By 3 March 2021 0 Comments

கஷ்டங்களை கோலம் போல அழிச்சிட்டு கடக்கணும்! (மகளிர் பக்கம்)

விடியற்காலை எழுந்து, வாசல் தெளித்து கோலம் போடுவது நாம் காலம் காலமாக பின்பற்றி வரும் பழக்க வழக்கம். கோலம் போடுவதால் நம் மனம் லேசாகும், உடலை வளைத்து போடுவதால் அது ஒரு வித யோகாசனமாகவும் கருதப்படுகிறது. வாசலில் கோலம் போடுவதால், வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பாள் என்பதால் நம் முன்னோர்கள் அதிகாலையில் எழுந்து கோலம் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்த அவசர யுகத்தில் இன்றைய தலைமுறையினர் கோலம் போடுவதை முற்றிலும் மறந்தேவிட்டார்கள் என்று தான் சொல்லலாம். ஆனால் இன்றும் பாரம்பரியம் மாறாமல், பல அழகான வண்ணக் கோலங்களை போடுவது மட்டுமில்லாமல் அதன் முக்கியத்துவத்தை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் மும்பையைச் சேர்ந்த ஹேமா கண்ணன்.

இவர் வீட்டு வாசலை கடக்கும் போதே… நம் மனதில் அவரின் மாக்கோலம் ஒட்டிக் கொள்கிறது. தினமும் வாசலில் கோலமிட்டாலும், நவராத்திரி, மார்கழி மாதங்கள் மட்டும் ஒவ்வொரு நாளும் சிறப்பாக அம்பிகையின் பல வடிவங்கள் மற்றும் வண்ணங்கோலங்களால் தன் வீடு முழுக்க அலங்கரித்து வருகிறார்.
‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். சின்ன வயசில் அம்மா தான் கோலம் போட கத்துக் கொடுத்தாங்க. அவங்க ரொம்ப நல்லா கோலம் போடுவாங்க. அதுவும் அவங்க மனசுக்கு ரொம்ப விரும்பி செய்வாங்க.

அம்மா போடும் போது நானும் அவங்க போடுறதை பார்த்துக் கொண்டே இருப்பேன். சின்னச் சின்ன கோலங்கள் சொல்லித் தருவாங்க. அதன் பிறகு என்னோட 12 வயசில் இருந்தே, அம்மா என்னை தான் கோலம் போட சொல்வாங்க. வீட்டில் எல்லா பண்டிகைக்கும் நான் தான் கோலம் போடுவேன். அப்படித்தான் மாக்கோலம். பொடிக் கோலம் எல்லாம் போட கத்துக்கிட்டேன். ஸ்கூலுக்கு போயிட்டு வந்த பிறகு நேரம் கிடைக்கும் போது எல்லாம் கோலம் போட்டு பார்ப்பேன்.

படிப்பு முடிச்சு, கல்யாணமானது. இங்கு பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்பு தான். மேலும் கோலம் போடும் பழக்கமும் இங்குள்ள மக்களுக்கு கிடையாது. அப்படியே நான் போட்டாலும், அப்பார்ட்மென்டை சுத்தம் செய்ய வரும் பெண் அதை பெருக்கி தள்ளிடுவா. எனக்கு கோவமா வரும். எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டா.

அதனால வாசலில் கோலம் போடுறதையே விட்டுட்டேன். பண்டிகை நாள் போது மட்டும் என் ஆசை தீர பெருசா போடுவேன். அதன் பின் குடும்பம், குழந்தைகள் அவர்களின் படிப்பு என நானும் பிசியாகிவிட்டேன். கோலம் போடுவதில் பெரிய அளவில் கவனம் செலுத்த முடியவில்லை’’ என்றவர் குழந்தைகள், கல்யாணம், குடும்பம் என்று செட்டிலான பிறகு தன்னுடைய விருப்பமான கோலங்களை மறுபடியும் தூசி தட்டி எடுத்துள்ளார்.

‘‘பசங்க சின்னதா இருக்கும் போது பண்டிகை நாள் மட்டுமே போடுவேன். அவங்க குடும்பம்னு செட்டிலான பிறகு எனக்கு நிறைய நேரம் இருந்தது. சீரியல் பார்க்க பிடிக்காது என்பதால், என் பழைய ஃபேஷனான கோலம் போடுவதை மீண்டும் கையில் எடுத்தேன். நான் சின்ன பெண்ணாக இருக்கும் போது, எங்க காலனியில் ரங்கம் பாலாஜின்னு ஒரு மாமி இருப்பாங்க. சின்ன வயசில் நான் கோலம் போடும் போது, அவங்க ரொம்பவே ரசிப்பாங்க. குறையும் திருத்துவாங்க.

நான் மறுபடியும் கோலம் போட ஆரம்பிச்ச பிறகு அவங்க தான் நினைவுக்கு வந்தாங்க. 2016ல் முகநூல் துவங்கி அதில் ஒவ்வொரு கோலமாக அவர்களுக்காகவே பதிவு செய்தேன். அவங்க மட்டுமில்லாமல் மற்றவர்களும் பார்த்து நிறை குறைகளை சொன்னாங்க. அதன் பிறகு என்னை அறியாமல் அதன் மேல் ஈடுபாடு ஏற்பட ஆரம்பிச்சது. நிறைய கோலங்கள் போட ஆரம்பிச்சேன். அந்த சமயத்தில் தான் அந்த மாமி திருப்பாவையை ஏன் நீ கோலமா போடக்கூடாதுன்னு கேட்டாங்க.

