By 2 March 2021 0 Comments

முறையாகத் தூங்கா விட்டால் நீரிழிவும் வரும்!! (மருத்துவம்)

எதிர்பாரா புயல், மழை, வெள்ளத்தை விடவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியது இந்தத் தகவல்.ஆம்… தூக்கம் ஒரு பிரச்னையாக இருக்கிறவர்களையும் நீரிழிவு அன்புடன் அரவணைத்துக் கொள்ளும். அது மட்டுமல்ல… உயர் ரத்த அழுத்தம், பருமன் ஆகிய பிரச்னைகளும் இலவச இணைப்பாகக் கிடைக்கும்!

பாரம்பரியம், பருமன் போன்ற காரணிகளால் நீரிழிவு வரும் என்பதுதான் இதுவரை உலகம் அறிந்த உண்மையாக இருந்தது. இப்போது நீரிழிவு ஏற்படுவதற்கும் புதிது புதிதாகக் காரணங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள உண்மைதான் இந்த விஷயம்.வளர்சிதை மாற்றத்தில் (மெட்டபாலிசம்) ஏற்படும் பிரச்னைகள் காரணமாக, நம் உடலில் 5 குறைபாடுகள் ஏற்படும்.

ரத்த குளுக்கோஸ் அதிகரித்தல், அதிக கொலஸ்ட்ரால், வயிற்றுப்பகுதியில் கூடுதல் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு அதிகரித்தல்… இந்தப் பிரச்னையில் பிரதானமாக இருப்பது சர்க்கரைதான் என்பதையும் நாம் அறிவோம். தூக்கமின்மை காரணமாக வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும் என்பதும் பால பாடமே. அதனால்தான் இத்திசையில் ஆராய்ச்சி மேற்கொண்டார்கள் நீரிழிவு மருத்துவ விஞ்ஞானிகள்.சமீப காலமாக 25-35 வயது இளைஞர்கள் மத்தியில் வாழ்க்கைமுறை மாற்றங்களால் தூக்கமின்மை அதிகரித்து வருகிறது.

இவர்களில் பலர் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். அதிக வேலை நேரம், இரவு பகல் மாற்றி மாற்றி வேலை, மன அழுத்தம், துரித உணவுகளில் நாட்டம், இரவு நேர பார்ட்டிகள் எல்லாம் சேர்ந்து, இவர்கள் உறங்குவது முறையற்று இருக்கிறது. இவர்களில் 15-20 சதவிகிதத்தினர் வேக வேகமாக நீரிழிவாளர்களாக மாறி வருகின்றனர். இந்த அதிர்ச்சிக்கு உரிய செய்தியின் பின்னணியில்தான் ‘தூக்கமின்மை – நீரிழிவு’ ஆய்வு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

ஒரு நாளில் 5 மணி நேரத்துக்கும் குறைவாக உறங்குபவர்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், பருமன் ஆகியவை தாக்கக்கூடிய அபாயம் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ‘ஏற்கனவே நீரிழிவு உள்ளவர்களுக்கும் தூக்கமின்மை பிரச்னை இருப்பது உண்டு. அதையும் தாண்டி, டைப் 2 நீரிழிவு காரணிகளோடு தூக்கமின்மை பிரச்னை நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளது. 5 மணி நேரத்துக்குக் குறைவாக உறங்குபவர்களை மட்டுமல்ல… 9 மணி நேரத்துக்கும் அதிகமாக படுக்கையில் கிடப்பவர்களையும் நீரிழிவு தாக்கக்கூடும்.

அதிலும் குறட்டை விடுகிறவர்களுக்கு பாதிப்பு இன்னும் அதிகமாகும். இவர்களுக்கு குளுக்கோஸ் தாங்கு திறன் குறைவதோடு, இன்சுலின் சுரப்பும் குறையத் தொடங்குகிறது…’ என்கிறார் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட நரம்பியல் நிபுணரும் தூக்கம் சார்ந்த கோளாறுகளுக்கான சிறப்பு மருத்துவருமான ப்ரீத்தி தேவ்னானி. ஒருவர் தேவைக்குக் குறைவாக உறங்கும்போது, அவரது உடலும் மனமும் சோர்ந்து போகிறது. அதே நேரத்தில் பசியைத் தூண்டும் ஹார்மோன்களைச் சுரக்கத் தொடங்குகிறது. இதனால் அவர் தன்னை அறியாமலே அதிகம் சாப்பிடத் தொடங்குகிறார். கலோரி அதிகமாகி, எடை அதிகரிக்கிறது.

