By 22 May 2021 0 Comments

ட்வின்ஸ்!! (மருத்துவம்)

அலாரம் எழுப்பாத என்னை அம்மாவின் ஃபில்டர் காபி மணம் எழுப்பி விடும். பித்தம்… தலை நரைக்கும்… தூக்கம் கெடும் என யார் என்ன காரணம் சொன்னாலும், காபியை ஒருநாளும் மறந்ததில்லை. அப்படிப்பட்ட எனக்கு காபி வாசனையே அலர்ஜியானது. கர்ப்ப கால மசக்கை ஆரம்பித்ததும், காபி வாசனை மட்டுமின்றி, காபி விளம்பரம் கூட வாந்தியை வரவழைத்த விந்தை நினைவிருக்கிறது. பிரசவமானதும் மயக்கம் தெளிந்து முதலில் நான் கேட்டதும் அதே காபிதான்.

கர்ப்பம் உறுதியாவதற்கு முன்பே ஆரம்பித்த மசக்கை, ஆபரேஷன் தியேட்டருக்குள் போகிற வரை நீடித்தது. வாந்தியை நிறுத்த மாத்திரை கொடுத்தார் டாக்டர். ஆனால், அந்த மாத்திரையின் வாசமும் வடிவமுமே வாந்தி உணர்வை மேலும் அதிகரித்துப் பாடாகப்படுத்தியது. முதல் 3 மாதங்கள் ரசம் மட்டுமே அமிர்தமாக இருந்தது. அடுத்த மூன்று மாதங்கள் தயிர்தேவாமிர்தமானது. கடைசி மாதங்களில் குழந்தைகளின் எடை கூடவே இல்லை என மருத்துவர் திட்டியதால் பனீர், வெண்ணெய், நெய், ஸ்வீட்ஸ் என திகட்டத் திகட்ட அம்மா எனக்குத் திணித்திருக்கிறார். இந்த புராணமெல்லாம் இப்போது எதற்கு என்கிறீர்களா? விஷயம் இருக்கிறது.

என் இரட்டையரில் ஒருவன் காபி பிரியன். இன்னொருவனுக்கு காபி வாசனை உவ்வே…’ஒருவனுக்கு தயிர் இன்றி ஒரு வாய் உணவு கூட உள்ளே போகாது. இன்னொருவனுக்கு தயிரை தள்ளி வைத்தால்தான் உணவே இறங்கும்.ஒருவன் பனீர், வெண்ணெய், நெய் எல்லாவற்றையும் `சமைக்க வேண்டாம் அப்படியே சாப்பிடுவேன்’ ரகம் என்றால், இன்னொருவனுக்கு அவற்றைப் பார்த்தாலே பற்றிக் கொண்டு வரும். ஒரே கருவறையில் ஒன்றாகத் தோன்றி, ஒன்றாக வளர்ந்து, என் உணவைப் பகிர்ந்து உண்டு வளர்ந்த இருவருக்குள் இத்தனை வித்தியாசங்களா என வியந்திருக்கிறேன்.

இருவரும் தானாக சாப்பிட ஆரம்பித்ததும் இட்லிக்கும் தோசைக்கும் தொட்டுக் கொள்ள பால் மட்டுமே கேட்பார்கள். என்னடா காம்பினேஷன் இது?’ என சலித்துக் கொண்டால், சூப்பரா இருக்கும்மா… நீயும் ட்ரை பண்ணு’ என்பார்கள். திடீரென ஒரு நாள் அந்த ருசி அப்படியே மாறிப் போனது. தோசைக்குத் தொட்டுக்க என்ன?’ என ஒருவன் கேட்டபோது, அதான் பால் இருக்கே…’ என்றேன். ஐயையே… நோ சான்ஸ்…’ என இரட்டை அதிர்ச்சி கொடுத்து, பால் இட்லி, பால் தோசைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

நினைவு தெரிந்த நாள் வரை இருவருக்கும் பள்ளிக்கு ஒரே மாதிரி டிஃபன் பாக்சில், ஒரே உணவை, ஒரே மாதிரி அளவில் கொடுத்துதான் எனக்கு வழக்கம். இரண்டு கைகளிலும் இரண்டு டப்பாக்களையும் வைத்து எடை சரியாக இருக்கிறதா என பார்ப்பார் என் கணவர். ஒருநாள் இருவருக்கும் மிகப்பிடித்த பொட்டேட்டோ ரைஸ்… இரண்டு டப்பாக்களும் ஒரு பருக்கை குறையாமல் அப்படியே திரும்பி வந்தது.

