கல்லே, கல்லே கரைந்துவிடு!! (மருத்துவம்)

Read Time:13 Minute, 42 Second

மஞ்சள் காமாலைக்கு அடுத்தபடியாக சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட மூலிகை மருந்துகளில் குணமாகிறது என்று மக்கள் நம்புவது சிறுநீர்க் கல்லைத்தான்.“காலையில் எழுந்ததும் வாழைத்தண்டுச் சாறு சாப்பிடு”, “பார்லி தண்ணீர் குடி!”, “சிறுகுறிஞ்சான் ஜூஸ் குடி!” என்று இலவச ஆலோசனைகள் நிறையவே கிடைக்கும். இவை எல்லாமே சிறுநீரைப் பெருக்குகின்றன. அப்போது ஆற்றுத் தண்ணீரில் கூழாங்கற்களும் அடித்துச் செல்லப்படுவதைப் போல, சிறிய கற்கள் சிறுநீரோடு சுலபமாக வெளியேறி விடுகின்றன.ஆனால், பெரிய கற்கள் இவற்றுக்கெல்லாம் ‘அசைந்து’ கொடுக்காது. அப்போது அலோபதி மருத்துவம்தான் கைகொடுக்கும். அலோபதி மருத்துவத்தில் சிறுநீர்க் கல்லைக் கரைக்க மருந்து இருக்கிறதா? “இல்லை” என்பதுதான் பதில். ஆனால், சிறுநீரகம் இயற்கையாகவே சிறுநீர்க் கல்லை அகற்றுகிறது என்கிற விஷயம் உங்களுக்குத் தெரியுமா? கண்ணில் தூசு விழுந்தால், கண்ணீர் சுரந்து, அதை வெளியேற்றுகிற மாதிரி, ஆரம்ப நிலையில் உள்ள சிறுநீர்க் கல்லை சிறுநீரகமே வெளியில் தள்ளுகிறது.

எப்படி? சிறுநீரகக் குழாயைச் சற்றே விரிவடையச் செய்து, சிறுநீரையும் சிறிது அதிகமாகச் சுரந்து, கல்லை வெளியில் அனுப்பிவிடுகிறது. தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிப்பவர்களுக்கு இது சாத்தியப்படுகிறது. மற்றவர்களுக்குத்தான் இந்தப் பிரச்னை பெரிதாகிறது. சிறுநீர்க் கல்லில் கற்கண்டுத் துகள் மாதிரி கண்ணுக்குத் தெரியும் கற்களும் உண்டு. கண்ணாடித் துகள் மாதிரி கண்ணுக்கே புலப்படாத கற்களும் உண்டு. சில வகை கற்கள் எக்ஸ்-ரேயில்கூடத் தெரியாது. ஸ்கேனில் மட்டுமே தெரியும்.

இந்தக் கற்களின் அளவு, எடை, வகை ஆகியவற்றைப் பொறுத்துத்தான் சிகிச்சை அமையும். அரிசியில் புழுங்கல் அரிசி, பொன்னி அரிசி, பாசுமதி எனப் பல வகைகள் இருப்பதுபோல், சிறுநீர்க் கல்லிலும் சில வகை உண்டு. அவை: 1. கால்சியம் கற்கள். 2. யூரிக் அமிலக் கற்கள். 3. சிஸ்டின் கற்கள். 4. ஸ்டுரூவைட் கற்கள். இவற்றில் கால்சியம் கற்கள்தான் பொதுவாக இருக்கும். இவை கால்சியம் ஆக்சலேட், கால்சியம் பாஸ்பேட் எனும் ‘வேதி உடை’ அணிந்திருக்கும்.சிறுநீர்க் கற்கள் ஏற்படுவதற்கு நம் உணவுமுறையும் ஒரு முக்கியக் காரணம்தான். பசலைக்கீரை, முட்டைக்கோஸ், அவரை, தக்காளி, கோதுமை, முந்திரிப்பருப்பு, மீன், இறைச்சி, சாக்லேட் போன்றவற்றில் ஆக்சலேட் அதிகமுள்ளது. தவிர, உடலில் கல்லீரலும் இதை உற்பத்தி செய்கிறது. சில உணவுகள் செரிமானம் ஆகும்போது ஆக்சலேட் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும். அப்போது ஆக்சலேட் கற்கள் சிறுநீரகத்தில் உருவாகும்.

