By 25 May 2021 0 Comments

குடும்பம் என்கிற அமைப்பு எல்லோருக்கும் வேண்டும்!! (மகளிர் பக்கம்)

ஒரு தேநீர் இடைவேளையில் டீ குடிக்கும் நேரத்தில் உதயமானதுதான் ‘கல்யாணமாலை’ நிகழ்ச்சிக்கான விதை எனப் பேசத் தொடங்கிய மீரா நாகராஜன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கல்யாணமாலை நிகழ்ச்சியின் இயக்குநர் மற்றும் பேச்சாளர்.

1999ல் சன் தொலைக்காட்சியில் தொடங்கிய நிகழ்ச்சி 21 ஆண்டுகளையும், 1020 எபிசோட்களையும் கடந்து அதே சுவாரஸ்யம் குன்றாமல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. தொலைக்காட்சி வழியாகத் தங்கள் திருமண சேவையை வெற்றிகரமாகச் செய்து, 5 லட்சத்திற்கும் அதிகமான திருமணங்களை நடத்தி, சிறந்த ஆளுமையாக வலம் வரும் மீரா நாகராஜனை அவரது அலுவலகத்தில் சந்தித்தபோது…

நிகழ்ச்சியின் ஆரம்ப கட்டம் குறித்து…

நாங்கள் கூட்டுக் குடும்பம். காட்சி ஊடகத்தில் முதன் முதலில் மேட்ரிமோனியல் சர்வீஸ் தொடங்க நினைத்தது என்னோட கான்செப்ட். திரைத்துறை சார்ந்து கிரியேட்டிவிட்டி, புரொடக்‌ஷன்னு இயங்கிய நேரம் அது. சின்னத் திரைக்கும் ‘டெம்பிள்ஸ் ஆஃப் இந்தியா’, ஃபெஸ்டிவெல்ஸ் ஆஃப் இந்தியா’ என நிகழ்ச்சிகளைத் தயாரித்து அனுப்பிக் கொண்டிருந்தோம். என் கணவரின் மூத்த அண்ணன் ‘பிரமிட் நடராஜன்’. கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர்.

இரண்டாவது அண்ணன் கல்யாணமாலை மோகன் சார். எனது கணவர் நாகராஜன் மூன்றாவது.சன் டி.வி தொடங்கிய நேரம். சின்னத் திரையில் சீரியல்கள் அதிகமாக இல்லாத காலம் அது. நாம் ஏன் வரன்களை டி.வி.யில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை பண்ணக்கூடாது என நினைத்தேன். பிரமிட் நடராஜன் சார் இது ரொம்ப நல்ல கான்செப்ட் நாமே தயாரிக்கலாம் எனச் சொல்ல, மோகன் சார் வழிமொழிந்தார்.

இந்த நிகழ்ச்சி இவ்வளவு சக்சஸாகப் போகும்னு 21 வருடத்திற்கு முன்பு நான் யோசிக்கக் கூட இல்லை. ஜோடி பொருத்தம், பெப்சி உங்கள் சாய்ஸ், அரட்டை அரங்கம் போன்ற பாப்புலரான நிகழ்ச்சிகள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரம் அது. கான்செப்ட்டை சன் டிவி இயக்குநர் கலாநிதி மாறன் சாரிடம் கொடுத்து முதல் 13 எபிசோட்டுக்கு அனுமதி வாங்கி, ‘சின்னத் திரை மூலம் வரன் அறிமுகம்’ என்றுதான் களத்தில் இறங்கினோம்.

‘உறவுக்குள்ளே திருமணம்… பெண் பார்த்து திருமணம்.. பத்திரிகைகளில் பார்த்து திருமணம்.. தரகர்கள் மூலம் திருமணம்… காதலித்து திருமணம்… இப்போது தொலைக்காட்சி மூலமாகத் திருமணம்..’ என்கிற முதல் புரோமோவை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சார் இயக்க, கான்செப்ட் ரெடி. புரோமோ ரெடி. பெயர்..?! வாயில் நுழைகிற மாதிரி எளிமையா இருக்க வேண்டும் என நினைத்தபோது, கவிதாலயா நிறுவனத்தின் பிரபலத் திரைப்படப் பாடல்

‘கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே’ பாட்டில் இருந்து ‘கல்யாண மாலை’ என்கிற தலைப்பை அனந்து சார் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்.

