தாளிச்ச தயிர் சாதம் தக்காளி ஊறுகாய் இருந்தா 365 நாளும் சாப்பிடுவேன்!! (மகளிர் பக்கம்)

Read Time:18 Minute, 50 Second

‘சாப்பாடுன்னா எனக்கு பிளஷர், என்டர்டெயின்மென்ட், என்ஜாய்மென்ட், சந்தோஷம்’’ என்று தான் சுவைத்த, பிடித்த உணவுகள் மற்றும் உணவகங்கள் பற்றி பேசத் துவங்கினார் நடிகை மற்றும் ‘ஹாப்பி ஹெர்ப்’ நிறுவன இயக்குனர் ஸ்ருதிகா.

‘‘சின்ன வயசில் நான் பிறந்த நாள் முதல் எனக்கு கல்யாணம் ஆகும் வரை அம்மாவின் வீட்டு சாப்பாடு தான். வாரத்தில் ஒரு நாள் தான் வெளியே சாப்பிட அம்மா பர்மிஷன் தருவாங்க. மத்த ஆறு நாளும் டைம்டேபிள் போட்டு தான் சமைப்பாங்க. அதில் கண்டிப்பா தினமும் ஏதாவது ஒரு பச்சை காய்கறி, பருப்பு அப்புறம் இரண்டு கப் தயிர் இருக்கும். தினமும் லோட்டா சைஸ் டம்ளரில் பால் கம்பல்சரி… சர்க்கரை மற்றும் ஹார்லிக்ஸ் போன்றவை சேர்க்காமல் வெறும் பால்தான் தருவாங்க.

அதில்லாமல் தினமும் ஒரு சூப் அல்லது காய்கறி ஜூஸ்ன்னு முன்னாடியே பிளான் செய்திடுவாங்க. சன்னா கொள்ளு சூப், சோயா சூப், கீரை சூப்ன்னு குடுப்பாங்க. இதில் உப்பு, மிளகுத்தூள் மட்டும்தான் சேர்த்து தருவாங்க. ஒரு நாள் சூப்ன்னா மறுநாள் இளநீர், கேரட் ஜூஸ், தக்காளி ஜூஸ், ஏபிசி ஜூஸ், சாத்துக்குடி, ஆரஞ்ச் ஜூஸ், ஆப்பிள் ஜூஸ், பீட்ரூட் ஜூஸ், வெள்ளரி ஜூஸ்ன்னு தருவாங்க. நானும் என் தம்பியும் அம்மாவின் இந்த அன்புத் தொல்லையில் இருந்து ஓடுவோம். ஆனால் விடமாட்டாங்க. அவங்க அப்ப எங்களை துரத்தி துரத்தி கொடுத்த இந்த பழச்சாறு மற்றும் காய்கறிகள் இந்த வயசில் என்னுடைய சருமத்தில் பிரதிபலிக்குது’’ என்றவர் கல்யாணத்திற்கு பிறகு முழுமையாக மாறியுள்ளார்.

‘‘எனக்கு கல்யாணம் ஆகும் வரை டி, காபி எல்லாம் குடிச்சதே இல்லை. கல்யாணத்திற்கு பிறகு என்னுடைய உணவுப் பழக்கங்கள் முற்றிலும் மாறிடுச்சு. காலையில் எழுந்தவுடன் நரசூஸ் பில்டர் காபி வேணும் எனக்கு. என் கணவர் ஒரு டீ டோட்லர். ஆனால் சாப்பாடுன்னு சொல்லிட்டா போதும் எக்சைட் ஆயிடுவார். இரவு நேரம் பெரும்பாலும் நானும் அவரும் எங்களுக்கு பிடிச்ச ஏதாவது ஒரு உணவகத்தில் போய் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. நானும், அம்மாவின் ரெசிபிக்களை பாலோ செய்யணும்னு இருப்பேன்.

