எப்போதோ கிடைக்க வேண்டிய ஆறுதல் !! (கட்டுரை)

Read Time:13 Minute, 46 Second

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, நிலத்தில் அடக்கம் செய்யும் விடயத்தில், சுமூகமானதொரு தீர்வு எட்டப்பட்டுள்ளது. 11 மாதங்களாக இழுபறியாக இருந்த இவ்விவகாரத்தை, முடிவுக்கு கொண்டு வருவதற்காக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளில் தடங்கல் ஏற்பட்டாலும் கூட, பின்னர் ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யும் வாய்ப்புக் கிடைத்துள்ளமை, பெரும் ஆறுதலான விடயமாகவுள்ளது.

கொவிட்-19 நோய் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்படுகின்ற உடல்களை, அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு, முஸ்லிம் சமூகம் கோரி வந்தது. உடல்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான, தமது மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில், உலகெங்கும் கடைப்பிடிக்கப்படும் முறைமையைக் கடைப்பிடிக்குமாறும் வேண்டிக் கொண்டனர்.

உலக சுகாதார ஸ்தாபனம், கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்போரின் உடல்களை அகற்றுவதும் அவற்றுக்கு இறுதிக்கிரியைகளை மேற்கொள்வதும் பற்றி, ஆரம்பக் கட்டத்திலேயே ஆராய்ந்து, வழிகாட்டல்களை வெளியிட்டிருந்தது. அவ் வழிகாட்டல்களில், உடல்களை அடக்கம் செய்யவும் முடியும் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தது. ஆனால், இலங்கை அரசாங்கமும் சுகாதார அமைச்சும், அந்த உலக ஒழுங்குக்கு விதிவிலக்காகவே செயற்பட்டு வந்தன. ஒரு கட்டத்தில், அரசாங்கம் நல்லடக்கத்தை அனுமதித்தேயாக வேண்டிய முட்டுச் சந்துக்குள் வந்து நின்றது. அதன்படி அரசாங்கம், உடல்களின் நல்லடக்கத்தை சட்டப்படி அனுமதிக்கும் விதத்திலான வர்த்தமானி அறிவித்தலை, பெப்ரவரி 25ஆம் திகதி வெளியிட்டது.

அரசாங்கம் தனது பிடிவாதத்திலிருந்து இறங்கி வந்தமைக்கான பின்புலக் காரணங்கள் பற்றி, கடந்த வாரப் பத்தியில் விரிவாகப் பார்த்தோம். இவ்வறிவிப்பு, காலம் கடந்த ஞானம் என்றாலும், முஸ்லிம்கள் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, நிம்மதிப் பெருமூச்சை விடுவதற்கு காரணமாகியது.

ஆயினும், அரசாங்கத்தால் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக முன்மொழியப்பட்ட இரணைத்தீவில், ஜனாஸாக்களைப் புதைப்பதற்கு எதிராகக் கிளம்பிய எதிர்ப்பலைகளால், இதில் மீண்டும் சறுக்கல் ஏற்பட்டது.

வர்த்தமானியை வெளியிட்ட சுகாதார அமைச்சு, சில தினங்களின் பின்னர், ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான ஒழுங்கு விதிகளையும் இருவேறு சுற்றறிக்கைகளாக வெளியிட்டது.

கொவிட்-19 நோய் தொற்றுறுதி செய்யப்பட்ட உடல்களை, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவது, அச்சடலத்தை அகற்றும் நடைமுறை என்றொரு வழிகாட்டல் சுற்றறிக்கையும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான உடல்களைக் கொண்டு செல்லல், நிலத்தில் அடக்கம் செய்தல் பற்றிய நியம செயன்முறைகள் என்றோர் இன்னுமொரு சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டன.

