சைபர் க்ரைம் ஒரு அலர்ட் ரிப்போர்ட்…!! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 39 Second

கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமன்றி இன்டர்நெட் பயன்படுத்தும் தனி நபர்களையும் சைபர் க்ரைம் குற்றவாளிகள் குறி வைக்கிறார்கள். இன்டர்நெட்டில் ஒருவர் தனது இமெயிலுக்கு சென்று அன்று வந்துள்ள கடிதங்களை பார்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். திடீரென திரையில் வேறு ஒரு மெயில் விரிவடையும். அல்லது பிடிஎப் (PDF) செய்யப்பட்ட ஒரு ஆவணம் தெரியும். அப்படியும் இல்லை என்றால் வேர்டு (Word) ஆவணம் ஒன்று உங்களை பார்த்து கண் சிமிட்டும். அதிலுள்ள தகவல்கள் நூறு சதவீதம் நம்பகமானவை எனும் உறுதியை அவருக்கு உண்டாக்கும். உதாரணமாக மெட்ராஸ் பட்டு எனும் ஷாப்பிங் மால் தற்போது 80% அதிரடி ஆஃபர் அறிவித்து இருப்பதாக அந்த போலி இமெயில் கடிதத்தில் விளம்பரம் செய்யப்பட்டு இருக்கும். மெட்ராஸ் சில்க் நிறுவனத்தின் ஒரிஜினல் விளம்பரம் போலவே இருக்கும் அந்த விளம்பரம் போலியானது எனும் சந்தேகம் உங்களுக்கு ஏற்பட வாய்ப்பே இல்லை. எனவே, உண்மை என்று நம்பி அந்த மெயிலுக்குள் நீங்கள் நுழைவீர்கள்.

உங்களது வங்கிக் கணக்கை மொட்டை அடிக்காமல் உங்களால் அந்த மெயில் பக்கத்தில் இருந்து மீளவே முடியாது. இப்படித்தான் அப்பாவிகள் பலரும் மால்வேர் குற்றவாளிகளின் மாய கூண்டில் வசமாக சிக்குகிறார்கள். இவ்வகை திருட்டுக்கு மால்ஸ்பேம் (Malspam) அல்லது மால்வர்டைசிங் (Malvertising) என இணைய உலகம் பெயரிட்டு உள்ளது. ஒரு கால் சென்டர் அல்லது பி.பி.ஓ அல்லது ஐ.டி நிறுவனத்தின் அடிவேரை ஆட்டுவிக்கும் ராட்சச கொள்ளைகளிலும் ரேன்சம்வேர் கிரிமினல்கள் அசுரர்களாக உள்ளனர். நாட்டில் மட்டும் லட்சக்கணக்கான ஐடி ஊழியர்களை பணிக்கு அமர்த்தி சம்பளமாக பல ஆயிரம் கோடிகள் வழங்கி வருகிறது ஐ.டி நிறுவனம் என்பது உலகில் அனைவரும் அறிந்தது. குறைந்தபட்ச சம்பளமே 40,000 ரூபாய். ஆறு மாதம் இங்கு பணி புரிந்தால் அடுத்து அமெரிக்காவுக்கு பிளைட் பிடிக்க வேண்டியது தான் என அங்கு பணியில் இருப்பவர்கள் அனைவருக்கும் கிடைக்கும் அற்புத வாய்ப்பு.