ஆனால் இவர் இரவு வந்ததும் வா சாப்பிட போலாம்னு சொல்வார். அவ்வளவுதான் என்னுடைய டயட் எல்லாத்தையும் தூக்கி வச்சிட்டு கிளம்பிடுவேன். ஆனால் என் பையனுக்கு அம்மா எனக்கு செய்ததைதான் கடைப்பிடிக்கிறேன். அதே போல் மாசம் ஒரு முறை பச்சை பூண்டை இடிச்சு பந்து போல் செய்து அதை தண்ணீர் மற்றும் தேனுடன் கலந்து குடிச்சா வயிறு நல்லா சுத்தமாயிடும். அதே போல் வெண்டைக்காயை இரவே கட் செய்து தண்ணீரில் போட்டு வச்சிடுவாங்க. மறுநாள் காலை அந்த தண்ணீரை குடிக்க தருவாங்க, அப்புறம் சுரக்காயை அப்படியே சாறு பிழிந்து தருவாங்க’’ என்றவர் தனக்கு பிடித்த உணவகங்கள் அங்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து விவரித்தார்.

‘‘ஒவ்வொரு உணவகத்தில் ஒரு சில உணவும் அவுட்ஸ்ட்டாண்டிங்கா இருக்கும். நாங்க அங்க போனாலே உணவு ஆர்டர் எடுக்கிறவங்க நாங்க சொல்றதுக்கு முன்னாடியே ஆர்டர் எடுத்திடுவாங்க. சென்னையில் கிரவுன் பிளாசாவி தக்ஷின்னு தென்னிந்திய உணவகம் இருக்கு. அங்க நண்டு புட்டு ரொம்ப நல்லா இருக்கும்.

அந்த மாதிரி வேற எங்கேயும் சாப்பிட்டு இருக்க முடியாது. சைனீஸ்னா கோல்டன் டிராகன். அங்கு சாங்க் ஆப் டிராகன்னு சிக்கனை குடைமிளகாயுடன் சேர்த்து வறுத்து தருவாங்க. ஸ்கிரீம்னா மூவ் அண்ட் பிக். அங்க பெல்ஜியம் வாஃபில் சுடச் சுட பேன் கேக் மாதிரி செய்து அதன் மேல் தேன் ஊற்றி ஐஸ்கிரீம் வைப்பாங்க. ஒரு வாய் சாப்பிட்டால் சொர்க்கத்துக்கே போன மாதிரி இருக்கும். அங்க சாக்லெட் காபி ஐஸ்கிரீமும் நல்லா இருக்கும். வாரத்தில் நாலு நாளாவது அங்க போயிடுவேன்.

சத்தியம் தியேட்டரில் இருக்கும் பட்டர் பாப்கார்ன். அங்கு விற்பனை கவுண்டரில் இருப்பவர் நல்ல பழக்கம்… அண்ணான்னு சொன்னா போதும் ஒழுக ஒழுக பட்டர் பாப்கார்ன் போட்டுத் தருவார். பெஷாரியில் வட இந்திய உணவுகள் சுவையா இருக்கும். குறிப்பா மலாய் கபாப் மற்றும் பிஷ் டிக்கா. இதெல்லாம் நாங்க ரெகுலரா போய் சாப்பிடும் உணவகங்கள். இது தவிர இன்ஸ்டாகிராமில் ஏதாவது உணவகம் பற்றி குறிப்பு இருந்தால் போதும், உடனடியா அந்த உணவகத்திற்கு போய் போட்டோவை காண்பித்து செய்ய சொல்லி சாப்பிடுவோம்.

ஈ.சி.ஆரில் பேசிக்ஸ்னு பீச் ரெஸ்டாரன்ட். கடல் அலை நம்முடைய காலை வருடிவிட்டு செல்ல நாம் உணவினை சுவைக்கலாம். அங்க எல்லா உணவுமே நல்லா இருக்கும். சைவம்னா அன்னலட்சுமி. நான் கர்ப்பமா இருக்கும் போது அங்கதான் குடியிருப்பேன். அங்க பிரீத்தி போஜன்னு மீல்ஸ் இருக்கும். தினமும் ஒரு மெனு மாறும். அப்புறம் அங்கு தயிர் சாதம் ரொம்ப நல்லா இருக்கும். அந்த மீல்சில் சூப்பில் ஆரம்பித்து மசால் வடை, தேங்காய் சாதம், சேமியா புளிசாதம் எல்லாம் இருக்கும். அவங்களின் பால் பாயசத்தை கண்ணை மூடிக் கொண்டு சுவைத்து சாப்பிடலாம். நம்மை வேற உலகத்திற்கு கொண்டு செல்லும்.

