By 8 March 2021 0 Comments

தன்னம்பிக்கை நிறைந்த அறியாமை !! (கட்டுரை)

கொவிட்-19 பெருந்தொற்று நோய்க்கு எதிரான மனிதகுலத்தின் போரில், மிகப் பலமானதோர் ஆயுதமான நோய்த்தடுப்பு மருந்தை மனிதன் தயாரித்து, கொஞ்சம் கொஞ்சமாக உலகம் எங்கிலும் உள்ள மக்கள் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான வரிசைகள், இன்று நீண்டு நிற்பதை நாம் அவதானிக்கிறோம். பலமணிநேரம் வரிசையில் காத்திருந்து, தடுப்பூசியைப் பெற்றுச் செல்லும் மக்களின் முகங்களில், பலமணிநேரம் வரிசையில் நின்றிருந்த களைப்பையும் மீறி, பாதுகாப்பு உணர்வு தரும் ஒரு வகையான சாந்தமான மகிழ்ச்சியைக் காணக்கூடியதாக இருக்கிறது. விரைவில் அனைவரும் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வேண்டும். நிற்க!

சில மாதங்களுக்கு முன்பு, இதேபோன்ற நீண்ட வரிசைகளில் தம்மிக என்ற, எதுவித முறையான தகைமைகள் இல்லாத போதும் தன்னைச் சுதேசிய வைத்தியர் என்று அறிவித்துக்கொண்ட நபரின் வீட்டின் முன்னால், அவன் வழங்கும் கொவிட்-19 நோயைத் தடுக்கும் என்று கூறப்பட்ட ஒரு வகைப் பாணியைப் பெற்றுக்கொள்ள, மக்கள் காத்துக்கிடந்தார்கள்.

எந்தவித முறையான தகைமையும் இல்லாத ஒருவர் தயாரித்த, விஞ்ஞான அடிப்படைகள் ஏதுமற்ற பாணியை, சுகாதார அமைச்சர் முதல், பாராளுமன்றத்தின் சபாநாயகர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என எல்லோரும் அருந்தி, அந்தப் பாணிக்கும் பாணியைத் தயாரித்த தம்மிக்கவுக்கும் தேவையில்லாததோர் அங்கிகாரத்தையும் விளம்பரத்தையும் வழங்கி, தம்மிக்கவின் வீட்டை நோக்கி, மக்களையும் பாணி கேட்டுப் பயணிக்க வைத்திருந்தார்கள்.

தம்மிக்கவின் பாணியைப் பருகிய சுகாதார அமைச்சர், சில மாதங்களின் பின்னர் கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகி, மரணத்தின் வாசலைத் தொட்டுவிட்டு, தகைமை நிறைந்த இலங்கை வைத்தியர்களின் உதவியாலும் அரச வைத்தியசாலையின் திறமையான கவனிப்பாலும் மீண்டு வந்தமை, இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தப் பாணி விவகாரம், பெரும் அரசியலாக்கப்பட்டது.

இயல்பிலேயே பெரும்பான்மை இலங்கையர்களிடம் குடிகொண்டுள்ள ஒருவகையான தாழ்வு மனப்பான்மை, இந்த அரசியலுக்கு முதலாகப் பயன்படுத்தப்பட்டது. ஆயுர்வேதம் என்பதும், சுதேசிய மருத்துவம் என்பதும் ஆண்டாண்டு காலமாக, இலங்கைக்குரிய அறிவுச் செல்வம். ஆகவே, அதன் உயர்வுநவிற்சிகள் எல்லாம் சொல்லப்பட்டு, மேலைநாட்டு மருத்துவத்தால் அதுவரை பாதுகாப்புத் தரமுடியாது போன கொவிட்-19 நோயிலிருந்து, தம்மிக பாணி பாதுகாப்பு வழங்கும் எனும் போலி படோடாப பகட்டாரவாரக் கதைகள் சொல்லப்பட்டன.

இந்த அரசியலின் மையத்தில் சிக்கிக்கொண்ட தம்மிக, தன்னைக் கடவுளாகவே நினைத்துக்கொண்டான். பாவம் அவனுக்குத் தெரியாது, இந்தச் சதுரங்க ஆட்டத்தில், தான் வெறும் சிப்பாய்தான் என்று! இந்தப் பாணியை ஆராய்வதற்கு, அரசாங்கம் ஓர் ஆய்வாளர் குழுவையும் அனுப்பியிருந்தது என்பது, அரச வளங்களும் அரச அதிகாரிகளின் நேரமும் எவ்வாறு வீணடிக்கப்படுகின்றன என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டாகும்.

