By 2 April 2021 0 Comments

எனக்கொரு கலாநிதி பட்டம் பார்சல்-கல்வி மாஃபியாவால் சீரழியும் இலங்கை.!! (கட்டுரை)

பலவருட உழைப்பு, பல நிராகரிப்புக்கள், பல தியாகங்கள் மற்றும் பலலட்சம் செலவு என்று பலத்த போராட்டத்தின் பலனாக பெற்றுக் கொள்ளக்கூடிய ‘கலாநிதி’ என்கின்ற அந்த அதியுயர் அந்தஸ்தைக் கொடுக்கக்கூடிய பட்டத்தினை, வெறுமனே சிலஆயிரம் பணத்தைக் கொடுத்துவிட்டு அதனைத் தம்வசப்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய சில போலி கல்விமான்கள் பற்றிய பரபரப்பான கதைதான் இது.

நம் நாட்டில் கல்வியும் விலைபோய் வியாபாரமாகிப் பல வருடங்கள் ஆகின்றதென்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் பார்க்கின்றபொழுது பணம் மட்டும் இருந்தால் அனைவருமே இங்கு பட்டதாரிகள் தான் என்பதில் ஆச்சரியப்படுவதற்கும் எதுவும் இல்லை.

இன்று போலிச் சான்றிதழ்கள் மட்டுமல்ல, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள்களைக்கூட காசைக்கொடுத்தால் தேவையான துறையில் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற உண்மையை நம் அரசும் அறியாமல் இல்லை. அப்படி இருக்க ஏன் இதனைப்பற்றி எல்லாம் பேச வேண்டும் என்பதற்காய் என்னைப்போல் பலரும் இத்தனை காலமும் அமைதியாய் இருந்திருக்கலாம், இப்போது இதனைப் பற்றி பேசுவதற்கான ஓர் வாய்ப்பினைக் காலம் தந்திருக்கிறது.

இந்நாட்களில் பலராலும் பரவலாய் பேசப்பட்டு வருகின்றன விடயம் தான் இந்த ‘போலி கலாநிதிகள்’
இவை தொடர்பான ஆராய்ச்சியும், மக்கள் மத்தியிலோர் தெளிவினை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஓர் எண்ணமும் தான் இதனை எழுத வைத்தது.
‘கலாநிதி’ பட்டம் என்றால் என்ன?, அதனை எப்படிப் பெற்றுக்கொள்வது என்பதைப் பார்பதற்கு முதல், சாதாரணமாய் ஒரு பல்கலைக்கழகத்தில் எவ்வாறான பட்டங்களை எவ்வாறான படிமுறைகளில் பெற்றுக்கொள்ள முடியும் என்பது தொடர்பாக நாம் அறிந்திருக்க வேண்டும்.

நம்நாட்டுக் கல்வி முறமையைப் பொறுத்தவரையில் பட்டப்படிப்புக்களை இரண்டு கட்டங்களாக வகைப்படுத்தலாம்.
1) இளமாணிப் பட்டம் (undergraduate degree)
இதனை நிறைவுசெய்யவதற்கு மூன்றிலிருந்து ஐந்து வருடங்கள் வரை தேவைப்படும். நாம் தெரிவு செய்த துறையினைப் பொறுத்து அதன் காலப்பரப்பும் மாற்றமடையும். உதாரணத்திற்கு BA, BSC, BCOM, MBBS போன்றவை. இவற்றை கற்பிக்கக் கூடிய பாடப்பிரிவுகள் (taught course) என்பார்கள்.

2)பட்ட பின்படிப்புப் பட்டம்(postgraduate degree)
முதுமாணிப் பட்டப்படிப்பு என்பதும் இதற்குள்ளேயே தான் அடங்கும், அதே நேரத்தில் PhD என்று சொல்லப்படுகின்ற கலாநிதி பட்டமும் இதற்குள்ளேயே அடங்குகிறது. இவற்றையும் இரண்டாக வகைப்படுத்தலாம். MA, MSC, MBA போன்றவற்றை கற்பிக்கக்கூடிய பாடப்பிரிவிற்குள்ளும், MPhil மற்றும் PhD போன்றவற்றை ஆராய்ச்சிப் படிப்புக்கள் (research degree) என்றும் வகைப்படுத்தலாம்.
MPhil எனப்படுவது PhD இனை விட தரத்தில் சற்றுக்குறைந்த பட்டமாகக் காணப்படுகிறது.
இதனை நிறைவு செய்ய இரண்டிலிருந்து மூன்று வருடங்கள் வரைத் தேவைப்படும். இதுவும் சாதாரணமாய் இலகுவில் பெற்றுவிட முடியாததொன்று. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தினால் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானோர் தெரிவு செய்யப்பட்டு, அதிலும் பலர் நிராகரிக்கப்பட்டு பல ஆராய்ச்சியாளர்களால் கண்காணிக்கப்பட்டுத் தான் அவர்கள் ஆராய்ச்சியை நிறைவு செய்து இந்தப் பட்டத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சரி இப்போது இந்த PhD என்பது என்ன ?, PhD என்பது மேலே நான் குறிப்பிட்ட MPhil என்னும் ஆராய்ச்சி படிப்பிற்கும் ஓர்படி மேலானது. PhD என்று சொல்லுகின்ற பொழுது, Doctor of Philosophy என்பார்கள். ‘Philosophy’ என்கின்ற இந்த வார்த்தைக்கு இலத்தீன் மொழியில் ‘love of wisdom’ என்று பொருள்படுகிறது. அதாவது ஒருவர் PhD வரை செல்கிறார் என்றால் அவருக்கு ஒரு ஞானம் அல்லது ஒரு நுண்ணறிவு கிடைக்கிறது என்றே பொருளாகின்றது. இதிலிருந்தே இந்த PhD கலாநிதி பட்டத்தின் தரமானது எவ்வளவிற்கு தரமுயர்ந்தது காணப்படுகிறது என்பதை உங்களால் ஊகிக்க முடியும்.
அப்படிப்பட்ட அந்த கலாநிதிப் பட்டத்தினைத் தான் இன்று இலங்கையில் சந்தைப் படுத்தியிருக்கிறார்கள்.

