By 29 May 2021 0 Comments

உடல் கேலிகளுக்கு காதையோ, மனதையோ கொடுக்காதீர்கள்!! (மகளிர் பக்கம்)

பாடி பாசிட்டிவிட்டி இன்புளுயன்சர்’, பிளஸ் சைஸ் மாடல், டாட்டூ கலைஞர், நடிகை… என பன்முகம் கொண்ட நடிகை மல்லிகா சௌத்ரி (Mallika Chaudhuri) அசாமி – பஞ்சாபி பெற்றோரின் மகளாவார். கனடாவில் சோசியல் ஒர்க், அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றவர். 5 வயதில் இருந்தே, மேடை நாடகங்களில் நடித்து வருகிறார். மாடல் – நடிகை என்ற பல கனவுகளுடன் சென்னைக்கு பறந்து வந்துள்ளார் மல்லிகா.

“இங்கு சினிமா நடிகை என்றாலே ‘சைஸ் ஜீரோ’ தான் அவர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது; பிளஸ் சைஸ் உடல் எடை பெண்களிடம் திறமையிருந்தும் புறக்கணிக்கப்படுகின்றனர், நானும் புறக்கணிக்கப்பட்டேன்” என்று கூறும் மல்லிகா, உடலினால் பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதிலிருந்து எவ்வாறு மீள்வது என்பதை பல நேர்மறையான செயல்கள் மூலம் செய்து வருகிறார். “நாம் நமக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழும் போது பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறோம். அதை நாம் அறிந்து கொள்வது கிடையாது, அதற்கான முயற்சிகளும் எடுப்பது கிடையாது. இன்றைய தலைமுறை பெண்கள் பல பேர் ஜீரோ சைஸ்-க்கு தங்கள் உடலை மாற்றுவதற்கு மனதளவில் தயாராகுகிறார்கள். அது எதற்காக என்பது அவர்களுக்கும் தெரியாது. விளம்பரங்கள், திரைப்படங்கள் பார்த்து இதுதான் சரி என்கிற முடிவுக்கு வருகிறார்கள். உடல் பருமனாக இருப்பது ஆரோக்கியமில்லாதது என்று நினைத்துக் கொள்ளும் அளவிற்கு அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

உதாரணமாக, உலகில் பலபேர் விலை அதிகமாக இருந்தாலும் ஆப்பிள் போன் வாங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள். அந்த பணத்தை சேமிப்பிலோ, தங்கம் வாங்குவதற்கோ யோசிப்பதில்லை. காரணம் பிராண்டிங். இது போன்ற ஒரு கட்டமைப்புதான் உடல் மீதும் நிர்பந்தப் படுத்தப்பட்டிருக்கிறது. 15, 16 வயதுள்ள ஒரு பெண்ணிடம் இதன் தாக்கம் எந்தளவு இருக்கிறது, மனதளவில் அவளது போராட்டம் எப்படி இருக்கும் என்பதை ஏன் இவர்கள் யோசிப்பதில்லை? இப்படியெல்லாம் இருந்தால் தான் அழகா? என்ற அநாவசியமான கேள்வியினை ஏன் அவர்களுக்கு புகுத்துகிறோம். எது சரி? எது தவறு? என்பதை தீர்மானிப்பது யார்? இது ஆண்களுக்கும் விதிவிலக்கல்ல. எல்லாமே கமர்ஷியலாக மாறியுள்ளது. நடிகர், நடிகைகள் பலரின் வாழ்விற்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். அதிக பொறுப்புணர்வு அவர்களுக்கு இருக்கிறது. அதை எடுக்க ஏன் இவர்கள் தயங்குகிறார்கள்.

இந்தியாவை பொறுத்தவரை எல்லாவிதமான உடல்வாகு கொண்ட பெண்கள் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் இதே திரைப்படங்கள் பார்த்து, ‘குஷ்பு மாதிரி உடல் வரணும் சாப்பிடு சாப்பிடு…’னு சொன்னாங்க. தற்போது இதே பிரச்னை வேறு வடிவில் இருக்கிறது. ‘டயட்’ என்கிற பெயரில் தங்கள் உடலுக்கு அது தகுமா, தகாதா என்றெல்லாம் பார்க்காமல், இணையத்தில் ஏதோ ஒன்றை பார்த்து பின்பற்றுகிறார்கள். உடல் எடையை குறைப்பது என் விருப்பம். என்னாலும் நடிக்க முடியும். அழகானவள் நான். அழகை நாம் தான் உருவாக்குகிறோம். எதை வைத்து இது அழகு இல்லை என்று தீர்மானிக்கிறோம். அவ்வாறு உடல் பருமனுள்ளவர்களை திரைப்படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களுக்கு மட்டும்தான் பயன்படுத்த முடியுமா?” என்ற கேள்வியினை முன் வைக்கும் மல்லிகா, பாடி பாசிட்டிவிட்டிக்காக 2017ஆம் ஆண்டு பிரபல புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராமன் காலண்டரில் இடம்பெற்றுள்ளார்.

