By 19 April 2021 0 Comments

நெகட்டிவ் அலையை உருவாக்க வேண்டாம்!! (மகளிர் பக்கம்)

அந்தக் கால திருமணங்களுக்கும் இந்தக் கால திருமணங்களுக்கும் நிறையவே வித்தியாசங்கள்… இந்தக் கால திருமணங்கள் இருவரும் சமம் என்பதை உணர்த்துகின்றன என்கிறோம். வீட்டு வேலைகளையும் பொருளாதார சுமைகளையும் இருவருமே சமமாகப் பிரித்துக் கொள்கிறார்கள்.

ஆனாலும், ஆண்களின் ஆண்டாண்டு கால மனோபாவம் இன்னும் முற்றிலும் மாறிவிடவில்லை என்பதே உண்மை. பெண்களின் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும் போதும், பெண்கள் பெரிய பதவிகளில் பொறுப்புகளை ஏற்கும் போதும், அதை இயல்பாக எடுத்துக் கொள்ள இன்னும் ஆண்கள் மத்தியில் பெரிய தயக்கம் இருக்கிறது. கடினமாக இருப்பதுதான் ஆண்மைக்கு அழகு என்று ஆண்களுக்கும், தன்னுடைய வேலைகள் கணவரால் அங்கீகரிக்கப்படுவதோ, பாராட்டப்படுவதோ இல்லை என்று பெண்களுக்கும் ஒரு கருத்து இருக்கிறது. அது இருவரது நெருக்கத்திலும் அதிருப்தியை அதிகரிக்கும்.

அந்தக் காலத்துத் திருமணங்களிலும் சரி இந்தக் காலத்துத் திருமணங்களிலும் சரி பிரச்னைகள் இருக்கவே செய்கின்றன. டிங்க்ஸ் (DINKS – Double Income No Kids) அண்ட் டின்ஸ் (Double Income No Sex)… இதுதான் இந்த நூற்றாண்டு திருமணங்களின் புதிய அணுகுமுறை. புதிய விதிகளையும் படைக்க முடியாமல் பழையதையும் உடைத்துக் கொண்டு இரண்டுங்கெட்டான் நிலையில் இந்தத் தலைமுறையினர் குழம்பித் தவிக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் ஆண்கள் வேலைக்குச் செல்வதும் பெண்கள் வீடு மற்றும் குழந்தை வளர்ப்பைப் பார்ப்பதும் வழக்கமாக இருந்தது. இப்போது பெண்கள் வேலைக்குப் போனாலும் ஆண்கள் தம் அப்பா காலம் மாதிரி தன் மனைவியானவள் வீடு, வேலை என இரட்டைச் சுமைகளையும் சுமக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். தப்பித் தவறி எந்தப் பெண்ணாவது சம உரிமை எனக் கேட்டுவிட்டால் அதை ஏதோ கெட்ட வார்த்தை மாதிரி பார்க்கிறார்கள்.

புதிய திருமணங்களில் பெண்கள் சம உரிமை கோருகிறார்கள். வீட்டு வேலைகளை கணவனும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். குடும்ப முடிவுகளில் தன் அபிப்ராயமும் கேட்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். அவருக்கு இணையா நானும் சம்பாதிக்கிறேன். பொருளாதார சுமையை சமமா பகிர்ந்துக்கிறேன். அப்படி இருக்கும் போது எனக்குத் தெரியாம தன் அப்பாவைக் கூட்டிட்டுப் போய் புதுசா மனை வாங்கியிருக்கார். இது என்ன அநியாயம்?’ எனக் கேட்டு என்னிடம் பஞ்சாயத்துக்கு வந்தார் ஒரு மனைவி. இப்படிப்பட்ட ஆண்கள் இன்றும் இருக்கிறார்கள். இது அந்த ஆணின் தவறு அல்ல.

இந்த நூற்றாண்டின் சாபம். பெரும்பாலான தம்பதியர் வேலை, அதை சார்ந்த வெற்றிகளில் பிசியாக இருக்கிறார்கள். வேலையையும் வீட்டையும் சமமாக கவனிக்க அவர்களால் முடிவதில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு போன்றவற்றை மூன்றாம் நபர்களிடம் ஒப்படைக்கிற கலாசாரம் பெருகிவிட்டது. நன்னிஸ் எனப்படுகிற அவர்கள் தினமும் காரில் வந்து இறங்குவார்கள். குறிப்பிட்ட சம்பளத்துக்கு குறிப்பிட்ட மணி நேரம் வரை குழந்தையைப் பார்த்துக் கொள்வார்கள். வீட்டை சுத்தப்படுத்த வேறு ஒருவர் காரில் வந்து இறங்குவார்.