‘கல்யாண மாலை’ மோகன் சாரோடு அமைந்த வெற்றிக் கூட்டணி குறித்து?

நிகழ்ச்சியைத் துவங்கும்போது, ஒரு பெண்ணுக்கு குடும்ப உறவுகளான தாத்தா, சித்தப்பா, பெரியப்பா, மாமான்னு யாராவது ஒருத்தர், பெண்ணைப் பக்கத்தில் அமர்த்தி, ‘உனக்கு என்ன மாதிரி மாப்பிள்ளைமா வேணும்.. எந்த மாதிரி பையன் பார்க்கட்டும்..’ எனக் கேட்கும்போது.. பெண்ணோ பையனோ தயங்காமல் பேச ஒரு ஃபாதர்லி லுக் இருக்கணும். அதுக்கு மோகன் சார்தான் சரின்னு முடிவு செய்தேன். அவர் குரலில் எப்பவுமே ஒரு வைப்ரேஷன் இருக்கும். அதை பலமுறை அவரிடத்தில் நான் சொல்லி அட்மயர் பண்ணியிருக்கேன். அந்த நொடியே அவர்தான் இந்த நிகழ்ச்சியை பண்ணணும்னு அவரிடத்திலும் சொன்னேன்.

‘எனக்கு கேமரா லைட்டிங்கெல்லாம் தெரியாது. டயலாக் பேச வராது. தயாரிப்பாளராக மட்டும் இருக்கேன்னு’ முதலில் மறுத்தார். இந்த நிகழ்ச்சியை நீங்க செய்தால் ‘கல்யாண மாலை மோகன்’னு பெயர் உங்களுக்கு வரும் என அப்பவே அவரிடத்தில் சொல்லி.. ‘செய்து பார்ப்போம் சரியா வந்தால் ஓ.கே. இல்லைனா வேற யோசிப்போம்னு’ சொன்னேன். இப்ப மாதிரியே அப்ப நாம ஜெயித்தே ஆகணும்.. புலி வாலைப் பிடித்தே ஆகணும் என்கிற கடுமையான போட்டிகள் கிடையாது.

கான்செப்டை யார் விஷுவலைஸ் பண்ணுவது என யோசித்தபோது. இது உன்னோட கான்செப்ட் நீ இயக்கினால்தான் சரியா இருக்கும் என மோகன் சார் என்னையே இயக்கச் சொல்ல களத்தில் இறங்கினோம். இப்படித்தான் இந்த வெற்றிக் கூட்டணி உருவானது.

வரன் அறிமுகம் டி.வி.யில் துவங்கியதுமே சாத்தியமானதா?

லைட்ஸ் வெளிச்சத்தில் பலர் முன்பு கேமராவில் எனக்கு இந்த மாதிரிப் பையன் வேண்டும் எனக்கு இப்படிப்பட்ட பெண் வேண்டும் எனச் சொல்ல வைக்கும் கான்செப்ட் ரொம்பக் கஷ்டம். குறிப்பாக பெண்ணை உட்கார வைத்து அதை சாத்தியமாக்கினோம். ஒரு பெண்ணிற்கோ பையனுக்கோ வரன் பார்க்குறதுன்னா மாமா, அத்தை, சித்தப்பான்னு குடும்ப மொத்தமும் மாப்பிள்ளை பார்ப்பதில் தலையிடுவாங்க. 20 வருடங்களுக்கு முன் ஒரு கல்ச்சரையே நாங்கள் ஐஸ் பிரேக் பண்ணியிருக்கோம். இது சாதாரண விசயம் இல்லை.