ஆனால், ஆளும் ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் அமைச்சர்கள், தம்மிக பாணியை அங்கிகரிப்பதில் மும்முரம் காட்டினார்கள். சுதேசிய வழியில், கொவிட்-19 நோயை இலங்கை வெற்றி கொண்டுவிட்டது என்று எக்காளமிடவும் அதன் மூலம், தமது தாழ்வு மனப்பான்மைக்கு ஒத்தடம் இடவும் இது அவர்களுக்கு தேவையாயிற்று.

தம்மிக பாணியின் போலித்தன்மை வௌிப்படவே, அனைவரும் சத்தமில்லாமல் அடங்கிப்போய்விட்டார்கள். இன்று தடுப்பூசிகள் வந்ததும், சுதேசியமும் மறந்து, ஆயுர்வேதமும் மறந்து முதன்முதலாக ஓடோடிப்போய் தடுப்பூசியையும் ஏற்றிக்கொண்டார்கள் இதே அரசியல்வாதிகள். அதில் தவறேயில்லை; வரவேற்கத்தக்கது. தடுப்பூசி ஆபத்தானது என்ற அரைகுறை அறிவுள்ளவர்களின் போலிப்பிரசாரம், இலங்கையில் எடுபடாமல்போனமை, இலங்கையர்கள் பெருமைப்பட வேண்டியதொரு விடயம்தான்.ஆனால், இந்தச் சம்பவம் எமக்கு ஒன்றை உணர்த்தி நிற்பதை, நாம் உற்று அவதானிக்க வேண்டும். இந்த நாட்டில், தம்மிகவைப் போன்ற பேர்வழிகள் அதிகம் போர் வாழுகின்றார்கள். இப்படிச் சொல்வதன் அர்த்தம், அறியாமையில் ஆழ்ந்திருந்தாலும், தமது அறியாமையை அதியுயர்ந்த தன்னம்பிக்கையுடன் வௌிப்படுத்தும் பேர்வழிகள் அதிகம். தனிநபர் வாழ்க்கையில், இதன் தாக்கங்கள் எப்படியிருப்பினும், இது அரச இயந்திரத்தின் அங்கமாகும் போது, அனைவரையும் முழுநாட்டிடையும் பாதிப்பதாக அமைந்துவிடுகிறது.

அமெரிக்க கோனெல் பல்கலைக்கழகத்தில் உளவியல் ஆய்வாளர்களாக இருந்த டேவிட் டன்னிங், ஜஸ்டின் க்ரூகர் ஆகியோர் ஓர் ஆய்விதழை, 1999ஆம் ஆண்டு வெளியிடுகிறார்கள். அதில் அவர்கள் வௌிப்படுத்திய விடயம் தற்போது ‘டன்னிங்-க்ரூகர’”விளைவு என்று அறியப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், ‘டன்னிங்-க்ரூகர்’ விளைவு என்பது, ஒரு வகையான அறிவாற்றல் பக்கச்சார்பு. இதில் நபர்கள்,ஒரு விடயம் தொடர்பான தமது அறிவையும் திறனையும் அதிகமாக மதிப்பிட்டுக்கொள்வதன் விளைவாக, தமது அறியாமை பற்றி அறியும் திறனின்மையின் காரணத்தால், தமது அறிவையும் திறனையும் அதிகமாக மதிப்பிட்டு, ஒரு வகையான மாயமான உயர்வுமனப்பான்மையை உருவாக்கிக் கொள்கிறார்கள். மிகச்சுருக்கமாகச் சொல்வதனால், இது அவர்களுக்குத் தெரியாது என்பது, அவர்களுக்குத் தெரியாத நிலை.

‘ டன்னிங்-க்ரூகர்’ விளைவு பற்றிய அதன் பின்னான வாதப்பிரதிவாதங்கள் நிறைய இருந்தாலும், இந்த இடத்தில் ‘டன்னிங்-க்ரூகர்’ விளைவு சில விடயங்களைப் புரிந்துகொள்ள உதவியாகவே இருக்கிறது. குறிப்பாக, இலங்கை அரசியலில் அறியாமை, அதிலும் தன்னம்பிக்கை நிறைந்த அறியாமை, பரந்து விரிந்து கிடக்கிறது.

தமது தொழில் வாழ்க்கை முழுவதையும் ஆயுதப்படையில் கழித்த ஒருவர், தம்மைச் சர்வதேச விவகாரங்களிலும் இராஜதந்திரத்திலும் நிபுணராகக் கருதிக்கொள்கிறார். அவருக்குச் சர்வதேச இராஜதந்திர நடைமுறைகள் கூடத்தெரியவில்லை என்பது, அவருக்குத் தெரியவில்லை.

