By 3 March 2021 0 Comments

கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)

‘கற்பித்தல்’ என்னும் கலையிலுள்ள நுட்பங்களை அனுபவித்தால்தான் தெரியும். மனம் நிறைய சந்தோஷமும், சேவை மனப்பான்மையும் இருந்தால் மட்டுமே நல்ல ஒரு குழுவாக நம்மை அமைத்துக் கொள்ள முடியும். பணம் சம்பாதிப்பதற்காக மட்டும் அதை தொழிலாக்கிக் கொண்டால், அது நமக்கு முழு வெற்றியைத் தராது. குறிப்பாக பள்ளிப்பருவம் என்பதுதான், அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் கற்றுத் தருகிறது. அந்தப்பள்ளியிலேயே மழலைப்பருவம், குழந்தைப்பருவம், இளமை அனைத்தும் கடந்து வாலிப வயதிற்கு வந்துவிடுகிறார்கள்.

தன்னைத்தானே பார்த்துக்கொள்ளும் அளவிற்கு அவர்களை தயார் செய்வது பள்ளிப்பருவம்தான். அவர்களுக்கு நல்லது, கெட்டது எது தீய பழக்கம், நல்ல பழக்கம் என்னென்ன போன்ற அனைத்தையும் உலகத்தில் கற்றுக்கொடுத்து, ஒழுக்கம், பண்பு, நேர்மை, நாணயம் போன்றவற்றையும் ஊட்டி உணர வைப்பதும் பள்ளிப்பருவம்தான்.

இதையெல்லாம் பொறுமையுடன் போதிக்க வேண்டுமானால் கற்பிப்பவர் பொறுமையுடன் காணப்பட வேண்டும். தினம், தினம் சில பிரச்னை களை எதிர்கொள்ள வேண்டிய சூழல்கள் அமையலாம். பிள்ளைகள் மட்டுமல்லாது, அவர்களின் பெற்றோர் சூழலும் அதற்கேற்ற உளவியல் சம்பந்தப்பட்ட செய்கைகளுக்காக நாம் புரிந்து நடந்துகொள்ள வேண்டிய பலப்பல யுக்திளை புரிந்து வைத்திருக்க வேண்டும். யாருக்கும் எந்தவித மனக்கஷ்டமும் வராதவாறு பேசும் திறமையும் வேண்டும்.

மூன்று வயது எல்.கே.ஜி. முதல் ஐந்தாம் வகுப்பு வரை பிள்ளைகளின் பருவம் என்பது தாய் சாப்பாட்டை ஊட்டி விடுவதுபோல எனக் கொள்ளலாம். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள பருவம் என்பது தட்டில் சாப்பாடு வைத்து, பிள்ளைகளை சாப்பிட வைப்பதற்குச் சமம் எனலாம். பதினொன்று மற்றும் பன்னிரெண்டு என்பது, பசிக்கும்‘நேரத்திற்கு சாப்பிடு’ என்று சொல்வதுபோல் எனக்கொள்ளலாம்.

பள்ளியை விட்டு கல்லூரிக்குச் சென்றால், தங்களை அவர்களே கவனித்துக்கொள்ள வேண்டிய நிலை என்று சொல்லலாம். எனவே பள்ளி முடித்து, வெளியில் செல்லப்போகும் பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் இதுபோன்ற நிறைய விஷயங்களை எடுத்துச் சொல்வார்கள். சமூகத்தில் தனக்கென படிப்பை தேர்ந்தெடுப்பது முதல், பழகும் இடங்களிலெல்லாம் தங்களை தாங்களே நல்வழிப்படுத்திக்கொள்வது வரை அவர்களே பாதுகாத்துக் கொள்ளுதல் அவசியம். படித்து முடித்து வேலை பார்க்கும் சில மாணவரிடம், பள்ளிப்பருவத்தின் மறக்க முடியாத அனுபவங்களைக் கேட்க நேர்ந்தது.