உடல்களை வைத்தியசாலைகளில் இருந்து அகற்றுதல், மரண விசாரணை, பிரேதபரிசோதனை, நல்லடக்கம், உடல்களைக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடு, ஒப்புதலளித்தல், சடலத்தை ஏற்றிச் செல்லல் என ஒவ்வொரு விடயம் தொடர்பான வழிகாட்டுதல்களும் இவற்றில் அடங்கியுள்ளன.

இதேவேளை, இரணைத்தீவில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக ஒரு துண்டு நிலத்தை, அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார். அத்துடன், மேற்படி சுற்றறிக்கைளில் ஒன்றில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் இத்தீவின் பெயர் குறித்து உரைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இரணைத்தீவில் வாழும் மக்கள் இத்தீர்மானத்துக்கு முழுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் இரணைத்தீவு அமைந்துள்ளது. பிரதான கரையோர நகரத்திலிருந்து சுமார் 12 கடல்மைல் தொலைவில் அமைந்துள்ள இத்தீவுக்கு வள்ளங்கள் மூலம், உடல்களைக் கொண்டு செல்லவும் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஆழமாக நிலத்தில் புதைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

ஆனால், இவ்வாறு ஜனாஸாக்களை அடக்கம் செய்வதன் மூலம், பல்வேறு அடிப்படைகளில் தமது மண்ணும், வாழ்வாதாரமும் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்று இரணைத்தீவில் வாழ்கின்ற மக்கள் எதிர்ப்புப்பேரணிகளை நடத்தியதுடன், அரசாங்கத்துக்கு மகஜர்களையும் சமர்ப்பித்தனர்.

முஸ்லிம்கள், ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக, ஏற்கெனவே வேறு பல இடங்களை முன்மொழிந்துள்ள போதிலும், கத்தோலிக்கர்கள் மட்டுமே வாழும் இந்தத் தீவில், முஸ்லிம்களின் உடல்களைப் புதைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டமை, இன விரிசலை ஏற்படுத்தும் முயற்சி என்று, விமர்சிக்கப்பட்டது.

அரசாங்கம் பல்வேறு காரணங்களுக்காக, இரணைத்தீவை ஜனாஸா அடக்கத்துக்குப் பொருத்தமான முதல் தெரிவாக அடையாளம் கண்டிருக்கலாம். பல நூறு நியாயங்களை அரசாங்கம் கொண்டிருக்கலாம். அத்துடன், நிலத்தின் மீதான அதிகாரமும் அரசாங்கத்துக்கே உள்ளது.

அதையும் தாண்டி, அங்கு முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு, கத்தோலிக்கர்கள் எதிர்ப்புக் காட்டுகின்றார்கள் என்றால், அதை இனவாதம் என்றோ மதவாதம் என்றோ, எடுத்த எடுப்பில் முடிவெடுத்து விடவும் முடியாது.

தமது கருத்துகளை முன்வைத்து, ஜனநாயகம், அஹிம்சை வழிமுறைகளில் போராடுவதற்கான உரிமை, எந்த மக்கள் கூட்டத்துக்கும் இருக்கின்றது. அந்தவகையில், இரணைத்தீவு மக்களின் உணர்வு வெளிப்பாட்டைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியதில்லை.

ஆனால், இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது, இலங்கை முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியுள்ளது என்பதைச் சொல்லாமல் விட முடியாது. இனவாதிகளும் ஆட்சியாளர்களுமே ஜனாஸா நல்லடக்கத்துக்குத் தடங்கலாக இருக்கின்றனர் என்று நினைத்திருந்த முஸ்லிம்களுக்கு, அதற்கப்பாலும் தடைகள் உள்ளன என்ற யதார்த்தத்தை இச்சம்பவம் வெளிக்கொணர்ந்தது எனலாம்.

உண்மையில், இதனை முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏனெனில், ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் கோரிக்கை விடுக்கத் தொடங்கியதில் இருந்து, முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்து, தமிழர்கள் அதற்கு ஆதரவாகச் செயற்பட்டு வந்தனர். முஸ்லிம்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று, தமிழ் அரசியல்வாதிகளும் கோரிக்கை விடுத்தனர்.

