By 8 May 2021 0 Comments

மலரென்ற முகமென்று சிரிக்கட்டும்! (மகளிர் பக்கம்)

துறுதுறு கண்கள், துடிப்பான முகம், குண்டு கன்னங்கள் என 1952ல் 6 வயதுக் குழந்தையாக, ‘ராணி’ படத்தில் தொடங்கிய திரைப் பயணம். அரை நூற்றாண்டைக் கடந்து இன்று, 73 வயதிலும், சினிமா… மேடை நாடகங்கள்… தொலைக்காட்சித் தொடர்கள்… விளம்பரம்… வெப் சீரிஸ் என நடிப்பை விடாமல் தொடர்பவர். குழந்தை சச்சு… குமாரி சச்சு… இப்போது பாட்டி சச்சுவாக தனது திரையுலக அனுபவங்களை ஜாலியாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

குழந்தை நட்சத்திரமாய் தொடங்கிய உங்கள் திரைப் பயணம் குறித்து?

என் வாழ்க்கையில் எதிர்பாராமல் நடந்த நிகழ்வு இது. என் பெரிய அக்கா பெயர் மாடிலட்சுமி. அவரும் நானும் பரத நாட்டியக் கலைஞர்கள். அவர் ஒரு படத்திற்கு நடனம் ஆடச் சென்றபோது, நானும் கூடவே வேடிக்கை பார்க்கச் சென்றேன். அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரம் தேவைப்படவே, என்னைப் பார்த்தவர்கள், இந்தக் குழந்தை துறுதுறுவென இருக்கு, இதையே நடிக்க வைக்கலாமா எனக் கேட்டனர்.

என் குடும்பமோ பெரியது. என்னோடு சேர்த்து உடன் பிறந்தவர்கள் எட்டு பேர். என் அப்பா சென்னை உயர்நீதி மன்றத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞர். என் தாத்தா காவல்துறையில் பணியில் இருந்தவர். நான் சினிமாவில் நடிப்பதை அப்பாவின் குடும்பத்தினர் விரும்பவில்லை. ஆனால் அம்மாவின் குடும்பம் கர்நாடக சங்கீதம், பரதம், பாட்டு, நடனம் என கலை சார்ந்து வலம் வந்தவர்கள். நானும் என் பெரிய அக்காவும் அப்போது பாட்டிவீட்டில் வளர்ந்தோம். எனவே பாட்டி என்னை நடிக்க அனுமதித்தார். இப்படித்தான் என் திரைப்பயணம் தொடங்கியது. குழந்தையில் நடிக்க ஆரம்பித்து, சினிமாவில் தொடர்ந்து இருக்கும் நடிகை என்றால் அது நான் மட்டுமே. எனக்குப் பிறகே கமல், ஸ்ரீதேவி இருவரும் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து திரைவானில் ஜொலித்தனர்.

‘ரோஜா மலரே ராஜ குமாரி’ என கதாநாயகியாக ஆடிப்பாடியவர் காமெடியில் கலக்கியது எப்படி?

சினிமாவில் காமெடி ரோல் ஒன்றில் நடித்து விட்டாலே ஹீரோயின் வாய்ப்பு வருவது கஷ்டம்தான். நான் ஹீரோயினாக நடித்த காலகட்டத்தில் என்னுடன் நடிக்க இளம் ஹீரோக்கள் இல்லை. வயதில் மூத்த நடிகர்களே ஹீரோவாக வலம் வந்தனர். இளம் ஹீரோக்கள் என்றால் முத்துராமன், ஸ்ரீதர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என இரண்டாம் நிலை ஹீரோக்களே இருந்தனர். அவர்களும் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில்தான் காதலிக்க நேரமில்லை படத்தில் எனக்கு காமெடி ரோலில் நடிக்க வாய்ப்பு வந்தது.

காமெடி ரோல் வேண்டாமே என்றுதான் முதலில் மறுத்தேன். ஆனால் சித்ராலயா கோபு, ‘காமெடி என்றாலும் உனக்கு இதில் ஹீரோயின் ரோல்தான். உன் ஜோடி நாகேஷ் காமெடியன் என்பதால் உனக்கும் காமெடி ரோல் என நினைக்க வேண்டாம். படத்தில் நாகேஷ் உன்னை கதாநாயகியா வச்சு ஓகோ புரொடக் ஷ ன்னு படமே எடுக்கப் போறார்’ எனச் சிரித்தவாறே சொன்னவர், இதில் ‘நாகேசுடன் உனக்கு டுவிஸ்ட் டான்ஸ் ஒன்று உள்ளது. அதை நீ ஆடினால் மிகவும் நன்றாக இருக்கும்’ என்றார்.

