By 25 May 2021 0 Comments

மினியேச்சர் திருக்குறள்!! (மகளிர் பக்கம்)

கையும், வாயும் பெண்ணுக்கு அடக்கமாக இருக்க வேண்டும் என்பது அந்தக் கால சொல் வழக்கு. சாதனை எனும் ஒற்றைச் சொல் இன்றைய இளைய சமுதாயத்தின் தவிர்க்க முடியாத கருப்பொருள் ஆகியுள்ள நிலையில், கணக்கு டீச்சர் ஒருவர் படைத்துள்ள சாதனை பிரமிப்பாக உள்ளது. 4.3 சென்டி மீட்டர் துண்டு பேப்பரின் முன் பக்கம் 10, மற்றும் பின் பக்கம் 10 என 20 திருக்குறள் வீதம் 68 துண்டு பேப்பர்களில் 1,330 திருக்குறளையும் எழுதி, நூலாக நேர்த்தியாக வடிவமைத்து உள்ள சிந்துவின் திறமையை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது. நூல் வடிவமைப்புக்கு ஒரு பாராட்டு என்றால், அந்த துண்டு பேப்பரின் ஒரு பக்கத்தில் எப்படி 10 குறளை எழுத முடிந்தது எனும் திகைப்பு ஏற்பட தான் செய்கிறது.

ஒன்றரை வரியில் ஒரு கருப்பொருள் என உலகின் அனைத்து செயல்களுக்கும் 1,330 குறளில் விளக்கம் அளித்த புலவர் ஒருவர் மட்டுமே என புகழப்படும் திருவள்ளுவரே, சிந்து வடிவமைத்த நூலை பார்த்தால் திகைத்துப் போவார் என்பது தான் நிதர்சமான உண்மை. ஐந்து செ.மீ அளவில் ஏற்கனவே திருக்குறள் வெளியாகி உள்ள நிலையில் அதைக் காட்டிலும் குறைவாக 4.3 செ.மீல் உருவாக்கியுள்ளார் சிந்து. சென்னை புழலில் கணவருடன் வசித்து வரும் இவர், மத்திய அரசு பள்ளியில் கணக்கு டீச்சராக தற்காலிக பணியில் உள்ளார். கணவர் ராஜேஷ், சொந்தமாக டீக்கடை நடத்தி வருகிறார். கணக்கு பாடத்தில் சிந்து புலி. அதான் திறமையாக கணக்கிட்டு மினியேச்சர் (குட்டி) திருக்குறள் புத்தகத்தினை உருவாக்க முடிந்துள்ளது. இவர் வடிவமைத்த மினியேச்சர் திருக்குறள் புத்தகம் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பெற்றுள்ளது.

அவரது புத்தகம் சாதனைப் பட்டியலில் இடம் பெற்று இருக்கும் சந்தோஷத்தில் இருக்கும் சிந்து அவரின் சாதனை பற்றி பேச துவங்கினார். ‘‘பள்ளியில் படிக்கும்போது, சீனியர் மாணவி ஒருவர், 1,330 குறளும் இடம் பெற்ற விதமாக திருவள்ளுவர் ஓவியம் ஒன்றை வரைந்திருந்தார். அந்த ஓவியம் பள்ளியில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டு இருந்தது. அதைப் பார்த்த போது தான் எனக்கும் ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் என்ன என்று எனக்கு பெரிய அளவில் சிந்தனை எல்லாம் இல்லை. ஆனால் திருக்குறள் சார்ந்து செய்ய வேண்டும் என்பது மட்டும் என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. அந்த தாக்கம் தான் மினியேச்சர் திருக்குறள் உருவாக காரணமாக இருந்தது என்று சொல்லலாம். தீப்பெட்டி அளவில் பேப்பர்களை துண்டு
களாக செய்து, அதில் ஒரு பக்கம் பத்து திருக்குறள் என எழுதினேன்.