நம்மூரிலும் இத்தகைய வசதிகள் வர ஆரம்பித்துவிட்டன என்றாலும் இந்த அணுகுமுறை பெண்களுக்கு ஒருவித குற்ற உணர்வைத் தருவதையும் பார்க்கிறோம். `எங்கம்மா என்னை வளர்த்த மாதிரி என்னால என் குழந்தையை சரியா வளர்க்க முடியலை’ என வருத்தப்படுகிறார்கள். அது கோபமாக மாறி, கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்ளவும் `நீ குழந்தையை சரியா வளர்க்கலை’ என பழி சொல்லி கடுமையாக சண்டை போடவும் காரணமாகிறது. அதன் தொடர்ச்சியாக ஏற்படுகிற வெறுப்பு, விரக்தி, ஏமாற்றம் என எல்லாம் சேர்ந்து அவர்களது உறவுக்குள் ஒருவித நெகட்டிவ் அலையை உருவாக்குகிறது.

தீபாவும் மதனும் காதலித்துத் திருமணம் செய்தவர்கள். சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி வேலை பார்க்கிறார்கள். இருவரின் முயற்சி மற்றும் உழைப்பால் அந்த நிறுவனம் பெரியதாக வளர்கிறது. குழந்தை பிறந்ததும், தீபா வேலையை விடுகிறாள். அதன் பிறகு அவளது வாழ்க்கை 24 மணி நேரமும் குழந்தையைப் பார்ப்பது, சமைப்பது என சுழல்கிறது. `நீ கொஞ்சம்கூட உதவறதில்லை’ என மதனுடன் சண்டை போடுகிறாள். தீபாவின் நச்சரிப்பு தாங்காமல் மதன் வீட்டுக்குத் தாமதமாக வருவதை வழக்கமாக்கிக் கொள்கிறான். இவர்களது சண்டை பெரிதாகிறது.

ஒரு நாள் மிகப்பெரிய பிசினஸ் டீலை முடித்த சந்தோஷத்தில் வீடு திரும்புகிற மதனை பாராட்டாமல் கடுமையாக சண்டை போடுகிறாள் தீபா. அது மதனுக்கு விவாகரத்து செய்யும் முடிவைத் தருகிறது. பிரிகிற எண்ணத்தில் கவுன்சலிங் போகிறார்கள் இருவரும்.அந்த கவுன்சலிங்கில் பல உண்மைகள் தெரிய வருகின்றன. தீபா எளிமையான, அதிக வசதியற்ற குடும்பத்தில் வளர்ந்தவள். அவளது அம்மாதான் எல்லா வேலைகளையும் செய்து பார்த்திருக்கிறாள்.

அப்படி வளர்ந்தவளுக்கு திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகும் அதே மனநிலை தொடர்கிறது. மதன் வீட்டு வேலைகளுக்கு ஆட்களை வைத்துக் கொள்ள அனுமதித்தும் அதை மறுக்கிறாள். வேலைக்குப் போகவும் மதன் தடை போடவில்லை. ஆனாலும் `நான் ஒரு மோசமான அம்மாவாக இருக்க விரும்பவில்லை’ என அதையும் நிராகரிக்கிறாள் தீபா. இருவரிடமும் பேசிய பிறகு ஆலோசகர் சில தீர்வுகளை முன் வைக்கிறார்.

நீங்க ரெண்டு பேரும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில இருந்து இந்தப் பிரச்னையை அணுகாதீங்க. சமூகரீதியாக பொருளாதார ரீதியாக உங்கள் வாழ்க்கை உயர்ந்திருக்கிறது. எனவே அதற்கேற்ப நீங்கள் கொஞ்சம் மாறிக் கொள்ளலாம். அவசியமான வேலைகளுக்கு ஆட்களை வைத்துக் கொள்ளலாம். அது அனாவசிய மன அழுத்தத்தையும் பிரச்னைகளையும் தவிர்க்கும். இருவருக்குமான சண்டைகளையும் குறைக்கும். அந்தக் காலத்தில் உங்கள் அம்மாவின் திருமண உறவு மற்றும் வாழ்க்கை முறையின் தாக்கத்தில் நீங்களும் அப்படியே வாழ வேண்டும் என விரும்புவது இந்தக் காலத்துக்கு உதவாது’ என எடுத்துச் சொன்னதும் தீபா மனம் மாறினாள்.