இனிமே ரெண்டு பேருக்கும் ஒரே லன்ச் கொடுக்காதே… ‘நீங்க ரெண்டு பேரும் ட்வின்ஸா’னு ஸ்கூலே கேட்குது. நாங்க ரெண்டு பேரும் பார்க்க ஒரே மாதிரி இல்லல்ல… அப்புறம் ஏன் லன்ச் மட்டும் ஒண்ணா கொடுக்கறே…’’ என போராட்டத்தில் குதித்து ஹைலைட் அதிர்ச்சி கொடுத்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை ஹோட்டல் நடத்தாத குறைதான்… இரண்டு பேருக்கும் இரண்டு விதமான மெனு… ஒருநாள் முடியவில்லை என அலுத்துக் கொண்டாலும், `அவனுக்குப் பிடிச்சதை பண்றே… அப்போ அவன் மட்டும்தான் உனக்குப் பையனா?’ என்கிற கேள்வி அஸ்திரம் ரெடியாக இருக்கும்.

இரட்டையரை இருவேறு தனி மனிதர்களாக நடத்துங்கள் என்கிற விதிதான் இந்த விஷயத்துக்கும் பொருந்தும். இருவருக்கும் ஒரே மாதிரியான உணவுகள்தான் பிடிக்கும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம். உணவு என்பது உணர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயம்தான்…’’ என்கிறார் மனநல மருத்துவர் சுபா சார்லஸ். இரட்டையரின் உணவு விருப்பத்துக்கும் பழக்கத்துக்குமான பின்னணி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்கிறார் அவர்.

ஒரே உணவு இருவருக்கும் பிடிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அவனுக்குப் பிடிக்கும்போது… உனக்கென்ன?’ என்கிற கேள்வியைத் தவிருங்கள். எல்லா உணவுகளையும் ருசி பார்க்கிற குழந்தையைப் பாராட்டுங்கள். அதே நேரம் தொடவே மாட்டேன் என அடம்பிடிக்கிற இன்னொரு குழந்தையை நிந்திக்காதீர்கள்.குழந்தைகளாக இருக்கும் போது, ஒரு குழந்தை சாப்பிடுவதைப் பார்த்து இன்னொரு குழந்தையும் சாப்பிடும். ஒரு குழந்தை வேண்டாம் என மறுத்தால், அதை ருசிகூடப் பார்க்காமல் இன்னொன்றும் மறுக்கும்.

ஐடேன்ட்டிகல் ட்வின்ஸ் எனப்படுகிற ஒத்த இரட்டையரின் உணவு விருப்பங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதைப் பார்க்கலாம். ஆனால், மற்ற இரட்டையரிடம் அதை எதிர்பார்க்க முடியாது. இருவரையும் தனித்தனியே என்ன வேண்டும் எனக் கேட்டு சமைத்துக் கொடுப்பதில் தவறில்லை. அப்படி சமைக்கிற போது அந்த உணவைப் பற்றி, அதிலுள்ள சத்துகள் பற்றியெல்லாம் சொல்லிக் கொடுக்கலாம். புதிய உணவுகளை சமைத்துத் தருவதோடு, இருவருக்கும் பிடிக்கிற மாதிரியான புதுமையான முறைகளில் சமைத்துக் கொடுக்கலாம்.

