By 5 April 2021 0 Comments

மேஜிக் செய்யும் ‘மிராக்கில்’! (மகளிர் பக்கம்)

எதை சாப்பிட்டா பித்தம் தெளியும் என்ற கதையாகிவிட்டது, நம்முடைய வாழ்க்கை முறை. இந்த ஆண்டு கொரோனா என்ற தொற்று உலகத்தையே ஒரு புரட்டு புரட்டி போட்டு வருகிறது. உடலில் எதிர்ப்பு சக்தி குறையும் போது, கொரோனா மட்டும் இல்லை எந்தவித வைரஸ் மற்றும் பாக்டீரியாவின் தாக்கமும் ஏற்படும் என்பது பொதுப்படையான விஷயம். ஆனால் இது ஒரு படி மேலே சென்று உயிர் பாதிப்பினையும் ஏற்படுத்துகிறது. நாம் அன்றாடம் சாப்பிடும் சாத்துக்குடி, எலுமிச்சை மற்றும் இதர உணவுகளில் உள்ள விட்டமின் சி எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் திறன் உள்ளது.

ஆனால் எத்தனை பேர் அதை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். குறிப்பாக குழந்தைகள். மருந்தாக கொடுக்காமல், அவர்கள் விரும்பும் பானமாக கொடுத்தால், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ‘‘அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் ‘மிராக்கில்’. இது உண்மையிலேயே கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு நல்ல பலனை ஏற்படுத்தியுள்ளது’’ என்கிறார் வெல்நெஸ் கிளினிக்கை நிர்வகித்து வரும் டாக்டர் மாணிக்கம் மஹாலிங்கம்.

எம்.எஸ்.சி ஸ்டாடிஸ்டிக்ஸ், எம்.பி.ஏ பட்டம் பெற்றவர். படிப்பை முடித்த கையோடு, குடும்ப தொழிலை கவனித்து வந்துள்ளார். ‘‘எனக்கு சின்ன வயசில் இருந்தே ஆரோக்கியம் மேல் ஆர்வம் அதிகம். அதனாலேயே நான் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு உணவிலும் உள்ள பலன்கள் என்ன என்று தெரிந்து கொள்வேன். என்ன உணவு எந்த நோய்க்கு மருந்து என்று பல புத்தகங்கள் படித்து ெதரிந்து கொண்டேன். அந்த சமயத்தில் என்னுடைய உறவினர் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் நான்காவது நிலை என்பதால், டாக்டரும் காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டனர். அவரும் சில காலம் தான் உயிருடன் இருந்தார். அந்த சம்பவம் என்னை பெரிய அளவில் பாதித்தது. அதன் பிறகு புற்றுநோய் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஆரம்பித்தேன். 2002 முதல் 18 வருஷம் இதற்கான தீவிர ஆய்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

என்னுடைய தீவிர ஆய்வின் படி புற்றுநோயினை குணமாக்க முடியும் என்றும் கண்டறிந்தேன். இது மெட்டபாலிக் (metabolic) சம்மந்தமான நோய். நம்ம உடலில் மெட்டபாலிசம் பிரச்னையாக இருந்தால் அது புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. நம் உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் மைட்டோகாண்டிரியா என்பது இருக்கும். இது அணுக்களுக்கு ரசாயன சக்தியினை அளிக்கும். அதன் மூலம் நாம் சாப்பிடும் உணவு எலக்ட்ரான்சாக (electrons) மாறும். இவை நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்க உதவும். உடல் உறுப்புகள் திடமாக இருக்கும் போது, அதன் செயல்திறன் குறித்த செய்திகள் மூளைக்கு மின்சார செய்தியாக அனுப்பப்படும். இதனை மைட்டோகாண்டிரியா தான் உற்பத்தி செய்கிறது. நம்முடைய நுரையீரலில் உள்ள ஒரு அணுவில் 8000த்துக்கும் மேற்பட்ட மைட்டோகாண்டிரியா உள்ளது.

இது நல்ல முறையில் செயல்பட்டு வந்தாலே, நம்முடைய உடலில் எந்த பிரச்னையும் ஏற்படாது. அதனால் நாம் அதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம்’’ என்றவர் அது குறித்தும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ‘‘நம் உடலுக்கு எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம். நம்முடைய உடலில் எல்லா விதமான செல்களும் உள்ளது. அதாவது வைரஸ், பாக்டீரியா… ஏன் புற்றுநோய் செல்கள் கூட உள்ளது. உடலில் ஏற்படும் சின்ன தடுமாற்றம் இந்த செல்களை டிரிகரை செய்யும். விளைவு புற்றுநோய் முதல் பல தொற்று பாதிப்பு. அதற்கு நம் உடலில் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம். உடலில் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் எல்லா உறுப்புகளும் தன் வேலையை கச்சிதமா செய்து வரும். எதிர்ப்பு சக்திக்கு விட்டமின் சி மிகவும் அவசியம் என்பதை தெரிந்து கொண்டேன்.