அப்போதெல்லாம் புரொடக்‌ஷனும் ஈஸி கிடையாது. கேசட்டை முன்கூட்டியே கொடுத்தால்தான் மணிலா சென்று ஏரில் அப் ஆகும். ஒரு எபிசோட் எடுக்க 20 நாட்களுக்கு முன்பே தயாராகணும். மேலும் இணைய வசதியும், சமூக வலைத் தளங்களும் இல்லாத காலம். போஸ்ட் கார்ட், லேன்ட் லைன்களில் மட்டுமே வரன்களைத் தொடர்புகொள்ள முடியும். 5 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தால் லைட்ஸ் ஆன் செய்து டிராக் அன்ட் ட்ராலி கேமராவை தயார் செய்ததும் 3 பேர் காணாமல் போய்விடுவார்கள்.

வரன் தேடும் நிகழ்வில் மேடைப் பேச்சாளர்களை கொண்டு வந்தது குறித்து?

பைலட் எபிசோட் எடுத்தபோது வரனை அறிமுகப்படுத்தினால் மட்டும் போதாது, ஒரு இடைவெளி இருக்கெனத் தோன்ற, ஒரு இன்ட்ரெஸ்டிங் காம்போனென்ட் கூடவே இணைக்க முடிவு செய்தேன். எனவே நல்ல தலைப்புகளையும், சிறந்த பேச்சாளர்களையும் அழைத்து பேசவைக்க முடிவு செய்தோம். கூடவே இடத்திற்கு ஏற்ற தலைப்பு, ஊருக்கு ஏற்ற கன்டென்ட் எனத் தேர்ந்தெடுத்ததோடு, அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொருத்தமான பேச்சாளர்களையும், வெவ்வேறு தளங்களில் இருப்பவர்களையும் அடையாளப்படுத்தினோம்.

நிகழ்ச்சியின் வெற்றியாக நீங்கள் நினைப்பது..?

ஒரு இடத்தில் கல்யாணமாலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது ஒரு கல்யாணத்தையே செய்வது மாதிரி. எங்கள் குடும்ப உறுப்பினர்களாக இணைந்து இந்த நிகழ்ச்சியைய் செய்வதால்தான் நிகழ்ச்சி இவ்வளவு வெற்றிகரமாகச் செல்கிறது. பெரும்பாலும் எங்கள் குடும்பத்தினரோடு கலந்துரையாடியே இடங்களையும், பொருத்தமான தலைப்புகளையும் முடிவு செய்வோம். மேலும் நடுவராக இருப்பவர்களின் அனுமதியோடு, முக்கியப் பேச்சாளர்களிடமும் தலைப்பு, கன்டென்ட் குறித்த ஆரோக்கியமான கலந்துரையாடல் எப்போதும் எங்களுக்குள் இருக்கும்.

சிறந்த மேடைப் பேச்சாளராகவும் உங்களிடம் ஒரு ஆளுமை வெளிப்படுகிறதே?

என் பின்னணி ரொம்பவே ஸ்ட்ராங். நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். எளிமையான குடும்பம் என்னுடையது. பெற்றோருக்கு நான் ஒரே பெண். எனக்கு கீழ் மூன்று தம்பிகள். அப்பாவிற்கு ரயில்வேயில் பணி. ஒரே பெண்ணான என் அம்மா, பாட்டியின் வயிற்றில் இருந்தபோதே தாத்தா இறந்துவிட, வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், அப்போதே போராடிப் படித்து தமிழ் பண்டிட்டாகி குடும்பத்தைக் காப்பாற்றியவர் பாட்டி. குழந்தையில் இருந்தே பாட்டியின் அரவணைப்பில் நாங்களும் வளர்ந்ததால் நேர்மை, உண்மை, சமூக பொறுப்பு இதையெல்லாம் தமிழோடு சேர்த்து ஊட்டினார். அறச் செயலை மீறி எதையாவது செய்து பணம் பண்ணக்கூடாது என்பதை குழந்தையில் அழுத்தமாக விதைத்தார்.