உணவின் மீதான விருப்பம் என்பது மரபணுக்களுடனும் நெருங்கிய தொடர்புடையது. தவிர, அம்மா ஒரு உணவை எத்தனை நாட்களுக்கொரு முறை சமைத்துக் கொடுக்கிறார் என்பதையும் பொறுத்தது. ஒரு குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட உணவு பிடித்துப் போக, அதை 15 முறைகளாவது சமைத்துத் தர வேண்டும் என்கிறது உளவியல். கடைசியாக ஒரு விஷயம்… இரட்டையரின் எல்லா விருப்பு வெறுப்புகளும் அவ்வப்போது காலத்துக்கேற்ப மாறிப் போவதைப் போல, உணவுத் தேர்வும்கூட ஒரு கட்டத்தில் மாறும்’’ என்கிறார்.

பார்வதியின் டிப்ஸ்

எல்லாம் நல்லதாவே நடக்கும்… இதைத்தான் நான் கர்ப்ப காலம் முழுக்க எனக்கான மந்திரமா சொல்லிக்கிட்டேன். எங்கம்மா பயந்தபோது அவங்களுக்கே நான்தான் தைரியம் சொன்னேன். அந்த தைரியம்தான் பிரசவ வலியைக் கூட இல்லாமச் செய்து, சுகப்பிரசவத்தை எனக்கு சாத்தியப்படுத்தினதா நம்பறேன். நல்ல நம்பிக்கையும் தைரியமும்தான் கர்ப்பம் சுமக்கிற எல்லா பெண்களுக்குமான முதலும் முக்கியமுமான மருந்துகள்!’’

இரட்டை வரம் இது!

‘`‘ஒரு வேளை நமக்கு ட்வின்ஸா இருந்தா… எப்படி இருக்கும்? என்ன பண்ணுவே?’னு கேட்டார் என் கணவர். அப்ப எனக்கு பீரியட்ஸ் தள்ளிப் போயிருந்தது. டாக்டரை பார்க்கற ஐடியாவுல இருந்தோம். கர்ப்பமே உறுதியாகலை… அதுக்குள்ள ஆசையைப் பாருனு மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டேன். அடுத்த நாள் டெஸ்ட் பண்ணினதுல ட்வின்ஸ்னு சொன்னா எனக்கு எப்படி இருந்திருக்கும்னு நினைச்சுப் பாருங்க…’’ – கணவரின் வார்த்தைகள் அருள்வாக்காக பலித்ததில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பார்வதிக்கு பெருமிதமும் பேரதிர்ச்சியும்.

டீச்சர் ட்ரெயினிங் முடிச்சிருக்கேன். கல்யாணமாகி முதல் 2 வருஷங்களுக்குக் குழந்தை இல்லை. பீரியட்ஸ் சரியா இல்லை. குழந்தையில்லைனு டாக்டரை பார்த்தப்ப, முதல்ல பீரியட்ஸை முறைப்படுத்த ட்ரீட்மென்ட் எடுக்கணும்னு மாத்திரைகள் கொடுத்தாங்க. அதுல எந்த முன்னேற்றமும் இல்லை. அப்புறம் மாத்திரைகளை நிறுத்திட்டேன். அப்புறம் திடீர்னு ஒருநாள் கர்ப்பமா இருப்பேனோனு ஒரு சந்தேகம் வந்தது. அப்பவே 5 மாசம் ஆயிருந்தது. நாளைக்கு எதுக்கும் டெஸ்ட் எடுத்துப் பார்த்துடலாம்னு பேசிட்டிருந்தப்பதான் என் கணவர், ‘ரெட்டைப் புள்ளையா இருந்தா என்ன பண்ணுவே’னு கேட்டார். அடுத்த நாள் டெஸ்ட்டுல கர்ப்பம் உறுதியாச்சு. கவர்மென்ட் ஆஸ்பத்திரியில ஸ்கேன் பண்ணினோம்.

