கடிதம் எழுதுங்க… காதல் வசப்படுங்க! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 38 Second

கொங்குத் தமிழ் நக்கலுடன் பார்வையாளர்களைக் கவரும் ‘நக்கலைட்ஸ்’ யூ டியூப் சேனலுக்கு அறிமுகம் தேவையில்லை. அதில் நடிக்கும் தனம் அம்மா… இந்தக் கால யூ-டியூப் தமிழர்கள் கொண்டாடும் அந்தக் காலத்துப் பெண். நக்கலைட்ஸ் யூ-டியூப் சேனலின் ஆதர்ச நடிகை. ஆரம்பத்தில் ஜெயலலிதா, தமிழிசை வேடங்களில் நடித்து அரசியலைக் கலங்கடித்தவர், `அம்மா அலப்பறைகளில்’ அதகளம் செய்தார். இயக்குநர் சசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் இன்று பல திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பால் அசத்தி வருகிறார். காதலர் தின சிறப்பு இதழான இதில், தன் காதல் அனுபவங்களை தோழியரோடு பகிர்கிறார்.

‘‘எங்க அண்ணன் கண்ணாவும், சந்திரன் (கணவர்) அண்ணன் பரமேஷ்வராவும் சென்னையில் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தனர். வேலையைத் தாண்டி இருவரும் முற்போக்கு சிந்தனை உள்ள நபர்களாக இருந்ததால் இவர்களது நட்பு அலுவலகம் தாண்டி வெளியேயும் இருந்தது. ஒரு நாள் சந்திரனிடம் அவங்க அண்ணன், ‘என்ன டா கல்யாண வயசு தாண்டி போயிட்டு இருக்கு. நீ ஏதும் சொல்லாம இருக்கியே’ என்று கேட்க, ‘நான் ஒரு தமிழ் பொண்ணதான் கல்யாணம் பண்ணுவேன்’னு சொல்லி இருக்கிறார் சந்திரன். பிறப்பால் அவர் மலையாளி.

இந்த விஷயத்தை எங்க அண்ணன்கிட்ட, சந்திரன் அண்ணன் பகிர்ந்திருக்கிறார். ‘என்னோட தங்கைக்கும் திருமண வயது ஆகிறது’ என்று இவரும் சொல்ல, இந்த விஷயத்தையும் சந்திரனிடம் அவங்க அண்ணன் சொல்லும் போது, ‘எடுத்ததும் எப்படி நம்ம அணுகுறது. அவங்க மனநிலை, அரசியல் புரிதல் எப்படி இருக்கும். முதலில் நண்பர்களாக நாங்கள் அறிமுகம் ஆகிக்கிறோம். அதன் பிறகு எப்படி போகுதோ பார்க்கலாம்’ என்று சொல்லி இருக்கிறார். அவருக்கும் ஒரு அரசியல் இருப்பதால் அதற்கு ஏற்ற பெண்ணை பார்த்தார்.

எங்கள் முதல் அறிமுகம் கடிதம் வழிதான். அந்த சமயத்தில் எங்க அண்ணன் கோயம்புத்தூரில் இருந்தாங்க. நானும் அவிநாசிலிங்கம் கல்லூரியில் பி.எட் படிச்சுட்டு இருந்தேன். சந்திரன், கண்ணன் முகவரிக்கு கடிதம் எழுத, அதை விடுதியில் கொண்டு வந்து கொடுப்பாங்க. அப்படி வந்த முதல் கடிதம் “இனிய தோழியரே…”னு தொடங்கியது. நானும் சில புத்தகங்கள் அண்ணன் மூலம் வாசித்திருக்கிறேன். அதில் மார்க்சியம் கார்கியின் ‘தாய்’ நாவல் ரொம்பவும் ஈர்த்திருந்தது. இதனோடு வீதி நாடகங்களையும் அண்ணன் பார்க்க வைத்தார். ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், என்னை ஒரு சராசரி பெண்ணாக வளர்க்க கூடாதென்று தீர்மானமாக இருந்தார் அண்ணன்.

‘தோழியரே…’ என்ற வார்த்தையின் மூலம் ஆரம்பித்த எங்கள் உறவு இன்றும் அதே தோழமையோடு இருக்கிறது. அதன் பின் பல கடிதங்கள் எங்கள் உறவை ஆழப்படுத்தியது. கடிதங்களில் பேசிக் கொண்டிருந்த நாங்கள் ஒரு நாள் நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அந்த நேரத்தில் என் விடுதி தோழி அவளது தங்க செயின், வளையல் கொடுத்து, ‘முதல் முறை பார்க்க போற… இதெல்லாம் போட்டுக்கடி’னு சொன்னாள். ‘சரி இதெல்லாம் போட்டுக்கிறேன். நாளைக்கு எங்கனு கேட்டா என்ன பதில் சொல்வேன். அதனால் எப்படி இருக்கேனோ அப்படியே அவர்கிட்ட இருந்துட்டு போறேனே…’ என்று கருகமணி, கண்ணாடி கம்மலோடு அவர் முன் நின்றேன்.

