ஆராரோ ஆரிரரோ… கண்ணே நீ கண்ணுறங்கு…! (மருத்துவம்)

Read Time:7 Minute, 11 Second

‘ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ…
கண்ணே கண்மணியே
ஆரடிச்சு நீ அழுதே
அடிச்சாரை சொல்லியழு
ஆராரோ ஆரிரரோ…

இந்த தாலாட்டு பாடல்களை கேட்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தாய் தனது குழந்தையை தொட்டிலில் இட்டு ஆட்டியோ அல்லது மடியில் வைத்து அசைத்தபடியோ பாடுவது தாலாட்டு பாடல் ஆகும். வாட்ஸ் அப் காலமான இன்று தாலாட்டு பாடி குழந்தைகளை தூங்க வைப்பது அரிதான ஒன்றாகி விட்டது. ஆனால் கிராமப்புறங்களில் இன்னும் ஒரு சில பாட்டிமார்கள் இரவு நேரங்களில் தாலாட்டு பாடி குழந்தைகளை தூங்க வைக்கின்றனர். இத்தாலாட்டில் குழந்தை மட்டுமல்ல, பாட்டை கேட்கும் அனைவரும் சிறிதுநேரத்தில் கண்ணயர்ந்து தூங்கி விடுவர்.

தாலாட்டு பாடல்கள் பற்றி புத்தகமோ, சிடியோ இல்லாததால் இன்றைய தாய்மார்களிடம் இருந்து விடை பெற்று கொண்டிருக்கிறது தாலாட்டு பாடல். தனிக்குடித்தனம், அழும் குழந்தைகளை அமைதிப்படுத்த கிடைத்திருக்கும் விஞ்ஞான கருவிகள், தாலாட்டு பாட வெட்கப்படும் பெண்களின் மனப்பான்மை போன்ற காரணங்களால் தாலாட்டு பாடல்கள் 90 சதவீதம் மறைந்தே போய் விட்டன. ஒரு தாய் தனது குழந்தையை தொட்டிலிட்டு தனக்கு தெரிந்த ஒரு சில வரிகளை வைத்து தாலாட்டு பாடினார். குழந்தை தூங்கவில்லை.

மேற்கொண்டு தாலாட்டு பாட வரிகள் தெரியாததால் வேறு வழியில்லாமல் திடீரென அட்ரா.. அட்ரா.. நாக்குமுக்கா.. நாக்குமுக்கா.. அட்ரா அட்ரா.. நாக்குமுக்கா.. நாக்குமுக்கா என சினிமா பாடலை பாட ஆரம்பித்துவிட்டார். குழந்தை தூங்கியதோ இல்லையோ.. இந்த பாடலை கேட்டதும் அனைவரும் வயிறு குலுங்க சிரித்து விட்டனர்.‘தால்’ என்றால் தொட்டில் என்று பொருள். ‘ஆட்டு’ என்பது முன்னும், பின்னும் அசைத்தல். அதனாலேயே தாலாட்டு என்ற பொருள் வந்தது. தாலாட்ட ஆரம்பத்தில் இருந்து குழந்தை கண்ணயர்ந்து தூங்கும் வரை, தாலாட்டுப் பாடலின் நீளம் அமைகிறது. தூங்கி விட்டால் பாடல் முடிந்துவிடும்.

பள்ளி பக்கமே எட்டிப்பார்க்காத, எழுதப்படிக்க தெரியாத தாய்மார்களுக்குகூட தாலாட்டு பாடல் தெரிகிறதே. அது எப்படி? ஒருவர் பாடி கொண்டிருக்கும்போது கேட்டு கொண்டிருக்கும் இன்னொருவர் அப்படியே மனதில் வாங்கி பாடிப்பாடி பழகி விடுகின்றனர். ஒருவர் பாடியது போன்று அப்படியே பாட வேண்டும் என்று அவசியமில்லை. தனக்கு தெரிந்த வரிகளை கொண்டும் பாடலாம். ஏட்டில் எழுதப்படாமல், எழுத்து வழியாக வராமல் பாடிப்பாடி வாய்வழியாக பரவும் பாட்டே நாட்டுப்புறப்பாட்டு. தாலாட்டு பாடலில் புகுந்த வீட்டு பெருமை, தாய்மாமனின் சிறப்பு, பிறந்த வீட்டு பெருமை குறித்து தாய்மார்கள் பாடுகின்றனர். இங்கு சில தாலாட்டு பாடல்களை பார்ப்போம்.