இப்படிக் காசைக் கொடுத்து கலாநிதி பட்டம் பெற்றவர்களுக்கு குறைந்தபட்சம் கலாநிதி பட்டத்தின் மதிப்பு அல்லது அந்தப் பட்டத்தைப் பெறுவதற்க்கான படிமுறைகளாவது தெரியுமா என்று கேட்டால் நிச்சயம் அதுவும் கேள்விக்குறி தான்.
PhD செய்யவேண்டும் என்றால் இளமாணிப் பட்டத்திலும் ஸ்பெஷல் செய்திருக்க வேண்டும். சில வேளைகளில் முதுமாணி பட்டமும் தேவைப்படும், அல்லது MPhil முடித்திருக்க வேண்டும். அதன்பின், அவர் தெரிவு செய்த துறையில் அவர் மேற்கொள்ளவிருக்கும், கண்டுபிடிக்கவிருக்கும் அல்லது இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தவிருக்கும் ஆராய்ச்சி தொடர்பான அறிக்கையினை அந்த பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். அப்படி அதிலும் சில வேளைகளில் நிராகரிக்கப்படலாம். ஆப்படியல்லாமல் அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஆராய்ச்சி வெற்றியடையும் வரை அவர் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பல லட்சங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும். இவற்றிற்கு ஐந்து வருடங்கள் வரைத் தேவைப்படும். அவற்றை எல்லாம் ஓர் ஆய்வறிக்கைப் புத்தகமாக எழுத வேண்டும். அதனைத் தீஸிஸ் (thesis) என்பார்கள். அப்படி எழுதி எல்லாம் முடித்த பின் கூட அவர் ஆராய்ச்சி தோல்வியடையலாம். PhD இனை நிறைவு செய்ய முடியாமல் இடையிலேயே கைவிடும் நிலையும் ஏற்ப்படலாம்.

இப்படியாக நாம் நினைத்துப் பார்க்க முடியாதளவிற்கு கடினமானது தான் இந்த PhD கலாநிதி பட்டம்.
கலாநிதி என்றதும் நம் கண்முன் பலர் வந்து போவார்கள் காரணம் அந்தளவிற்கு இன்று கலாநிதி எனும் பட்டம் மலிந்திருக்கிறது, அவர்கள் உண்மையில் இவற்றை எல்லாம் முடித்துத் தான் அந்த பட்டம் பெற்றார்களா. அல்லது சந்தையில் பெற்றுக் கொண்டார்களா அல்லது தம்மைத் தாமே அப்படி கூறிக்கொள்கிறார்களா என்பது தான் இங்கே கேள்வியான விடயம்.
சிலருக்கு வயது முப்பதைக் கூட தாண்டியிராது ஆனால் அவர்களிடம் மூன்று நான்கு டிகிரியும் கலாநிதிப் பட்டமும் இருக்கும். சில பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கூட இராது ஆனால் முப்பது வருட அனுபவம் என்கிற பதாதைகள் அவர்களிடம் இருக்கும்.