ஸ்ரீதர் அண்ணாவும் அதைத்தான் விரும்புகிறார் எனச் சொல்ல நானும் களம் இறங்கினேன்.பழம்பெரும் நடிகைகளான எம்.என்.ராஜம், ராஜ சுலோச்சனா, தேவிகா, சாவித்ரி போன்றவர்கள் காமெடி ரோல் செய்த பிறகே ஹீரோயினாக வலம் வந்தவர்கள். நான் மட்டுமே ஹீரோயினாக நடித்து பிறகு காமெடி ரோலில் இறங்கினேன். ஆனால் கிடைத்த காமெடி ரோல்களில் நான் நின்று காண்பித்தேன். பாட்டோ நடனமோ எனக்கும் காமெடியில் ஹீரோயின் ரோல் மாதிரியே கொடுத்து படங்களை எடுத்தார்கள்.

ஹியூமர் இருந்தால்தானே காமெடி நடிப்பில் வரும்..?

ஆமாம். எங்கள் குடும்பம் கலாட்டா குடும்பம். வீட்டில் எங்களை பெற்றோர் சீரியஸாகவே நடத்த மாட்டார்கள். தவிர, சின்ன வயதிலே எனக்கு காமெடி நல்லா வரும். ஈஸியா சிரிச்சுப் பேசுறது, ஒருத்தர் மாதிரி இமிட்டேட் செய்து நடிச்சு காட்டுறது, குரல் மாற்றிப் பேசுவது இதெல்லாம் குடும்பத்திற்குள்ளே உண்டு. என் வீட்டுக்கு யாராவது வந்தால் அவர்களை மாதிரியே நடித்துக் காட்டுவேன்.

சாவித்திரி அம்மாவும், பத்மினி அம்மாவும் கிளிசரின் ஊற்றி நடித்த சீரியஸ் நடிப்புகளை நான் வீட்டில் பச்சைத் தண்ணீரைக் கண்களில் ஊற்றி நடிச்சுக் காட்டுவேன். தேவதாஸ் படத்தில் சாவித்திரி அம்மா தேவதாஸ் என அழுவது… அவர் பேசும் வசனங்கள் அத்தனையும் கண்ணாடி முன் அப்படியே நடித்துப் பார்ப்பேன். பழைய நடிகைகளின் சீரியஸ் நடிப்பை சின்ன வயதிலே நடிப்பில் கொண்டு வருவேன். அதனால்தான் காமெடி நடிப்புகளையும் ரசித்து என்ஜாய் பண்ணி நடித்தேன்.

‘மலரென்ற முகமென்று சிரிக்கட்டும்’ பாடலுக்கு ஆடிய டுவிஸ்ட் டான்ஸ் குறித்து…குழந்தையிலே எனக்கு நடனம் பிடித்தமான விசயம். இப்போதிருக்கும் குழந்தைகள் எப்படி டி.வி. பார்த்து அதே மாதிரி ஆடுகிறார்களோ அதேபோல் நானும் குழந்தையில் டிஃப்ரென்ட் டைப் ஆஃப் டான்ஸ் பார்த்து அப்படியே ஆடுவேன்.

காதலிக்க நேரமில்லை படத்தில் இடம்பெற்றது பாலிவுட்டில் இருந்து மும்பைக்கு வந்த டுவிஸ்ட் டான்ஸ். ஸ்ரீதர் அதை பயன்படுத்தி, ஓரியண்டல் நடனத்தில் இருந்து டுவிஸ்டுக்கு மாற்றி முயற்சித்தார். கோரியோகிராஃப் செய்தது தங்கப்பன் மாஸ்டர். இதற்கு பயிற்சி ரிகர்ஷல் எல்லாமும் இருந்தது. பிரபுதேவா அப்பா சுந்தரம்தான் அப்போது நாகேஷ்க்கு ஆடி காட்டினார். எனக்கு தாரா ஆடிக் காட்டினார்.

நாகேஷ்க்கு சுத்தமாக டான்ஸ் தெரியாது. ஆனால் என்னோடு போட்டிபோட்டு நடன பயிற்சிக்கு வந்தார். கஷ்டப்பட்டு சில மூவ்மென்ட்களை கத்துக்கிட்டார். ஹாலிவுட்டின் ஜெர்ரி லூயிஸ் நடனத்தை அடாப்ட் செய்து அப்படியே ஆடினார். ஸ்ரீதரும் அந்த நடனத்தை நன்றாக எடுத்தார். அந்த பாட்டும் நடனமும் இன்றைக்கும் பாப்புலர்தான்.