பாட்டி ஆசிரியராக இருந்த சாரதா வித்யாலயா பள்ளியிலே நானும் படித்தேன். அவர் சொல்லிக் கொடுத்த தமிழ் சரளமாக வர அப்போதே பேச்சு போட்டிகளுக்காக மேடை ஏறினேன்.+2 முடித்ததும் திருமண ஏற்பாடு செய்யலாம் என்ற எனது அப்பாவிடம், என் பேத்தி கல்லூரி படிப்பை முடித்த பின்புதான் திருமணம் செய்ய வேண்டுமென, எனக்காக ஸ்ட்ராங்காக நின்றார் பாட்டி. பாட்டி போட்டுக்கொடுத்த அஸ்திவாரத்தின் மேல் குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரியில் எம்.ஏ முடித்தேன். பாட்டியின் போராட்ட குணம் என்னிடமும் உண்டு.

30 வயதைக் கடந்தும் இன்றைய தலைமுறை திருமணத்தை தள்ளிப் போடுவது குறித்து?

மிஸ் மேட்சிங்தான்காரணம். 26 வயதுப் பெண் முப்பதாயிரம் சம்பாதித்தாலே திருமணத் தகுதி வந்துவிடுகிறது. ஆணுக்கு அப்படியில்லை. பையன் படித்தவனா? வேலைக்குப் போகிறானா? அதிகம் சம்பாதிப்பவனா? சிந்திக்கத் தெரிந்தவனா? தனித்துவமாக இருக்கிறானா? என்றெல்லாம் பெண்கள் பார்க்கிறார்கள். இது பெண்களுக்கு கல்வி கொடுத்த மிகப் பெரிய வாய்ப்பு. இந்த எதிர்பார்ப்பு தப்பில்லை. ஆனால் இவற்றை அடைய ஆணுக்கு 30 வயதிற்கு மேல் ஆகிவிடுகிறது.

பெண்களுக்கு 24 வயதிலே சம்பாதிக்க வேண்டும் என்கிற நிர்பந்தம் கிடையாது. குடும்பங்களும் பெண் வருமானத்தை எதிர்பார்ப்பதில்லை. பெண்ணின் வருமானம் இங்கு உபரி. எனவே பெண்கள் அதிகமாகப் படித்துவிடுகிறார்கள். ஒருசில பிரிவினரில் ஆண்கள், படிப்பைவிட தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, படிப்பில் நாட்டம் காட்டுவதில்லை. அந்தப் பிரிவினரில் மேல்படிப்பு படித்த பெண்ணிற்கு அதிகம் படித்த பையன் கிடைப்பதில்லை. 28 வயதிற்கு மேல் பெண்கள் தங்கள் திருமணத்தை தள்ளிப் போடாமல் செய்துகொள்வதே மிகவும் நல்லது.

மணப்பெண்கள் கிடைப்பது கடினம் என்பது போன்ற புலம்பல் பெற்றோர்களிடத்தில் அதிரித்து இருக்கிறதே?

முன்பு வீட்டுக்குள்ளேயே பெண்கள் இருந்ததால் சினிமாவைப் பார்த்து காதல் வயப்பட்டார்கள். இன்றைக்கு இருக்கும் மாடர்ன் பெண்கள் சீக்கிரம் காதல் வயப்படுவதில்லை. தங்களை சுதந்திரம் நிறைந்தவர்களாக, தனித்துவமாக உணர்வதால் நல்ல பந்தமாக அமைந்தாலும், திருமணத்திற்கு முன்னும் பின்னும் இன்டிபென்டென்டாக, கம்ஃபெர்ட்டாக இருக்க நினைக்கிறார்கள். தங்களின் பினான்சியல் பொஷிஷனும் இன்டிபென்டென்டாக இருக்கவே விரும்புகிறார்கள். ரொம்பவும் யோசித்து, பேசிப்பார்த்தே முடிவு எடுக்கிறார்கள்.