இது நம் நாடுபூராவும் பரந்திருக்கக்கூடிய ஓர் கல்வி வியாபார மாஃபியா. இன்று சமூக வலைதளங்களில் பார்த்தாலே தெரியும், ஏதே ஏலத்தில் பொருட்களை விற்பது போல ‘பல்கலைக்கழகம் செல்ல முடியவில்லையா கவலையை விடுங்கள் ஒரே வருடத்தில் இளமாணிப் பட்டம் இரண்டாவது வருடத்தில் முதுமாணிப் பட்டம்’ என்று புதுப் புது பல்கலைக்கழகங்களுடைய பெயர்களோடு விளம்பரங்களைக் காணக்கூடியதாக இருக்கும். இப்படியான பல்கலைக்கழகங்கள் இருக்கின்ற பொழுது PhD என்பது இரண்டு மாதத்தில் கூட சில வேளைகளில் சாத்தியமாகலாம்.
இது தொடர்பான மற்றுமோர் முக்கியமான விடயத்தையும் இங்கே குறிப்பிடவேண்டும். கலாநிதி பட்டத்திற்கும் கெளரவ கலாநிதி (Honorary PhD) பட்டத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை முதலில் அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
கெளரவ கலாநிதி பட்டம் என்பது நான் மேலே குறிப்பிட்டது போல ஆராய்ச்சி அறிக்கைகள் எழுதி பெற்றுக்கொள்வது இல்லை. மாறாக ஏதோ ஓர் துறையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கும், ஒரு துறையில் அதியுயர்ந்த அடைவுகளைப் பெற்றவர்களுக்குமே அவர்களைக் கெளரவப்படுத்தும் நோக்கில் வழங்கப்படுவது தான் கெளரவ கலாநிதி பட்டம்.
இவ்வாறான கெளரவ கலாநிதிப பட்டம் பெறுவதென்பது கூட அவளவிற்கு இலகுவானதொன்றல்ல. கடந்த 2000 ஆண்டு தொடக்கம் 2011 வரையான 11 வருடங்களில் கொழும்பு பல்கலைக்கழகத்தால் 29 பேருக்குத்தான் இந்த கெளரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் வயம்ம பல்கலைக்கழகத்தால் கடந்த 8 வருடங்களில் 7 கலாநிதி பட்டங்களும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தால் கடந்த 15 வருடங்களில் 22 கலாநிதி பட்டங்களும் தான் வழங்கப்படிருக்கின்றது.
ஆனால் இன்று பெயர் தெரியா பல்வேறு பல்கலைக்கழகங்களாலும் வருடத்திற்கு இரண்டு மூன்று தடவைகள்பல கலாநிதி பட்டங்கள் வழங்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

இப்படியாக கெளரவ கலாநிதி பட்டம் பெற்றவர்கள் தங்களுடைய பெயருக்கு முன்னால் டாக்டர் (doctor) என்கிற பட்டத்தைப் பயன்படுத்தலாமா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்று தான் கூறவேண்டும். அதுவே தான் உலக வழமையாக இருக்கிறது. நம் நாட்டின் ஜனாதிபதியிற்கு கூட Doctor of science பட்டம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் இதுவரையில் அவர் பெயருக்கு முன்னால் அதனைப் பாவித்திருக்கவில்லை. இப்படிப் பலரும் பாவிப்பதில்லை.

ஆனால் புகழுக்காய் பணத்தைக் கொடுத்து கெளரவ கலாநிதிப் பட்டங்களைப் பெற்றவர்கள், வடிவேலு ஒரு படத்தில் ‘எல்லோரும் பாருங்க நானும் ரவுடி தான்’ என்றது போல ‘நானும் கலாநிதி தான்’ என்று பதிவுகளையும் மக்கள் மத்தியில் தற்பெருமையையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று பெயருக்குப் முன்னால் கலாநிதி எனும் பட்டத்தை வைத்திருக்கக்கூடிய பல அரசியல்வாதிகள் இவ்வாறானவர்கள் தான். உங்கள் மத்தியிலும் நிச்சயம் இவ்வாறானவர்கள் இருப்பார்கள்.
இவர்கள் தொடர்பான சமூக ஆர்வலர்கள் மற்றும் புத்திஜீவிகளின் கருத்துக்கள் இவை.
சி.சிவச்சந்திரன்:
வைத்திய நிபுணர்

‘நடிகர் விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்தது ஒரு பல்கலைக்கழகம். அதே பல்கலைக்கழகம் தமிழக முதல்வர் எடப்பாடிக்கும் கொடுத்தது. அந்தப் பல்கலைக்கழக வேந்தர் எடப்பாடியின் கட்சிய அதிமுக வில் தேர்தலில் போட்டியிட்டார்.
நடிகர் விஜயகாந்துக்கு அமெரிக்காவின் ஒரு திருச்சபை இறையியலுக்காக டாக்டர் பட்டம் கொடுத்தது. அந்த திருச்சபையின் இணையத்தளத்திற்குப் போய் அந்த பட்டம் பெற தேவையான அடிப்படைத் தகுதிகளை பார்த்தால் விஜயகாந் அதை நெருங்கக்கூட முடியாதே? அப்புறம் எப்படி கிடைத்தது?