பிரபல ஐ.டி நிறுவனங்கள் அனைத்தும் வல்லரசு அல்லது வளர்ச்சி அடைந்த நாடுகளின் மின்சார துறை, பொதுப்பணி துறை, தொழிலாளர் நலத்துறை, காப்பீட்டு துறை அல்லது மிகப்பெரிய வங்கிகளின் பல்லாயிரக்கணக்கான கிளைகளை தனது ஊழியர்களை கொண்டு நிர்வகித்து வரும் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள். அதில் ஒரு நிறுவனத்தின் அனைத்து கம்ப்யூட்டர்களையும் முடக்கினால், அதலபாதாள சரிவுக்கு செல்லும், அதிலிருந்து மீளுவது மிகவும் கடினம். எனவே, மால்வேர் கில்லாடிகள் தங்களது கம்ப்யூட்டர்களை முடக்காத வகையில் அதிபுத்திசாலி ஊழியர்கள், வல்லுநர்களை கைவசம் வைத்துள்ளனர். அந்த நிறுவனத்தையும் சமீபத்தில் கதறவிட்டு கரன்சிகளை அள்ளியது நிஜம். இவர்கள் மேஸ் ரேன்சம்வேர் (Maze Ransomware) என அடையாளம் இடப்படுகின்றனர். இப்படி ரேன்சம்வேர் குற்ற சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 500க்கும் அதிக மால்வேர்களில் ஒரு சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.

* கிரிப்ட் மால்வேர் (Crypt malware): ஹார்ட் டிஸ்க்கில் உள்ள அனைத்து ஃபோல்டர்கள், அதனுள் இருக்கும் ஃபைல்களை முடக்கும்.

* லாக்கர்ஸ் (Lockers): கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்டத்தை செயலிழக்கச் செய்யும். (வின்டோஸ் அல்லது ஆப்பிள் மென்பொருள் முடக்கப்
படும்.) மூளை வேலை செய்யலைன்னா என்னவாகும்? புரியுதில்லையா…

* ஸ்கேர்வேர் (Scareware): ஒயின் ஷாப்புக்குள் ஒளிந்து கொண்டு, அதன் உரிமையாளரை ராத்திரி முழுவதும் போனில் தொடர்பு கொண்டு, ‘‘எப்போ கடைய திறப்பீங்க?’’ என்று வடிவேலு அட்டகாசம் செய்வாரே அது போலத்தான், நாங்க உள்ள ஒளிஞ்சிருக்கோம். வெளியேறனும்னா சொளையா இம்புட்டு காசு கொடு என மிரட்டல் விடுக்கும்.

* ஸ்கிரீன் லாக்கர்ஸ் (Screen Lockers): திடீரென கம்ப்யூட்டர் செயலிழக்கும். மறுபடி ஆன் செய்தால், திரையில் எப்.பி.ஐ (அமெரிக்க புலனாய்வு அமைப்பு) எச்சரிக்கை என மிளிரும். சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால், கம்ப்யூட்டர் முடக்கப்பட்டு உள்ளது, பணம் செலுத்தினால் மட்டுமே பிரச்னை தீரும் எனும் மிரட்டலும் பதிவாகி இருக்கும்.

* ராஸ் (Raas) : கம்ப்யூட்டருக்குள் புகுந்து அதிலுள்ள எல்லா தரவுகளையும் கமுக்கமாக தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும். பணம் அளித்த தகவல் உறுதியான பிறகே, அனைத்து தரவுகளையும் விடுவிக்கும்.

* மொபைல் ரேன்சம்வேர் (Mobile Ransomware): செல்போன் ஸ்கிரீனை முடக்கி, பயனாளரை அச்சுறுத்தி பணம் பிடுங்கும் பயங்கரவாதி. மால்வேர் மண்டோதரர்களால் இவ்வளவு பிக்கல், பிடுங்கல் இருக்கிறது என்றால், தீர்வே இல்லையா என்று தானே நினைக்கத் தோன்றும். இப்படி நினைக்கும் உங்களுக்கு ஆணித்தரமாக ஒரு தகவல் கூறுகிறேன். பண மிரட்டலுக்கு பயப்படாதீங்க. ஒத்தை பைசா கொடுக்காதீங்க. ஒரு முறை கொடுத்தா, நூறு முறை கொடுக்க வேண்டியிருக்கும். மாற்று வழி என்ன? அப்படீங்கறவங்களுக்கு, சிம்பிள். திறமையான சாஃப்ட்வேர் ஆளை புடிங்க. மால்வேர் த்ரெட் வந்திருக்கு. டேட்டா கிடைக்க மாட்டேங்குது. எப்படியாவது ரெக்கவர் பண்ணுங்கன்னு சொல்லுங்க. அவங்க பாத்து சரி பண்ணுவாங்க. இதற்கு முன் ஒரு முக்கியமான விஷயம். அன்னன்னைக்கி டேட்டாக்கள் அனைத்தையும் தவறாம எக்ஸ்ட்ரா ஒரு காப்பி எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க்ல பேக்கப் எடுத்து வச்சுடுங்க. இது தான் சரியான தீர்வு.