சென்னை ஜி.என்.செட்டி சாலையில் இருக்கும் சங்கீதா வெஜ்ஜில் எல்லா உணவும் நல்லா இருக்கும். பரோட்டா குருமா மற்றும் காபி ரொம்ப நல்லா இருக்கும். எல்லா உணவும் ஃப்ரெஷ்ஷா சுடச்சுட பரிமாறுவாங்க. எப்ப போனாலும் 20 நிமிஷம் காத்து இருந்துதான் சாப்பிட முடியும்’’ என்றவருக்கு சினிமா, சாப்பாடு தான் என்டர்டெயின்மென்டாம்.

‘‘கல்லூரி நாட்களில் நான் என் நண்பர்களுடன் பெசன்ட் பீச்சில்தான் இருப்பேன். அங்க சுண்டல் மாங்காய் எல்லாம் ரொம்ப பிடிக்கும். அப்ப பிளானடியம்னு ஒரு ஃபுட் கோர்ட் இருந்தது. எவ்வளவு ஆர்டர் செய்தாலும் பில் ரொம்ப கம்மியா தான் வரும். நான் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் தான் படிச்சேன். எங்க கல்லூரி வாசலுக்கு எதிரில் சுப்பிரபான்னு சின்ன கடை. அங்க சமோசா, பஃப் ரொம்ப நல்லா இருக்கும். அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்டா உணவு விஷயத்தில் இருந்ததால், கல்யாணத்திற்குப் பிறகு பல உணவுகளை சுவைக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணம் என் கணவர்னு கூட சொல்லலாம். அவர் கல்யாணத்திற்கு முன்பே நல்ல உணவுகளை தேடிப் போய் சாப்பிடும் பழக்கம் உண்டு. அதை எனக்கும் பழக்கிட்டார்.

பொதுவா வெளிநாட்டுக்கு போறவங்க எல்லாரும் கூகுள் செய்து அங்க டாப் பத்து இடங்கள் என்னென்னுதான் பார்ப்பாங்க. ஆனா, நானும் என் கணவரும் டாப் டென் உணவகங்கள் என்னென்னு ஒரு லிஸ்ட் போடுவோம். அதன் பிறகு தான் லக்கேஜ் பேக் செய்வோம். என்னுடைய ஹனிமூனுக்காக அமெரிக்கா போன போது அங்க கிரிஸ்பி கிரீம்னு ஒரு உணவகம் இருப்பதாகவும் அங்கு நாலு மணிக்கு போங்கன்னு சொல்லி அனுப்பினாங்க. இந்த உணவகம் இப்ப சென்னையிலும் இருக்கு. அந்த சமயத்தில் அப்படிப்பட்ட உணவகம் பற்றி யாருக்குமே தெரியாது. அங்க நாலு மணிக்கு சுடச்சுட பன் செய்து அதன் மேல சுகர் சிரப் சேர்த்து கொடுப்பாங்க. வாயில் போனதும் அவ்வளவு பெரிய பன் அப்படியே கரைந்திடும். எத்தனை உள்ளே போகும்னு தெரியாது. நாங்க 10, 15 சாப்பிட்டு இருப்போம்.

ஆம்ஸ்டர்டாமில், ராட்டடேம்ன்னு இடம். அங்க மீன் பேட்டர் ஃபிரை ரொம்ப ஃபேமஸ். நதிக்கரை ஓரமா எல்லா கடையிலும் இதுதான் இருக்கும். அப்படியே மீனை பிடிச்சு சுத்தம் செய்து, பொன்னிறமா வறுத்து தருவாங்க. ஒரு முள் கூட இருக்காது. மீன் கவுச்சி வாசனையும் இருக்காது. பொதுவா எனக்கு மீனில் கவுச்சி வாசனை வந்தா சாப்பிடவே மாட்டேன். இந்த மீனை ரொம்வே விரும்பி சாப்பிட்டேன். நான் சாப்பிட்ட மீன் வறுவலில் இது தான் பெஸ்ட்ன்னு சொல்வேன். அப்புறம் அங்க வாஃபல் பிஸ்கெட் ரொம்ப ஃபேமஸ்.