ஜெயலலிதா, கருணாநிதி என எல்லோரும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள்.
சரி இவர்கள் எல்லோரும் அவர்களின் துறையில் ஏதோ சாதித்தவர்கள் தானே அதற்காக கெளரவ பட்டங்களாக இருந்திட்டுப்போகட்டும் என நினைக்கலாம்.
ஆனால் இந்த வியாதி இப்போது இலங்கையில் ஊடுருவி உள்ளது.
இந்தச் சாதனையைத் தொடங்கி வைத்தவர்கள் தமிழர்கள்தான்.
இரண்டாயிரம் ஆண்டின் ஆரம்பம், வெள்ளவத்தையில் ஒரு சிறிய அறையினுள் ஒரு பல்கலைக்கழகம் இயங்கியது.
அவர்களின் தொழில், விரிவுரைகள் எடுப்பதில்லை .

புலம் பெயர் தேசத்தில் இருப்பவர்களை அழைத்து பணம் பெற்று கலாநிதிப்பட்டம் கொடுப்பதே அவர்களின் வேலை . கனடாவில் இருந்தே நிறையப்பேர் இந்த கலாநிதிப் பட்டங்களை பெற்றுள்ளார்கள். இலங்கையில் 300 – 500 வரை செலுத்தி பட்டம் பெற்று, கனடாவிலே பல ஆயிரம் செலவழித்து தங்களுக்குத் தங்களே பாராட்டு விழா நடத்தி உள்ளார்கள் பலர். இது 2004- 2005 காலப்பகுதியில் மிகப்பிரபலமான வியாபாரமாக இருந்தது.
அதன்பின் தமிழர்களை இலகுவாக புகழுக்கு மயக்கிவிடலாம் என்று புரிந்து பல அமைப்புகள் இலங்கைத் தமிழர்களை குறிவைத்தது.

Global peace university என்ற பல்கலைக்கழகம் அமெரிக்காவில் உள்ளதாக அதன் இணையத்தளம் சொல்கிறது. ஆனால் உண்மைத்தன்மையை ஆராய்ந்தால் அப்படியொரு பல்கலைக்கழகமே இல்லை என்ற ஆச்சரியமான உண்மை வெளிவந்தது.
அந்தப் பல்கலைக்கழகம் பல நாடுகளில் கலாநிதிப் பட்டங்களையும் பல விருதுகளையும் வழங்கி வருகிறது. அது டார்கெட் பண்ணும் நாடுகள் ஆபிரிக்க நாடுகளும், ஆசிய நாடுகளுமே. பல ஆபிரிக்க பிரபலங்கள் அந்தப் பல்கலைக்கழகம் தங்களை ஆசைகாட்டி பணம் கேட்டதைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதே பல்கலைக் கழகம் சில வருடங்களுக்கு முன்பு சாவகச்சேரியில் ஒரு பட்டமளிப்பு விழாவை நடத்தி பலருக்கு விருதும் கலாநிதிப்பட்டமும் கொடுத்தது.

பல முறை கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மண்டபத்திலும் பட்டமளிப்புகளைச் செய்துள்ளது.
அதிலே எனக்குத் தெரிந்த சாதாரண அரச வேலை செய்யும் தம்பிக்கும் தேசகீர்த்தி என்ற விருது கிடைத்தது.
அவரிடம் கேட்டபோது, தான் பணம் கொடுக்கவில்லை ஆனால் ஒரு விருதுக்கு மற்றவர்களிடம் 50000 ஆயிரம் ரூபாய் தொடக்கம் ஒரு லட்சம் வரை விருதுக்காகவும், மேலதிகமாக விழா செலவுக்கான தொகையும் பெறப்பட்டதாக உண்மையைச் சொன்னார்கள்.

அவனுக்கு மட்டும் ஏன் பணம் பெறாமல் விருது கொடுத்தார்கள்?
இதற்கான பதிலைத் தேடியபோதுதான் இந்த அமைப்புகள் எப்படி இயங்குகின்றன என்ற உண்மைகள் புரிந்தன.
இவை முகவர்கள் ஊடாக சமூகத்தில் இருக்கும் கொஞ்சம் அறியப்படடவர்களை அணுகும். சில அமைப்புக்கள் இணையம் ஊடாக விண்ணப்பமும் கோரும்.

இவர்கள் அணுகும் சிலருக்கு இலவசமாகவே விருதுகளும் பட்டங்களும் கொடுக்கப்படும். ஆனால் பெரும்பாலானோரிடம் குறிப்பிட்ட தொகை பட்டத்திற்காக அல்லது விருதுக்காக பெறப்படும்.
ஊடக துறை சார்ந்தோர், அரசியல் வாதிகளோடு தொடர்புள்ளவர்களுக்கு இலவசமாக வழங்குவதன் மூலம் தங்களை நிலைப்படுத்திக்கொள்ளுகின்றன இந்த அமைப்புகள். அந்த தம்பியின் அரசியல் தொடர்புக்காகவே அவனுக்கு அந்த விருது இலவசமாக கிடைத்தது.

