By 19 March 2021 0 Comments

ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே…!! (மருத்துவம்)

‘உன்னைக் காணாமல் என் இதயம் தவிக்கிறது…’காதல் கவிதைகளிலும், சினிமாக்களிலும் அடிக்கடி நாம் எதிர்கொள்கிற வசனம் இது. அப்படி என்னதான் காதலுக்கும் இதயத்துக்கும் சம்பந்தமோ என்றும் இதனால் தோன்றுவதுண்டு. ஆனால், நிஜமாகவே காதலுக்கும் இதயத்துக்கும் கனெக்‌ஷன் உண்டு. அது வெறும் உவமையோ, உடான்ஸோ இல்லை என்கிறது நவீன மருத்துவம்.அதிலும் அன்பும் அன்யோன்யமுமாக இருந்தவர்களிடமிருந்து ஏற்படும் பிரிவு ஒருவரின் இதயத்தைப் பாதிக்கும் அளவுக்கு தீவிரமானது என்கிறார்கள் மருத்துவர்கள்.

பிரிவுத்துயரம் இதயத்தை எப்படி பாதிக்கிறது என்று இதய சிகிச்சை சிறப்பு மருத்துவரான ஹரிகிருஷ்ணனிடம் கேட்டோம்… ‘‘பிரிவுத்துயரம் இதயத்தைப் பாதிக்கும் என்பது உண்மைதான். இதை இதயத்தின் துடிப்பிலேயே தெரிந்துகொள்ள முடியும். வழக்கமாக நம் இதயத்தின் துடிப்பு நிமிடத்துக்கு 70 முதல் 90 வரை இருக்கும். நெருக்கமான ஒருவரை எதிர்பாராமல் இழக்கும்போது இந்தத் துடிப்பு அதீதமாகிவிடும். நிமிடத்துக்கு 300, 400 என்ற அளவில்கூட அதிகமாகலாம். சில நேரங்களில் இதற்குத் தலைகீழாக நிமிடத்துக்கு 60 என்றும் குறையும். இதயத்தின் இந்த சீரற்ற துடிப்புக்கு Atrial fibrillation என்று பெயர்.

விவாகரத்து செய்யும் தம்பதிக்கு இந்தப் பாதிப்பு அதிகம் ஏற்படுவதில்லை. அவர்கள் இருவருமே மனதளவில் பிரிவுக்குத் தயாராகவே இருப்பார்கள். அதேபோல, ஒருவர் மீது கசப்புணர்வுடன் பிரியும்போதும் இதயத்தில் அது எந்த தாக்கத்தையும் உண்டாக்குவதில்லை என்பது அதிசயம்தான்’’என்பவர், ஏட்ரியல் ஃபைப்ரிலேஷனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆறுதல் தருகிறார்.‘‘ஏட்ரியல் ஃபைப்ரிலேஷனை உடனடியாகக் கவனித்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஆபத்து இல்லை. சில மருந்துகளின் உதவியுடன் இதயத்துடிப்பின் விகிதத்தை இயல்புக்குக் கொண்டுவந்துவிட முடியும். ஆனால், முழுமையாக குணம் அடையும் வரை சிகிச்சையை விட்டுவிடக் கூடாது. இல்லாவிட்டால், மீண்டும் இதயத்துடிப்பு தாறுமாறாகிவிடலாம்.

