By 20 May 2021 0 Comments

ட்வின்ஸ்!! (மருத்துவம்)

ஒரே வகுப்பறையில், இருவரையும் அடுத்தடுத்த வரிசையில் உட்கார வைத்ததற்கே ‘பள்ளிக்கூடம் போக மாட்டேன்’ என அடம் பிடித்த என் பாசப்புத்திரனின் கதையை போன இதழில் சொல்லியிருந்தேன். அவர்கள் படித்த பள்ளியில் வருடந்தோறும் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களையும் பிரித்து வேறு செக்‌ஷனில் மாற்றுவது வழக்கம். இந்த வருஷம் ரெண்டு பேரையும் பிரிச்சிடுவாங்களோ…’ என்கிற அந்தத் தவிப்பு, ரிசல்ட்டுக்காக காத்திருப்பதைவிடவும் பெரிய டென்ஷன். அறிவிப்புப் பலகையில் இருவரின் பெயர்களுக்கு நேராக ஒரே செக்‌ஷன் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தால்தான் எனக்கு படபடப்பு அடங்கும். 5ம் வகுப்பு வரை இப்படியே தொடர்ந்தது. ஆறாம் வகுப்புக்கான அறிவிப்புப் பலகையில் இருவரும் வேறு வேறு வகுப்புப் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டிருந்தார்கள்.

எல்.கே.ஜி. சம்பவம் நினைவுக்கு வந்து, இந்த அதிர்ச்சியை குழந்தைகள் எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறார்கள் என்கிற கூடுதல் படபடப்பு எனக்கு. இருவரையும் அழைத்து தயங்கியபடி ஆரம்பித்தேன்.

ஒண்ணும் கவலைப்படாதீங்க… நான் வந்து மிஸ்கிட்ட பேசறேன். அவங்களுக்கு நீங்க ட்வின்ஸ்னு தெரிஞ்சிருக்காது. அதான் வேற வேற செக்‌ஷன்ல மாத்திருக்காங்க… சொன்னா கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க. ஒரே செக்‌ஷன்ல மாத்திடலாம்…’’ – நான் முடிப்பதற்குள் முந்திக் கொண்டார்கள் இருவரும்.

முடியவே முடியாது… வேற வேற செக்‌ஷன்லதான் படிப்போம். நீ மிஸ்கிட்ட பேசி, ரெண்டு பேரையும் ஒரே செக்‌ஷன்ல போட்டியானா, நாளைலேருந்து நான் ஸ்கூலுக்கே போக மாட்டேன்’’ என்று ஷாக் கொடுத்தான் எல்.கே.ஜி.யில் அழுதவன். ஷாக் பத்தலை என்று நினைத்தானோ என்னவோ….ஆமாம்… நானும் செக்‌ஷன் மாற மாட்டேன். மீறி நீ மாத்தினா, ஸ்கூலுக்கே போக மாட்டேன்…’’ – ஸ்ட்ரிக்ட்டாக சொன்னான் இன்னொருவன்.

பிள்ளைங்க வளர்ந்துட்டாங்க… நீ இன்னும் அவங்களை குழந்தையாவே பார்க்கிறது உன் தப்பு…’’ என்றார்கள் எல்லோரும். அன்று தொடங்கிய அந்த ஷாக், நாளுக்கு நாள் கூடியதே தவிர, இன்று வரை குறைந்தபாடாக இல்லை.டிஃபன் பாக்சில் மதிய உணவு கொடுப்பதில் தொடங்கி, புது டிரெஸ் வாங்குவது, இருவருக்குமான பொருட்கள் வாங்குவது, ஆதர்ச ஹீரோ வரை எல்லாவற்றிலும் எதிரும் புதிருமாகவே இருந்தன அவர்களது விருப்பங்கள். இருவருக்கும் ஒரே விஷயம் பிடிக்கிறதென்றால் இன்றெல்லாம் எனக்கு அது அபூர்வ நிகழ்வு!

இரட்டையரை ஒரே வகுப்புப் பிரிவில் சேர்க்க வேண்டியதன் அவசியத்தை கடந்த இதழில் வலியுறுத்திய மனநல மருத்துவர் சுபா சார்லஸ், அவர்களை வேறு வேறு பிரிவுகளில் சேர்க்க வேண்டியதன் காரணங்களைப் பற்றி இந்த இதழில் பேசுகிறார்.