சுடச்சுட நம் கண் முன் செய்து, அதில் கேரமெல் சேர்த்து தருவாங்க. பாரீசில் சாக்லெட் டூர்னு போனோம். ஒரு பத்து பன்னிரெண்டு சாக்லெட் கடைக்கு அழைச்சிட்டு போனாங்க. அது எதுவுமே பிராண்டெட் சாக்லெட் கிடையாது. நம் ஊட்டி ஹோம்மேட் சாக்லெட் மாதிரி. ஆனா, ஒவ்வொன்றும் ஒரு தனி சுவையா இருக்கும். பல வகையான சாக்லெட்களை சுவைத்து பார்க்கலாம். நாங்க சும்மா இல்லாம நைட் சாப்பிடலாம்னு வேற வாங்கிட்டு வந்தோம். அங்க சாப்பிட்ட சாக்லெட் இரவு வரை பசிக்கவே இல்லை. சாக்லெட்டை பார்த்தாலே அலர்ஜி மாதிரி ஆயிடுச்சு.

இத்தாலி, மிலனில் ஷாட் சாக்லெட் ரொம்ப ஃபேமஸ். பாலே சேர்க்காம வெறும் சாக்லெட்டை அப்படியே உருக்கி திக்கா தருவாங்க. அதிக இனிப்பு இருக்காது, லைட்டா கசக்கும். அதை சாப்பிட்டா கொஞ்ச நேரத்தில் ஒரு கிக் கொடுக்கும் பாருங்க… வெளிநாடு மட்டுமல்ல நம்மூரையும் நான் விட்டு வச்சதில்லை. இங்கு குளுமனாலி போயிருந்தேன். அங்க மனாலியில்தான் எல்லாவிதமான பனிச்சறுக்கு விளையாட்டுகள் இருக்கும்.

பயங்கர குளிரா வேற இருக்கும். அவங்களே அதற்கான உடை, கிளவுஸ் எல்லாம் கொடுத்திடுவாங்க. அங்க சின்னச் சின்ன பொட்டிக்கடை இருக்கும். அதில் காரப்பொடி சேர்த்து சுடச்சுட மேகி செய்து தருவாங்க. அந்த குளிரில் சூடா மேகி சாப்பிடும் போது அவ்வளவு நல்லா இருக்கும். தில்லிக்கு போனா எந்த உணவகத்திலும் போய் சாப்பிட மாட்டோம். அங்க சாலையோர கடைகள்தான் என்னுடைய ஃபேவரைட். சாட் உணவுகள் அதிலும் அவங்க ஊர் பானிபூரி சுவை இங்க சென்னையில் உள்ள பெஸ்ட் சாட் கடையில் கூட கிடைக்காது. ஜெய்ப்பூரில் லசி ரொம்ப ஃபேமஸ். தயிரை அப்படியே சீஸ் கேக் மாதிரி மண் டம்ளரில் போட்டுத் தருவாங்க. ஐஸ்கிரீம் மாதிரி ஸ்பூனில் எடுத்து தான் சாப்பிடணும். தயிரே பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க.

எனக்கு சாமி பக்தி அதிகம். திருவண்ணாமலைக்கு அடிக்கடி போவேன். அங்க ஒரு பாட்டி அதிரசம் சுடுவாங்க. சாலையில்தான் ஒரு சின்ன அடுப்பு வச்சு சுடுவாங்க. கேட்கும் போது தட்டிப்போட்டு சூடா தருவாங்க. மெல்லிசா மொறுமொறுன்னு இருக்கும். அளவான இனிப்பு இருப்பதால் திகட்டவே திகட்டாது. கண்ணை மூடிக்கொண்டு ஏழு எட்டுன்னு உள்ளே போகும்.