இப்படியான ஒரு விருது பெற்ற ஒரு துறையைச் சேர்ந்த தம்பி . எனக்கு சில உண்மைகளைச் சொல்லியிருந்தார்.
இணையத்தளம் ஊடாக தான் சாதித்ததை கூறி விண்ணப்பத்தை அனுப்பியுள்ளார். அவருக்கு இலவசமாக ஒரு விருது ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.
அந்த நிகழ்வு இருகட்டமாக நடந்துள்ளது. விருது பெற்றவர்கள் முதற்கட்டமாக அழைக்கப்பட்டு விருது கொடுக்கப்பட்டு அனுப்பட்ட பின் இரண்டாம் கட்டடமாக கலாநிதிப்பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிலே என்ன நடந்தது என தனக்குத் தெரியாது எனவும் ஆனால், அதிலே பட்டம் பெற்றவர்களிடம் ஒரு லட்சம் முதல் 3 லட்சம் வரை பெறப்பட்டதாக அறிந்ததாகவும் சொன்னான்.

இதுதான் வியாபார தந்திரம்!
ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் நிகழ்வு. அதற்கான செலவை விருது, பட்டம் பெற்றவர்களிடமே அறவிட்டு விடுவார்கள். மேலதிகமாக பட்டங்களுக்கென பெறப்படும் பணம் மொத்தமாக மில்லியன் கணக்கில் சேரும். அது இந்த அமைப்பை நடத்துபவர்களுக்கான லாபம்.
ஒரு இணையத்தளத்தை நடத்துவதைத் தவிர வேற எந்தச் செலவும் இல்லை. ஆனால் மில்லியன் கணக்கில் லாபம். நல்ல தொழில்தானே? இதற்கான அவர்களின் முதலீடு எதுவும் செய்யாமல் பட்டமும் புகழும் பெறவேண்டும் என நினைப்பவர்களின் ஆசை.
இப்போது இது மற்ற சமூகத்திடமும் பரவியுள்ளது.
அண்மையில் உலகத் தமிழ் பல்கலைக் கழகம் பலருக்கு கலாநிதிப் பட்டங்களைக் கொடுத்துள்ளது. ஒருவர் வியாபார முகாமைத்துவத்திலும், இன்னொருவர் தமிழ் பாடத்திலும் கலாநிதிப்பட்டங்களைப் பெற்றதாக பகிர்ந்து நூற்றுக்கணக்கானோரிடம் வாழ்த்துக்களை பெறுகிறார்கள்.

அந்தப் பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தை பார்த்தால் கற்கை நெறிகள் பற்றி எந்த விபரமும் இல்லை. கலாநிதி கற்கை நெறிக்கான விண்ணப்பப்படிவம் கூட இல்லை . ஆனால் கலாநிதிப் பட்டம் பெறுவதற்கான விண்ணப்படிவம் மட்டுமே உள்ளது. இதென்ன பித்தலாட்டம் என நினைத்துக்கொண்டே அந்த பல்கலைக்கழக இணைய பதிவு பற்றிய விபரங்களை ஆராய்ந்தால் அது தொடங்கி இன்னும் ஒருவருடம் கூட பூர்த்தியாகவில்லை. தொடங்கி ஒருவருடம் கூட பூர்த்தி ஆகாத பல்கலைக்கழகம் எப்படி பட்ட மேற்படிப்புப் பட்டமளிப்பை நடத்தலாம்.

இன்னும் கொஞ்ச நாளில் இன்னொரு பட்டமளிப்பு விழா நடக்க உள்ளதாம்.
சட்ட ரீதியாக அணுகி இந்த விடயத்தை தடுப்பது சாத்தியமில்லை.
ஆனால் இப்படிப்பட்டம் பெறுவது ஏமாற்று வேலை என எல்லோரிடமும் கொண்டு சேர்த்தால், இப்படிப் பட்டம் பெற்றவர்கள் வெளியில் சொல்ல வெட்கப்பட வேண்டிய நிலையை உருவாக்கலாம். அதன் மூலம் இந்த போலி பல்கலைக்கழங்களுக்கான வியாபாரத்தைத் தடுத்து நிறுத்தலாம்.’

ஹசன் முபாரக்:
‘இன்று நம் நாட்டின் கல்விமுறைமையையே கேள்விக்குட்படுத்தியிருப்பதோடு நின்றுவிடாமல் அதனை ஒரு கேளிக்கூத்தாகவே மாற்றியிருக்கின்ற இப்போலிக்கலாநிதிகள் மற்றும் போலிப்பட்டமளிப்பு விழாக்கள் சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முதலாவது ஊடகமாக நீங்கள் முன்வந்திருப்பதனை முதற்கண் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம்.

