ஆசைமுகம் மறக்கலையே… என்ன செய்ய? (மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 34 Second

கல்லூரியில் படிப்பு வருகிறதோ இல்லையோ…. காதல் வரும் என்பார்கள். எனக்கும் வந்தது. அவர் கல்லூரியில் எனக்கு சீனியர். ஒரே ஊர். ஒரே பேருந்தில் கல்லூரிக்கு செல்லும் போது அறிமுகம். அதுவே காதலாக மாறியது. ஒரு நாள், ‘ஒரு நல்ல வேலைக்கு போனதும் உன்னை பெண் பார்க்க வரட்டுமா’ என்று தன் காதலை வெளிப்படுத்தினார். அந்த கேள்விக்காகத்தான் நானும் காத்திருந்தேன். கண்ணியமாக அவர் கேட்டதால், அவரின் காதலை நான் ஏற்றுக் கொண்டேன். அதன் பிறகு பேருந்து எங்கள் காதல் வாகனமாக மாறியது. ஒரு நாள் பார்க்காவிட்டாலும் எதையோ இழந்தது போல் இருக்கும்..

சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் சங்கடமான நாட்கள். ஒருகட்டத்தில் அதையும் தாள முடியாமல் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் கோவில், சினிமா போவேன். அவரும் வருவார். பார்த்துக் கொள்வோம். பேசிக் கொள்ள மாட்டோம். படிப்பு முடித்த 6 மாதத்தில் அவருக்கு வெளியூரில் வேலை கிடைத்தது. எப்போதாவது தோழிகளின் செல்போனில் பேச வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் அப்பா ரொம்ப கண்டிப்பு. ‘செல்போன் பொம்பள புள்ளைங்கள கெடுத்துடும்’ என்பது அப்பாவின் உறுதியான நம்பிக்கை. அவர் ஊருக்கு வரும் போதுதான் சந்திப்போம்.

அப்போது எங்களின் திருமண வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் பேசுவோம். அவரோடுதான் வாழ்க்கை என்று நம்பிக் கொண்டிருந்தேன். கல்லூரி முடித்த 2வது ஆண்டில் எனக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்தனர். தகவல் அறிந்து, பெண் கேட்டு வந்தார். அப்பா அவரிடம் கேட்ட முதல் கேள்வி, ‘நீங்க என்ன சாதி’ என்பது தான். அவர் பதில் சொன்னதும் அப்பா கோபமாகி விட்டார். அதன் பிறகு நடந்ததை சொல்ல கூச்சமாக இருக்கிறது. அந்தரங்கத்தை கூட நாசுக்காக எழுதிவிடலாம். ஆனால் அந்த அசிங்கத்தை சொல்வது நரகலை மிதித்த அருவெறுப்பு இன்றும்…

அப்பா உறுதியாக இருந்தார். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ‘நீ வீட்டை விட்டு ஓடினால் உன் தங்கையை யார் கட்டுவார்கள். அதனால் நாங்கள் எல்லோரும் விஷம் குடித்து இறந்து விடுவோம்’ என்று அப்பா, அண்ணன்கள் மிரட்டினர். எனக்காகதான் அவர் வேலைக்குப் போனார். அவர் வீட்டில் அவரை மேல் படிப்பு படிக்க சொல்லியிருந்தனர். அதை அவர் மறுத்ததால் அவர் வீட்டில் பிரச்னை. எங்கள் விஷயம் அவர்கள் வீட்டுக்கும் தெரியும். ஆரம்பத்தில் ‘நல்ல நிலைமைக்கு வா… அதன் பிறகு கல்யாணத்தை பற்றி பேசலாம்’ என்று சொன்னார்கள்.