சிலர் பள்ளி விழாக்களைப்பற்றி மறக்க முடியாத அனுபவமாகப் பேசினர். பலர் பள்ளி முடிக்கும் சமயம், ஆசிரியர்கள் தந்த அறிவுரையைப்பற்றி நிறைய பேசினர். அறிவுரைகள் அப்பொழுது மாணவர்களுக்கு சாதாரணமாகப்பட்டதாம். அதன் முழு அர்த்தம் விளங்கவில்லையாம். ஆனால் கல்வி பயில பயில ஆசிரியர்களின் அறிவுரை அர்த்தம் விளங்கியதாம். ஊட்டி விடவோ, சாப்பிடச் சொல்லவோ தூண்டுகோல் இல்லாமல், தங்களைத்தாங்களே சமுதாயத்தில் நல்ல பிரஜையாக காட்டிக்கொள்ள வேண்டிய நிலை கவனத்திற்கு வந்ததாம்.

ஆம் எதுவுமே காலம் கடந்தபின்தான் நமக்கு நிறைய விஷயங்கள் புரிய ஆரம்பிக்கின்றன. பலருடன் பழக நேரும்பொழுது அனுபவங்கள் கைகொடுக்கின்றன. ஆசிரியர்கள் கடிந்துகொண்டால்கூட, அதில் எவ்வளவு நியாயம் உள்ளது என்பதை வயது வந்தவுடன் புரிந்து பேசுகிறார்கள். ஒரு சிலர் ஆசிரியர்களுடன், அமெரிக்கப் பயணம் மேற்கொண்டதையும் அந்த இனிமையான தருணங்களையும் கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டனர். அதுவும் ‘நாசா’வில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்கான போட்டிகளில் வெற்றி பெற்றதையும், வாழ்க்கையில் மறக்க இயலாததாகவும், முதன்முதலில் தங்களின் கடல் கடந்த பயணம் எவ்வளவு வெற்றிகரமாக அமைந்தது என்பன போன்றவற்றையெல்லாம் நமக்கும் நினைவுப்படுத்தினர்.

பெற்றோர்கள், பதினைந்து வயது முதல் பதினேழு வயதிற்குட்பட்ட பிள்ளைகளை கடல் கடந்து சென்றுவர ஆசிரியர்களை நம்பி அனுப்பினார் களென்றால் எவ்வளவு நம்பிக்கை வைத்தார்கள் என்பது நன்கு புலப்படுகிறது. அத்தகைய நாட்கள் எங்கள் வாழ்க்கையில் இனிமையான நினைவுகளைத் தந்து கசப்பான அனுபவங்களை மறக்கச் செய்யும்.

நம் வயதிற்கும், அனுபவத்திற்கும், தகுதிக்கும் அப்பாற்பட்டதுதான் மனநிலை. வயது என்பது ஒரு எண்ணிக்கை என்றுதான் கொள்ள வேண்டும். நம் மனம் இளமையாக இருந்தால் போதும். அந்த இளமை மாணவச் செல்வங்களுடன் இணைந்து வாழும்போதுதான் நம்மால் உணர முடியும். பிள்ளைகளும் ஆசிரியர்கள் வயதையோ, உருவத்தையோ பார்த்து மட்டும் நம்மை மதிப்பதில்லை. எந்த அளவுக்கு அவர்கள் ஐயங்களைப் போக்கி, ஊக்குவித்து நம்பிக்கை என்னும் விதையை விதைக்கிறோமோ அந்த அளவுக்கு நன்மதிப்பு கிடைக்கும். அதுதான் ‘கற்பித்தல்’ என்னும் கலையின் வெற்றி ரகசியம்.

பிள்ளைகளுடன் தங்க நேரிடும் சமயங்களிலெல்லாம், நம்மைச்சுற்றி, நம்மைப் பாதுகாக்க போதிய கவசங்கள் அமைந்திருப்பதாகவே கருதலாம். எத்தனையோ வாய்ப்புகள், வெளிநாட்டுப் பயணங்கள் என்றிருந்தாலும், ஒரு சில நிகழ்வுகள் நம் மனதை விட்டு நீங்காதவை. 1984-ம் வருடம்தான் என்று நினைக்கிறேன். பள்ளியில் இருந்த சமயம். திடீரென பிற்பகலில், பெற்றோர்கள் கூட்டம், கூட்டமாக பள்ளி மெயின் ‘கேட்’ அருகே குழுமினர்.