இன்னொரு சிக்கலும் இருக்கிறது. இதயத்துடிப்பு ஒழுங்கில்லாமல் துடிப்பதால் சில இடங்களில் ரத்தம் கட்டிக் கொள்ளும். இந்த ரத்தக்கட்டி (Blood clot) எங்காவது நகர்ந்து சென்று அடைத்துக் கொள்ளும். பெரும்பாலும் மூளையில் சென்று அடைத்துக் கொண்டு பக்கவாதம் ஏற்படவும் காரணமாகிவிடுவதை அதிகம் பார்க்கிறோம். அதனால், ரத்தத்தில் பிசுபிசுப்புத்தன்மை வராமல், அடர்த்தி ஆகி உறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காகவும் தவறாமல் சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது Pulmonary veins isolation போன்ற நவீன சிகிச்சைகள் வந்திருக்கின்றன. இதன் மூலம் இதயத்தின் எந்தப் பகுதியில் துடிப்பு அதிகமாக இருக்கிறது என்பதைத் துல்லியமாக அறிந்து சரி செய்துவிடலாம். சிலருக்கு பேஸ்மேக்கரும் தேவைப்படும். நிலைமை எப்படி இருந்தாலும் 3 முதல் 4 மணி நேரத்தில் இதயத்துடிப்பை இயல்புக்குக் கொண்டு வந்துவிடலாம்’’ என்கிறார் டாக்டர் ஹரிகிருஷ்ணன். பிரிவுத்துயரம் தவிர வேறு காரணங்களாலும் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் வருமா?

‘‘முதுமை காரணமாக ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஏற்படலாம். குறிப்பாக, 70 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 சதவிகிதம் பேருக்கு இந்த பாதிப்பு இருக்கும். இது அவர்களுக்கே தெரியாது. இதேபோல திடீர் அதிர்ச்சி சம்பவங்கள், ரத்த அழுத்தம், தைராய்டு குறைபாடு, நீரிழிவு, மாரடைப்பு, இதயத்தின் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம். இதனால் முதியவர்கள் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் பிரச்னை இருக்கிறதா என்று சோதனை செய்துகொள்வது நல்லது. படபடப்பு, நெஞ்சில் வலி, தலை சுற்றல் போன்றவை ஏற்பட்டால் மருத்துவரைப் பார்ப்பதைத் தாமதிக்கக் கூடாது. தேவைப்பட்டால் இதய சிகிச்சை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இ.சி.ஜி. எடுத்தும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

இதைவிட முக்கியமான விஷயம்… வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதோடு, அவர்களுக்கு மனநல ஆலோசனையும், மருத்துவ உதவியும் தேவை என்பதை சுற்றியிருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். முதியவர்களுக்கு ஏற்கெனவே இதயத்தில் சில அடைப்புகள் இருக்க வாய்ப்பு உண்டு. கடும் மன அழுத்தமும் அதனுடன் சேரும்போது பாதிப்பு இன்னும் மோசமாகக் கூடும்’’ என்று எச்சரித்தவரிடம், காதல் பிரிவுக்கும் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷனுக்கும் தொடர்பு உண்டா என்று கேட்டோம்.‘‘காதல் பிரிவின் பிரச்னை வேறு வகை. இதை Broken heart syndrome என்கிறோம்.

இளவயதில் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால், முதியவர்களுக்கு ஏற்படும் அளவுக்கு இவர்களுக்குப் பாதிப்பு இருக்காது. கடும் மன அழுத்தம் காரணமாக இவர்களுக்கு இதயம் திடீரென்று வீங்கி பெரிதாகிவிடும். இதனால், இதயத்திலிருந்து ரத்தத்தை உள்வாங்கி வெளியேற்றும் பம்ப் செய்யும் திறன் குறையும். மன உளைச்சல் காரணமாக சுரக்கும் Catecholamines என்கிற ஹார்மோன்கள் காரணமாக மாரடைப்பு வருவது போல் தோன்றும். ஆனால், பரிசோதனை செய்து பார்த்தால் ரத்தக்குழாய்கள் ஆரோக்கியமாகவே இருக்கும். ஆஞ்சியோ பரிசோதனை செய்து பார்த்தாலும் இதயத்தில் அடைப்புகள் எதுவும் இருக்காது. இளவயது என்பதால் மாத்திரைகள் தொடர்ந்து கொடுத்து வந்தால் விரைவிலேயே குணமாகிவிடுவார்கள்’’ என்கிறார் டாக்டர் ஹரிகிருஷ்ணன்.Post a Comment

Protected by WP Anti Spam