பிரச்னையான பிறகு ‘பெண் வீட்டில் சம்மதம் வாங்கிட்டு வா’ என்று அவர்கள் வீட்டில் சொல்லிவிட்டனர். என்னால் வீட்டுக்கு எதிராக எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவித்தேன். ‘கொஞ்சம் காத்திரு’க்கச் சொல்லி தகவல் அனுப்பினேன். அவரும் ஊருக்கு சென்று விட்டார். சில நாட்களாக எங்கள் வீட்டில் எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். எனக்கு எதுவும் புரியவில்லை. ஒருநாள் திடீரென 2 நாட்களில் கல்யாணம் என்றார்கள். ‘ஆம்’ எனக்கு தெரியாமலேயே எல்லா வேலைகளையும் செய்திருந்தார்கள். மாப்பிள்ளை உறவுக்காரர்.

அவர் வெளியூரில் இருப்பதால், விடுமுறை எடுப்பது சிரமம், திருமணத்துக்கு முதல் நாள் நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்களாம். அதனால் எனக்கு தெரியாமலே எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்கள். கல்யாண பத்திரிகையை கூட நான் பார்க்கவில்லை. அப்பாவின் மண்டியில் இருந்தே விநியோகித்துவிட்டார்கள். அதுமட்டுமில்லை என் தோழிகள் யாரையும் வீட்டுக்கு பக்கமே சேர்க்கவில்லை என்ற விவரம் பின்னர் தான் எனக்கு தெரிந்தது. என்ன தெரிந்து என்ன? என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

குடும்ப கவுரவம் என்றெல்லாம் சொல்லி, அவர்கள் நினைத்தபடி இன்னொருவருக்கு கழுத்தை நீட்ட வைத்தனர். கல்யாணம் ஆன கையோடு கணவர் வேலை செய்யும் ஊருக்கு வந்து விட்டோம். அதன் பிறகு ஊருக்கு செல்வது குறைந்து விட்டது. அம்மா, அப்பா, அண்ணன்கள் அடிக்கடி ஊருக்கு வந்து அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். திருமணம் ஆன புதிதில் கணவர் மீது எனக்கு கொஞ்சம் கூட ஈடுபாடு இல்லை. என் காதலரின் நினைவுகள்தான் என்னை ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தன. அதனால் ஏற்பட்ட காய்ச்சல், உடல் பலவீனம் என்னை கணவரிடம் இருந்து தள்ளி வைக்க உதவியது.

ஆனால் அந்த நேரங்களில் என் கணவர் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார். சமையல் கூட செய்வார். மிகவும் நல்ல மனிதர் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொண்டேன். அது எல்லாம் எனக்கு தெரிந்தும் என் காதலர்தான் என்னை முழுமையாக ஆக்கிரமித்திருந்ததும் புரிந்தது. அப்பா, அம்மா மீது இருக்கும் கோபத்தில் கணவரை ஏன் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதற்கு ஓராண்டு ஆனது. அவரும் பொறுமையுடன் காத்திருந்தார். மெல்ல அவருக்கு மனைவியாக மாற ஆரம்பித்தேன். என் சோகங்களை மறைத்து அவருக்கு நல்ல மனைவியாக இருக்க முடிவு செய்தேன்.

தற்போது எங்களுக்கு திருமணம் நடந்து 10 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் இருக்கிறார்கள். எனது சொந்த ஊருக்கு விழா, விசேஷங்களுக்கு சென்று வருகிறோம். என் காதலர் என்ன ஆனார் என்ற விவரங்களை யாரும் இது வரை சொன்னதில்லை. நானும் யாரிடம் கேட்பது என்று தெரியாமல் தவித்த நாட்கள் உண்டு. ஆனால் அவரை நினைக்காத நாளில்லை. சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு போனாம். நாங்கள் வந்த ரயிலில் அவர்… என் முன்னாள்(?) காதலர் ஏறியதை பார்த்தேன். முன்பு இருந்த வேகமில்லை. தாடிக்குள் முகத்தை காணவில்லை. கண்ணாடி போட்டிருந்தார். அந்த சில நொடிகளில் அத்தனை கவனித்தேன்.

