3 ல் ஒரு பெண்ணுக்கு… !! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 22 Second

பேபி ஃபேக்டரி

எண்டோமெட்ரியாசிஸ்… இனப்பெருக்க வயதில் உள்ள பெண்களுக்கு ‘கிலி’யை ஏற்படுத்துகிற வார்த்தை! கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்துகிற இந்தப் பிரச்னை ஏன், எதனால், எப்படி வருகிறது என்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், எண்டோமெட்ரியாசிஸ் உள்ள பல பெண்களுக்கும் கர்ப்ப காலம் என்பது கனவுக்காலமாகவே போய்விடுவதுதான் சோகம்! உலகெங்கும் 8.9 கோடி இளம்பெண்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னையான எண்டோமெட்ரியாசிஸ் பற்றிய ஏ டூ இஸட் தகவல்களைப் பற்றிப் பேசுகிறார் மகப்பேறு மற்றும் கருத்தரிப்பு சிகிச்சை மருத்துவர் சாமுண்டி சங்கரி.

எண்டோமெட்ரியாசிஸ் ஓர் அறிமுகம்

எண்டோமெட்ரியாசிஸ் பிரச்னையை கருப்பை அகப்படலம் நோய் என அழகுத் தமிழில் அழைக்கிறார்கள். பெண்களின் கருத்தரிப்பு உறுப்புகளில் ஏற்படக்கூடிய ஒரு பிரச்னை இது. கருப்பையின் உட்சுவர்களில் பொதுவாகவும் சில பேருக்கு சினைப்பைகள், கருக்குழாய், குடல், மலக்குடல் பகுதிகள் மற்றும் சிறுநீர்ப்பையிலும் தோன்றக்கூடிய அதிகப்படியான தேவையற்ற திசுக்களின் வளர்ச்சியே இப்பிரச்னையாகும். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படக்கூடிய இப்பிரச்னையினால் மாதவிடாயின் போது இந்த அதிகப்படியான திசுக்களும் உதிரப்போக்குடன் சேர்ந்து வெளியாகும்.

சில நேரங்களில் இந்த திசுப்படலங்களில் ஏற்படும் ரத்தக்கசிவு கட்டியாகவும் மற்ற உறுப்புகளுடன் ஒட்டிக் கொள்ளக் கூடியதாகவும் ஆகி விடுகிறது. இதனால் மாதவிடாயின் போது அதிகப்படியான வலி ஏற்படுவதுடன், 25 முதல் 40 வயதில் உள்ள மூன்றில் ஒரு பங்கு பெண்கள் கருத்தரிக்க முடியாமைக்குக் காரணமாகவும் இருக்கிறது.

எப்படிக் கண்டறிவது?

எண்டோமெட்ரியாசிஸின் அறிகுறிகள் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கும் எனச் சொல்வதற்கில்லை.
சிலருக்கு அதிகப்படியான வலி இருக்கும். சிலருக்கு எந்த அறிகுறியுமே இல்லாமலும் இருக்கும். திருமணமான பெண்கள் பல வருடங்களாகியும் கருத்தரிக்காமல், அதற்கான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போதும், வேறு பிரச்னைகளுக்காக சிகிச்சை எடுக்கும் போதும் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு இப்பிரச்னை இருப்பது தெரிய வருகிறது. அகப்படலம் இருப்பதனால் பொதுவாக மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப் போக்கும் வலியும் இருக்கும். வலியைத் தவிர சில நேரங்களில் இத்திசுப்படலம், கருப்பை வாய், கருப்பையின் மேற்புறம் அல்லது பின்புறத்தில் இருக்குமானால் தாம்பத்திய உறவின் போது வலி இருக்கலாம்.

இதே படலம் சினைப்பையிலோ, கருக்குழாயிலோ இருந்தால் கருத்தரிக்க முடியாமை ஏற்படும். இதுவே குடல் பகுதியில் இருந்தால் சாப்பிட்டவுடன் வயிற்றுவலி, மலம் கழிக்கும்போது வலி மற்றும் குடல் அடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். சிறுநீர்ப்பையில் இருந்தால் சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படும். மேலும் இதனால் சினைப்பை நீர்க்கட்டியும் ஏற்படலாம். எண்டோமெட்ரியாசிஸ் பிரச்னை மிதமாகவோ, அதிகமாகவோ இருக்கும்போது இத்திசுக்களின் வடுவினால் சினைப்பை, கருமுட்டையை வெளியிடுவதில் தாமதமோ, அடைப்போ ஏற்படலாம். கருமுட்டை கருக்குழாயில் பயணிப்பதிலும் விந்தணு கருமுட்டையை அடைந்து கருத்தரிப்பதிலும் பிரச்னை ஏற்படலாம்.

யாருக்கு இப்பிரச்னை வரும்?

பூப்படைந்த பெண் முதல் மெனோபாஸ் வயதுப் பெண் வரை யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் இந்தப் பிரச்னை வரலாம். இது அதீத வலியையும், கருத்தரிக்க முடியாத கவலையையும் கொடுப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு வரவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவார்கள். கருத்தரிக்க முடியாத பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கும் மாதவிடாய் மற்றும் இடுப்பு வலி உள்ள பெண்களில் நான்கில் மூன்று பேருக்கும் எண்டோமெட்ரியாசிஸ் பிரச்னைதான் காரணமாக இருக்கிறது.

ஏன் ஏற்படுகிறது?

