போராட்டங்களை மட்டுமே சந்தித்த நான்… அன்று சந்தோஷத்தை உணர்ந்தேன்!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 49 Second

‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கர்நாடகாவில். அப்பாக்கு சென்னையில் வேலை என்பதால், நாங்க இங்க செட்டிலாயிட்டோம். அம்மா நல்லா வரைவாங்க. ஆனால் அதை அவங்க ஒரு கலையா எடுத்துக்கல. எனக்கு மூணு வயசு இருக்கும் போது, அம்மா எனக்கு வரைய சொல்லிக் கொடுத்தாங்க. நான் ரொம்ப அமைதியான பொண்ணு. கூச்ச சுபாவம் அதிகம்.

நான் உண்டு என் வேலைஉண்டுன்னு இருப்பேன். இந்த குணாதிசயங்களுக்கு கலை சார்ந்த விஷயம் ரொம்பவே பொருந்தும். எனக்கும் அப்படித்தான். அதனால் எனக்கு வரைவது ரொம்பவே பிடிச்சு இருந்தது. என்னுடைய ஆர்வத்தை பார்த்து அம்மாவும் அவங்களுக்கு தெரிந்த விஷயங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க. என்னுடைய ஏழு வயசில் பிரபல கார்ட்டூனிஸ்ட் ராணுவிடம் கார்ட்டூன் வரைவது குறித்து பயிற்சி எடுத்தேன். அவர் தொலைக்காட்சியில் கார்ட்டூன் வரைவது குறித்து சொல்லித் தருவார்.

எனக்கும் சொல்லிக் கொடுத்தார். மேலும் ஒரு கார்ட்டூன் உருவத்தில் பலவிதமான உணர்ச்சிகளை எப்படிக் கொண்டு வரலாம்னு தெரிந்து கொண்டேன். அதன் பிறகு லட்சுமணன் என்பவரிடம் வாட்டர் கலர் முதல் அனைத்து ஓவிய முறைகளையும் கற்றுக் கொண்டேன். நான் பார்க்கும் ஒவ்ெவாரு பொருட்களையும் கலை வடிவத்தில் பார்க்க ஆரம்பிச்சேன். ஒரு சின்ன பானையாக இருந்தாலும், அதை எப்படி கலை ரசனையுடன் மாற்றி அமைக்கலாம் என்று சிந்திப்பேன்’’ என்றவர் தன் எதிர்காலமும் கலை சார்ந்து அமைய வேண்டும் என்பதில் மிகவும் திடமாக இருந்துள்ளார்.

‘‘பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் என்ன படிக்கலாம்ன்னு யோசித்த போது எங்க குடும்ப மருத்துவர் என்னை ஃபேஷன் டிசைனிங் படிக்க சொன்னார். எனக்கான துறை என்பதால் நான் அதில் சேர்ந்து படிச்சேன். அங்கு அனைத்து துறை சார்ந்த கலை வடிவங்களை கற்றுக் கொண்டேன். அதாவது உடைகள் வடிவமைப்பது மட்டுமில்லாமல் டிஜிட்டல் ஆர்ட், பிலிம் மேக்கிங், ஆர்கிடெக்சர் என அனைத்து துறையிலும் கலை வடிவங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டேன்.

படிப்ப முடிச்சதும் வேலைக்கு சேர்ந்தேன். கார்ட்டூன் வரைவது முதல் ஃபேஷன் டிசைனிங், கேமிங் நிறுவனம் என பல துறைகளில் வேலை பார்த்தேன். பெங்களூரில் கேமிங் துறைக்கு நல்ல மதிப்புள்ளது. ஆனால் சென்னைக்கு வந்த பிறகு இங்கு கேமிங் துறைக்கான வாய்ப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும் கலை துறையின் அடித்தளத்தை நன்கு புரிந்து கொண்டதால், அதை எப்படி திறமையாக பயன்படுத்தலாம்ன்னு யோசிக்க ஆரம்பிச்சேன். அதற்கு ஒரே தீர்வு நாம் தனித்து செயல்படவேண்டும். என் மனதில் தோன்றும் விஷயங்களை ஓவியமாக தீட்ட ஆரம்பித்தேன்.

