By 7 May 2021 0 Comments

சீன்…டயலாக்…ரெடி…ஆக்‌ஷன்!! (மகளிர் பக்கம்)

“என்னுடைய பெயர் மோனிகா” என தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்தவரை பார்த்து ஆச்சர்யம்தான் வந்தது. காரணம், தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் தனித்துவமாக தன்னை நிரூபித்து; திரையில் பார்க்கும் போது அவ்வளவு மிரட்டலாக இருந்தவர், நேரில் அப்படி ஒரு சாந்தம். குழந்தை நட்சத்திரமான மோனிகாவிற்கு சன் டி.வியில் ஒளிபரப்பான ‘குட்டீஸ் சுட்டீஸ்’ தான் முதல் கேமரா அனுபவம்.

இது குறித்து பகிரும் மோனிகா, “எனக்கு டி.வி பார்க்குறது ரொம்ப பிடிக்கும். அப்படி பார்க்கும் போது குட்டீஸ் சுட்டீஸ் நிகழ்ச்சி ரொம்பவே கவர்ந்தது. அதில் கலந்துக்க கூட்டிட்டுப் போகச் சொல்லி அடம் பிடித்தேன். அம்மாக்கு என்னை ஒரு டென்னிஸ் ஃபிளேயரா ஆக்க வேண்டுமென்பதுதான் கனவு, ஆசை எல்லாம். சரி பொண்ணு ஆசைப்படுறாளேன்னு கூட்டிட்டுப் போனாங்க. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மட்டுமல்ல, நடிக்கவும் எனக்கு ஆர்வம் இருந்ததையும் அம்மாகிட்ட சொன்னேன். என்னுடைய ஆசையை நிறைவேற்றுவது போலவே அஜித் அங்கிள் கூட ‘வேதாளம்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் நடிக்க வாய்ப்பும் வந்தது.

இந்த படம் வந்ததும் ‘சங்கு சக்கரம்’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘பலூன்’ போன்ற படங்களில் வரிசையா நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. இந்தப் படங்களை எல்லாம் பார்த்து விஜய் அங்கிளோட ‘பைரவா’ படத்தில் நடிக்க கூப்பிட்டாங்க. அவங்க கூட நடிச்சது நல்ல ஒரு எக்ஸ்பீரியன்சா இருந்தது. ரொம்ப என்கரேஜ் பண்ணாங்க” என்று கூறும் மோனிகா தனது மாறுபட்ட நடிப்பினால் அனைவரையும் கவர்ந்த ‘ஆண் தேவதை’, ‘ராட்சசன்’ படங்களில் நடித்த அனுபவங்களை கூறினார்.

“தாமிர அங்கிள் ‘ஆண் தேவதை’ படம் ஷூட் போகும் போது ஒரு காட்சிக்காக அழுது காட்ட சொன்னாங்க. அங்கிள் ஒரு டூ மினிட்ஸ் டைம் கொடுங்க என்று கேட்டதும், ‘டூ மினிட்ஸ்ல என்ன பண்ணுவன்னு’ கேட்டாங்க. அந்த கேரக்டர் நானா இருந்தா எப்படி இருப்பேன், இல்லாட்டி எனக்கு நடந்த ஏதாவது ஒரு சேட் மூமென்ட் (sad moment) யோசிச்சு பார்த்து அழுகைய கிரியேட் பண்றேன்னு சொன்னதும், ‘இந்த வயதில் உனக்கு என்னம்மா சேடான விஷயம்’ என்று கேட்டாங்க. சமுத்திரக்கனி அங்கிள் ரொம்ப கேரிங்கா பாத்துக்கிட்டாரு. படம் பார்க்கும் போதும் சரி, ஸ்பாட்டிலும் சரி ஒரு அப்பா பீல்தான் இருந்தது. உண்மையான அப்பா போலவே இருந்தாங்க. அதுனாலதான் அந்தப் படத்துல உண்மையா இருந்திருக்குமோன்னு தோணுது.

ராட்சசன் படத்தில் நடித்த அனுபவம் ரொம்பவே சவாலாக இருந்தது. டயலாக் பேசாம, எமோஷனலே கேரி பண்ணணும். ராம் அங்கிள் அதற்கு ரொம்பவே ஹெல்ப் பண்ணாங்க. ஆக்ச்சுலி, ராட்சசன் படம் பார்த்துட்டுதான் லோகேஷ் அங்கிள் ‘கைதி’ படத்துக்கு என்னை செலக்ட் பண்ணாங்க” என்று கூறும் மோனிகாவிற்கு ரோல் மாடல் நடிகை நயன்தாராவாம்.