அவருக்கும் சக பயணி எளிமையாவும், தங்க நகைகள் மீது ஆசைப்படாதவளாவும் இருந்தா கடன் வராது, பிரஷர் இருக்காது எப்ப வேணாலும் நம்ம வேலையை விட்டுட்டு இயக்க பணிக்கு போலாம்னு கணக்கு போட்டிருந்தார். அவர் வந்து பேசின பிறகு நாம் ஏன் அடுத்தக்கட்டமாக சேர்ந்து பயணிக்கக் கூடாது?… என்ற கேள்வி இருவருக்குமே எழுந்தது. அந்த நேரத்தில் வங்கி அதிகாரியாக இருந்த அவர், கொல்கத்தாவிற்கு மாற்றலாகினார். முதல் முறையா வீட்டை விட்டு போறாங்க, அவருக்கும் அங்கு துணை தேவையாக இருந்தது. அண்ணாகிட்ட பேசுனாங்க.

அடுத்து எளிமையா சாதி மறுப்பு, தாலி மறுப்பு திருமணம் நடந்தது. கெட்டிமேளம் சத்தம் இல்லாமல், தோழர்கள் கை தட்டி இயக்க பாடல் ஒன்று பாட… மாலை மாத்திக் கொண்டோம். அம்மா ‘தாலி இல்லாம எப்படி’னு கேட்க, ‘உங்க பொண்ணு எனக்கு தாலி கட்டினா, நான் உங்க பொண்ணுக்கு தாலி கட்றே’னு சொன்னார். அதற்கு பின் யாருமே இது வரை ‘நீ ஏன் தாலி போடல’னு கேட்கல, நானும் அதுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய தேவையும் ஏற்படவில்லை.

மொழி தெரியாத ஊரில் எங்கள் வாழ்க்கை ஆரம்பித்தது. அங்கேயும் பாதல் சர்கார் போன்றவர்களின் வீதி நாடகம் பார்க்கும் வாய்ப்புகள் அமைந்தது. சந்திரனுக்கும் தம்பிய படிக்க வைக்க, வீட்டுக்கு பணம் அனுப்ப… போன்ற பொறுப்புகள் இருந்ததால், எங்கள் பட்ஜெட் கொஞ்சம் கறாராக இருந்தது. இதற்கு இவ்வளவு, இதற்கு இவ்வளவு என்று கணக்குப் போட்டு செலவு செய்தோம். உண்மையிலேயே எங்கள் நெருக்கத்துக்கு காரணம், திருமணம் ஆன புதிதில் இருந்த அந்த தனிமை. ஒருவருக்கு ஒருவர் சார்ந்தும், உணர்வு ரீதியாகவும், மற்ற எல்லா விதத்திலும் ஒரு நெருக்கம் வருவதற்கும், சண்டை போட்டால் உடனே திரும்பி சேர்ந்து கொள்வதற்கும் அந்த தனிமை எங்களை புரிய வைத்தது.

கொல்கத்தாவில் கொஞ்ச காலம் இருந்த பின், பெங்களூர் வந்தோம். அங்கு மாமியார், நாத்தனார், கொழுந்தனார் என கூட்டு குடித்தனம். முகில் இங்குதான் பிறந்தான். அதற்கு பின் மதுரை. இயக்க தோழர்கள், வீதிநாடகம் என்று நட்பு வட்டம் விரிவடைந்தது. மக்கள் சிவில் உரிமை கழகத்தில் உறுப்பினராக இருந்ததால் அது சம்பந்தமாகவும் இயங்க ஆரம்பித்தோம்.

எங்கு போனாலும் ஈருடல் ஓர் உயிராகவே இருந்தோம். கணவன், மனைவி என்பதை தாண்டி ஒரு சமூக அக்கறையோடு இருவரும் இருந்தது எங்கள் வாழ்வின் பொருள் நிறைந்ததாக உணர்ந்தோம். இயக்கம் சார்ந்த நிறைய கூட்டங்கள் வீட்டிலேயே நடக்கும். அந்த சூழல் எங்கள் தோழமையை இன்னும் வலுப்படுத்தியது. ‘கோணங்கள் பிலிம் சொசைட்டி’ என்ற இயக்கத்தை திரைப்பட ஆர்வலர்கள் ஒன்றிணைந்து ஏற்படுத்தி இருந்தோம்.

முகில், அகில்… எங்க பசங்க. அவங்கள கண்டிக்கும் போது தான் ‘ஏன்ப்பா…’ என்பார். ‘நீ பேசாம போயிருப்பா… அந்த கண்டிப்பு இல்லைனா பண்ண மாட்டானுங்க’ என்பேன். இது தான் எங்க சண்டைனு நினைக்கிறேன். எங்க வீட்டு ஆட்களே கேட்பாங்க, ‘உங்களுக்கு சண்டையே வராதா?’னு. இதுக்கெல்லாம் காரணம் அவர் எப்படினு நான் தெரிந்திருந்தேன், நான் எப்படினு அவர் தெரிந்திருந்தார். கணவன், மனைவி என்ற உறவைத் தாண்டி பொதுவான விஷயங்கள் பேசி, வீட்டில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்போம்.