பிள்ளைகளை உடன் தங்களுடன் அனுப்பி வைக்கும்படி சப்தம் போட்டனர். சிலர் அழுது கூக்குரலிட்டனர். பள்ளி நிர்வாகமும் நாங்களும் பதை பதைத்துப் போனோம். அப்பொழுதெல்லாம் டி.வி.க்கள் ரொம்ப காணப்படாத சமயம். அங்கங்கே ஒருசிலர் வீடுகளில் தூர்தர்ஷன் மட்டுமே காணப்படும். இன்றைய நிலை போன்று தனியார் தொலைக்காட்சிகள் ரொம்ப கிடையாது. மேலும் கைப்பேசிகளும் இல்லாத சமயம். கடைகள், அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் சில வீடுகளில்தான் தொலைபேசிகள் இருந்த சமயம்.

பாரதப் பிரதமர் இந்திராகாந்தியை சுட்டுவிட்டதாகவும், அதன் காரணமாக ஊர் முழுவதும் மிகவும் பதட்டம் காணப்படுவதாகவும் செய்திகள் வரத்தொடங்கின. அதனால்தான் பெற்றோர்கள் பீதியில், தங்கள் பிள்ளைகளை உடன் அழைத்துச் செல்ல வந்து குழுமியிருந்தனர். ஒவ்வொரு பிள்ளையும் உரிய பெற்றோரிடம் சேர்க்கப்பட்டனர்.

பள்ளியையும் மூடி விட்டோம். இருப்பினும், தாய்-தந்தை இருவரும் வேலை செய்யும் பெற்றோர்களால் உடன் வர இயலவில்லை. அந்தப்பிள்ளைகள் பத்திரமாக ஹாஸ்டலில் தங்க வைக்கப்பட்டு, பெற் றோர் வந்தால் மட்டும் அனுப்புமாறு சொல்லப்பட்டது. பஸ், ரெயில்கள் அங்கங்கே நின்றுவிட்டன. ஆட்டோ, ரிக் ஷாக்கள் ஓடவில்லை. ஆசிரியர்கள் தங்கள் வீட்டருகில் இருப்பவர்களுடன் சேர்ந்து ஒன்றாகக் கிளம்பி விட்டார்கள். நான் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்ததால், பள்ளி நிர்வாகம் வீடு வரை அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்தார்கள்.

ஆனால் பாதி வழியில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதால், மீண்டும் திரும்ப பள்ளியில் கொண்டுவிட்டு, ஹாஸ்டலில் பத்திரமாக இருக்கும்படியும், என் கணவர் வந்தால் மட்டும் அனுப்பும்படியும் சொல்லியிருந்தார்கள். எத்தனையோ முறை ெதாலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தும் என் கணவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை. அதே நிலையில் என் கணவரும் என்னைத் தொடர்புகொள்ள முயற்சித்து, மிகவும் சங்கடப்பட்டிருக்கிறார். அந்தக் கவலையிலும், மனம் பாரமாகி சங்கடப்பட்டது இன்றும் ஞாபகத்தில் உள்ளது.

‘ஹாஸ்டலில்’ அனைத்துப் பிள்ளைகளும் என்னைச்சுற்றி அமர்ந்துகொண்டு ஆறுதல் கூறினார்கள். ‘வார்டன்’ சுடச்சுட நெய் போட்டு சப்பாத்தியை சாப்பிடச் சொன்னார்கள். பிள்ளைகள் அனைவரும் தனக்குத் தெரிந்த கலைகளை செய்துகாட்டி என் மனக்குறையை போக்கிக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகளுடன், நானும் என்னை ஒரு மாணவியாகவே மாற்றிக்கொண்டேன். அவ்வளவு பிள்ளைகள் அன்று என்னுடன் அரணாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் அன்று என்னுடன் இல்லாதிருந்தால், என் நிலையே வேறு மாதிரி ஆகியிருக்கும். ‘‘நாங்கள் இருக்கிறோம் மிஸ், கவலைப்படாதீங்க’’ என்ன ஒரு ‘டானிக்’ வார்த்தை!

இரவு எட்டு மணிக்கு என் கணவர் பாரிஸ் கார்னரிலிருந்து, நடந்து வந்து என்னை சந்தித்து, வீட்டிற்கு அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்தார். நான் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டபின்தான் அவருக்கு தெம்பு வந்தது. வசதிகள் இருந்தும் பயன்படுத்த முடியாத ஒரு சூழல். யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்றுகூட தெரியாத சூழலில் மாட்டிக்கொண்டதை நாங்கள் என்றுமே மறக்க இயலாது. அத்தகைய நிலையிலும் என்னை மகிழ்ச்சிப்படுத்திய மாணவர்கள் என்றும் எங்கள் ஆசிகளுக்கு பாத்திரமாவார்கள். அப்பொழுதுதான் ஒரு தத்துவம் போன்ற கருத்து என்னுள் எழுந்தது. பொருளோ, பணமோ எது பிறருக்குக் கொடுத்தாலும் அப்பொழுது நாம் வாழ்த்தப்படுவோம் என்பது உண்மைதான்.