இது நடந்தது 2003ம் ஆண்டு. அப்ப நான் மாணவி என்பதால், இது ஒரு சாதனையாக போற்றப்படும் என்று எல்லாம் எனக்கு தெரியவில்லை. என்னுடைய ஆசைக்கு சாதனை செய்ய வேண்டும் என்று செய்தேன். அவ்வளவு தான். அதன் பிறகு அந்த புத்தகத்தை என் அலமாரியில் வைத்து பூட்டிவிட்டேன். அவ்வளவு தான் அதன் பிறகு அது பற்றி முற்றிலும் மறந்துவிட்டேன்’’ என்றவர் அவரின் சாதனை தற்போது உலகிற்கு தெரிய வர அவரின் அக்கா மகன் தான் காரணமாம். ‘‘கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகளாக அந்த நூல் என்னுடைய அலமாரியில் தான் இருந்தது. அது குறித்து எனக்கு நினைவும் இல்லை. இந்த சமயத்தில் தான் என் அக்கா மகனான ஹரி கிருஷ்ணன் மினியேச்சர் செயற்கைகோள் மாடல் ஒன்றை உருவாக்கினான். அதற்கு அவனுக்கு சாதனையாளர் விருது கிடைத்தது. அதைப் பார்த்த போது தான் என்னுடைய மினியேச்சர் திருக்குறள் குறித்து நினைவு வந்தது.

உடனே என்னுடைய அலமாரியை ஆராய்ந்தேன். நல்ல வேளை நான் எப்படி அதில் வைத்து இருந்தேனோ அதே போல் அந்த புத்தகம் எந்த பாதிப்பு இல்லாமல் இருந்தது. உடனே அதை தூசி தட்டி எடுத்து வைத்தேன். அதன் பிறகு அதை என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. என் தாய் மாமா தான் இந்திய அளவிலான புத்தக அறக்கட்டளைக்கு சாதனைப் பட்டியலில் அனுப்பி வைக்கலாம் என்று சொன்னவர், அதற்கான உதவியும் செய்தார். ஆனால் அந்த நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, ஊரடங்கு அமலுக்கு வந்ததால், என் புத்தகம் குறித்த விவரங்கள் எல்லாம் அப்படியே முடங்கிபோயின. இப்போது இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், கடந்த மாத இறுதியில் அந்த நிறுவனத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

என்னுடைய திருக்குறள் மினியேச்சர் புத்தகத்திற்கு சாதனை விருது கிடைத்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டார்கள்’’ என்று சொல்லும் போதே சிந்துவின் குரலில் சாதனை பெற்ற சந்தோஷத்தை உணர முடிந்தது. ‘‘நான் கணித ஆசிரியையாக இருந்தாலும், எனக்கு கதை எழுதுவதிலும் ஆர்வம் உண்டு. அதனால் எனக்கு நேரம் கிடைக்கும் போது, சிறுகதை, கவிதை எழுதுவதுன்னு என் கற்பனைத் திறனை வளர்த்துக் கொண்டேன். நான் எழுதிய நாவல்களை புத்தகமாக பதிப்பகம் மூலம் வெளியிட்டு இருக்கேன். மேலும் ஆல் இந்தியா ரேடியோவில் கதை வாசிப்பு நிகழ்ச்சியும் நான் தொகுத்து இருக்கேன்’’ என்றவர் தன்னால் முடிந்த அளவு சமூகத்திற்கு உதவி செய்து வருகிறார்.

‘‘கணக்கு எல்லாருக்கும் கொஞ்சம் சிக்கலான பாடம். அதனால் நான் பள்ளியில் சொல்லித் தருவது மட்டுமில்லாமல் வீட்டிலும் டியூஷன் எடுத்து வருகிறேன். அதில் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் எடுக்கிறேன். ‘ஜர்னி வித் மேத்தமேட்டிக்ஸ்’ எனும் யு-டியூப் சேனல் தொடங்கி, அதில் கணக்கு பாடத்தை அனைவருக்கும் இலவசமாக சொல்லிக் கொடுக்கிறேன்’’ என்றார் சிந்து.Post a Comment

Protected by WP Anti Spam