இரட்டையரின் கற்கும் திறனும் புரிதலும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இருவரையும் ஒன்றாக வைத்திருக்கிறபோது, நன்றாகப் படிக்கிற குழந்தையுடன், மந்தமான குழந்தையை ஒப்பிட்டுப் பேசுவார்கள். மட்டம் தட்டப்படுகிற குழந்தை மனத்தளவில் பாதிக்கப்படும். வேறு வேறு பிரிவுகளில் சேர்ப்பதன் மூலம் இதைத் தவிர்க்கலாம். பெரும்பாலும் இரட்டையர் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருப்பார்கள். அதை அப்படியே அனுமதிக்கிற போது, அதாவது, இருவரையும் ஒரே வகுப்புப் பிரிவில் சேர்க்கிற போது அந்த சார்புத் தன்மை இன்னும் அதிகமாகும். வேறு ேவறு பிரிவுகளில் இருந்தால், இருவரும் தனித்தன்மையுடன் வளர்வார்கள்.

இரட்டையரில் ஒருவர் எப்போதும் ஆதிக்க குணம் நிரம்பியவராகவும் இன்னொருவர் அடங்கிப் போகிறவராகவும் இருப்பார்கள். ஆதிக்க மனப்பான்மை கொண்ட குழந்தை தனது உடன்பிறப்பின் சார்பாக எப்போதும் வகுப்பறையில் தன்னையே முன்னிலைப்படுத்திக் கொள்ளும். அது மனதளவில் கொஞ்சம் பலவீனமாக உள்ள குழந்தையைப் பாதிக்கும். எனவே, அவர்களை தனித்தனி பிரிவுகளில் சேர்ப்பதே சரியான முடிவாக இருக்கும்.

பெரும்பாலான இரட்டையர் ஒருவருக்கொருவர் போட்டி மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்குள் நீயா, நானா என்கிற போட்டி இருக்கும். ஒரே பிரிவில் இருவரையும் சேர்க்கிற போது, தன் மீது ஒட்டுமொத்த வகுப்பின் கவனமும் திரும்ப வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் ஒருவரை ஒருவர் முந்த நினைக்கலாம். இணக்கமாக இருக்க வேண்டியவர்களுக்கு இடையில் இது தேவையற்ற இடைவெளிக்குக் காரணமாகி விடும். வேறு வேறு பிரிவுகளில் படிக்கிறபோது, ஒப்பீடுகளுக்கோ, முந்துதல்களுக்கோ, கவன ஈர்ப்புகளுக்கோ தேவை இருக்காது.

ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கிற கணவன் – மனைவியிடம் அந்த அனுபவத்தைக் கேட்டுப் பாருங்கள்… வேறு வழியின்றி சகித்துக் கொண்டிருப்பதை ஒப்புக் கொள்வார்கள். ஒரே வகுப்புப் பிரிவில் சேர்க்கப்படுகிற இரட்டையரின் மனநிலையும் கிட்டத்தட்ட இப்படியானதுதான். 24 மணி நேரமும் தன் அருகில் தன்னை கவனித்துக் கொண்டே இருக்க ஒரு நபர் இருக்கிற உணர்வை எல்லா இரட்டையர்களாலும் சகித்துக் கொள்ள முடியாது. தனிமை உணர்வு முற்றிலும் பறிபோனதாக உணர்வார்கள்.

ஒரே வகுப்பில் எப்போதும் இணைந்தே இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிற இரட்டையர் வாழ்க்கையில் நட்பு வட்டம் குறுகிப் போகும் வாய்ப்புகள் அதிகம். ‘உனக்கு நான், எனக்கு நீ’ என்கிற எண்ணத்தில் எல்லா விஷயங்களையும் இருவர் மட்டுமே பகிர்ந்து கொள்ள நினைப்பார்கள். இருவருக்கும் வேறு குழந்தைகளுடனும் நட்பு பாராட்ட வேண்டும் என நினைக்கவே தோன்றாது. நட்பில்லாத இந்த நிலை அவர்களது எதிர்கால வளர்ச்சிக்கு உகந்ததல்ல.