ஆனால் கல்வியைத் தந்து, மற்றொரு பெற்றோராக நம்மை அமைத்துக்கொள்வது என்பது மிகவும் புனிதமான நோக்காகும். நம் கடமையை நன்கு செய்தால் போதும். பிறருக்கு உதாரணமாகத் திகழ்ந்தால்தான், நம்மைப் பார்த்து வளரும் சமுதாயம் பலவற்றைக் கற்க நேரும். கற்பிப்பவர் நடைமுறைகள், அவர்களுக்கேத் தெரியாமல், பலதரப்பான பிள்ளைகளால் தீர்மானிக்கப்படுகிறது. அவர்களின் நல்ல பழக்க வழக்கங்களுக்கும், முன்னேற்றத்திற்கும் நாம் ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கிறோமென்றால், அது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம்? பிள்ளைகள் மனதிற்கேற்றவாறு நம்மை மாற்றிக்கொண்டு, சிறிது நம் தகுதியிலிருந்து எளிய முறைக்கு இறங்கி வந்து கற்பிப்பதில் எந்த தவறுமில்லை.

கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்ட பிள்ளையிடம், சராசரி மாணவர்களிடம் எதிர்பார்க்கும் புரிதலை நாம் எதிர்பார்க்கக் கூடாது. அவர்கள் மொழியில் பேசி, அவர்கள் புரிந்துகொள்ளும்படியான வார்த்தைகளை பயன்படுத்துவது முக்கியம். நமக்கு இருக்கும் மனஅழுத்தத்தையெல்லாம் பிறரிடம் காட்டக் கூடாது.

வீட்டிற்கு வந்தால் நம் குடும்பம், பள்ளிக்குச் சென்றால் பிள்ளைகள் மட்டுமே நிறைந்த குடும்பம், அதற்காக நாம் என்னென்ன முயற்சிகள் எடுக்கிறோமோ, அதன் பலன் ஏராளம்.பொதுத்தேர்வுகளுக்கு, கண்காணிக்கச் செல்லும்பொழுதெல்லாம் பலவிதமான மாணவச் செல்வங்களை காண்பதுண்டு. சிலர் வகுப்பிற்குள் நுழையும் வரை புத்தகத்துடன் ஒன்றிப்போய் தனக்குள் முணுமுணுப்பதுண்டு. சில பிள்ளைகள் தைரியமாக உலவிக் கொண்டிருப்பார்கள்.

அவர்களைப்பற்றி நாம் யோசிக்க வேண்டியதில்லை. தேர்வு அறைக்குள் நுழைந்ததுமே சில மாணவர்களுக்கு கை, கால்கள் நடுங்க ஆரம்பித்துவிடும். பயம் முகத்திலேயே ஒட்டியிருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு, தட்டிக்கொடுத்து, ஊக்குவித்து ‘எழுது-எழுது’ என்று சொன்னால் போதும். புதிய ஒரு சூழலில் பயம் போய், எழுத ஆரம்பித்து விடுவார்கள். நம்மிடம் ஒரு மரியாதை வருவதுடன், அவர்கள் தன்னம்பிக்கை மேலிடும்.

மொத்தத்தில், கற்பிப்பவர் பொறுமைசாலியாக இருந்தால் போதும். ஏனைய அனுபவங்கள், விதவிதமான பிள்ளைகளுடன் பழகும்போதும், வெவ்வேறு விதமான சூழல்களிலிருந்து வரும் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களிடம் அணுகும்பொழுதும் நிறையவே கிடைத்துவிடும். அதனால்தான் கற்பித்தல் ஒரு தொழில் மட்டுமல்ல, அதில்தான் ‘கலை’ என்று பார்க்கலாம். உலகம் புரியாதவர்கள்கூட, பத்தாண்டு பள்ளியில் பணிபுரிந்தால் போதும். வாழ்க்கைக் கல்வி கிடைப்பதுடன் கற்பிப்பதும் கலை என்று புரியும்.Post a Comment

Protected by WP Anti Spam