நான் திருப்பாவை கேட்டு இருக்கேன். ஆனால் அதை பின்பற்றியது கிடையாது. அதை அவங்களிடம் சொன்ன போது, எனக்கு ஒவ்வொரு கதையா சொல்ல ஆரம்பிச்சாங்க. நானும் நிறைய ஆய்வு செய்தேன். அந்த கோலங்கள் முடிக்க எனக்கு இரண்டு வருஷமாச்சு. பிறகு அதை புத்தகமாகவும் வெளியிட்டேன்’’ என்றவர் விரும்புபவர்களுக்கு கோலம் எவ்வாறு போட வேண்டும் என்று பயிற்சியும் அளித்து வருகிறார்.

‘த லோட்டஸ் சக்தி’ என்ற பெயரில் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் இவரின் கோலங்கள் பலரின் சங்கடங்கள் மற்றும் குழப்பங்களுக்கு ஒரு தீர்வாக அமைந்து வருகிறதாம். ‘‘கோலம் என்னைப் பொறுத்தவரை ஓவியம் கிடையாது. மனசுக்கு நெருக்கமான ஒரு கலை. நாம் கையால் போடும் அந்த தருணத்தில் நம் மனதில் என்ன தோன்றுகிறதோ, அது ஒரு கோலமாக வெளிப்படும். ஐந்து புள்ளி வைத்து ஆரம்பிப்போம்… ஆனால் முடிக்கும் போது ஒன்பது புள்ளி வைத்து போட்டு இருப்போம்.

எனக்கு கோலம் போடும் போது மனசு ரிலாக்சா இருக்கணும். அதே போல் இந்த கோலம்ன்னு திட்டமிட்டதும் கிடையாது. மனதில் தோன்றுவதை போடுவேன். அதனால் தான் எனக்கும் கோலத்திற்கும் ஒரு நெருக்கமான பந்தம் உண்டுன்னு சொல்றேன். நவராத்திரி போது பத்து நாளும் அம்மன் முகத்தை கோலமாக வரைவேன். ஒரு முகம் போடலாம்ன்னு தான் ஆரம்பிப்பேன். ஆனால் அது கடைசியில் ஒரு அழகான அம்மன் முகமாக வந்திடும். நான் மற்ற நாட்களில் போடும் கோலத்தை விட நவராத்திரி ஒன்பது நாட்கள் போடும் கோலங்கள் ரொம்பவே விசேஷமா இருக்கும். அதற்கான பதில் என்னிடம் இல்லை. நம்மையும மீறி ஒரு சக்தி இருக்குன்னு தான் சொல்வேன்’’ என்றார்.

‘‘கோலம் ஒரு சேக்கிரட்(Sacred) ஆர்ட்ன்னு சொல்லலாம். நாம் வாசலில் போடும் போது எதிர்மறை தாக்கத்தை தடுக்கும். அதே போல் காலையில் எழுந்து கோலம் போடும் போது நம்முடைய மனம் லேசாகும். குனிந்து நிமிர்ந்து போடுவதால், அது பெண்களுக்கு யோகாசன பயிற்சி எடுப்பது போன்ற உணர்வு இருக்கும். வாசலில் மூணு மணி நேரம் போடுவோம்… மாறுநாள் காலை அதை அழிச்சிடுவோம். கோலத்தை போல் நம் வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்டங்களையும் அழிச்சிட்டு கடந்து போகணும்’’ என்றவர் கோலம் போடுவதற்காகவே பிரம்மாண்டமான வினைல் ஷீட்டை பயன்படுத்தி வருகிறார்.

‘‘எங்க வீட்டு தரை மார்பில் கல்லால் ஆனது. அதனால் கோலம் போட்டா பெரிசா தெரியாது. நிறயை பேர் ஒரு அடர்த்தியான பேக்கிரவுண்டில் போடச் சொல்லி கேட்டாங்க. அதற்கு என்ன செய்யலாம்ன்னு நிறைய கடைகளில் தேடிய போது தான் இந்த வினைல் ஷீட் பற்றி கேள்விப்பட்டேன். இப்போது அதில் தான் கோலங்களை போட்டு வருகிறேன்.

இதில் ஒரு வசதி, விரும்பிய இடத்தில் நகர்த்திக் கொண்டு வைத்துக் கொள்ளலாம். 2014ல் இருந்து கோலங்கள் போட்டுக் கொண்டு இருக்கிறேன். இது வரை 3000த்துக்கும் மேற்பட்ட கோலங்கள் போட்டு இருப்பேன். சமூக வலைத்தளங்கள் மூலம் நம் பாரம்பரிய கோலங்கள் குறித்து உலகம் முழுக்க மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதை என்னால் முடிந்த வரை செய்து வருகிறேன்’’ என்றார் ஹேமா கண்ணன்.Post a Comment

Protected by WP Anti Spam