கொழும்புல கூடாரம் – உங்க மாமா
கொத்தமல்லி வியாபாரம்
(ஆராரோ ஆரிரரோ)
கொத்தமல்லி வித்தெடுத்து – உங்க மாமா
கொலுசு பண்ணி வாராராம்
(ஆராரோ ஆரிரரோ)
மதுரையில கூடாரம் – உங்க மாமா
மல்லிகைப்பூ வியாபாரம்
(ஆராரோ ஆரிரரோ)
மல்லிகைப்பூ வித்தெடுத்து – உங்க மாமா
மாலை பண்ணி வாராராம்
(ஆராரோ ஆரிரரோ)
பழநியிலே கூடாரம்- உங்க மாமா
பஞ்சாமிர்தம் வியாபாரம்
(ஆராரோ ஆரிரரோ)
பஞ்சாமிர்தம் வித்தெடுத்து உனக்கு
பட்டு சேலை வாங்கி வாராராம்…
(ஆராரோ ஆரிரரோ)

இவ்வாறு தாலாட்டு பாடல்களில் தாய்மார்கள் தங்களின் அண்ணனை பற்றி பாடி தங்களது குழந்தைகளை தூங்க வைக்கின்றனர்.
தன் மகனுக்கு எப்படியெல்லாம் தொட்டில் கட்ட வேண்டும் என்று கீழ்கண்ட தாலாட்டு பாடலில் தாய் விவரிக்கிறாள்.

பட்டாலே தொட்டில்
பவளத்தால் கொடிக்கயிறு
பட்டுத் தொட்டிலிலே – என்
பாக்கியமே கண் அசரு…
பச்சை இலுப்பை வெட்டி
பால் வடிய தொட்டில் கட்டி
பாக்கு மரம் வெட்டி
பளபளப்பாய் தொட்டில் செய்து
பளபளக்கும் தொட்டிலிலே – என்
பாலகனே கண் அசறு…! – என்று பாடுகிறாள்.

பாடல்கள் பலவிதம் பாடல்களில் பலவகையான பாடல்கள் உண்டு.

1. தாலாட்டு 2. விளையாட்டு 3.தொழில் 4.சடங்கு 5.கொண்டாட்டம் 6. வழிபாட்டு 7.ஒப்பாரி.

பிறந்த குழந்தைக்கு பாடுவது தாலாட்டு பாடல்.
வளர்ந்து பிள்ளையாக விளையாடும்போது பாடுவது விளையாட்டு பாடல்.
களைப்பு தெரியாமல் இருக்க வேலை செய்யும்போது பாடும் பாடல் தொழில் பாடல்.
திருமணம் மற்றும் பிற நிகழ்வுகளில் பாடுவது சடங்கு பாடல்.
உற்சாக தினங்களில் பாடுவது கொண்டாட்ட பாடல்.
சாமி கும்பிடும்போது பாடுவது வழிபாட்டு பாடல்.
இறந்தோருக்கு பாடுவது ஒப்பாரி பாடல்.

இப்படி தமிழர் வாழ்வின் ஒவ்வொரு நிலைக்கும் பாடல் உண்டு. கிராமத்து மக்களின் வாழ்வியலில் இருந்து கூட இன்றைய காலகட்டத்தில் தாலாட்டுப் பாடல்கள் விடைபெற்று விட்டன. இத்தகைய தாலாட்டுப் பாடல்களை சேகரித்து சிடிக்களில் வெளியிட்டால் அது தலைமுறைகளை தாண்டியும் நிலைத்து நிற்க வாய்ப்புள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்படிக்கு காலம்’: ஹிரோசிமா- நாகசாகி அணுகுண்டுத் தாக்குதல் – பின்னணி என்ன? (வீடியோ)
Next post ட்வின்ஸ்!! (மருத்துவம்)