இவ்வாறான பின்புலத்தில் நின்று நோக்கும் போது, இரணைத்தீவு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையானது, முஸ்லிம்கள் மனதில் இருந்த ‘ஏதோ’ ஒரு பிம்பத்தை இலேசாக உடைத்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

சிலவேளை, முஸ்லிம்கள் மனதில் இருந்த ‘ஏதோ’ ஒரு பிம்பத்தை இலேசாக உடைப்பதற்காகவே, இரணைதீவு முன்னுரிமைத் தெரிவாக அடையாளம் காணப்பட்டதா என்ற ஐயப்பாடும் எழாமலில்லை.

எது எவ்வாறாயினும். அரசாங்கம் வர்த்தமானியை வெளியிட்டு, நல்லடக்கத்துக்கான உத்தேச இடத்தையும் அறிவித்த பிற்பாடு, இப்படியான ஓர் எதிர்ப்பு எழுந்தமையால், ஜனாஸா விவகாரம் இன்னுமொரு சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டது. இதனால், அடக்கம் செய்வதற்கான வாய்ப்பு, கை நழுவிப்போகுமா, இன்னும் இழுபறியாகிவிடுமா என்ற கவலை, முஸ்லிம்களைத் தொற்றிக் கொண்டது.

இந்தச் சந்தர்ப்பத்திலேயே, கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடிப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு ஒரு காத்திரமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்ட விதிமுறைகளின் உப ஏற்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள சூடுபத்தினசேனை, மஜ்மா நகரில் உள்ள மேட்டுநிலக் காணியில், ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காகக் கோரிக்கை விடுக்கப்பட்ட உடனேயே, தனது சொந்தக் காணியை வழங்கிய முஸ்லிம் நபர் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர். அத்துடன் இத்திட்டத்தைச் செயலுருப்படுத்துவதற்காக வினைத்திறனாகவும் காத்திரமாகவும் முன்னின்று உழைத்த அரச அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட குழுவினரின் சேவை அளப்பெரியது.

அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட பிறகும், இரணைத்தீவில் ஜனாஸாக்களை அடக்குவதற்கு அம்மக்கள் ஆட்சேபம் தெரிவித்தமையால் இந்தப் பிரச்சினை இப்போதாவது தீர்ந்து விடாதோ என்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. இதைக் காரணமாகக் காட்டியே, ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு விடுமோ என்று ஒரு மனத்தாங்கல் ஏற்பட்டது.

இருப்பினும், ஓட்டமாவடியில் அடையாளம் காணப்பட்ட பொருத்தமான இடப்பரப்பில், சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து, உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்கியமைக்காக அரச அதிகாரிகள், அரசாங்கத்தை, முஸ்லிம் சமூகம் நன்றியுணர்வோடு பார்க்கின்றனர்.

இந்த அடிப்படையில், ஜனாஸா நல்லடக்க விவகாரம், ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ளது. ஓட்டமாவடியில் பல ஜனாஸாக்கள் இதுவரை அடக்கம் செய்யப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணம் மட்டுமன்றி, மேல், வட மத்திய, மத்திய மாகாணங்களில் வைக்கப்பட்டிருந்த ஜனாஸாக்களும் ஓட்டுமாவடிக்கு எடுத்து வரப்பட்டு, நல்லடக்கம் செய்யும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

அதேநேரம், நாட்டின் வேறு பல பிராந்தியங்களில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற பிரதேசங்களிலும் இன்னும் சில பொருத்தமான இடங்களை அடையாளம் கண்டு, உரிய அரச அனுமதியைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய ஆறுதல், முஸ்லிம்களுக்கு இப்போது கைக்கெட்டியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெனீவா: உருளும் பகடைகள்!! (கட்டுரை)
Next post பெண்களின் வெளிச்சமாக திகழும் திருநெல்வேலி தம்பதியினர்! ! (மகளிர் பக்கம்)