பாரபட்சமற்ற நீதியின் அவசியம் !! (கட்டுரை)

Read Time:14 Minute, 41 Second

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக, விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள பரிந்துரைகள், கண்டறிதல்கள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் அரசியல் அரங்கை நிரப்பி இருக்கின்றன.

இந்தப் பயங்கரவாதத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை, இவ் ஆணைக்குழு முழுமையாக அடையாளம் காணவில்லை. ஆயினும், இச்சம்பவம் தொடர்பில் பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டிய அரச உயர்மட்டத்தினர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அத்துடன் இனவாத, அடிப்படைவாத கட்டமைப்புகள் தொடர்பான பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்னணியில், உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டனை வழங்காமல், இவ்வறிக்கையின் பூரணத்துவமற்ற தன்மை குறித்து எழுந்துள்ள விமர்சனங்களைச் சமாளிக்கும் பாங்கில், முஸ்லிம்களை நோக்கியதான நீதி நிலைநாட்டும் நடவடிக்கைகள் போகின்றதோ என்ற சந்தேகம் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படத் தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸால் மரணிக்கும் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்யும் உரிமையை, 11 மாதங்களின் பின்னர் அரசாங்கம் வழங்கியது. இது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் பெரும் மனஆறுதலாக அமைந்திருக்கின்றது. இருப்பினும், ஓர் உரிமையைக் கொடுத்துவிட்டு, வேறு உரிமைகளில் கைவைக்கும் தோரணையில் முன்னனெடுக்கப்படும் நகர்வுகள், முஸ்லிம்கள் மனதிலே, ‘என்ன நடக்கப் போகின்றதோ’ என்ற ஐயப்பாடு ஏற்படக் காரணமாகியுள்ளது.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி, தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள், மிகப் பெரிய மிலேச்சத்தனமாகும். இந்தக் காட்டுமிராண்டித் தனத்தை, இஸ்லாமிய மார்க்கமோ, வேறு எந்த மதமோ ஏற்றுக் கொள்ளவில்லை.

உண்மையில், இந்தத் தாக்குதலில் முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்ட ஓர் வெறிபிடித்த கும்பல் ஈடுபட்டிருந்தாலும் கூட, இதற்கான திட்டம் முஸ்லிம்களால் வகுக்கப்படவில்லை என்பதையும் முஸ்லிம் சமூகமோ, இஸ்லாம் மதமோ இந்த மிலேச்சத்தனத்தை ஓர் இம்மியளவு கூட அங்கிகரிக்கவில்லை என்பதையும் கத்தோலிக்க, பௌத்த, இந்து மக்கள் பின்னர் புரிந்து கொண்டனர்.

எது எவ்வாறாயினும், இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்குப் பின்னால் இருக்கின்ற உள்நாட்டு வெளிநாட்டுச் சக்திகள், புலனாய்வு அமைப்புகள், சதி வகுப்பாளர்கள் எல்லோரது அடிவேரும் கண்டறியப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.

அத்துடன், இலங்கையில் இவ்வாறான ஓர் அசம்பாவிதம் நடக்கப் போகின்றது என்று தெரிந்தும் கூட, முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கத் தவறிய அரச உயர் மட்டத்தினர், அதிகாரிகள் மீது, சட்டத்தின் பிடி இறுக்கப்பட வேண்டும். இதுவே நாட்டு மக்களின் பொதுவான நிலைப்பாடாகும்.

இவ்வாறான சூழலிலேயே, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஆணைக்குழு தனது சிபாரிசுகள் அடங்கிய இறுதி அறிக்கையை அண்மையில் சமர்ப்பித்துள்ளது. பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும் கூட, ஓரளவுக்கு சுயாதீனமான அறிக்கையாகவே இது நோக்கப்படுகின்றது.