இலங்கையின் பல முன்னணி தொழிற்தகைமை உயர்கல்வி நிறுவகங்களில் பல்வேறுபட்ட உயர்பதவிகளை வகித்தவன் என்றவகையிலும், இலங்கையிலே நான் பெற்றுக்கொண்ட சிறந்த கல்வித்தகைமைகளினூடாக சர்வதேசரீதியில் பல்வேறுபட்ட நன்மைகளை அடைந்துகொண்டவன் என்றவகையிலும் நம்நாட்டிலே இன்று பரவலாக ஏற்பட்டிருக்கின்ற பல்வேறுபட்ட தோற்றப்பாடுகளுடன்கூடிய போலிப்பட்டங்கள் மற்றும் போலிக்கலாநிதிகள் சம்பந்தமாக பாராமுகமாக இருக்க என்னால் இயலவில்லை. இது சம்பந்தமாக பல இளைஞர்கள் முகப்புத்தகத்திலே பல செய்திகளை ஏற்கனவே பதிவுசெய்திருந்தபோதிலும் அவை செவிடன் காதில் ஊதிய சங்கு போலாகிப்போனது. எனவே நான் இது சம்பந்தமான போதியளவு ஆதாரங்களுடன் இதில் சம்பந்தப்பட்டவர்களையும் அடையாளப்படுத்தி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உயர்கல்வி அமைச்சு உட்பட சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் அனைவருக்கும் எழுத்துமூலம் அறிவித்திருந்தும், துரதிர்ஷ்டவசமாக இதுவரைக்கும் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஆக்கபூர்வமான சட்டநடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அதன் பின்னர் கௌரவ மனோ கணேஷன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களையும் அணுகி இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் குரல்கொடுக்குமாறு வேண்டினோம். அவர்கள் பேசுவதாக உறுதியளித்தபோதும் இன்றுவரையும் அது பாராளுமன்றில் பேசப்படவில்லை.

எனவே, இப்போலிக்கல்வி நிலையங்கள் தொடர்பாக தொடர்ந்தும் தகவல்களைத் திரட்டி மக்களைத் தெளிவுபடுத்துவதனூடாக மாணவர்களை இம்மோஷடிக்காரக் கும்பலிடமிருந்து பாதுகாக்கலாம் என்ற முடிவுக்கு நாம் வந்தோம். அதனடிப்படையில் பல துறைகளையும் சார்ந்த இளைஞர்களைத் திரட்டி, இது சம்பந்தமான தெளிவூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். அதில் கணிசமான அளவு வெற்றியும் கண்டுள்ளோம்.

தென்னிந்தியத்திரைப்படங்களில் காட்டப்படுவது போன்று இம்மோசடிக் கும்பல் சம்பந்தமான பல்வேறு திடுக்கிடும் தகவல்களை எம்மால் சேகரிக்க முடிந்தது. அவற்றை நாங்கள் முடிந்தளவு மக்கள் மயப்படுத்தி தெளிவூட்டினோம். இன்று ஏராளமான கல்வித்துறை சார்ந்தோர், பல்கலைக்கழக உபவேந்தர்கள், சட்டத்தரணிகள், மற்றும் உயர்பதவிகளில் உள்ள பலர் இம்முயற்சிக்குத் தங்கள் ஒத்துழைப்பினை தர முன்வந்துள்ளமை எமக்கு நம்பிக்கை அளிக்கின்றது. அத்துடன் தமிழ், சிங்களம், மற்றும் ஆங்கில தேசிய ஊடகங்களும் இதுபற்றிய விழிப்பணர்வு நிகழ்ச்சிகளுக்கு அதிகரித்த முக்கியத்துவம் கொடுத்து வருவதையும் அவதானிக்கமுடிகிறது. அவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இப்போலிப்பட்ட விற்பனை மோசடிக்கும்பலானது குறைந்த கல்வித்தகைமை கொண்ட அரசியல்வாதிகள், வியாபார உரிமையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள, அரச உத்தியோகத்தர்களை இலக்கு வைத்து ஆரம்பித்த போலிக்கலாநிதி வியாபாரம் இன்று பொலிஸ் உயரதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், அரச உயரதிகாரிகள் போன்றோரை இலக்குவைத்து வியாபித்திருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இது சம்பந்தமாக தொடர்ந்தும் மௌனம் காப்பது மிகுந்த ஏமாற்றத்தையளிக்கின்றது.