ஜர்னல் ஆஃப் மேரேஜ் அண்ட் ஃபேமிலியில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அமெரிக்க தம்பதியரை வைத்துச் செய்யப்பட்ட அதில் இருவரும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்பதே ஆய்வுக்கான பொருள். பெண்கள் 2 முதல் 3 மடங்கு வீட்டு வேலைகளை அதிகம் செய்கிறார்கள். அதே நேரம் வெளியிலும் வேலைக்குச் செல்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் சமமாகப் பகிர்ந்து கொள்ளாவிட்டால் அவர்களுக்கு மன அழுத்தம் வரும் வாய்ப்புகள் அதிகம். இருவருக்குமான காதலில் பிளவையும் பெரிதுபடுத்தும். திருமணத்துக்கு முன் தனியே இருந்தபோது செய்ததைவிடவும் அதிக வேலையை திருமணத்துக்குப் பிறகு அவள் செய்ய வேண்டியிருக்கிறது.

அதாவது, வாரத்துக்கு 14 மணி நேரம் கூடுதல் வேலை. இந்தப் பிரச்னை வரும் போது, ஆண்களுக்கு ஒரு சிக்கல் தலைதூக்குகிறது. ஆதிகாலம் தொட்டு ஆதிக்க மனப்பான்மையிலேயே வளர்ந்த அவனுக்கு வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வதில் ஈகோ கிளம்புகிறது. இது போன்ற சூழ்நிலை ஏற்படும் போது கணவனும் மனைவியும் நேர்மையாக இதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்கிறது அந்த ஆய்வு முடிவு. அது வேறு சில ஆலோசனைகளையும் தம்பதியருக்கு முன் வைக்கிறது.

ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல், விமர்சிக்காமல், பொறுப்புகளைப் பற்றிப் பேசலாம். இருவரும் சேர்ந்து எல்லா வேலைகளையும் பட்டியல் போட வேண்டும். யார் எந்த வேலைகளை ஏற்பது எனப் பேசிப் பகிர்ந்து கொள்ள வேண்டும். மீதமிருக்கிற வேலைகளை, இன்று நான், நாளை நீ எனப் பிரித்துச் செய்யப் பழக வேண்டும்.

எந்த வேலையை யாரால் சிறப்பாகச் செய்ய முடியுமோ, அதை அவர் ஏற்கலாம். உதாரணத்துக்கு மனைவி பொருளாதார விஷயங்களைக் கையாள்வதில் திறமையானவராகவும் கணவர் சமைப்பதில் கில்லாடியாகவும் இருக்கலாம். இது என் வேலையா எனக் கேட்காமல், அதை முழு மனதுடன் ஏற்றுச் செய்யலாம்.

நடைமுறையில் உலகம் முழுக்கவே நிதி நிர்வாகம் என்பது ஆண்கள் கைகளில்தான் இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் அது பற்றி ஏதும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். திடீரென கணவர் இறந்து போனாலோ, நோய் வாய்ப்பட்டாலோ வேறு அசம்பாவிதங்கள் நடந்தாலோ மட்டும்தான் நிதி நிர்வாகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். அப்போது அவர்களுக்கு அந்த விஷயமே புதிதாக இருப்பதால் அதை சரியாகக் கையாளத் தெரியாமல் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். இதைத் தவிர்த்து பெண்களும் நிதி நிர்வாகத்தில் பங்கெடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.

இருவருமே செய்ய விரும்பாத வேலைகள் என சிலது இருக்கும். உதாரணத்துக்கு நாய் பராமரிப்பு, கழிவறைறையை சுத்தம் செய்வது போன்றவை. இவற்றை இருவரும் இன்று நான், நாளை நீ என மாற்றி மாற்றிச் செய்யப் பழகலாம்.

ஓரளவு வளர்ந்த குழந்தைகளை அன்றாட வீட்டு வேலைகளில் உதவிக்கு அழைத்துக் கொள்ளலாம். இப்படியொரு சிக்கல் இருக்கும் பட்சத்தில் வீட்டுக்குள் நாம் எதிர்பார்க்கிற அளவுக்கு ஒழுங்கு இருந்தாக வேண்டும் என்கிற எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொள்ளலாம். வீடு பளிச்சென சுத்தமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை… சற்றே அழுக்குடன் இருந்து விட்டுப் போகட்டும் என நினைக்கலாம்.

செய்ய முடியாது என நினைக்கிற சில வேலைகளைச் செய்வதைத் தவிர்க்கலாம். வெளியில் இருந்து உதவிகளைப் பெற முடியுமா எனப் பார்த்து அதில் உடன்பாடு இருந்தால் செய்து கொள்ளலாம்.Post a Comment

Protected by WP Anti Spam