ஆனால் அவர் என்னை பார்க்கவில்லை. அப்போது என் கல்லூரி தோழியையும் அன்று பார்த்தேன். தோழிகள் என்று தெரிந்ததும் என் கணவர், ‘நீங்க பேசிட்டே வாங்க… நாங்க முன்னாடி நடக்கிறோம்’ என்று பிள்ளைகளுடன் நகர்ந்தார். கணவர் சென்றதும், வாயை திறந்த தோழி ‘என்னடி அவரை ஏமாத்திட்டே’ என்றுதான் முதலில் கேட்டாள். அவள் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. கருவிழியை மறைந்த கண்ணீரை பார்த்த அவள், ‘உன் நெலமை புரியுதுடி… ஆனால் அவர் பாவம்டி. உனக்கு கல்யாணமான விஷயம் கேட்டு நொடிஞ்சிட்டார். பைத்தியமாயிட்டாருனு சொன்னாங்க.

சென்னையில் தான் சிகிச்சை பார்த்தாங்க. அவர் சரியாக மூணு வருஷமாச்சு. அப்புறம் ஏதே எக்சாம் எழுதி கவர்மென்ட்ல வேல பாக்கிறாராம். வீட்டுல் கல்யாணம் செய்துக்க சொல்றாங்க, இவர் முடியாதுன்னு சொல்லிட்டாராம். ஃபிரண்ட்சுங்ககிட்டே கூட பேசறதில்லையாம். அவங்க அப்பா சொன்னதாலதான் வேலைக்கு போகிறாராம்’ என்று அவரை பற்றி முழு விவரத்தையும் கூறினாள். ஒரு நல்ல மனிதரின் வாழ்க்கையை வீணாக்கி விட்டோமோ என்று எண்ணம் என்னுள் ஓடிக் கொண்டே இருக்கிறது. அந்த சோகமான முகம் என்னை வதைத்துக் கொண்டே இருக்கிறது.

என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. சில நாட்களாக கணவரிடம், பிள்ளைகளிடம் எரிந்து விழுகிறேன். திட்டுகிறேன். அவர்கள் காரணம் புரியாமல் தவிக்கிறார்கள். நான் செய்த பாவத்துக்கு ஏற்கனவே ஒருவரை தண்டித்து விட்டேன். இப்போது எந்த பாவமும் அறியாத, நல்ல மனிதரான என் கணவரையும் கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். திடீர் திடீரென சோர்ந்து போய் உட்கார்ந்து விடுகிறேன். அவரிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். மன்னிப்பாரா தெரியவில்லை? என்னால் எல்லோரும் பாதிக்கப்படுகிறார்கள்.

நான் செய்த தவறு என்னை மட்டுமல்ல என் குடும்பத்தையும் பாதித்துக் கொண்டு இருக்கிறது. இரவில் தூக்கம் வரவில்லை. ஒவ்வொரு நாளும் தவித்துக் கொண்டு இருக்கிறேன். என்ன செய்வது நான் செய்த பாவத்துக்கு மன்னிப்பு கிடைக்குமா? என் முன்னாள் காதலரை மறந்து என் குடும்பத்துடன் இயல்பாக இருக்க முடியுமா? அதற்கு வழி இருக்கிறதா? என் காதலருக்கு நல்ல வாழ்க்கை அமையுமா? எதுவும் தெரியாமல் தவிக்கிறேன். என்ன செய்வது தோழி…எனக்கு வழிகாட்டுங்கள்!இப்படிக்கு,பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

உங்க நிலைமை புரியுது தோழி. நீங்க அந்த வயசுல பக்குவம் இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது சூழ்நிலை காரணமா சில முடிவுகள் எடுத்திருக்கலாம். அதைப் பற்றி பேசி இப்போது பயனில்லை. கடந்தகால நிகழ்வுகளை சரி செய்யும் வாய்ப்பு நமக்கு இல்லை. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று பார்க்கலாம். நீங்கள் பழையதை நினைத்து வருந்துவதால் உங்கள் முன்னாள் காதலர் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. நீங்கள் அவரைவிட்டு விலகியது துரதிர்ஷ்டவசமானது தான்.