இதுபோலவே பல சர்வதேச பல்கலைக்கழகங்கள் தங்களது இலங்கை முகவர்களினூடாக தரம்குறைந்த மற்றும் போலியான பட்டங்களை வழங்கும் மற்றுமோர் வகையான வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே நம்நாட்டின் உயர்கல்வி நெறிப்படுத்தப்படுவதற்கான சட்டம் ஒன்று அவசரமாக இயற்றப்படல் வேண்டும். அதனூடாக இப்போலிப்பட்டம் மற்றும் கலாநிதிப்பட்டம் விற்கும் – வாங்கும் கும்பல் கைதுசெய்யப்பட்டு தகுந்த தண்டனை வழங்கப்படல் வேண்டும் என அரசாங்கத்தினைத் தொடர்ந்தும் வலியுறுத்துகின்றோம். தவறும் பட்சத்தில் அது இலங்கையின் கல்வித்தகைமைகளுக்கு இருந்த சிறப்பினை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் கேள்விக்குள்ளாக்கும் நிலைக்குத் தள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மொஹமட் ரியாஸ்
‘போட்டி போட்டுக் கொண்டு கலாநிதி பட்டங்களை வழங்கும் போலிப் பல்கலைக்கழகங்கள் நிறையவே இப்போது எமது மக்களை இலக்கு வைத்துள்ளன. இதற்கு எமது சமூகத்தில் இருக்கும் மக்களின் பேராசை, ஏனையோரை ஏமாற்றுதல், போலி கெளரவம் போன்றவற்றுடன் சிலர் அறியாமையுனாலும் இந்த வலையில் சிக்கிக்கொள்கிறார்கள். நான் தொடர்பு கொண்ட பல்கலைக்கழகங்கள் ரூபா 30,000 முதல் 200,000 வரை கலாநிதிகளை இலங்கையில் விற்பனை செய்கின்றன. ஒரு முறையான அனுமதியுள்ள பல்கலைக்கழகம் முதலில் இளமாணிப் பட்டம், அதற்கான பட்டமளிப்பு வருடாந்தம் ஒருமுறை நடாத்தும். அதிலே ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ கெளரவ கலாநிதி பட்டங்களை வழங்கும். ஆனால் இந்த கும்பல் கலாநிதி பட்டங்கள் மாத்திரம் வழங்குவதும் அதுவும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 50 முதல் 200 கலாநிதி பட்டங்கள் வழங்குவது இந்த போலி பல்கலைக்கழகத்தின் வியாபாரத்தின் தன்மை நன்றாக தெரிகிறது. மேலும் ஒரு பல்கலைக்கழகம் இன்னொரு நாட்டுக்கு கலாநிதிப் பட்டங்கள் வழங்க செல்வதில்லை ஆனால் இந்த அமெரிக்க ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க என்று சொல்லிக் கொள்ளும் போலிப் பல்கலைக்கழகங்கள் இலங்கை மக்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக இலங்கைக்கு வந்து போலிப் பட்டமளிப்பு விழா நடாத்தி எமது மக்களை ஏமாற்றி விட்டுச் செல்கின்றன.

இணையதளத்தில் மாத்திரம் இருக்கும் இவர்கள் சில அமெரிக்காவில் online மூலம் 150 முதல் 500 டாலர் வரையான கட்டணத்தில் ஒரு சாதாரன வியாபார கம்பனியை பதிந்துள்ளார்கள். ஆனால் கல்விசார் நடவடிக்கையில் ஈடுபட எந்த அனுமதியும் இல்லை. அப்படி மார்ச் மாத்ததில் பதிந்த பல்கலைக்கழகம் ஜூலை மாத்த்தில் இலங்கையில் பட்டமளிப்பு விழா நடாத்தியது அதாவது ஆரம்பித்து மூன்று மாத்த்தில். ஒரு பல்கலைக்கழகம் அமெரிக்க ஜனாதிபதியின் மைத்துனர் பட்டமளிப்புக்கு வருகிறார் என்று ஏமாற்றி எங்கோ இருந்து ஒரு வெள்ளைக்கார்ரை கூட்டிவந்து காட்சிப்படுத்தியது.
கல்விச்சமூகம் , பொதுமக்கள் இது பற்றி விழிப்புணர்வு அடைய வேண்டும். இல்லையேல் எமது சமூகத்தில் எமது பிள்ளைகள் கற்கும் கல்வியின் கட்டமைப்பு சிதைக்கப்படும். தகுதியில்லாதவர்கள் எமது பிள்ளைகளை வழிநடாத்த சமூகத்தில் முன்னிற்பார்கள். கலாநிதி என்றதும் அவர்களுக்கு கொடுக்கப்படும் கெளரவத்தைவிடவும் அந்தப் பட்டத்திற்கு இருக்கும் நன்மதிப்பே நமது மனிதில் தொன்றும்.
இது சமூகம் சார்ந்த பிரச்சனை என்பதை மக்கள் உணர வேண்டும் அதற்காக குரல் கொடுக்க வேண்டும்.’
கலாநிதி மங்களேஷ்வரன்
யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக பீடாதிபதி.

‘கலாநிதி பட்டம் என்பது இலகுவாக பெற்றுக்கொள்ள முடியாது. அதற்காக பல வருடங்கள் உழைக்க வேண்டும். அதற்காக பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும். என்னைப் பொறுத்தவரையில் நான் வெளிநாட்டு பல்கழைக்கழகத்திற்கு புலமை பரீட்சையில் சென்றதால் கிட்டத்தட்ட ஐம்பது இலட்சங்கள் வரை அவர்கள் எங்களுக்கு செலவழித்தார்கள். அங்கேயும் எனக்கு மூன்றுவருடங்களுக்கு மேல் தேவைப்பட்டது.