மாறாக, பாஸ்பேட் கற்கள் சிறுநீர்ப் பையில்தான் உருவாகும். இத்தாது முழுப்பயறுகள், எண்ணெய் வித்துகள், கொட்டைகள், கேரட், பால் போன்றவற்றில் உள்ளது. இவற்றை அடிக்கடி அதிகமாகச் சாப்பிட்டால், பாஸ்பேட் கற்கள் உருவாகும். பாஸ்பேட் கலந்த சிறுநீர் பல மணி நேரம் சிறுநீர்ப் பையில் தேங்கினாலும், அது ஒரு படிகம்போல் படிந்து, கல்லாக மாறும். பாக்டீரியா போன்ற அசுத்தங்கள் அங்கே குடியிருந்தால், திறந்த உணவைத் தேடி வரும் ஈக்கள் மாதிரி இந்தக் கற்கள் உருவாவது சுலபமாகிவிடும்.அடுத்து, இறைச்சி அதிகம் சாப்பிடுபவர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். இவர்கள் விரும்பிச் சாப்பிடும் ஈரல், மூளை, சிறுநீரகம் போன்ற இறைச்சிகளில் யூரிக் அமிலம் அதிகம். இதனால் இவர்களுக்கு யூரிக் அமிலக் கற்கள் வருவதற்கான வாய்ப்பும் அதிகம். மேலும், ‘கவுட்’ (Gout) எனப்படும் மூட்டு வாதப் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்தக் கற்கள் சீக்கிரமே உருவாகிவிடும். புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட்டாலும் இதேகதிதான்.

சிஸ்டின் கல் பரம்பரையாக வருவது. இவர்களுடைய சிறுநீரகங்கள் ‘சிஸ்டின்’ எனும் அமினோ அமிலத்தைச் சிறுநீரில் ஒழுகவிடும். அப்போது அது சிறுநீர்ப் பாதையில் படிந்து கற்களாக உருவாகும். அடிக்கடி சிறுநீர்த்தொற்று ஏற்படுபவர்களுக்கு ஸ்டுரூவைட் கற்கள் உண்டாகும். இங்கு கற்களின் வகை பற்றி இவ்வளவு விஸ்தாரமாகப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. ஒருமுறை கல் வந்து, சரியானவர்களுக்கு மறுபடியும் கல் வருவதற்கு 50 சதவீதம் வாய்ப்புள்ளது.எனவே, ஏற்கனவே வெளிவந்த கல்லின் வகை அறிந்து, அது உருவாகத் துணைபுரியும் உணவுகளைத் தவிர்த்தால் மட்டுமே மறுபடியும் கல் ஏற்படாது. சரி, சிகிச்சைக்கு வருவோம். சுமார் 5 மி.மீ. அளவுள்ள சிறு கற்களை சரியான உணவு மூலமே கரைத்துவிடலாம். இவர்கள் தேவைக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். 1.5 செ.மீ. வரை உள்ள கற்களை ‘ஷாக் வேவ் லித்தோட்ரிப்ஸி’ யில் (ESWL) உடைத்து விடலாம்.

எப்படி? குவாரியில் வெடி வைத்துக் கற்களை உடைக்கிற டெக்னாலஜிதான் இது. சின்ன வித்தியாசம்… குவாரியில் கற்களை உடைப்பது, வெடி. சிறுநீரகத்தில், ஒலி. உடம்பின் வெளியிலிருந்து குறிப்பிட்ட ஒலி அலைகளைச் சிறுநீரகத்துக்கு அனுப்பினால், அங்குள்ள கற்கள் உடைந்து, சிறுநீரில் தானாகவே வெளியேறுகின்றன. இதற்கு மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அதிக ஓய்வும் தேவையில்லை. ஆனால், இரண்டு, மூன்று ‘சிட்டிங்’ தேவைப்படலாம்.சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர்க் குழாய்…. இங்குள்ள கற்களை ‘யூரிட்ரோஸ்கோப்பி’ (Ureteroscopy) எனும் கருவி கொண்டு எடுத்துவிடலாம். வளையும் தன்மையுள்ள ஒரு குழாயை சிறுநீர் துவாரம் வழியாக உள்ளே செலுத்தி, அங்குள்ள கற்களை நசுக்கியும், லேசர் கொண்டு உடைத்தும் எடுப்பது இதன் நடைமுறை. ஆனால், சிறுநீரகத்தில் உள்ள கற்களை இப்படி எடுக்க முடியாது. அதற்கு ‘நெப்ரோ லித்தாட்டமி’தான் (Nephro lithotomy) கைகொடுக்கும்.

