By 20 March 2021 0 Comments

பசியோட வருவாங்க…திருப்தியா சாப்பிட்டு போவாங்க!! (மகளிர் பக்கம்)

பரபரப்பா இயங்கி வரும் நகரத்தில் பெரிய மால் மற்றும் உயர்தர உணவகங்கள் இருப்பதுதான் நம்முடைய கண்களுக்கு தெரிகிறது. ஆனால் அதே தரமான மற்றும் சுவையான உணவுகளை சாலையோர சிறு கடைகளிலும் விற்பனை செய்து வராங்க. அப்படிப்பட்ட கடைகளில் ஒன்றுதான் சோழிங்கநல்லூரில் இருக்கும் கருப்பையா- செல்லம்மாள் தம்பதியரின் குழிப்பணியாரக் கடை. கடந்த ஏழு வருஷமாக இனிப்பு மற்றும் கார குழிப்பணியாரங்களை மட்டுமே இவர்கள் தங்களின் கடைகளில் விற்பனை செய்து வருகிறார்கள்.

‘‘இந்த பக்கம் கடந்து செல்பவர்கள் இங்க ஒரு பிளேட் குழிப்பணியாரம் சாப்பிடாம போகமாட்டாங்க’’ என்று பேசத் துவங்கினார் செல்லம்மாள். ‘‘எங்களின் சொந்த ஊர் திருச்சி அருகே துறையூர். என் கணவர் எனக்கு மாமா முறை வேணும். நான் பெரிசா படிக்கல. எட்டாம் வகுப்பு வரை தான் படிச்சிருக்கேன். அவர் பி.காம் பட்டதாரி. கல்யாணம் முடிஞ்சதும் நாங்க சென்னையில் செட்டிலாயிட்டோம். அவர் காண்ட்ராக்ட் முறையில்தான்
20 வருஷமா வேலைப் பார்த்து வந்தார்.

அதன் பிறகு அவரால் அந்த வேலையில் ஈடுபட முடியல. அதனால் வேலையை ராஜினாமா செய்திட்டார். என்ன செய்றதுன்னு தெரியல. அவர் வேலைக்கு போன வரைக்கும் மாத சம்பளம் என்று வந்தது. இப்போது அதுவும் இல்லாத நிலை. அந்த சமயத்தில்தான் நாமே சொந்தமா ஏதும் செய்யலாமான்னுதான் குழிப்பணியாரக் கடையை ஆரம்பிச்சோம்’’ என்றவரை ெதாடர்ந்தார் அவரின் கணவர் கருப்பையா.

‘‘இவங்க நல்லா சமைப்பாங்க. குறிப்பா குழிப்பணியாரம் ரொம்ப சுவையா செய்வாங்க. மழையின் போது மாலை நேரத்தில் சூடா செய்து தருவாங்க. சில சமயம் காலை நேர சிற்றுண்டியாகவும் செய்து தருவாங்க. மேலும் குழிப்பணியாரத்திற்கு என தனி உணவகங்கள் இல்லை என்பதால், இதையே ஆரம்பிக்கலாம்ன்னு முடிவு செய்தோம்.

நம்முடைய பாரம்பரிய உணவு, உடலுக்கும் தீங்கு ஏற்படுத்தாது. காரப்பணியாரம் மற்றும் இனிப்பு பணியாரம் இரண்டும் போடலாம்ன்னு முடிவு செய்தோம். என்ன சமைக்க போறோம்ன்னு திட்டமிட்டாச்சு. எங்க கடைப் போடலாம்ன்னு யோசிச்ச போது தான் என்னுடைய பழைய முதலாளி எனக்காக சோழிங்கநல்லூரில் ஒரு இடத்தை பார்த்துக் கொடுத்தார். சின்ன பங்க் போல தான் இருக்கும். ஒருவர் நின்று சமைக்கலாம். அங்கு அவரின் நண்பர் ஏற்கனவே பிரியாணி கடை வைத்திருந்தார். எனக்காக அவரிடம் பேசி அந்த இடத்தை வாங்கிக் கொடுத்தார்’’ என்றார்.

‘‘காலை எழுந்தவுடன் குழிப்பணியாரத்திற்கான அரிசியை ஊற வச்சிடுவோம். பச்சரிசி, புழுங்கல் அரிசி, இட்லி அரிசி, உளுந்து எல்லாம் ஊறவைப்போம். பொதுவா குழிப்பணியாரத்திற்கு ஒரு அரிசி தான் பயன்படுத்துவாங்க. நாங்க மூணு அரிசியும் பயன்படுத்துறோம். அப்பதான் சுவையா இருக்கும். இந்த மாவை அரைச்சு தனியா வச்சிடுவோம். இதற்கு தேங்காய் சட்னி, கார சட்னி மற்றும் புதினா, கொத்தமல்லி சட்னின்னு மூணு விதமான சட்னியும் தறோம். மாவு பொங்கி வருவதற்கு ஆப்ப சோடா, அஜினமோட்டோ எதுவுமே பயன்படுத்துறதில்லை.