எல்லாமே உடனடியாக கிடைக்கவேண்டும் என்று தானே மக்கள் விரும்புகிறார்கள். சில லட்சம் காசைத்தாருங்கள் நாங்கள் பட்டங்களையும் சான்றிதழ்களையும் தருகிறோம் என்றால் மக்கள் அவர்கள் பின் தான் செல்ல விரும்புவார்கள்.

இப்படி போலியாக சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதால் என்ன பலன் என்று எங்களுக்கு தெரியவில்லை. காரணம் அதனை வைத்துக்கொண்டு அவர்கள் எதுவுமே செய்யபோவதில்லை. சரியான இடங்களில் அந்த சான்றிதழ்கள் சென்றால் அங்கே அவர்கள் நிச்சயமாக நிராகரிக்கப்படுவார்கள். பேருக்காகவும் புகழுக்காகவும் சிலர் இப்படிச் செய்கின்றனர். இவற்றை வைத்து பிறரை ஏமாற்றப் போகிறார்கள்.ஏமாற்றுதல் என்பது ஒரு குற்றமாகும். எனவே இப்படி ஏமாற்றாதீர்கள். இப்படி ஏமாற்றினால் உண்மையாக படித்து வருபவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இதனை தவிர்த்துக் கொள்வதோடு சரியானவர்களிடம் ஆலோசனை கேட்டு சரியான பல்கலைக்கழகத்தினை தெரிவு செய்யுங்கள். சிலர் தம்மை அறியாமலே இப்படியானவர்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள். யாரும் எம்மிடம் வந்து ஆலோசனை கேட்பதில்லை. எந்தெந்த பல்கலைக்கழகங்கள் அங்கீகரிக்கப்பட்டவை என்று எங்களுக்கு தெரியும். நீங்கள் PhD செய்யப் போகின்றீர்கள் என்றால் என்னிடம் கேளுங்கள் எங்கெங்கு எல்லாம் செய்ய முடியும் என்பதை நான் சொல்கிறேன். குறுகியகாலத்தில் கிடைக்கின்றது என்று காசைக் கொடுத்து இப்படி வியாபாரம் செய்பவர்களிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள். கல்வி என்பது ஒரு வியாபாரப் பொருள் இல்லை.’
இப்படியாக பலரும் பல கருத்துக்களை முன்வைத்திருந்தார்கள். மேலும்

இப்படியான போலி கலாநிதிகளை இனங்காணுவது கடினமான ஒரு விடயம் அல்ல. உண்மையிலேயே படித்து கலாநிதி பட்டம் பெற்றவர்களுக்கு ஒரு முதிர்ச்சி நிலை இருக்கும் ஆகவே அவர்கள் எப்போதும் தாம் ஒரு கலாநிதி என்பதைக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் போலியானவர்கள் எப்போதும் தாம் ஒரு கலாநிதி என்பதைக் கூறிக்கொண்டு தான் இருப்பார்கள். இப்படி நாடளாவிய ரீதியிலும் பலர் இருக்கின்றார்கள். இப்படி போலியாக தம் பெயர்முன் கலாநிதி எனும் பட்டத்தைப் பாவிப்பதென்பது ஒரு உளவியல் சார்ந்த மனநோய் என்கின்றனர் வைத்திய நிபுணர்கள்.

இப்படியானவர்களால் நிச்சயமாக இனங்காணப்பட வேண்டும். இப்படிப் பட்டம் பெற்று சமூகத்தை ஏமாற்றியவர்கள் கூனிக்குறுக வேண்டும். இந்தப் பயத்திலேயே இது பற்றி எவரும் சிந்திக்கமாட்டார்கள். அதே நேரத்தில் இந்த வியாபாரமும் தடுக்கப்படும் என்பதே புத்திஜீவிகளின் கருத்தாக இருக்கிறது.

தகுதியற்றவர்கள் பதவிகளுக்கு வருவதால் சமூகம் மோசமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு உட்படுகிறது. எனவே இதனை தவிர்க்க வேண்டியது மிகக் கட்டாயமான ஒன்றாகும். நாம் கல்விக்கு செலவிடும் ஒரு ரூபாய் பணம் என்றாலும் அது சரியான முதலீடாக அமைய வேண்டுமே தவிர முட்டாள்தனங்களை வளர்த்துவிட வழங்கும் ஊதியம் ஆகிவிடக்கூடாது எனவே நீங்கள் செலவிடும் முன்னே சுயபரிசீலணை செய்து சரியான பல்கலைக்கழகங்களை தெரிந்தெடுத்து நீங்களும் முட்டாளாகுவதை தவிர்த்து சமூகத்தையும் போலியானாவர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள்.
27 செப் 2020
#தமிழ்த்தந்திPost a Comment

Protected by WP Anti Spam