ஒரு சில பெரிய நடிகர்களே, தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரத்தை உள் வாங்காமல் நடிப்பதை பார்க்கிறோம். ஆனால், பத்தே வயதான மோனிகா, தனது அசாத்திய நடிப்பினை வெளிப்படுத்தி வருகிறார். “பொதுவா நான் ஷூட்டிங் ஸ்பார்ட்டுக்கு போனா டைரக்டர் அங்கிள்கிட்ட கேட்கும் முதல் கேள்வி மூட் என்ன, அடுத்து சீன், டயலாக். அவங்க சொன்னதும் அதற்காக தயாராகுவேன்.

அதற்கு முன் அவங்க கிட்டயே எப்படி நடிக்கணும், அந்த கேரக்டர் பற்றி முழுசா கேட்டு தெரிஞ்சுக்குவேன். அதனால தான் என்னால் ஓரளவாவது அச்சீவ் பண்ண முடியுதுன்னு நம்பறேன்.கைதி படத்தோட கிளைமாக்ஸ் ஷூட் பண்ணும் போது, ‘இது ஒரு இம்பார்ட்டன்ட் சீன். நீ சூப்பரா பண்ணிட்டீன்னா செமையா ரீச் இருக்கும். பெரிய நேம் கிடைக்கும்’ என்று லோகேஷ் அங்கிள் சொன்னாங்க. அவங்க சொன்ன மாதிரியே அது உண்மையாகவும் ஆனது. அந்த சீன் முடிச்சதும் கார்த்தி அங்கிள் ‘அவள எங்க இருந்து புடுச்சீங்கன்னு’ கேட்டாங்க. ஸ்பார்ட்டுலயே எல்லோரும் அழுதுட்டாங்க” என்று கூறும் மோனிகா எப்போதும் சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட்டாம்.

அரவிந்த் சாமியின் ‘கள்ளபார்ட்’, ரைசாவின் ‘சேஸ்’ போன்ற தமிழ் படங்களின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் மோனிகா, இப்போது மலையாள திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார்.“மம்மூட்டி அங்கிள் கூட ‘த ப்ரீஸ்ட்’னு ஒரு மலையாளப் படத்தில் நடிச்சிருக்கேன். இதில் மஞ்சு வாரியர் ஆண்டியும் நடிச்சிருக்காங்க.

என்னுடைய முதல் மலையாள படத்தில் இரு பெரும் ஆளுமைகளோடு நடித்தது பெரும் பாக்கியமாகவும், ஆசீர்வாதமாகவும் பார்க்கிறேன். எனக்கு சுத்தமா மலையாளமே தெரியாது. அப்படி இருந்தும் எந்த ஒரு கடினமான சூழலையும் எதிர்கொள்ளவில்லை. அங்க இருந்தவங்க அந்த மாதிரி கம்ஃபர்ட்டபுளா வச்சுகிட்டாங்க. தமிழில் இருந்து அங்கு போகும் போது மொத்தமா வித்தியாசமாக இருந்தது.

படத்தில் எனக்கும் சில சண்டை காட்சிகள் இருந்தது. அதை மாஸ்டர் வடிவமைக்கும் போது, கடினமான பகுதிகள் இருந்தால் அதை வேண்டாம், டூப் போடுங்கனு மம்மூட்டி அங்கிள் சொன்னாங்க. ரொம்ப நல்லா பார்த்துகிட்டாங்க. இருந்தாலும் சில காட்சிகள் டூப் இல்லாமல் நானே நடித்தேன். இந்த படம் மலையாளத்தில் எனக்கு ஒரு அடையாளத்தை கொடுக்கும். இதை தொடர்ந்து ‘சந்தோஷம்’ என்கிற அடுத்த மலையாள படத்திலும் நடிக்க இருக்கேன்” என்கிறார்.

திரைப்படங்களில் நடிப்பதோடு படிப்பிலும் கெட்டிக்காரியாகவும் இருக்கும் மோனிகா, போட்டோகிராபர், சயின்ட்டிஸ்ட், பாப் சிங்கர், டென்னிஸ் ஃபிளேயர் போன்ற லட்சியங்களோடும் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறார்.Post a Comment

Protected by WP Anti Spam