மேலும் சோஷியல் மீடியாவில் அவரவர் செய்யும் ஆக்டிவிட்டிஸ் பார்த்தும் பெரும்பாலும் முடிவு எடுக்கிறார்கள். பெண்ணாக இருந்தால், பையனின் ஆட்டிடியூட், அவரோட என்டெர்டெய்ன்மென்ட் ப்ளானிங், பையனுக்கு டிராவல் பிடிக்குமா? சமூக அக்கறை இருக்கா? சோஷியல் மீடியாவில் என்ன மாதிரி கன்டென்ட்களை ஷேர் செய்கிறான். ஒரு விசயத்தை எப்படி அணுகுகிறான். சமூக வலைத் தளங்களில் எவ்வளவு ஆக்டிவாக இருக்கிறான். இத்தனையும் பார்க்கிறார்கள். தன்னை க்ளீன் கேபிட் எனப் பையன் போட்டு சோஷியல் மீடியாவில் ஏதாவது ஏடாகூடமான படங்களை ஷேர் செய்திருந்தால்கூட பெண்கள் யோசிக்கிறார்கள்.

மேட்ரிமோனியல் வெப் சைட் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் அதன் நம்பகத்தன்மை குறித்து…

இது ஒரு ப்ளாட் ஃபார்ம். அவ்வளவே. உலகம் முழுவதும் வெளிச்சம் போட்டு காட்டும் அளவுக்கு விரிவடைந்துவிட்டது. கடல் கடந்து இருக்கும் உறவுகளையும் இதில் காட்டிக் கொடுக்கிறோம். ‘இந்த மாதிரியான ஒரு குடும்பத்தில் இப்படி ஒரு வரன் இருக்கு’ என்பதைச் சொல்வதே இதில் முக்கிய வேலை. இதில் பெற்றோர்கள்தான் கவனமாக இருந்து அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும்.ஒரு கார் அல்லது பைக் வாங்க 10 ஷோரூம்கள் ஏருகிறோம். பள்ளியில் சேர்க்க 10 பள்ளிகள் ஏறி இறங்குகிறோம். பிள்ளைகளுக்காக கல்லூரி கல்லூரியாக அலைகிறோம். அதேபோல் மேட்ரி வெப்சைட்டில் தகவல் இருந்தாலும் பெற்றோர்தான் மெனக்கெட்டு வரனைத் தேடிச்சென்று விசாரிக்க வேண்டும்.

எங்களுடைய மேட்ரிமோனியல் தனிப்பட்ட சிறப்பு (exclusive) என்பது மோகன் சார் நேரடிப் பார்வையில் இயங்குகிறது. பெற்றோர்கள் அவரை நேரில் சந்திக்காமல் பதிவு செய்வதில்லை. அமெரிக்காவில் இருந்தாலும், அவர்களை நேரில் சந்தித்து, அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மையா என்பதை சரி பார்க்காமல் நாங்கள் முன்னெடுப்பதில்லை.

இன்றைய தலைமுறைக்கு திருமணம் குறித்து…

பெண்கள் பயந்த காலம், கவலைப்பட்ட காலம், நம்மால் முடியாதுன்னு நினைத்த காலம் இப்போதில்லை. நமது பாட்டிகளும், அம்மாக்களும் கல்லையும் முள்ளையும் தூக்கியெறிந்து நமக்கென பாதை போட்டுக் கொடுத்துள்ளார்கள். அது ராஜபாட்டை. பெண்கள் படிப்பிற்கும், வேலைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுபோல் குடும்பத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும். குடும்பம் என்கிற அமைப்பை எந்தக் காலத்திலும் சிதைத்துவிடக் கூடாது. அந்த அமைப்பு எல்லோருக்கும் வேண்டும். அதுதான் இயற்கையின் நியதி. அதுதான் பாதுகாப்பானது. என்னதான் நாம் மிகப் பெரிய சாதனைகளைச் செய்துவிட்டு வந்தாலும், வீட்டில் வந்து அந்த மகிழ்ச்சியை பகிர்வதால் மட்டுமே அது விரிவடையும். இல்லையெனில் அது காட்டில் பெய்கிற மழை மாதிரி. நம்மால் அதை அனுபவிக்க முடியாது.திருமணம் மட்டுமே பெற்றோருக்கு நாம் கொடுக்கும் மிகப் பெரும் மகிழ்ச்சி.Post a Comment

Protected by WP Anti Spam