பரம்பரைத்தன்மை இந்தப் பிரச்னையில் முக்கிய பங்கு வகிக்கிறது. அம்மாவுக்கோ, உடன்பிறந்த சகோதரிகளுக்கோ இப்பிரச்னை இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு கருப்பை அகப்படலம் ஏற்படும் வாய்ப்பு 710 மடங்கு அதிகம். இரட்டைப் பிறவியாக உள்ள பெண்களுக்கும் ஒருவருக்கு இருந்தால் மற்றவருக்கும் வரும் வாய்ப்பு இருக்கிறது. குழந்தைப் பெற்றுக் கொள்வதில் தாமதம், அதிகமான உதிரப்போக்கு இருப்பது, 11 வயதிற்கு முன்பு பூப்பெய்வது, மாதந்தோறும் சீக்கிரமாக (27 நாட்களுக்கு குறைவான நாட்களில்) மாதவிடாய் வருவது, சிறு வயதிலேயே குழந்தைப் பெற்றுக் கொள்வது. உடல் எடை மிகக் குறைவாக இருப்பது. மதுப் பழக்கம் போன்றவையும் இப்பிரச்னைக்குக் காரணங்கள்.

என்னென்ன பரிசோதனைகள் அவசியம்?

பாதிக்கப்பட்டவர் கூறும் உடல் ரீதியான, மாதவிடாய் தொடர்பான அறிகுறிகள் மற்றும் தாம்பத்திய உறவில் வலி போன்றவை இப்பிரச்னையைக் கண்டறிய உதவும். நேரடி பரிசோதனையின் போது வயிற்றின் மிருதுத் தன்மை, சினைப்பை வீக்கம் போன்றவை மூலமும் இதை யூகிக்கலாம். ரத்தப் பரிசோதனை மூலம் இப்பிரச்னையைக் கண்டுபிடிக்க முடியாது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் சினைப்பை நீர்க்கட்டியை மட்டுமே கண்டு பிடிக்க முடியும். அது காஸ்ட்லியானது என்பதால் எல்லோருக்கும் ஏற்றதல்ல. இதைத் துல்லியமாக கண்டுபிடிக்க ஒரே வழி லேப்ரோஸ்கோப்பி சிகிச்சை மட்டுமே.

சிகிச்சை முறைகள் என்னென்ன?

ஹார்மோன் சிகிச்சை மற்றும் அறுவைசிகிச்சை மூலமாக இப்பிரச்னையைக் கட்டுப்படுத்தலாம். ஹார்மோன்கள், மாத்திரையாகயும், ஸ்பிரே மூலமாகவும் ஊசியாகவும் கொடுக்கப்படுகிறது. ஹார்மோன் சிகிச்சையை குழந்தை பெற்றுக் கொள்ளும் அவசியமில்லாதவர்களே எடுத்துக் கொள்ள முடியும். குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து விட்டால் ஹார்மோன் சிகிச்சையை நிறுத்திவிட வேண்டும்.

லேப்ராஸ்கோப்பி, லேப்ரோட்டமி, ஹிஸ்டரெக்டமி போன்ற அறுவை சிகிச்சைகள் இப்பிரச்னைக்குத் தீர்வாக இருக்கின்றன. லேப்ராஸ்கோப்பி மற்றும் லேப்ரோட்டமி கருப்பை அகப்படலத்துக்கான தேர்வாக இருந்தாலும் இது நிரந்தர குணமளிக்கக் கூடியது இல்லை மற்றும் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெண்களுக்கு தற்காலிகமாக அறிகுறிகள் இல்லாமல் செய்யக்கூடியவை.

ஹிஸ்டரெக்டமி மூலம் கருப்பை, சினைப்பை மற்றும் கருக்குழாயை நீக்குவதன் மூலமாக மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கொடுக்க முடியும். சினைப்பையை நீக்கவில்லை என்றால் இப்பிரச்னை மீண்டும் வரலாம் என்பதால், குழந்தை பெற்றுக் கொள்ளும் அவசியமில்லாத பெண்கள் இந்த அறுவை
சிகிச்சையை செய்து கொள்ளலாம்.

எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?

ஒரு பெண், எண்டோமெட்ரியாசிஸ் அறிகுறியை உணர்ந்தாலோ, முதுகுவலி இருந்தாலோ, தாய்க்கோ, சகோதரிக்கோ இப்பிரச்னை இருந்தாலோ, ஒரு வருடத்துக்கு மேல் கருத்தரிக்க முடியாமல் இருந்தாலோ தாமதிக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும். எண்டோமெட்ரியாசிஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு சினைப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 2 முதல் 3 மடங்கு அதிகம் என்கின்றன ஆராய்ச்சிகள். எனவே, இப்பிரச்னை உள்ள பெண்கள் மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனையை அலட்சியப்படுத்த வேண்டாம்.

இந்நோய்க்கு முக்கிய காரணம் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் என்பதால் இது மாதவிடாய் நிற்கும் வரை அடிக்கடி வந்து போகும். மாதவிடாய் நிற்பது இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாகவும் அமைகிறது. கர்ப்ப காலத்திலும் பாலூட்டும் காலத்திலும் மாதவிடாய் இல்லாமல் இருப்பதால் அந்த நேரத்தில் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கும்…’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தங்க நகரம் கண்டுபிடிப்பு!! (உலக செய்தி)
Next post இரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்!! (அவ்வப்போது கிளாமர்)