‘மிகக் குறைவான தூக்கம் காரணமாக ஹார்மோன்களும் வளர்சிதை மாற்றமும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதுவே அவர்களுக்கு நீரிழிவு ஏற்பட அடிப்படையாகிறது. பசியைக் கட்டுப்படுத்தக்கூடிய லெப்டின் என்ற ஹார்மோன் சுரப்பு தூக்கமின்மையையே குறைத்து விடுகிறது. மாறாக பசியை அதிகரிக்கச் செய்யும் க்ரெலின் ஹார்மோனை அதிகம் சுரக்கிறது. இதனால்தான் குறைவாக உறங்குவோர் அதிகமாகச் சாப்பிடுகிறார்கள்’ என்கிறார் நீரிழிவு சிறப்பு மருத்துவர் டாக்டர் வினய் குமார் அகர்வால்.

‘முறையான தூக்கம் கிட்டாத போது, ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கக்கூடிய திறனை உடல் இழந்துவிடுகிறது. தூக்கமின்மையை உடல் ஒரு அழுத்தமாகவே எடுத்துக் கொள்கிறது. இந்நிலை தொடரும்போது நீரிழிவு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது’ என்கிறார் நீரிழிவு சிறப்பு மருத்துவர் ரோஷினி கட்கே.தூக்கமின்மை காரணமாக இன்சுலினை உருவாக்கும் செல்கள் திறன் இழந்து விடுகின்றன. அதன் விளைவாக ரத்த சர்க்கரை அளவு எகிறத்தானே செய்யும்?

தூக்கமின்மையின் அடுத்த குழப்பமாக கோர்ட்டிசோல் எனும் ஸ்டெரெஸ் ஹார்மோனின் சுரப்பு தாறுமாறு ஆகிறது. இதுவும் இன்சுலின் சுரப்பை எதிர்க்கும். குளுக்கோஸை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றுவதில் சுணக்கம் ஏற்படும். ஏற்கனவே நீரிழிவு இருந்தோலோ, ரத்த சர்க்கரை அளவு பயமுறுத்தும் நிலையை எட்டி விடும். நீண்டகால தூக்கமின்மை மட்டுமல்ல… ஒருசில நாட்களில் ஏற்படும் உறக்கக் குறைவு கூட, தூங்கா மனிதர்களுக்கு அபாயத்தையே அளிக்கிறது. ஆகவே, நீரிழிவாளர்கள் மட்டுமல்ல… நீரிழிவு வர வேண்டாம் என நினைப்பவர்களும் நிம்மதியாக உறங்க வேண்டியது மிக அவசியம். இனி ரிலாக்ஸாக சொல்லுங்கள்… குட் நைட்!

சீனாவோடு போட்டி!

மக்கள் தொகையில் மட்டுமல்ல… நீரிழிவாளர்களின் எண்ணிக்கையிலும் சீனாவோடு கடும் போட்டியில் இருக்கிறது நமது இந்தியா. ஆறரை கோடி இனிப்பு ஆசாமிகளைக் கொண்ட இந்தியா, இந்த விஷயத்திலும் சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. வாழ்க்கை முறை மாற்றங்களும், முறையான தூக்கமின்மையுமே, எண்ணிக்கை இந்த அளவு அதிகரிக்க காரணம் என்கிறது

டில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை. 2030ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 8 கோடியை நெருங்கி விடும். அப்போது அமெரிக்காவில் 3 கோடி டயாபடீஸ் காரர்கள் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, சீனா உள்பட உலக நாடுகளோடு ஒப்பிடும் போது, இந்தியாவின் நீரிழிவு வேகம், நரேன் கார்த்திகேயன் ரேஸ் காரின் வேகத்தை விட அதிகமாக உள்ளது!

ஸ்வீட் டேட்டா

தினமும் 7-8 மணி நேரங்கள் முறையாகத் தூங்குபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் அபாயம் குறைவாக உள்ளது. அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா போன்ற தூக்கப் பிரச்னைகள் உள்ளவர்களில் 70 முதல் 80 சதவிகிதத்தினருக்கு டைப் 2 நீரிழிவும் ஏற்படுகிறது.Post a Comment

Protected by WP Anti Spam