளோம்.

இம்மாத இறுதிக்குள் மேலும் 25 ஆட்டோக்களை வழங்குவதற்கான வேலைகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது ஓலா நிறுவனத்தோடும் இணைத்திருக்கிறோம். இனி பள்ளி கல்லூரிகள் திறந்துவிட்டால் ரோட்டரி மூலமாகவே இன்ட்ராக்ட் அண்ட் ரோட்ராக்ட் திட்டத்தில், பள்ளி கல்லூரி மாணவர்களையும் பிங்க் ஆட்டோ சவாரியில் இணைக்கும் திட்டமும் உள்ளது.

பெண்கள் ஆட்டோவை இயக்க ஆரம்பித்ததுமே திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் நல்ல வருமானம் கிடைப்பதோடு, நிறைய பெண் கஸ்டமர்களும், முதியவர்களும் பாதுகாப்பை உணர்கிறார்கள். நூறு ஆட்டோக்களை வழங்கியபின், இந்தப் பெண்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து பிங்க் ஆட்டோ ஆப் ஒன்றை உருவாக்கி ‘ஒன்லி ஃபார் லேடீஸ்’ கான்செப்டில் பயன்படுத்தும் திட்டமும் உள்ளது.

பெண்களுக்கு பொருளாதார தன்னிறைவு ஏற்படும்போது சுதந்திரக் காற்றை சுவாசித்தவர்களாக, சிறகை விரித்து மேலே மேலே பறக்கத் தொடங்குகிறார்கள். நான் சுயமாகச் சம்பாதிக்கிறேன். என் குடும்பத்தை காப்பாற்றுகிறேன் என்கிற எண்ணம் அவர்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகிறது. வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றாலும் குடும்பத்தையும், குழந்தைகளையும் தன்னால் உயர்த்த முடியும் என்கிற நம்பிக்கையை பிங்க் ஆட்டோ திட்டம் பெண்களுக்கு கொடுத்திருக்கிறது. குழந்தைகளோடு மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்.

இரண்டு லட்சம் பெருமானமுள்ள ஆட்டோவை வாங்க, வங்கி கொடுத்த கடன் தொகைக்கு மாதாந்திரத் தவனைத் தொகையினை டிமினிசிங் ரேட்டில் மிகக் குறைந்த வட்டியில் சரியாகச் செலுத்தி வருகிறார்கள்’’ எனப் புன்னகைத்து விடைபெற்றார் சாந்தி. அவரைத் தொடர்ந்து பேசிய பிங்க் ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தி. ‘‘கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து ஆட்டோ ஒட்டுகிறேன். நாங்கள் அனைவரும் வடசென்னையில் வெவ்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள். நான் வில்லிவாக்கம் ஐசிஎஃப் பகுதியில் வசிக்கிறேன்.

நெய்தல் ரோட்டரி மூலமாகவே இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மேலும் சில பெண்களும் மகளிர் குழுக்கள் மூலமாகவும் பிங்க் ஆட்டோ ஓட்டுநர் குழுவில் இணைந்துள்ளனர். எங்கள் அனைவருக்கும் ரோட்டரி மூலமாகவே ஓட்டுநர் பயிற்சியும், முறையான லைசென்ஸ், வங்கியில் ஆட்டோவிற்கு கடனும் கிடைத்தது. நாங்கள் எதற்காகவும் ஒரு ரூபாய் பணத்தைக்கூட செலவு செய்யவில்லை என்றார் மிகவும் அழுத்தமாக.

வங்கியில் எங்களுக்கு ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் கடன் கிடைத்தது. நெய்தல் ரோட்டரி ஒவ்வொருவருக்கும் நாற்பதாயிரம் ரூபாய் வழங்கினார்கள். முதல் 3 மாதம் 1300 வட்டி மட்டுமே வங்கியில் கட்டினோம். 4வது மாதத்தில் இருந்து 4200 ரூபாய் மாதத் தவணையாகக் கட்ட ஆரம்பித்துள்ளோம். 5 ஆண்டுகளுக்கு கட்ட வசதியாக தவணை முறையை பிரித்துக் கொடுத்துள்ளார்கள். நாங்கள் வங்கியில் வாங்கிய முதல் குறைய குறைய வட்டியும் குறையும் என முடித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய ஆட்டோ ஓட்டுநர் நாகவள்ளி, எங்களுக்கு ரொம்பவே சந்தோசமாக இருக்கு. எல்லோரும் எங்களை ஆச்சரியமாகப் பார்க்குறாங்க. தினம் யாராவது ஒருத்தர் எங்களை பாராட்டி பேசுறாங்க. சிலர் எங்களை சிங்கப் பெண் என்கிறார்கள். உற்சாகப்படுத்துகிறார்கள். எங்கள் வருமானத்தில்தான் குடும்பத்தை ஓட்டுறோம். இப்பவெல்லாம் கையில் பணம் நல்லாவே நிக்கிது. எங்கள் பிள்ளைகள் கேட்பதையும் வாங்கிக் கொடுக்கிறோம். தெம்பா இருக்கோம் என்றவர், வீட்டு வேலைகளை முடித்து எங்களுக்கு சரிப்படும் நேரத்தில் மட்டுமே ஆட்டோவை எடுக்கிறோம். போன் செய்தும் சிலர் அழைக்கிறார்கள்.

காலை 9 மணிக்கு ஆட்டோவை எடுத்தால், மதியம் 1 மணிவரை. நடுவில் கொஞ்சம் ரிலாக்ஸ். மீண்டும் 3 அல்லது 4 மணிக்கு எடுத்தால் இரவு 8 மணிக்கு வீடு திரும்புவோம். லாங் சவாரிகளும் இதில் உண்டு. ஒரு நாளைக்கு 600 ல் இருந்து 700 வருமானம் வருது. ஸ்கூல், காலேஜ் திறந்தால் இன்னும் அதிகரிக்கும்’’ என்றவர், ‘‘ஆண்களால் இதுவரை எந்த பிரச்சனையும் எங்களுக்கு வரலை. பெண்களாக இணைந்து செய்வதால் எங்களைப் பார்த்து ஆண் ஆட்டோ ஓட்டுநர்கள் மரியாதைதான் கொடுக்குறாங்க. சப்போர்ட்டா இருக்காங்க. எதாவது பிரச்சனை வந்தால் சொல்லுங்க என்றுதான் சொல்கிறார்கள்’’ என முடித்துக் கொண்டார்.

சுற்றி நின்ற மற்ற பிங்க் ஆட்டோ பெண்களிடத்தில் பேசியதில்.. ‘‘இதற்கு முன் நாங்கள் எந்த வண்டியையும் ஓட்டியதில்லை. ஆனால் ஆட்டோ ஓட்டத் தொடங்கிய பின் டிராஃபிக் பார்த்து பயமெல்லாம் சுத்தமாக இல்லை. எங்கள் சவாரியில் ஆண்கள் ஏறினாலும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ரொம்பவே ஃப்ரீயா ஓட்டுறோம்’, கையசைத்து விடைபெற்றார்கள் சிங்கப் பெண்கள்.Post a Comment

Protected by WP Anti Spam