ஒரே மாதிரியான உருவ ஒற்றுமை கொண்ட இரட்டையரை, பெற்றோர் தவிர்த்து மற்றவர்களால் அத்தனை சுலபத்தில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. ஒரே பிரிவில் இருக்கும்போது இது சக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தும். அதைக் கையாள்வது இரட்டையருக்குமே கூட தர்மசங்கடத்தைத் தரும்.

உங்கள் இரட்டையரிடமும் அபிப்ராயம் கேளுங்கள். வேறு வேறு பிரிவுகளில் படிக்க அவர்கள் விரும்பினால் அதற்கு மதிப்பளியுங்கள். பள்ளிக் காலம் முடிகிற வரை அவர்கள் இரட்டையராக மட்டுமே அறியப்படாமல், அவர்களது தனித்திறமைகளுக்காக தனித்தனியாக அறியப்பட வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

ஒரே பிரிவில் சேர்ப்பதா, வேண்டாமா என்கிற விஷயத்தில் உங்களால் தனித்து முடிவெடுக்க முடியாதபட்சத்தில், உங்கள் இரட்டையரை நன்கு அறிந்தவர்களிடம் அபிப்ராயம் கேளுங்கள். உதாரணத்துக்கு அவர்களைப் பார்த்துக் கொள்கிற தாத்தா – பாட்டி, வேலையாட்கள், காப்பக ஆட்கள் போன்றவர்களிடம் அவர்களது நடவடிக்கைகள் பற்றிக் கேளுங்கள். அந்தத் தகவல்களை வைத்து அவர்களைப் பிரிப்பதா அல்லது ஒரே பிரிவில் இருக்கச் செய்வதா என முடிவெடுக்கலாம்.

பெருமையும் திருப்தியும்

என்னோட ரெட்டைக் குழந்தைங்க எனக்கு தாய்மைங்கிற அனுபவத்தை மட்டும் கொடுக்கலை. பொறுமைன்னா என்னனு கத்துக் கொடுத்திருக்காங்க. அன்போட அர்த்தத்தைப் புரிய வச்சிருக்காங்க. எப்பேர்பட்ட கஷ்டமான சூழலையும் தைரியத்தோட எதிர்கொள்ற மனப்பக்குவத்தை சொல்லித் தந்திருக்காங்க. இன்னும் தினம் தினம் எனக்கு ஏதோ ஒரு விஷயத்தை போதிச்சுக்கிட்டே இருக்காங்க…’’ – ஆனந்தக் கண்ணீருடன்தான் ஆரம்பிக்கிறது ஆனந்தியின் பேச்சு. சுரேகா, ஹரி என 7 வயது இரட்டையர்களின் அம்மாவான இவருக்கு, தினம் தினம் தீபாவளி.

“கல்யாணத்துக்குப் பிறகு ரொம்ப ரொம்ப ஆசையா குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனா, ரெண்டு முறை அபார்ஷன் ஆயிடுச்சு. அப்போ என் கணவர் சவுதியில இருந்தார். அவர்கூட நானும் அடிக்கடி ஃபிளைட்ல டிராவல் பண்ணுவேன். அதுதான் அபார்ஷனுக்கு காரணம்னு சொல்லி, பயணத்தைத் தவிர்க்கச் சொன்னாங்க டாக்டர்ஸ். அபார்ஷன் ஆகாம இருக்க மருந்துகளும் கொடுத்தாங்க. மறுபடி கர்ப்பமானேன். இந்தமுறை என் குழந்தையை மிஸ் பண்ணிடக்கூடாதுங்கிற அக்கறையோட ரெஸ்ட் எடுத்தேன். ரெண்டாவது மாசக் கடைசியில ட்வின்ஸ்னு சொன்னாங்க டாக்டர்ஸ்.

அந்த சந்தோஷத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லைன்னாலும் அதுக்கப்புறம் தான் என்னோட பயம் பல மடங்கு அதிகமானதுனு சொல்லலாம். படுக்கறதுலேருந்து, சாப்பாடு, நடைனு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்துப் பண்ண ஆரம்பிச்சேன். 9 மாசங்களைக் கடக்கறதுக்குள்ள செத்துப் பிழைச்சேன்னு சொல்லலாம். வாரா வாரம் என் கணவர் சவுதியிலேருந்து வந்து என்னைப் பார்த்துட்டு, தைரியம் சொல்லிட்டுப் போவார். மாடி ஏறலாமா, நடக்கலாமா, எந்தப் பக்கம் படுத்துத் தூங்கணும்… இப்படி என்னோட அர்த்தமில்லாத சந்தேகங்களுக்குக்கூட பொறுமையா பதில் சொன்னாங்க என் டாக்டர் கமலா செல்வராஜ்.