விட்டமின் சி கொய்யா, ஸ்ட்ராபெரி, சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்ச், பப்பாளி, தக்காளி, கிவி, குடை மிளகாய், புரோகோலி போன்ற உணவுகளில் கிடைக்கிறது. இதை எல்லாம் நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அப்படியே சேர்த்துக் கொண்டாலும், அந்த உணவால் நம் உடலுக்கு தேவையான விட்டமின் சி கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அதுவும் தற்போது உள்ள ெதாற்று காலத்தில் எல்லாருக்கும் விட்டமின் சி சக்தி அதிகம் இன்ஸ்டென்டாக தேவைப்படுகிறது. பொதுவாக சாதாரண ஜுரம், சளி இருந்தால் விட்டமின் சி மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைப்பது வழக்கம். மாத்திரை வடிவில் நாம் உட் கொள்ளும் போது, 20% சத்துக்கள் தான் உடலில் சேர்கிறது. இதனை அதிக அளவு சாப்பிட்டாலும் வயிறு பிரச்னை ஏற்படும். இன்ஜெக்‌ஷன் போடுவதாலும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் இதனை வாய்வழியாக எடுத்துக் கொண்டால் 90% உடலில் சேர்வதாக தெரிந்து கொண்டேன்.

அதன்படி எல்லாரும் அருந்தக்கூடிய பானமாக கொடுக்க முடிவு செய்தோம். 2010ல் இதற்கான ஆய்வுகளில் ஈடுபட ஆரம்பிச்சோம். அந்த ஆய்வில் 2018ல் அதற்கான ஒரு வடிவம் கிடைக்க பெற்று, ‘மிராக்கில்’ உருவானது.’ இது மாம்பழம் ஃபிளேவர் கொண்ட ஒரு டெட்ராபேக் பானம் தான். இதனை FSSAI (Food Safety and Standards Authority of India) அங்கீகரித்துள்ளது. ஐந்து வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். மாத்திரையாக சாப்பிட மறுக்கும் குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள்’’ என்றவர் தன்னுடைய வெல்நெஸ் கிளினிக்கின் செயல்பாடு பற்றி விவரித்தார். ‘‘வெல்நெஸ் கிளினிக் என்றதும் இது மருத்துவ கிளினிக் என்று எண்ண வேண்டாம். ஒருவரின் ஆரோக்கியம் நலன் காக்கும் கிளினிக். இங்கு மருந்து மாத்திரைகள் எல்லாம் கொடுப்பதில்லை.

மூட்டு வலி, சரும பிரச்னை மற்றும் ஆட்டோ இம்யூன் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கிறோம். ஒவ்வொரு பிரச்னைக்கும் தனிப்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். அவரவர் பிரச்னைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கிறோம். சிலருக்கு பிசியோதெரபி தரவேண்டி இருக்கும். சிலருக்கு சருமம் சார்ந்த பிரச்னைக்கு அதற்கான நிபுணர்கள் கொண்டு சிகிச்சை அளிக்கிறோம். மேலும் உடலில் எதிர்ப்பு சக்தி கூட்ட விரும்புபவர்களுக்கு எங்களின் விட்டமின் சி நிறைந்த மிராக்கில் பானம் அளிக்கிறோம். அதே போல் ஆரம்ப கட்டத்தில் புற்றுநோய் தாக்கம் இருந்தால், அவர்களுக்கு இம்யூனிட்டியை அதிகரிக்கிறோம். இதனால் அவர்கள் புற்றுநோய் பிரச்னையில் இருந்து தீர்வு காண முடிகிறது. புற்றுநோய் பொறுத்தவரை நாங்க அவர்களின் எதிர்ப்பு சக்தியினை மட்டுமே அதிகரிக்கிறோம். இது ஒரு சப்ளிமென்டாகத்தான் அவர்களின் உடலில் செயல்படும்.

மற்றபடி அவர்கள் அதற்கான சிகிச்சையினை மருத்துவரின் ஆலோசனை படி பெற வேண்டும். தற்போது கோவிட்டிற்காக வேலைப் பார்த்து வருகிறோம். கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு எங்களின் மிராக்கில் பெரிய அளவில் மேஜிக் செய்துள்ளது. அது அவர்களின் உடலில் 50% விட்டமின் சி சேர்வதால், அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. இதனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் சீக்கிரம் குணமடைந்து வருகிறார்கள். தற்போது இந்த பானம் கோவை மற்றும் சென்னையில் விற்பனையில் உள்ளது. கூடிய விரைவில் மற்ற மாநிலங்களுக்கும் இதனை விநியோகிக்கும் எண்ணம் உள்ளது. மேலும் சுகர் ப்ரீ பானமாகவும் அறிமுகம் செய்ய இருக்கிறோம்’’ என்றார் டாக்டர் மாணிக்கம் மஹாலிங்கம்.Post a Comment

Protected by WP Anti Spam