மேற்படி தாக்குதல் நடத்தப்பட்ட போது, அதிகாரத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத்தவறினார் என்ற குற்றச்சாட்டை, ஆணைக்குழு முன்வைத்துள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்குப் பொறுப்புக் கூற வேண்டிய அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட, பல பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.

சில சமய பிரசார அமைப்புகளைத் தடை செய்தல், புர்கா தடை, மத்ரஸாக்களைக் கண்காணித்தல், குறிப்பிட்ட சில தனிநபர்கள் மீதான விசாரணைகள் போன்ற பரிந்துரைகளும் இதில் உள்ளடங்கியுள்ளன.

ஆணைக்குழுவானது முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளை மட்டும் குற்றம் சுமத்தவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத ஒடுக்குமுறையும், இவ்வாறான வேண்டத்தகாத சம்பவங்களுக்கு வினையூக்கியாக அமைந்துள்ளதை ஆணைக்குழு கண்டறிந்துள்ளது.

ஆகவே, இனவாத கருத்துகளை முன்வைத்து, நாட்டில் வன்முறைகள் தோற்றம் பெறக் காரணமாக அமைந்த பொதுபலசேனா அமைப்பைத் தடை செய்யுமாறும் ஞானசார தேரருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஆணைக்குழு பரிந்துரை செய்திருக்கிறது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலால் பெரிதும் இழப்புகளைச் சந்தித்த கத்தோலிக்க சமூகம், ஆணைக்குழுவின் அறிக்கையில் பூரண திருப்தி அடையவில்லை. பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை போன்றோர், இத்தாக்குதலின் பின்புலத்தைக் கண்டறிந்து, சூத்திரதாரிகளைத் தண்டிக்க வேண்டுமென எதிர்பார்த்திருந்த நிலையில், அவற்றையெல்லாம் அறிக்கை வெளிக் கொணராமையால் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகின்றது.

அதே மனநிலையுடனேயே நாட்டு மக்களும் உள்ளனர். இவ்வறிக்கையானது இத்தாக்குதலை திட்டமிட்டவர்கள், இக் கும்பலை இயக்கியவர்கள், அவர்களின் நோக்கம் போன்ற பின்புலக் காரணங்களை வெளிப்படுத்தத் தவறியிருக்கின்றது என்பது பொதுவான அபிப்பிராயங்களாகும்.

இலங்கைச் சூழலின் நடைமுறை யதார்த்தங்களையும் கடந்தகால அனுபவங்களையும் வைத்துப் பார்க்கின்ற போது, வெளிப்படையான, முழுமையான, உள்ளதை உள்ளபடி சொல்லி எல்லோரையும் திருப்திப்படுத்துகின்ற அறிக்கையொன்று சாத்தியமில்லை. இந்தப் புரிதலோடு, ஆணைக்குழு முன்வைத்துள்ள சிபாரிசுகளாவது நியாயமாகவும் நேர்மையாகவும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.

ஆனால், தாக்குதல் இடம்பெற்ற வேளையில் ஆட்சியில் இருந்த மைத்திரி – ரணில் அரசாங்கம் நீதியை நிலைநாட்டுவதில் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு, பின்னர் பொறுப்புக் கூறலில் இருந்தும் விலகிக் கொண்டதைப் போல, இவ்வரசாங்கமும் நீதியை, நியாயமான அடிப்படையில் நிலைநாட்டுவதில் ‘உப்புச் சப்பாக’ நடவடிக்கையை எடுத்துவிட்டு ‘பைலை’ மூடிவிடுமா என்ற கேள்வி எழுந்திருந்துள்ளது.

ஏனெனில், ஆணைக்குழுவின் அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகவும் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை, முழுக்க முழுக்க பௌத்த சமூகத்தையே குற்றஞ்சாட்டுகின்ற போக்கில் அமைந்துள்ளதாக அஸ்கிரிய பீடம் கூறியுள்ளது. உடனே, ‘பொதுபலசேனாவை தடைசெய்யப் போவதில்லை’ என்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பகிரங்கமாகக் அறிவித்துள்ளார்.