காமெடியில் உங்களோடு அதிகம் கலக்கிய நடிகர் நாகேஷ் குறித்து…

நான் அவரோடு ஐம்பதுக்கும் அதிகமான படங்களில் நடிச்சிருக்கேன். சிறந்த திறமைசாலி. கடின உழைப்பாளி. சில காட்சிகளை செட்டில் ஸ்பான்டேனியஷாகச் செய்வார். அதேசமயம் நிறைய ஹோம்வொர்க்கும் அவரிடத்தில் இருக்கும். திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், பாமா விஜயம் படங்களில் இடம்பெற்ற அவரின் காமெடி நடிப்போ, சர்வர் சுந்தரம் படத்தில் வந்த அவரின் சீரியஸ் நடிப்போ காலத்தை தாண்டியும் அவரின் படங்கள் மக்கள் மனதில் நிற்கிறது.

மனோரம்மா ஆச்சி குறித்து…

ஆச்சியும் கடுமையான உழைப்பாளி. நிறைய படங்களில் நாங்கள் இணைந்து வேலை செய்திருக்கோம். நான் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமாகி கதாநாயகி ரோலுக்கு மாறியபோது, 1959-60ல் மனோரம்மா ஆச்சி நடிக்க வந்தார். ‘வீரத்திருமகள்’ படத்தில் நான் ஹீரோயின். அதில் அவர் என் தோழியாக வருவார். அப்போதிருந்தே எங்கள் இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருந்தது.

ஆனால் பின்னாளில் நானும் அவரோடு காமெடியில் இருந்தேன். ஒரு படத்தின் டூயல் ரோலில் ஒரு தேங்காய் சீனிவாசனுக்கு ஆச்சி மனோரம்மா, இன்னொரு தேங்காய் சீனிவாசனுக்கு நான் ஜோடி என நடித்தோம். சில படங்களின் காமெடிக் காட்சிகளில் நான் அவரோடு போட்டி போடுவதாய் நடித்திருப்பேன். ஆனால் எங்களுக்குள் போட்டி கிடையாது. நல்ல புரிதலே இருந்தது. என் நடிப்பை மனோரம்மா ஆச்சியும், அவர் நடிப்பை நானும் நிறையவே ரசிப்போம். முக்கியமான காட்சிகளை எடுக்கும்போது இருவரும் கலந்துபேசி இப்படி பண்ணலாம் அப்படி செய்யலாம் என்றெல்லாம் பேசிக்கொண்டும் நடிப்போம்.

ஆச்சிக்கென தனி ஸ்டைல் உண்டு. அவர் என்னைப் பார்த்து, ‘நீ இவ்வளவு அழகா இருக்கியே சச்சும்மா… ஏன் காமெடிக்குள் வந்த’ என்பார்.

இப்போதுள்ள காமெடி நடிப்பு… காமெடி நடிகர்கள்… காமெடிக் காட்சிகள் குறித்து சொல்லுங்கள்…

கருப்பு வெள்ளை காலம் ஆரம்பித்து காமெடி நடிகர்கள் ஜோடி ஜோடியாகவே நடிக்க வந்தார்கள். கலைவாணர் என்.எஸ்.கே-மதுரம், தங்கவேலு-முத்துலெட்சுமி, சுருளிராஜன்-மனோரம்மா, நாகேஷ்-சச்சு என வரிசையாய் சொல்லலாம்.

எம்.ஆர்.ராதா அண்ணன் வில்லன் ரோல் செய்தாலும், காமெடியும் நல்லாவே பண்ணுவார். அவரின் வசன உச்சரிப்பு, நடிப்பு என அனைத்திலும் காமெடி இருக்கும். ராதா அண்ணன்-முத்துலெட்சுமி அம்மா ஜோடியாக நடித்த ‘புத்திசிகாமணி பெற்ற பிள்ளை’ பாடலில் அவர்களின் நடிப்பு இன்றும் நமது மனங்களில் நிற்கிறது. ஆனால் இன்றைய தலைமுறை காமெடிக் காட்சிகளில் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். காமெடி நடிகர்கள் நண்பர்களாய் கூட்டமாக வந்து ஓரிரு படங்களோடு காணாமலும் போகிறார்கள். மக்கள் மனதில் நிற்கும் அளவுக்கு அவர்கள் செய்யும் காமெடிகள் மனதில் பதிவதும் இல்லை. அவர்களுக்கும் பெரிதாகப் பேரும், புகழும் கிடைப்பதில்லை.

கேரக்டர் ரோல்களிலும் நீங்கள் நடித்தது குறித்து…

காமெடி ஆர்டிஸ்ட் கேரக்டர் ரோல் பண்ண ரொம்பவே மெனக்கெடணும். அதை நீங்கள் நடிகர் வடிவேலு மூலமாகவே உணரலாம். வடிவேல் திரையில் வந்தாலே மக்கள் சிரிப்பார்கள். ஆனால் அவர் சீரியஸ் ரோலை எடுத்துச் செய்ய ஆடியன்ஸை உட்கார வைக்கணும். கேரக்டராக நம்மை பார்க்க வைக்க நிறைய மெனக்கெடணும். நான், நடிகர் நாகேஷ், மனோரம்மா ஆச்சி எல்லாம் காமெடி மட்டுமல்ல சீரியஸ் ரோல்களும் பண்ணியிருக்கோம். ‘பூவா தலையா’ படத்தில் நாகேஷ் காமெடி பண்ணுவார். நான் சீரியஸ் கேரக்டர் செய்வேன்.