நேத்து வரைக்கும் உங்க பேக்கப் ரெடியா இருக்குன்னா, இன்னிக்கி காலையில அட்டாக் நடந்து கம்ப்யூட்டர் முடங்கினா, குழப்பமே இல்லாம, கம்ப்யூட்டர்ல இருக்கற எல்லாத்தையும் அழிச்சிட்டு, ஆபரேட்டிங் சிஸ்டம் முதற்கொண்டு புதுசா இன்ஸ்டால் பண்ணுங்க. அழிக்கிறப்ப மால்வேர் கூடவே சேர்ந்து சாம்பலாயிடும். இன்ஸ்டால் பண்ணப்புறம் எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க்ல இருக்கற டேட்டாவ காப்பி பண்ணிக்குங்க. இதுதான் சுலபமான மெத்தட். அதே போல நிறுவனத்துல ஒரு கம்ப்யூட்டரை வைரஸ் அட்டாக் பண்ணி இருக்கிறது என்றால், அதனுடன் தொடர்புள்ள அனைத்து கம்ப்யூட்டர்களையும் நெட்வொர்க்கில் இருந்து டிஸ்கனெக்ட் செய்யுங்கள். இதுவும் ஒரு தற்காப்பு சமாச்சாரம் தான். எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜையும் கட் பண்ணிக்குங்க. எல்லாவற்றை காட்டிலும் ரொம்ப ரொம்ப முக்கியமான குறிப்பு, பணம் செலவாகிறதே என பார்க்காமல் ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேர் உங்க கம்ப்யூட்டர்லயோ அல்லது நெட்வொர்க்லயோ இன்ஸ்டால் பண்ணிட்டீங்கன்னா, மால்வேர் மக்களுடன் மல்லுகட்டி போராடி பெரும் பணம் இழக்க வேண்டியதில்லை என்பது தான்.

ஆன்ட்டி வைரஸ் சாஃப்ட்வேர் செலவு அதிகம் தான். என்ன பண்ணி தொலைக் கிறது. அந்த செலவு கூட பண்ணலைன்னா, முதலுக்கே மோசமாயிடும்ல. ரேன்சம்வேர் என்பது அதிதீவிர மோசமான வியாபாரமாக இப்போது பெருகி இருப்பது கணினி உலகை கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஒரு ஆண்டில் ஒரு மில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் சுமார் 7.5 கோடி) பணம் மால்வேர் மாபியாக்கள் வசூலித்து உள்ளனர். இவர்களால் கம்ப்யூட்டர் உலகில் ஏற்பட்ட இழப்பு 88 கோடி ரூபாய். கடந்த 2019ம் ஆண்டில் ஒவ்வொரு 14 நொடிக்கும் ஒரு கம்ப்யூட்டர் அட்டாக் என மால்வேர் கபளீகரம் தொடர்ந்த நிலை இப்போது 11 நொடியாக மெலும் குறைந்து வருவது கணினி நுகர்வோரிடையே கலக்கம் ஏற்படுத்தி உள்ளது. டேட்டாக்களை இழந்தால், ஈடுகட்ட முடியாது எனும் கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிப்படை அச்சமே, மால்வேர் மாபியாக்களுக்கு தெம்பும், உற்சாகமும் ஏற்படுத்துவதாக உள்ளது என்பதே இதற்கு முக்கிய காரணமாகும். இதில் நிதி, காப்பீடு, வங்கி, கல்வி, ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் என பல தரப்புகளும் பலிகடா ஆகியுள்ளன.