அதேநேரம், இந்த அறிக்கை முழுக்க முழுக்க ஆளும்கட்சியின் கொள்கைப் பிரகடனம் போன்றுள்ளதாக, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆக, பெருந்தேசிய அரசியல்வாதிகளும் சிங்களக் கடும்போக்கு அமைப்புகளும் பொறுப்புக் கூறலில் இருந்தும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுவதில் இருந்தும் விலகி ஓட முனைகின்றன.

இந்தச் சூழலில், முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புபட்ட விடயங்களில் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் மட்டும் அரசாங்கம் முனைப்புக் காட்டுவதை அவதானிக்க முடிகின்றது.

ஆணைக்குழு பரிந்துரை செய்திருக்கின்ற அளவுக்கு இல்லாவிட்டாலும், ஒரு கணிசமான அளவுக்கு முஸ்லிம் மத இயக்கங்களைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கின்றது என்பதை, ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அத்துடன், மத்ரசாக்களை முறைமைப்படுத்துவதுடன், பல்லின நாடொன்றுக்கு ஏற்றாற்போல் ஆடைகளையும் ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது. இதைப் பெரும்பாலான முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வர்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்துக்கும் முஸ்லிம் சிவில் சமூகத்துக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக ஆணைக்குழு தனது அறிக்கையில் எந்தக் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கவில்லை. எனவே, அறிக்கையைக் காரணமாக வைத்து முஸ்லிம்களின் இன, மத உரிமைகள், நடைமுறைகளில் அளவுக்கதிகமாக கைவைக்கவோ, அழுத்தங்களைப் பிரயோகிக்கவோ முற்படக் கூடாது.

நீதி நிலைநாட்டுதல் என்பது பொதுமைப்பாடாக இன, மத பேதங்களைக் கடந்து மேற்கொள்ளப்படுவதுடன், ஒரு பயங்கரவாதக் குழு செய்த நாசகார வேலையை மனதில் கொண்டு, சாதாரண முஸ்லிம் சமூகத்தின் விடயத்தில் பாரபட்சமாகச் செயற்படவோ, அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடாது.

2019 ஏப்ரல் தாக்குதலில் உயிர், உடமைகளை அதிகம் இழந்தவர்கள் கத்தோலிக்க மக்கள்; இது வெளிப்படையானது. இருப்பினும், யாருடைய தேவைக்காகவோ ஒரு கும்பல் நடத்திய இந்தத் தாக்குதலின் பின்னர், முஸ்லிம்கள் மீது இனவெறுப்பும் இனவன்முறைகளும் வெளிப்படையாகவே கட்டவிழ்த்து விடப்பட்டது. முஸ்லிம்கள் வேறு கண்ணோட்டத்தில் நோக்கப்பட்டனர். அந்தவகையில், இந்தத் தாக்குதல்களால் முஸ்லிம் சமூகம் ஏராளமானவற்றை இழந்துள்ளது.

எனவே, நீதி நிலைநாட்டலின் போது இவ்விடயங்களும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். அதுபோலவே, அளுத்கம, கண்டி, அம்பாறை போன்ற இடங்களை மையமாகக் கொண்டு, முஸ்லிம்கள் மீது இனவாதிகள் மேற்கொண்ட திட்டமிட்ட வன்முறைகளுக்கும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளைப் பரணில் போட்டது போன்று, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் கிடப்பில் போட்டு விடக் கூடாது. அதிலுள்ள நியாயமான, நல்ல பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், எல்லோருக்கும் பொதுவான நீதியை நிலைநாட்டும் போது இன, மத பாரபட்சமின்றி அதைச் செய்ய வேண்டும்; அதுதான் தார்மிகமும் ஆகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாவீரன் செங்கிஸ்கான் கதை!! (வீடியோ)
Next post அம்பிகை அம்மையாரும் தமிழர் போராட்டக் களமும் !! (கட்டுரை)