மாலை ஐந்து மணிக்கு கடையை திறப்போம். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப காரம் அல்லது இனிப்பு பணியாரம் கேட்கும் ேபாது தான் சுட்டுத் தருவோம். முதல் நாள் கடைய போட்ட போது, 400 ரூபாய்க்கு தான் விற்பனையாச்சு. அது அப்படியே 800 ரூபாய் அப்புறம் 1500 ரூபாய்ன்னு விற்பனை சூடு பிடித்தது. நாங்க எந்த விளம்பரமும் செய்யல.

சுவையான தரமான உணவுக் கொடுத்தா கண்டிப்பா எங்கிருந்தாலும் தேடி வருவாங்க. எங்களிடம் பெரும்பாலும் ஐ.டி நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்கள் தான் சாப்பிட வருவாங்க. ஒரு பிளேட்டில் ஆறு பணியாரம் இருக்கும். விலை 30 ரூபாய் தான். இரண்டு பிளேட் பணியாரம் ஒரு ஜூஸ் குடிச்சா போதும், வயிறு நிரம்பிடும். கண் எதிரே சமைச்சு தருவதால் எல்லாரும் விரும்பி சாப்பிட வராங்க.

அது மட்டுமில்ல இந்த ஏழு வருஷம் சாப்பிட வந்தவங்க சொல்ற ஒரே விஷயம். சுவையும் தரமும் மாறாமல் அப்படியே இருக்கு என்பதுதான். கார பணியாரத்திற்கு வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி எல்லாம் வதக்கி சேர்ப்போம். அதுவே இனிப்பு பணியாரத்திற்கு வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டி மாவுடன் சேர்ப்போம்.

இவர் வேலைய விட்ட பிறகு எங்களுக்கு எந்த வருமானமும் கிடையாது. இந்த கடையில் வரும் வருமானம் மட்டும்தான். நான் கடையில் பணியாரம் சுட்டுக்கொண்டு இருப்பேன். என் கணவர் வியாபாரம் பார்த்துப்பார். இப்போதைக்கு இங்கு தான் கடை. வெறு பெரிய இடத்தில் வைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. காரணம் இங்கு எல்லாமே நாங்க இரண்டு பேர் மட்டும் தான். கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருவது அவரின் வேலை. மாவு அரைத்து பணியாரம் சுடுவது எல்லாம் நான் பார்த்துப்பேன். கடையா வச்சா, இதற்கென்று ஒரு ஆள் தனியா நியமிக்கணும்.

அவங்களுக்கு நான் பயிற்சி கொடுத்தாலும், அதே கைப்பக்குவம் வருமான்னு சொல்ல முடியாது. காரணம், இங்க ஐ.டி நிறுவனத்தில் தில்லியை சேர்ந்த ஒருவர் வேலைப் பார்த்தார். அவர் தில்லிக்கே மாற்றலாகி தன்னுடைய ஊருக்கு போயிட்டார். போனவர், அவரின் உறவுக்காரங்க சென்னைக்கு வந்த ேபாது, எங்க கடைக்கு போய் சாப்பிட சொல்லி அனுப்பி இருக்கார். அவங்களும் வந்து சாப்பிட்டு போனாங்க. அவர் அப்படி சொல்லி அனுப்பணும்ன்னு அவசியம் இல்லை. காரணம் சுவை. அதற்கு நாங்க எந்த வித காம்பிரமைஸ் செய்ய மாட்டோம். இப்ப கொரோனா காலம் என்பதால், முன்பு போல் வியாபாரம் இல்லை.

பெரும்பாலான ஐ.டி ஊழியர்கள் தங்களின் சொந்த ஊருக்கே போயிட்டாங்க. இங்கிருப்பவர்களும் வீட்டில் இருந்தபடியே வேலைப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. ஊரடங்கின் போது ரொம்பவே கஷ்டப்பட்டோம். ஏற்கனவே சேர்த்து வைத்திருந்த காசு மற்றும் என்னுடைய நகை எல்லாம் வச்சுதான் காலத்தை ஓட்டினோம். இதற்கிடையில் என் பெரிய மகனுக்கும் வேலை கிடைக்க கொஞ்சம் சமாளிக்க முடிந்தது. செப்டம்பர் மாதம்தான் மீண்டும் கடையை திறந்ததோம். இதை பெரிய அளவில் செய்யும் எண்ணமும் இல்லை… அதற்கான வசதியும் எங்களிடம் இல்லை.

இப்ப இரண்டு வகை பணியாரம்தான் போடுறோம். இடவசதி இருந்தால் நாலு ஐந்து வெரைட்டி போடலாம். இப்போது இருக்கும் இடத்தில் இதனுடன் கோதுமை, சோளம், பணியாரம் சேர்த்து செய்யலாம்ன்னு எண்ணம் இருக்கு. காரணம் பசியோட சாப்பிட வருவாங்க… அவங்க திருப்தியா சாப்பிட்டு போக… வெரைட்டி கொடுத்தா நல்லா இருக்கும்’’ என்றார் செல்லம்மாள்.Post a Comment

Protected by WP Anti Spam