இதில் உச்சகட்ட கொடுமை என்ன என்றால், ஆன்ட்டி வைரசா வெச்சுருக்கீங்க, இப்போ பாருங்க உங்க கம்ப்யூட்டருக்கு தீபாவளி.. என அதையும் தகர்க்கக் கூடிய மால்வேர் மாடர்னிஸ்ட்கள் உருவாகி, ஆட்டி படைக்கப் பிறந்தவர்கள் நாங்கள், எங்களுக்கு அடங்கிச் செல்ல வேண்டியது உங்கள் கடமை என கொக்கரிப்பது, வயிற்றெரிச்சல் கிளப்பி உள்ளது. மால்வேர் தவிர்ப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊழியர்கள் நிறுவனத்திற்கு சம்பந்தமே இல்லாத எந்த ஒரு மென்பொருள் அல்லது அப்ளிகேஷன் போன்றவைகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், ஊழியர்கள் தங்களது சொந்த நடவடிக்கைகளுக்கு அலுவலக கம்ப்யூட்டரை பயன்படுத்த வேண்டாம் என நிறுவனங்கள் எவ்வளவோ எடுத்துக் கூறினாலும், செயலளவில் அதனை கண்காணிக்க முடியாமல் திண்டாடுகின்றன. இதுவும் மால்வேர் அட்டாக்கிற்கு தவிர்க்க முடியாத காரணமாக அமைந்துள்ளது. போகும் போக்கை பார்த்தால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பலனற்று, அதனுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என கூறப்படுவது போல, மால்வேர் மங்குனிகளுடன் ஒத்துப்போகும் அபாயத்தை தவிர வேறு வழியே இல்லையா என கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள் கையை பிசைகின்றனர் என்பதும் இன்றைய நிலவரமாக உள்ளது.

உங்களது வியாபாரத்தையும், லாபத்தையும் தக்க வைத்துக் கொள்ள, தனித்திருக்காமல் சைபர் செக்யூரிட்டி தொழில்நுட்பத்துடன் இணைந்திருங்கள் எனும் அறிவுரைகளும் கம்ப்யூட்டர் உலகினர் மத்தியில் இப்போது பரவலாகி உள்ளது. மால்வேர் அட்டாக்கில் சிக்கி பணம் இழந்த நிறுவனங்கள் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தாலும், கம்ப்யூட்டர், சாஃப்ட்வேர், ஹார்ட்வேர், தகவல் தொழில்நுட்பங்கள் சர்வதேச சந்தையில் ஐக்கியம் ஆகியிருப்பதால், சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க முடியாத சிக்கல் க்ரைம் பிராஞ்ச்சில் நிலவுகிறது. அப்படியே, ஒருவேளை தோண்டித்துருவி நுங்கெடுத்து வெளிநாட்டில் உள்ள மால்வேர் குற்றவாளியை நமது சைபர் க்ரைம் போலீஸ் கண்டறிந்தாலும், அங்குள்ள சட்ட திட்டங்கள் இங்குள்ள போலீசுக்கு சாதகமாக இல்லை என்பதே யதார்த்த நிலைமை. எனவே, பெரும்பாலான மால்வேர் குற்றங்களில் குற்றவாளிகள் சிக்குவதில்லை… இதுவே அவர்களுக்கு கொண்டாட்டமாகவும் மாறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸில் பிரச்சினையா ? (அவ்வப்போது கிளாமர்)
Next post பெண்களை லாக் செய்யும் லாக்டவுன்!! (மகளிர் பக்கம்)