“சென்னையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக, ‘லாபிங் புத்தா’ என்ற, டாட்டூ ஸ்டுடியோவை நடத்தி வருகிறேன். என் சகோதரி டாட்டூ ஆர்டிஸ்ட். அவள் புற்றுநோயால் காலமானாள். அவளின் நினைவாகவும், பணத்துக்காக மட்டுமல்லாமல் மன திருப்திக்காகவும் இந்த வேலையை செய்கிறேன்., கோவாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான டாட்டூ திருவிழாவிற்கு சென்றிருந்தேன். அங்கு இந்தியாவின் தலைசிறந்த டாட்டூ ஆர்டிஸ்டுகள் கலந்து கொண்டனர். அதில் ஒருவர்தான் கவுரிசங்கர். இவர் டாட்டூ துறையில் பல விருதுகளை பெற்றுள்ளார். எம்.எஃப்.உசைன் ஓவியங்களை விரல் நுனியில் ஆரம்பித்து பாதம் முடியும் வரை உடல் முழுதும் வரைந்து சாதனை படைத்திருக்கிறார். அவரிடம், ‘என் உடலிலும் உங்கள் ஊசி பதியுமா?’ என்று கேட்டேன். அவரும் ஒத்துக் கொண்டார். எனக்கும் டாட்டூ துறையில் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான சிறந்த வாய்ப்பாகவும் அமைந்தது.

சுமார் 65 மணி நேரம் எடுத்துக் கொண்டோம். இது போன்ற பெரிய அளவில் வரைவதற்கு ஒரு வருட காலம் ஆகும். அன்று எனக்கிருந்த மன வலியை விட இது பெரிய வலியாக தெரியவில்லை. நமக்கு ஒன்று எதிர்மறையாக நடந்தால் அதிலேயே தேங்கிவிடாமல் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதை இந்த வலி உணர்த்தியது. டாட்டூவை பொறுத்தவரை நிறம் கூடுதலாக இருப்பவர்களுக்குத்தான் அழகாக இருக்கிறது என்கிற மனநிலை உள்ளது. இது பழங்குடிகளின் கலை வடிவம். அதனை கருப்பு நிறத்தவர்களுக்கு வரையும் போதுதான் முழுமை அடைகிறது. டாட்டூவில் நிறம் முக்கியமில்லை” என்று கூறும் மல்லிகா, ‘‘பருமனாக இருப்பவர்கள் மட்டுமல்ல, ஒல்லியாக இருப்பவர்கள், நிறத்தின் அடிப்படையில், அழகுக்கான அளவுகோலில் வைக்கப்படுபவர்கள் என, இவர்கள் அனைவருமே பல நேரங்களில் உருவ கேலிக்கு ஆளாகின்றனர்” என்கிறார்.

‘‘நான், என் உருவம் குறித்து பெருமைப்படுகிறேன். இந்த எண்ணத்தை என்னைப் போன்ற மற்ற பெண்களுக்கும் ஏற்படுத்த, என் சமூக வலைத்தளப் பக்கங்களில், ‘பாடி பாசிட்டிவிட்டி’ குறித்து பிரசாரம் செய்து வருகிறேன். வெளியிடங்களில் கலந்துரையாடலும் நடத்தியிருக்கிறேன். என் பிளஸ் சைஸ் புகைப்படங்களை பார்த்த பல பெண்கள், தங்கள் உடல் அமைப்பால், தங்களுக்கு ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை, மன உளைச்சலை கைவிட்டுள்ளனர்.
சமூக வலைத்தளமான இன்ஸ்டாவில் என்னை பின்பற்றும் 53 ஆயிரம் பேரில், பலருக்கு நேர்மறை எண்ணத்தை நானும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதைநினைக்கும் போது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. அதற்காக உடல்நலனை முன்னிறுத்தி செய்யப்படும் உடற்பயிற்சிகளுக்கு நான் எதிரியல்ல. ‘ஸ்லிம்’மாக இருந்தால் ஆரோக்கியம்; பருமனாக இருந்தால் ஆரோக்கியமின்மை என்ற கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. என்னால், ஒரு நாளைக்கு, 8 கி.மீ. நடக்க முடியும். அப்போ நான் ‘பிட்’ தானே!

பலரின் மனநிலையை மாற்ற நினைக்கிறேன். குறிப்பாக ஃபேஷன், விளம்பரப்பட போட்டோ கிராபர்ஸ். அவர்கள் மாறும் போது கண்டிப்பாக மற்றவர்களின்
மனநிலையும் மாறும். இந்த மாற்றம் ஏற்பட ஒரு வருஷமோ, இல்லை இரண்டு வருஷம் கூட ஆகலாம். அதற்காக நான் துவண்டு விடமாட்டேன். அதற்கான வேலையை நான் எப்போதும் போல் செய்து கொண்டிருப்பேன். இன்றைய உலகம் இணையத்தால் இணைந்திருக்கிறது. இந்த தலைமுறையினர் அனைவரும் ‘இணைய குடிமகன்கள்’ (netizens). அதில் யாரையும் புண்படுத்தாமல் பார்த்துக் கொள்வது ஒவ்வொருவரின் பொறுப்பு” என்று கூறும் மல்லிகா, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ஒரு வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். “என் முயற்சிகளுக்கு பெற்றோர், நண்பர்கள் ஆதரவாக உள்ளனர். எப்போதும் பெண்களுக்கு நான் சொல்லிக் கொள்வது இது தான்: மற்றவர்களின் உடல் கேலிகளுக்கு காதையோ, மனதையோ கொடுக்காதீர்கள்; உங்களை நீங்களே நேசியுங்கள்!” என்றார்.Post a Comment

Protected by WP Anti Spam