நான் வரையும் ஒவ்வொரு ஓவியத்திலும் ஒரு உணர்வுகள் இருக்கும். இதைப் பார்த்து முதலில் என் நண்பர்கள் என்னிடம் அதை வாங்க ஆரம்பிச்சாங்க. அதன் பிறகு உறவினர்கள் என பலர் எனக்கு வாடிக்கையாளராக மாறினாங்க. சிலர் ஒரு குறிப்பிட்ட ஓவியம் வேண்டும்ன்னு கேட்டு வாங்க ஆரம்பிச்சாங்க’’ என்றவர் உடல் நிலை காரணமாக தான் மிகவும் விரும்பிய கலை துறையில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.

‘‘2019ம் ஆண்டு என் வாழ்க்கையில் பெரிய அளவில் இடி விழும்னு நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு அலர்ஜி பிரச்னை ஏற்பட்டது. என்னுடைய முகம் வீங்க ஆரம்பிச்சது. எதனால் ஏற்படுகிறதுன்னு எனக்கு தெரியல. பலவிதமான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள ஆரம்பிச்சேன். அலர்ஜியை கட்டுப்படுத்தும் மருந்துகள் என்னையும் என் கலைத் திறனையும் கட்டிப்போட்டது. எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு மட்டுமே இருக்கும். உடல் சோர்வாக இருக்கும்.

கலை மேல் கவனம் செலுத்த முடியவில்லை. நான் எடுத்துக் கொண்ட மருந்துகள் எனக்கு மனரீதியாக பிரச்னைகளை ஏற்படுத்தியது. எதைப் பார்த்தாலும் கோபம் வெறுப்பு வரும். அமைதியாக இருக்கவே முடியாது. அந்த காலக்கட்டம் நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். என்னால் வெளியே எங்கும் போக முடியாது. அப்படியே போனாலும் ஒரு ஓட்டலுக்குள் சென்று பிடிச்சதை சாப்பிட முடியாது.

காபி சாப்பிட்டாலும் முகம் வீங்கிடும். நான் என் பிரச்னை மற்றும் என் உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்துவதுன்னு தவித்தேன். அந்த சமயத்தில் கார்ட்டூன் எனக்கு கைக்கொடுத்தது. நான் வரைந்த கார்ட்டூன் உருவங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டேன். அதைப் பார்த்து பலர் என்னுடன் பேச ஆரம்பிச்சாங்க’’ என்றவர் படிப்படியாக இணையத்தை தனக்கான ஒரு தளமாக மாற்றி அமைத்துள்ளார்.

‘‘நான் இணையம் மூலமாக என் ஓவியங்களில் பல உணர்வுகளை வெளிப்படுத்திய போது ஒரு விளம்பரம் என் கண்ணில் பட்டது. அதாவது கலை சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும், அதற்கான ஒரு இடத்தினை நாம் இணையத்தில் அமைத்துக் கொள்ளலாம் என்பது தான் அந்த விளம்பரம். அதாவது இணையம் மூலம் நம் கலைப் பொருட்களை விற்பனை செய்யலாம். அது குறித்த நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும். விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.

அதன் பிறகு நான் எனக்கான கடையை திறந்தேன். அதில் இடம்பெற்ற ஒவ்வொரு பொருளும் என்னுடைய கைவண்ணத்தால் உருவானது என்று நினைக்கும் போது ரொம்பவே நெகிழ்ச்சியா இருந்தது. ஒரே மாதத்தில் எல்லா பொருளும் விற்று தீர்ந்தது. சென்னை மட்டுமில்ல பெங்களூர், ஐதராபாத், தில்லி, மும்பை ஏன் வெளிநாடுகளில் இருந்தும் என்னுடைய கலை பொருட்களை வாங்க ஆரம்பிச்சாங்க. அப்பதான் நான் சரியான முடிவு எடுத்து இருக்கேன் என்று நினைச்சேன்’’ என்ற நிகிதா தன் இணைய கடையை பற்றி விவரித்தார்.