9வது மாசம் சிசேரியன்ல குழந்தைங்க பிறந்தாங்க. ஒருவழியா கண்டங்களைத் தாண்டியாச்சு… இனிமே பிரச்னை இல்லைனு நினைச்சா, பிரசவத்துக்குப் பிறகான நாட்கள்தான் உண்மையான சவாலா இருந்தது. முதுகெலும்புல மயக்க ஊசி போட்டதுல முதல் சில நாட்கள் என்னால எந்த வேலையும் செய்ய முடியலை. என் கணவர்தான் வேலையில ஒரு மாச பிரேக் எடுத்துட்டு வந்து என்னைப் பார்த்துக்கிட்டார். அவர் கிளம்பற போது இனிமே நீ தனியாளா எப்படிப் பார்த்துக்கப் போறே… எப்படி சமாளிப்பே’னு அழுதார். நான் வளர்த்துக் காட்டறேன்… நீங்க கவலைப்படாம கிளம்புங்க’னு அவருக்கு நான் தைரியம் சொல்லி அனுப்பி வச்சேன்.

ரெண்டு குழந்தைங்களும் எடை கம்மியா இருந்தாங்க. அதனால ரொம்ப ஜாக்கிரதையா பொத்திப் பொத்திப் பார்த்துக்கிட்டேன். நானே என் கால்ல போட்டுக் குளிக்க வைக்கிறது, தூங்க வைக்கிறதுனு எல்லா வேலைகளையும் பார்த்தேன். 2 மாசம் கழிச்சு நானும் என் கணவரோட சவுதிக்கு போயிட்டேன். சொந்தக்காரங்களால அங்கே வந்து பார்த்துக்க முடியாத நிலைமை. வேலைக்கு வச்ச ஆட்களும், ‘எங்களால முடியாது’னு போயிட்டாங்க. நாலு குழந்தைங்களைப் பெத்த அனுபவம் உள்ளவங்க கூட பயந்து போயிட்டாங்க. முதல் 6 மாசங்கள் ரொம்பவே பயங்கரமா இருந்தது.

தூக்கம் கிடையாது. உதவிக்கு ஆட்கள் கிடையாது. என் கணவரும் நானும் மட்டுமே சமாளிச்சோம். குழந்தைங்க வளர வளர, எங்க கஷ்டங்கள் குறைஞ்சது. இப்ப ரெண்டு பேருக்கும் 7 வயசாகுது. பட்ட கஷ்டங்கள் அத்தனைக்கும் சேர்த்து இப்போ சிரிப்பையும் சந்தோஷத்தையும் மட்டுமே பார்த்திட்டிருக்கேன். புன்னகையோடவும் அன்போடவும் எல்லார்கிட்டயும் பழகறதைப் பார்க்கிறவங்க அருமையா வளர்த்திருக்கீங்க… இப்படிப்பட்ட பசங்களைப் பார்க்கறதே அபூர்வம்னு சொல்றதைக் கேட்கறப்ப பெருமையா இருக்கு. வாழ்க்கையில பெரிசா எதையோ சாதிச்சிட்ட மாதிரி ஒரு திருப்தியும் கிடைச்சிருக்கு…’’ – மீண்டும் சந்தோஷக் கண்ணீரில் நனைகிறார் ஆனந்தி.

ஆனந்தியின் டிப்ஸ்

அட்வைஸ் என்ற பேர்ல ஆளாளுக்கு ஆயிரம் சொல்லி பயமுறுத்துவாங்க. மத்தவங்களோட அனுபவமோ அட்வைஸோ எதுவும் உங்களுக்கு உதவாது. நம்மால முடியும்கிற தன்னம்பிக்கை மட்டும்தான் கை கொடுக்கும். நம்ம குழந்தைங்களை நம்மளைவிட சிறப்பா யாராலயும் பார்த்துக்க முடியாதுங்கிற நம்பிக்கைதான் எனக்கு உதவினது. உங்களுக்கும் உதவட்டும்.’’Post a Comment

Protected by WP Anti Spam