முதுகில் சிறிய துளைபோட்டு, கருவியை உள்ளே நுழைத்துக் கல்லை அகற்றும் எண்டோஸ்கோப்பி சிகிச்சை இது. சரி, கல்லே வராமல் எப்படிப் பார்த்துக் கொள்வது? சாலை விபத்துகளைத் தவிர்க்க, சாலை விதிகள் இருப்பதுபோல், சிறுநீர்க் கல்லைத் தடுக்க ‘கோல்டன் ரூல்கள்’ இருக்கின்றன.முதல் ரூல், வெயிலில் அலையக் கூடாது. பெரும்பாலும் உடலில் ஏற்படும் தண்ணீர் வறட்சிதான் சிறுநீரகக் கற்கள் உருவாகத் துணைபுரிகிறது. எனவே, கோடையில் பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.இரண்டாவது ரூல், நிறைய தண்ணீர் அருந்துங்கள். கோடையில் தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். (சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இது பொருந்தாது). பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பாக்கெட் தண்ணீரைவிட கொதிக்கக் காய்ச்சி ஆறவைத்த தண்ணீர்தான் சுகாதாரமானது.

மூன்றாவது ரூல், உணவில் உப்பைக் குறைக்கவும். உப்பு அதிகமானால், அதிலுள்ள சோடியமானது சிறுநீரில் கால்சியத்தைப் பெருக்கும். அந்தக் கால்சியம் சும்மா இருக்காது. ஆக்சலேட், பாஸ்பேட்டுடன் கூட்டுசேர்ந்து சிறுநீரகக் கற்களை உருவாக்கும். இதைத் தவிர்க்கத்தான் இந்த யோசனை. தவிர, பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், பேக்கிங் சோடா உணவுகள் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருக்கும். இவற்றையும் தவிர்ப்பது நல்லது.நான்காவது ரூல், எது தேவையோ அதை அதிகமாகச் சாப்பிடுவது. இளநீர், சிட்ரஸ் பழச்சாறு, வாழைத்தண்டுச் சாறு, பார்லி தண்ணீர், நீர்மோர் போன்றவற்றை நிறைய அருந்துங்கள். ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பேரீச்சை, இலந்தைப்பழம், சீத்தாப்பழம், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, கிர்ணி, அன்னாசி, சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌசௌ போன்ற நீர்ச்சத்துள்ள காய்கனிகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கடைசி ரூல் இது: எதைச் சாப்பிடக் கூடாது என்ற ரகசியத்தையும் தெரிந்துகொள்ளுங்கள். ஏற்கனவே சிறுநீர்க் கல் உள்ளவர்களுக்குக் கோலிசோடா, கோக் பானம், மென்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் ஆகவே ஆகாது. காரணம், இவற்றில் பாஸ்பேட் அதிகம். உலர் பழங்கள், பாதாம்பருப்பு, வாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு, ப்ளம்ஸ், பீட்ரூட், ஸ்ட்ராபெரி, சோயாபீன்ஸ், சேனைக்கிழங்கு, பசலைக்கீரையைச் சாப்பிட வேண்டாம்.இவற்றில் ஆக்சலேட் அதிகம். கம்பு, கேழ்வரகு, கருணைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக்கரு, பால், தயிர், வெண்ணெய், நெய், சீஸ், பால்கோவா, பால் அல்வா, பீட்ஸா போன்றவற்றைக் குறைத்துக்கொள்ளுங்கள். இவற்றில் கால்சியம் அதிகம். இதுபோல், டாக்டர் சொல்லாமல் சுயமாக கால்சியம் மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள். ஆட்டு இறைச்சி வேண்டவே வேண்டாம். அதிலுள்ள புரோட்டீன் ரத்தத்தில் யூரிக் அமிலத்தை அதிகப்படுத்தும்; சிட்ரேட் அளவைக் குறைக்கும். இந்த இரண்டுமே சிறுநீர்க் கற்களை உருவாக்கும். எனவேதான் இந்த எச்சரிக்கை!

(இன்னும் பேசுவோம்…)

கல்லுக்கு ஹார்மோனும் காரணம் ஆகும்!

கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பியில் பேரா தைராய்டு எனும் பகுதி உள்ளது. இது ‘பேராதார்மோன்’ எனும் ஹார்மோனைச் சுரக்கிறது. இது அதிகம் சுரந்தால், எலும்பில் உள்ள கால்சியத்தைச் சுரண்டி சுரண்டி சிறுநீரகத்துக்கு அனுப்பும். இதனால், அங்கே கல் ஏற்படும். இவர்களுக்கு அந்த ஹார்மோன் சுரப்பைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே சிறுநீர்க் கல் உருவாகாமல் இருக்கும். இல்லாவிட்டால், மறுபடியும் மறுபடியும் கல் வளர்ந்து தொல்லை கொடுக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இடையே…இடையிடையே…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post சிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்? (மருத்துவம்)