ஸ்ரீபெரும்புத்தூர் போகும் வழியில் ஒன்லி காபின்னு ஒரு கடை. அங்க மாலை நேரத்தில் காரம் மற்றும் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை கிடைக்கும். அவங்க காபியும் ரொம்ப நல்லா இருக்கும். ஒரு கப் காபி, இரண்டு கொழுக்கட்டை சாப்பிட்டா தேவாமிருதமா இருக்கும். காபி டே கிளைகள் பல இடத்தில் இருந்தாலும் நுங்கம்பாக்கம் கிளையான ‘த ஸ்கயரில்’ கோல்ட் காபி ரொம்ப நல்லா இருக்கும்’’ என்றவருக்கு ஆல்டைம் ஃபேவரைட் என்றால் தாளிச்ச தயிர் சாதமும் தக்காளி ஊறுகாயுமாம்.

‘‘எங்க வீட்டில் சமைக்க ஒரு அம்மா இருக்காங்க. அவங்க தயிர் சாதம் தாளிச்சு தருவாங்க. அப்புறம் தக்காளி ஊறுகாய் செய்வாங்க. அந்த ஊறுகாய் எனக்கு பிடிக்கும்னு என் பாட்டி அவங்களுக்கு சொல்லிக் கொடுத்தாங்க. அது இரண்டு மட்டும் இருந்தா போதும்… நான் என் வாழ்க்கை முழுக்க அதை சாப்பிட்டே வாழ்ந்திடுவேன். மற்றபடி உணவகங்கள்னு சொன்னா தென்னிந்திய உணவிற்கு தக்‌ஷின், சைனீஸ்னா கோல்டன் டிராகன், சைவ உணவுன்னா அன்னலட்சுமிதான் என்னுடைய ஃபேவரைட்’’ என்றார் ஸ்ருதிகா.

கிரீமி சிக்கன் பாஸ்தா

நா ன் டெய்லி சமைக்க மாட்டேன். அப்படியே சமைச்சாலும் நாம தினமும் சாப்பிடும் சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் எல்லாம் செய்ய மாட்டேன். பாஸ்தா, பிரியாணி, பட்டர் சிக்கன், சில்லி சிக்கன்னுதான் செய்வேன். நான் சமைச்சா என் கணவருக்கு மட்டுமில்ல என் மகனும் ரொம்ப விரும்பி சாப்பிடுவான். அதில் எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சது கிரீமி சிக்கன் பாஸ்தா.

தேவையானவை

பாஸ்தா ஷெல்-2 கப், வெண்ணெய்- மூன்று மேசைக்கரண்டி, கோதுமை மாவு- ஒரு மேசைக்கரண்டி, வேகவச்ச ஸ்வீட் கார்ன் – 1/2 கப், வெங்காயம் – 1/2 கப், வேகவச்ச சிக்கன் – 1/2 கப், பால் – தேவையான அளவு, சீஸ் க்யூப்ஸ் – 2, மஷ்ரூம் – 1/2 கப், மிளகுத்தூள், உப்பு-சுவைக்கு ஏற்ப, எண்ணெய்- தேவைக்கு.

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பாஸ்தாவை வேகவைத்து தனியே எடுத்து வைக்கவும். மறெறாரு கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், கோதுமை மாவு சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து பிறகு பால் சேர்த்து கொதித்து வரும் போது சீஸைதுருவி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்தால் வைட் சாஸ் தயார். மற்றொரு கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம், கார்ன், சிக்கன், மஷ்ரூம் எல்லாம் சேர்த்து நன்கு வதக்கி அதில் வேகவைத்துள்ள பாஸ்தா சேர்த்து கிளறி கடைசியாக சாஸ் சேர்த்து பரிமாறவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உணவின் முக்கியத்துவம் தெரிந்து சமைக்கணும்!! (மகளிர் பக்கம்)
Next post ஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் உடலுறவு!! (அவ்வப்போது கிளாமர்)