ட்வின்ஸ் மாதிரி தெரியுது… எதுக்கும் பிரைவேட் ஆஸ்பத்திரியில ஒருவாட்டி பண்ணிடுங்க’னு சொன்னாங்க. அப்பவும் நம்பிக்கை இல்லாமத்தான் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரியில ஸ்கேன் பண்ணினோம். ட்வின்ஸ்னு உறுதியாச்சு. என் குடும்பமே என் பக்கத்துல இருந்தது. அத்தனை பேர் கண்கள்லயும் ஆனந்தக் கண்ணீர்… அம்மாவுக்கு மட்டும் கொஞ்சம் பயம்… ரெண்டு புள்ளைங்களை எப்படி சுமக்கப் போறே… எப்படி நல்லபடியா பெத்தெடுக்கப் போறேனு கவலைப்பட்டாங்க. ஆனாலும், எல்லா கஷ்டங்களையும் கடந்து டெலிவரி வரைக்கும் வந்தாச்சு. வேலூர் சி.எம்.சியில டெலிவரி… பிரசவ வலியே இல்லாம ஆஸ்பத்திரிக்கு போனேன். பிபி அதிகமாச்சு… ஆனாலும், அமைதியா இருந்தேன். சுகப்பிரசவத்துல ரெண்டு ஆண் குழந்தைகளும் நல்லபடியா பிறந்தாங்க.

ரெட்டைக் குழந்தைங்க பிறந்த சந்தோஷத்தை முழுமையா அனுபவிக்க முடியலை. காரணம், அப்போ என் கணவர் என் பக்கத்துல இல்லை. வேலை விஷயமா வெளியூர் போனவர்கிட்ட போன்லகூட பேச முடியலை. எங்க இருக்கார்னே தெரியலை. 20 நாள் கழிச்சுதான் வீட்டுக்கு வந்து என்னையும் பிள்ளைங்களையும் பார்த்தார். ஆஸ்பத்திரியில எல்லா லேடீஸுக்கும் அவங்கவங்க கணவர் வந்து பக்கத்துல உட்கார்ந்திருக்கிறதைப் பார்க்கிறப்ப ஏக்கமா இருக்கும். எனக்கு எங்கம்மாதான் கூடவே இருந்தாங்க.

ரெண்டு பேர்ல ஒருத்தன் ஒன்றரை கிலோதான் இருந்தான். இன்னும் 300 கிராமாவது எடை கூடினாதான் குழந்தையை வீட்டுக்கு அனுப்புவோம்னு சொல்லிட்டாங்க. 17 நாள் ஆஸ்பத்திரியில இருந்தோம். ரெண்டு குழந்தைங்களையும் தனித்தனியா வச்சிருந்தாங்க. கடவுள் புண்ணியத்துல எனக்கு நிறைய தாய்ப்பால் இருந்தது. அந்த ஆஸ்பத்திரியில என்கூடப் பிரசவமாகி, பால் இல்லாத பல பெண்களோட குழந்தைங்களுக்கு நான் தாய்ப்பால் கொடுத்தேன். அதை நினைச்சா இப்பகூட பெருமையா இருக்கும்.

வீட்டுக்கு வந்ததும் அப்பா, அம்மா, அக்கா, தங்கச்சினு ஒரு பெரிய கூட்டமே எனக்கு உதவியா இருந்தாங்க. ஒன்றரை வருஷம் அம்மா வீட்ல இருந்தேன். அப்புறம் மாமியார் வீட்டுக்கு வந்தேன். இப்ப என் பசங்க ஹிமானிஷ், ஹித்தேஷுக்கு 4 வயசாகுது. நான் மட்டுமே தனியா பார்த்துக்கறேன். ரெட்டைக் குழந்தைங்களை தனி மனுஷியா வளர்க்கிறதுங்கிறது ரொம்பப் பெரிய சவால்.

ஆனாலும், அதை நான் விரும்பி ஏத்துக்கிட்டேன். வேற வேற விருப்பங்களோடவும், வேற வேற குணாதிசயங்களோடவும் ஒரே நேரத்துல ரெண்டு குழந்தைங்களை வளர்க்கிற அந்த அனுபவத்தை ரசிக்கிறேன். கடவுள் எனக்குக் கொடுத்த இரட்டை வரம் இது… வாழ்க்கையில இதைவிட பெரிசா வேற எதுவுமே வேணாம்னு ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமா கடந்துக்கிட்டிருக்கேன்…’’ என்கிற பார்வதியின் பார்வையும் பேச்சும் பாசம் உணர்த்துகின்றன!Post a Comment

Protected by WP Anti Spam