ஆனால் உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது. நீங்களே சொன்னீர்கள், உங்கள் கணவர் அன்பானவர் என்றும், நன்றாக உங்களைப் பார்த்துக் கொள்கிறார் என்றும்…. பலருக்கு இப்படி நல்ல கணவர் கிடைப்பதில்லை. நீங்கள் 2 குழந்தைகளுக்கு தாய். பொறுப்பும் கடமையும் உள்ள குடும்பத்தலைவி. நீங்கள் முன்னாள் காதலரை எண்ணி வருந்த மட்டுமே முடியும். அவருக்கான வாழ்க்கையோ ஒரு தீர்வையோ தர இயலாது. அப்படியிருக்க கடந்த காலத்தை எண்ணி குழம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை. உங்களுக்கு குற்ற உணர்ச்சியும் தேவையே இல்லை.

உங்கள் தோழிகள், மற்றவர்கள் குற்றம்சாட்டுகின்றனர் என்றெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் உங்கள் காதலரைபிரிந்தபோது உங்களுக்கு முடிவெடுக்கும் திறன், சூழ்நிலையை கையாளும் விதம், பக்குவம் போதுமானவையாக இருந்திருக்காது. ஆனால் இப்போது சிந்திக்கும் திறன், பக்குவம், சூழ்நிலையை கையாளும் விதம், முடிவெடுத்தல் போன்றவற்றில் முதிர்ச்சி ஏற்பட்டு இருக்கும். நீங்களே சிந்தித்துப் பாருங்கள். காதலரை எண்ணி கவலைப்படுகிறீர்கள். அவர் ஒருவர்தான். இப்போது அவர் உங்களை சார்ந்து இல்லை. ஆனால் உங்கள் குடும்பத்தை எண்ணிப்பாருங்கள்.

உங்களை மட்டுமே நம்பி, உங்கள் கணவர், குழந்தைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஒருவரை காயப்படுத்தியதற்காக, உங்கள் கணவர், பிள்ளைகள் என அனைவரும் ஏன் துன்பம் அனுபவிக்க வேண்டும். காதலரை ஒரு நண்பராக எண்ணி அவரின் வாழ்க்கைக்காக அக்கறை படலாம். அதைத் தாண்டி யோசிக்க ஒன்றுமில்லை. கடந்த கால நினைவுகளில் மூழ்காமல், குற்ற உணர்ச்சிகளை தவிர்த்து, நிகழ்கால வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள். கொஞ்சம் ப்ராக்டிகலாக யோசியுங்கள். நீங்கள் உங்கள் காதலரை நினைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அவரை பிரிந்ததற்கு நீங்கள் காரணமில்லை.

உங்கள் குடும்பம், காதலுக்கு ஏற்படும் சமூக ரீதியான தடைகள், சடங்குகள் போன்றவைதான் இந்த பிரிவுக்கு காரணம். அதற்காக நீங்கள் வருத்தமும் பட்டீர்கள். ஒருவருட காலம் உங்கள் கணவரிடம் நெருக்கம் காட்டாமல் இருந்தீர்கள். அதன்பின்பு உங்கள் கணவரை நீங்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டீர்கள். மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாமல் உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள். இவை எல்லாம் ஒரே இரவில் சரியாகி விடாது. படிப்படியாக சிந்தித்து செயலாற்றினால் மாற்றம் வரும். நான் சொல்வதையும் மீறி உங்களுக்கு தாளமுடியாத குற்றவுணர்ச்சி, அளவுக்கு மீறிய தூக்கமின்மை, மன உளைச்சல் இருந்தால் நல்ல மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடேங்கப்பா..! விஜய் வந்த சைக்கிளின் விலை என்ன தெரியுமா ? (வீடியோ)
Next post உயிர்ப்புப் பெருவிழா அன்றும் இன்றும்!! (கட்டுரை)