இன்றைய தலைமுறை நடிப்பு குறித்து…?

இன்றைய டிரென்ட் மாறிவிட்டது. நடிகைகள் ஒரே மாதிரி முகம் லூஸ் ஹேர் என அவர்களுக்கான தனித்துவம் எதுவும் வெளிவருவதில்லை. பழைய நடிகைகளில் சாவித்ரிக்குன்னு ஒரு அடையாளம், பானுமதிக்குன்னு ஒரு அடையாளம், பத்மினிக்குன்னு ஒரு அடையாளம் இருந்தது. மக்கள் மனதில் அவர்கள் காலத்திற்கும் நின்றார்கள். இப்பவெல்லாம் இரண்டு மூன்று படங்களோடு நடிகர், நடிகைகள் பெரிதாக வெளிவராமல், அவர்களின் முகம் மக்கள் மனதில் பதியும் முன்பே காணாமல் போய்விடுகிறார்கள்.

நடிப்பில் அலட்சியம் கூடாது. ஒவ்வொருநாளும் புதுசா நடிப்பது மாதிரி இன்றைக்கு என்ன புதுசா கத்துக்கலாம் என்றுதான் செட்டுக்கு வரணும். குறிப்பாக ரசிகர்களை சம்பாதிப்பது முக்கியம். நம்மை அவர்கள் ஏற்கும்வரை தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கணும்.

இப்போதுள்ள நடிகர்களில் உங்களை கவர்ந்த ஹீரோ, ஹீரோயின்?

நடிகர் கமலுக்குப் பிறகு கெட்டப்பை பற்றிக் கவலைப்படாமல் நடிப்பவர்கள் என்றால் ஹீரோவில் விஜய் சேதுபதி, விக்ரம். இவர்களைப் பார்க்க சந்தோஷமாக இருக்கும். ஹீரோ இமேஜுக்குள்ளே இருந்தால், அந்த இமேஜில் இருந்து மக்கள் மனதை மாற்றுவது ரொம்பவே கஷ்டம்.. நடிகைகளில் நயன்தாரா, த்ரிஷாவும் நடிப்பில் நீண்ட காலம் நிற்கிறார்கள்.

மகளிர் தினத்தில் பெண்களுக்கு சொல்ல விரும்புவது…

மகளிர் தின வாழ்த்துக்களை அனைத்து பெண்களுக்கும் பதிவு செய்கிறேன். பெண்கள் எல்லா விஷயத்திலும் முன்னுக்கு வருகிறார்கள். அது பார்க்க ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு. அதே நேரம் அவர்கள் பாதுகாப்பாகவும் செயல்படணும். கிடைத்த சுதந்திரத்தை கவனமாகக் கையாளணும். தற்காப்புக் கலைகளில் ஒன்றைக் கட்டாயம் தெரிந்து கொள்ளணும். மனம் போன போக்கில் வாழ்வதல்ல பெண் விடுதலை. தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து நிற்பதே பெண் விடுதலை.

சச்சு டேட்டா

*குழந்தையில் இருந்தே மிகப் பெரிய நிறுவனங்கள், சிறந்த இயக்குநர்கள், மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களோடு பணியாற்றியவர்.

*எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினி, எஸ்.எஸ்.ஆர்., சந்திரபாபு, முத்துராமன் போன்ற திரையுலக ஜாம்பவான்களின் படங்களில் அவர்களோடு நடித்தவர்.

*சாவித்திரி, பானுமதி, அஞ்சலிதேவி, எஸ்.வரலட்சுமி, குசலகுமாரி, கே.பி. சுந்தரம்பாள், வைஜெயந்தி மாலா, குமாரி கமலா, லலிதா, பத்மினி, எம்.என்.ராஜம் போன்ற நடிகைகளுக்கு குழந்தை நட்சத்திரமாகவும், ஜூனியராகவும் தோன்றியவர்.

*என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, பாலையா, தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், சோ, வெண்ணிற ஆடை மூர்த்தி, எம்.ஆர்.ஆர். வாசு, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், நாகேஷ், மனோரம்மா ஆச்சி, கவுண்டமணி இவர்களோடு நகைச்சுவையிலும் கைகோர்த்தவர்.

*தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

*தமிழக அரசின் கலைமாமணி விருது, என்.எஸ்.கிருஷ்ணன் விருது, எம்.ஜி.ஆர் விருது எனச் சிறப்புச் சேர்த்தவர்.

*2011ல் இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர்.Post a Comment

Protected by WP Anti Spam