‘‘எட்சி இந்தியா… இது இ-காமர்ஸ் இணையதளம். கலை சார்ந்த கலைஞர்களுக்காகவே இயங்கும் வலைத்தளம். இங்கு நிறைய கைவினைக் கலைஞர்கள் இருக்காங்க. இதில் உறுப்பினரா சேர்ந்த பிறகு ஒவ்வொருவருக்கும் ஒரு கடை கொடுத்திடுவாங்க. அதில் உங்கள் தயாரிப்புகள் புகைப்படமாக வெளியிடலாம். அதற்கான விலையும் நீங்களே நிர்ணயிக்கலாம்.

ஒருவேளை உங்க பொருட்களுக்கு தள்ளுபடி கொடுத்தால், அதையும் நீங்களே குறிப்பிடலாம். உலகம் முழுக்க உள்ளவர்கள் உங்களின் பொருட்களை பார்க்க முடியும். வாடிக்கையாளர்களுடன் நேரடியாக உரையாடலாம். சிலர் ஒரு பொருளைப் பார்த்து, அதே போல் அவர்கள் விருப்பம் போல் வடிவமைத்து தரச் சொல்வார்கள். இதன் மூலம் வாடிக்கையாளரின் வட்டம் உலகளவில் பெருகும்.

இடைப்பட்ட தரகர்கள் இல்லை என்பதால், லாபம் கணிசமாக பார்க்கலாம். வீட்டில் கைவினைப் பொருட்கள் செய்யும் அனைத்து பெண்களுக்கும் இந்த தளம் மிகவும் ஏற்றது. மேலும் இவர்களுக்கு என ஒரு குழு உள்ளது. அந்த குழுவின் வேலையே நம்முடைய பொருட்களை மேலும் எப்படி பெரிய அளவில் கொண்டு வரலாம்ன்னு ஆலோசனை தருவது தான். மேலும் கலை சார்ந்த எந்த செய்திகள் வந்தாலும் இதில் வெளியிடப்படும். அது நம்மை அப்டேட் செய்ய உதவும்’’ என்ற நிகிதா உணர்வுகளை அடையாளம் காணும் கலைப் பொருட்களை வடிவமைத்து வருகிறார்.

‘‘என்னைப் போல் அதே உணர்வுகள், பிரச்னைகள், கோபங்கள், வெறுப்புகள் மற்றும் சந்தோஷங்களை பலர் சந்தித்து இருப்பார்கள். இவை அனைத்தையும் என் கலை மூலம் நான் வெளியிடுகிறேன். அதன் மூலம் அவர்கள் தங்களை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு. அப்படித்தான் சென்னைப் பற்றி… அதில் என் வாழ்க்கை முறை குறித்து ஓவியங்கள் வரைந்து கொண்டு இருக்கிறேன்.

சென்னைவாசிகள் பலர் கண்டிப்பாக இந்த ஓவியங்களை தங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. சென்னை மற்றும் பெங்களூரில் இது வரை ஆறு கண்காட்சிகள் நடத்தி இருக்கேன். பிளாஸ்டிக் இல்லாத பொருட்கள் உருவாக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறேன். கலை சார்ந்த நிறைய விஷயங்களை உருவாக்கணும். எனக்கு தெரிந்த கலையை மற்றவர்களுக்கு சொல்லித் தரணும்’’ என்று தன் எதிர்கால கனவு குறித்து பட்டியலிட்டார் நிகிதா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகர் Jaishankar பற்றிய ஆச்சரியமான உண்மைகள் | KP!! (வீடியோ)
Next post உடலுறவில் ஆடவன் சந்திக்கும் பல்வேறு கட்டங்கள்!! (அவ்வப்போது கிளாமர்)