சந்திரனுக்கான உலகம் தனியா இருக்கும். அதில் அவர் பயணிக்க யாரும் தடை சொல்ல அனுமதிக்க மாட்டார். அது அவருக்கான உலகம். எனக்கும் ஒரு உலகம் இருக்கிறது. இப்படியாக இருவரும் விட்டுக் கொடுக்கிறோம் என்பதை தாண்டி, நான் நானாக இருக்கிறேன். அவர் அவராக இருக்கிறார். நாங்கள் நாங்களாக இருப்பதை பார்த்துக் கொள்கிறோம். இருப்பது ஒரு வாழ்க்கை. அது நமக்கு பிடித்த மாதிரி நல்ல கருத்துக்களால் ஆன விஷயங்களை செயல்பூர்வமாக ஆக்குகிறோம். அவ்வளவுதான்…!

எந்த உறவாக இருந்தாலும்… நட்பாகவே இருக்கட்டும். அது ஒரு சமூக அக்கறையோடு இருக்கும் நண்பர்களாக இருந்தால், அந்த நட்பில் ஆயிரம் விவாதங்கள், கருத்து மோதல்கள் இருந்தாலும் நம்மை பக்குவப்படுத்தும். அக்கறையோடு பரந்துப்பட்ட சிந்தனை வரும் போது ஆழம் அதிகமாகும். உறவு இதன் அடிப்படையில் இருக்கையில் நம்மை செழுமைப்படுத்தும். நம் துணை நம் மீது ஒரு விமர்சனம் வைத்தால் கூட அது கெடுதலுக்கு இல்லை என்பதை உணர வேண்டும். அதை ஏட்டுக்கு போட்டியாக ‘நீ என்ன சொல்றது… நான் என்ன கேட்குறது’னு இல்லாமல் எல்லாவற்றையும் தள்ளி நின்னு பார்த்து, சொல்வதில் என்ன கருத்து இருக்கிறது என்பதை எடுத்துக் கொண்டால் உறவு நல்லா இருக்கும்.

இன்றைய தலைமுறை போனில் மெசேஜ் பண்ணி பண்ணி காதல் பண்றாங்க. அது சரியாகாது. நம் சிந்தனையை நல்ல முறையில் கட்டமைத்து எழுத்து பூர்வமாவோ அல்லது இமெயில் மூலமோ கடிதம் எழுதணும். அப்படி எழுதும் போது மீண்டும் ஒரு முறை படித்து பார்க்கையில் என்ன வார்த்தை போட்டிருக்கிறோம் என கவனப்படுகிறோம். அப்படி அனுப்பிய கடிதத்தை திரும்பி படிக்கும் போது அந்த சமயத்தில் என்ன தவறு செய்திருக்கிறோம் என்பதையும் தெரிந்து கொள்கிறோம். ஆனால், இன்று ஒரு வார்த்தை டைப் செய்வதற்குள்ளாகவே ‘நீ இதை நினைத்துதான் இப்படி பேசுற, அப்படி பேசுற…’ என்பதோடு மெசேஜும் டெலிட் செய்கிறார்கள். நிறைய சண்டைக்கு காரணமாக இதுவே அமைகிறது.

சந்திரனும் எங்க பசங்ககிட்ட காதலிக்கும் போது கடிதம் எழுத சொல்வார். அப்படி முழுமையாக எழுதி அனுப்பும் போதுதான் நீ என்ன நினைக்கிறாய் என்பதை முழுமையா அவங்களால் புரிந்து கொள்ள முடியும். அவங்ககிட்ட இருந்தும் அதற்கான முழு பதில் கிடைக்கும் போது எந்த பிரச்னையும் இருப்பதில்லை. இரவு-பகல் பாராமல் அவசர அவசரமாக இப்படி அனுப்பும் மெசேஜில் நீங்கள் சொல்லியிருக்கும் ஏதோ ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டு ‘ஈகோ’ சண்டைதான் முற்றுகிறது.

நாங்கள் எழுதிய கடிதங்கள் அப்படியே ஃபைல் பண்ணி வச்சிருக்கோம். ஒவ்வொரு ஆண்டு திருமண நாள் அன்று அதை எடுத்து வாசிப்போம். திருமணம் செய்ததால் உண்மையிலேயே சரியாதான் இருக்கோமா? என்ன வளர்ந்திருக்கிறோம்? என்ன மாறியிருக்கிறோம்?… என்பதையெல்லாம் பேசிக் கொள்கிறோம் இன்றும்…”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 25 வயதில்…விமானியான காஷ்மீர் பெண்! (மகளிர் பக்கம்)
Next post முதல் பேச்சிலயே சபாநாயகரை சிரிக்க வைத்த DMK Duraimurugan !! (வீடியோ)