இதைப் போலவே, ஆயுதப்படைகளில் இருந்தவர்கள், தம்மை முகாமைத்துவம், பொறியியல், பொருளாதாரம், மனித வள முகாமைத்துவம், சிவில் சேவை, வணிகம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் நிபுணர்களாகக் கருதிக்கொள்கிறார்கள்.

இராணுவப் பயிற்சி ஒரு மனிதனுக்கு, தன்னம்பிக்கையை அளிக்கும், ஆனால் அந்த தன்னம்பிக்கை அளவு கடந்து அறியாமையிலும் தன்னம்பிக்கை என்ற நிலைவரும்போதுதான், அது நாட்டுக்கு ஆபத்தானதாக அமைகிறது.

பாடசாலைக் கல்வியைக்கூடத் திருப்தி செய்யாத அரசியல்வாதிகள், இதைவிட ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள். இந்த இடத்தில், ஓர் இடையீடு அவசியமாகிறது. சிலர் முறையான கல்வி என்பது, சிறந்த அரசியலுக்கு அவசியமில்லை என்று சுட்டிக்காட்டுவார்கள். அதற்குச் சில உதாரணங்களையும் முன்வைப்பார்கள். ஆனால், அவர்கள் உதாரணம் காட்டும் அரசியல்வாதிகளுக்கும் நாம் இங்கு பேசிக்கொண்டிருப்போருக்கும் ஓர் அடிப்படை வித்தியாசமுண்டு.

முதலாமவர்கள், தமது அறியாமை பற்றியும் அறிவின் எல்லை பற்றியும் பிரக்ஞை உடையவர்களாக இருந்தார்கள். தம்மைச்சுற்றி முறையான ஆலோசகர்களையும் கற்றறிந்த அதிகாரிகளையும் கொண்டிருந்தார்கள். தமது கொள்கைகளை, தொழில்நுட்ப ரீதியில் வழிகாட்ட ஆலோசகர்களினதும் அதிகாரிகளினதும் முழுமையான உதவியையும் பங்களிப்பையும் பெற்றுக்கொண்டார்கள்.

ஆனால், இன்றைய நிலை அதுவா? பொருளாதாரம் பற்றிய தகைமைகள் ஏதுமின்றி, ஒரு பட்டயக் கணக்காளராக இருந்துகொண்டு, தகைமையற்ற மத்திய வங்கி ஆளுநராக இருந்து, நாட்டின் பலகோடிகளை, உலகமே விட்டு விலகிய ‘க்ரீஸ்’ முறிகளில் முதலிட்டு வீணடித்தவர், இன்று இலங்கையின் முதலீட்டுச் சந்தையை தனது கொள்கைகளால் வழிநடத்தும் இடத்தில் இருக்கவைக்கப்பட்டு இருக்கிறார்.தனக்குத் தெரியாது என்பது தெரியாத, தனக்கு இதெல்லாம் தெரியும் என்ற அசட்டு நம்பிக்கையில், இலங்கையின் பொருளாதாரத்தையும் எதிர்காலத்தையும் பணயம் வைத்து, இன்று ஆட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இப்படியாகத்தான் பெரும்பான்மைத் துறைகளின் நிலை காணப்படுகின்றது.

தன்னுடைய அறியாமையை உணர்ந்தும், தெரிந்தும் கொண்டுள்ள, தனது அறிவினதும் திறமையினதும் எல்லையைப் புரிந்துகொண்டுள்ள ஒரு முறையான கல்வியறிவு இல்லாதவன், தனது அறியாமை பற்றிய பிரக்ஞை இல்லாத, தனது அறிவினதும், திறமையினதும் எல்லை பற்றி அறியாத, அதீத அசட்டுத் தன்னம்பிக்கையுடைய முறையான கல்வியறிவு பெற்றவனைவிட மேலானவனாகவே தெரிகிறான்.

ஏனெனில், தனது அறிவினதும், திறமையினதும் வரையறையைத் தெரிந்தவன், உணர்ந்தவன், தனக்குத் தேவையான முறையான உதவிகளைப் பெற்றுக்கொள்கிறான். அது அறியாதவன், அந்த அறியாமையுடன் அதீத தன்னப்பிக்கையும் சேரும் போது, தன்னாலியலாத காரியத்தையும், இயன்றதாக எண்ணி ஆபத்தான முடிவுகளை அசட்டுத்தனமாக எடுக்கிறான். அதன் விளைவு அனைவருக்கும் ஆபத்தாகிவிடுகிறது

‘அறிவற் சிறந்த அறிவு அறியாமையை அறிதல்’Post a Comment

Protected by WP Anti Spam