By 29 May 2021 0 Comments

சில குழந்தைகளுக்குத் தலை பெரிதாக இருப்பது ஏன்? (மருத்துவம்)

‘பெரிய தலையுள்ள குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்ற பெற்றோர்’ என்ற செய்தி சமீபத்தில் ஊடகங்களில் வெளிவந்து மனதை கனக்கச் செய்தது. பெரிய தலையுடன் பிறப்பதென்பது பிரச்னையின் அறிகுறியா? சிலகுழந்தைகள் ஏன் இதுபோல் பெரிய தலையுடன் பிறக்கிறார்கள்? குழந்தைகள் நல மருத்துவர் லக்ஷ்மி பிரசாந்த்திடம் கேட்டோம்.

‘‘மேலோட்டமாகப் பார்த்தால் இது எங்கேயோ நடக்கிற பிரச்னை மாதிரிதான் தோன்றும். ஆனால், நம் ஊரிலும் அடிக்கடி இந்த சம்பவங்களைப் பார்க்க முடிகிறது. தலை ஏன் பெரிதாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் முன் நம்முடைய தலையின் அமைப்பைக் கொஞ்சம் பார்ப்போம். பல்வேறு எலும்புகள் ஒன்றிணைந்துதான் கபாலம் என்ற மண்டையோட்டை உருவாக்குகிறது. இந்த மண்டையோட்டுக்குள் மூளையைப் பாதுகாக்கும் Cerebrospinal fluid (CSF) என்கிற திரவம் இருக்கிறது.

கபாலத்தை உருவாக்கும் எலும்புகள் ஒழுங்கின்மையோடு அமைந்துவிட்டாலோ அல்லது சி.எஸ்.எஃப் திரவம் அதிக அளவில் சுரந்தாலோ குழந்தைகளுக்குத் தலை பெரிதாக அமைந்துவிடும். வழக்கமாக, இந்த சி.எஸ்.எஃப் திரவத்தின் அளவு 65 – 150 மி.லி. தான் இருக்க வேண்டும். இந்த அளவைத் தாண்டி அதிகமாகிவிட்டால் தலைக்குள் ஏற்படும் அழுத்தம் காரணமாக தலை பெரிதாகிவிடும். (பெரியவர்களுக்கு இந்த CSF திரவம் 500 மி.லி. வரை இருக்கும்.)

வைட்டமின் டி மற்றும் கால்சியம் குறைபாடு, ஹைபோதைராய்டு பிரச்னை, மரபியல் ரீதியான காரணங்கள், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் Torch என்கிற நுண்கிருமியால் ஏற்படும் நோய்த்தொற்று, பிறந்த பிறகு ஏற்படுகிற மூளைக்காய்ச்சல், மூளைக்குள் ஏற்படுகிற ரத்தக்கசிவு, சரியாக மூளை வளர்ச்சி இல்லாமல் இருக்கும் சிண்ட்ரோம், ரிக்கெட்ஸ் போன்ற காரணங்களால் தலை பெரிதாக மாறிவிடுகிறது. இந்தக் குறைபாடு பிறவியிலேயே அமையலாம் அல்லது குழந்தைகள் வளர்கிற காலத்தில் எந்த வயதிலும் உருவாகலாம்.

பிறந்த பிறகு தலையின் அளவு அதிகமாகும் குழந்தைகளை, சில அறிகுறிகளை வைத்துக் கண்டுபிடிக்க முடியும். குழந்தை சரியாக பால் குடிக்காமல் அடம்பிடிக்கும். சாதாரணமாக மூன்று மாதங்களில் குழந்தைகளுக்குத் தலை நிற்கும். இந்த குழந்தைகளுக்கு இன்னும் கொஞ்சம் தாமதமாகும். இந்த அறிகுறிகளுடன் மிகவும் சோம்பலாக இருப்பது, பார்வைக் குறைபாடு, சில நேரங்களில் வலிப்பு ஏற்படுவது, தாமதமாக எல்லா காரியங்களையும் செய்வது போன்ற அறிகுறிகளும் தெரியலாம்.

பெற்றோர் குழந்தையுடனேயே இருப்பதால் தலையின் அளவு நுட்பமாக அளவு மாறுவது தெரியாது. அதனால், இந்தப் பிரச்னையில் குழந்தைகள் நல மருத்துவர்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் குழந்தை தடுப்பூசி போட்டுக் கொள்ள வருகிறபோது குழந்தையின் எடை, நீளம் போன்ற மற்ற சோதனைகளுடன் Serial head circumference monitoring என்ற தலையின் சுற்றளவை அளக்கும் சோதனையையும் தவறாமல் செய்ய வேண்டும். தலையின் அளவில் வித்தியாசம் தெரிந்தால் நரம்பியல் மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் மூளையின் அளவை ஸ்கேன் செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். கருவிலேயே இந்தக் குறை கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், குழந்தை பிறந்த 4 மாதங்களுக்குள் அறுவை சிகிச்சை செய்து குணமாக்கிவிடலாம். தலையில் CSF அதிக அளவு இருப்பது தெரிந்தாலோ அல்லது வெளியேறாமல் தேங்கியிருப்பதைக் கண்டுபிடித்தாலோ அதற்கு VP Shunt என்ற குழாயை அறுவை சிகிச்சையின் மூலம் இணைத்து விடுவார்கள்.

இதன் மூலம் தலைக்குள் ஏற்படும் அழுத்தம் வயிற்றுக்கு வந்து வெளியேறிவிடும். குழந்தை வளர வளர Shunt குழாயின் அளவை மாற்ற வேண்டும் என்பதால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவரிடம் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். சில குறைபாடுகளை மருந்துகள் மூலமே சரி செய்ய முடியும்.

இப்போது இந்தப் பிரச்னை பற்றிய விழிப்புணர்வு மருத்துவர்களிடம் அதிகமாக இருக்கிறது. கருவிலேயே கண்டுபிடிக்கும் அல்ட்ராசவுண்ட் போன்ற கண்டுபிடிப்பு முறைகளும் சிகிச்சைகளும் நிறைய இருக்கின்றன. டார்ச் நோய்த்தொற்றை வராமல் தடுக்க தடுப்பூசிகள் இருக்கிறது. அதனால் கவலைப்பட வேண்டியது இல்லை’’ என்று நம்பிக்கை தருகிறார் லக்ஷ்மி பிரசாந்த்.Post a Comment

Protected by WP Anti Spam