தடுப்பூசியில் அரசியல்: மனிதவுரிமை யோக்கியர்கள் எங்கே? (கட்டுரை)

Read Time:14 Minute, 11 Second

‘புதிய வழமை’ என்பது, இப்போது பழக்கப்பட்டுப் போய்விட்டது. முன்னொரு காலத்தில், (வரலாற்றில் அவ்வாறுதான் குறிக்கப்படும்) மனிதர்கள் நேருக்கு நேரே சந்திக்கும் போது, “நலமாக இருக்கிறீர்களா?” என்ற நலன்விசாரிப்புடன் உரையாடல் தொடங்கும்.

இப்போது, இந்த உரையாடல் தொலைபேசி வழியே நடக்கிறது, “தடுப்பூசி போட்டுவிட்டீர்களா?” என்ற நலன் விசாரிப்புடன்! காலங்கள் மாறிவிட்டன; ஆனால், அனைத்தும் மாறிவிடவில்லை என்பதை, தடுப்பூசிகளை மையமாக வைத்து, நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலமும் அதன் அரசியலும், வெட்டவெளிச்சமாக்கி உள்ளன.

சில நாடுகள், தங்கள் தேவையை விடப் பன்மடங்கு அதிகமான தடுப்பூசிகளை வைத்திருக்கையில், இன்னும் சில நாடுகள், தங்கள் தேவையின் பத்துவீதத்துக்குப் போதுமானவற்றைக் கூடக் கொண்டிருக்கவில்லை என்ற அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த அசமத்துவம் ஏன்?

இதை இன்னும் சரியாகச் சொல்வதாயின், தடுப்பூசிகள் பாவனைக்கு வரத்தொடங்கி, ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. இந்நிலையில், உலகில் உள்ள ஒன்பது நாடுகள், உலகளாவிய மொத்தத் தடுப்பூசிகளில் 45%யை வைத்திருக்கின்றன.

இன்னும் ஒருவருக்கு கூட, 36 நாடுகளில் தடுப்பூசி ஏற்றப்படவில்லை. தடுப்பூசி வைத்திருக்கும் நாடுகளுக்கும் இல்லாத நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி மிக அதிகம். கடந்த ஆறு மாதங்களில், இந்த இடைவெளி அதிகரித்த வண்ணமே உள்ளது.

இது எதைக் காட்டி நிற்கின்றது? உலகில் உள்ள 108 நாடுகளுக்கு 31.4 மில்லியன் தடுப்பூசிகளை 20 நாடுகளே வழங்கியுள்ளன. இதில் மூன்று நாடுகள், முன்னிலையில் உள்ளன. அவை முறையே சீனா, ரஷ்யா, இந்தியா.
சீனா, இதுவரை 80 நாடுகளுக்கு இலவசமாகத் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வரை, 17.6 மில்லியன் தடுப்பூசிகளை சீனா கொடுத்துதவி உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், பயன்பெற்ற நாடுகளில் பெரும்பான்மையாவை, சீனாவின் ‘ஒரு பட்டி; ஒரு வழி’ நிகழ்ச்சித் திட்டத்தில் இணைந்துள்ள நாடுகளாகும்.

சீனாவின் இந்த நிகழ்ச்சித்திட்டம், இப்போது ‘உயிர்காக்கும் மருந்துகளை வழங்குவதற்கான நுழைவாயில்’ என்று அறியப்படுகிறது. சீனா, இப்போது முன்னெடுக்கும் இலவச தடுப்பூசி வழங்கல் மூலம், தனது செல்வாக்கை அதிகரித்திருக்கிறது.

உலகில் அதிகளவான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. இதனாலேயே இந்தியப் பிரதமா நரேந்திர மோடி, தடுப்பூசி நட்புறவை (Vaccine Maithri) முன்மொழிந்தார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியாவை, ‘உலகின் மருந்துச்சாலை’ (Pharmacy of the world) என்று அழைத்தார். சீனாவுக்குப் போட்டியாக, 48 நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை வழங்குவதற்குத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்தியாவில் அதிகரித்த கொரோனாத் தாக்கம், அதைச் சாத்தியமற்றதாக்கி உள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பூசியை, முதலில் கண்டுபிடித்த நாடு ரஷ்யா. கடந்தாண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி, ரஷ்யாவின் Gamaleya Research Institute of Epidemiology and Microbiology கண்டுபிடித்த ‘ஸ்புட்னிக் வீ’ தடுப்பூசியை, ரஷ்யா அங்கிகரித்தது.

ஆனால், இந்தத் தடுப்பூசி தொடர்பில் மேற்குலக நாடுகள் பலத்த சந்தேகம் வெளியிட்டன. இந்தத் தடுப்பூசி தரமற்றது எனவும் இதைப் பயன்படுத்தினால் உயிராபத்து வரும் என்றும், மேற்குலக ஊடகங்கள் எழுதின. இதை, அறிவியல்பூர்வமாக ஏற்க இயலாது என்றெல்லாம் சொல்லப்பட்டது.

இன்று, இந்தத் தடுப்பூசியை 70 நாடுகள் பயன்படுத்துகின்றன. அதில் பெரும்பான்மையானவை இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகள். இப்போது ஆய்வுமுடிவுகளின் படி, இந்தத் தடுப்பூசி 92% வினைத்திறன் மிக்கது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

‘ஸ்புட்னிக் வீ’ தடுப்பூசி மீது வைக்கப்பட்ட விமர்சனத்துக்கான அறிவியல்காரணிகளை விட, அரசியல் காரணிகள் அதிகம். அதிலும் குறிப்பாக, மேற்குலக மருந்தாக்கல் நிறுவனங்களின் செல்வாக்கு மிக அதிகம்.

மேற்குலகம் தனது முதலாவது தடுப்பூசியாக, Pfizer-BioNTechவை கடந்தாண்டு டிசெம்பர் மாதம் 11ஆம் திகதி அறிவித்தது. இந்தத் தடுப்பூசியை, -80°C குளிர்நிலையில் சேமிக்கப்பட வேண்டும். எனவே இதற்கான வசதிகள் இன்றி, இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்தவோ, எடுத்துச் செல்லவோ முடியாது. எனவே, இந்தத் தடுப்பூசியை மூன்றாமுலக நாடுகளால் பயன்படுத்த இயலாது. ஆனால், இது மட்டுமே தடுப்பூசி என்ற வகையில், கடந்தாண்டு இறுதியில் நடந்த பிரசாரங்களை நினைவுகூர முடியும். இந்தத் தடுப்பூசி, அமெரிக்க-ஜேர்மன் நிறுவனங்களின் கூட்டுத்தயாரிப்பு ஆகும்.

இதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Moderna தடுப்பூசிக்கு அங்கிகாரம் வழங்கப்பட்டது. இது -25°C குளிர்நிலையில் சேமிக்கப்பட வேண்டியது. அவ்வகையில், Pfizer-BioNTechயை விடச் சேமிப்பது இலகுவானது. எனவே இவ்விரண்டுமே சந்தையில் முதன்மையான தடுப்பூசிகளாக விற்பனையாகின.

இவ்விடத்தைப் பற்றிக்கொஞ்சம் சொல்லியாக வேண்டும். இது திரவ வடிவில் -18°C குளிர்நிலையிலும் உறைநிலையில் 2°C முதல் 8°C வரையான வெப்பநிலையில் பேண முடியும். அதேவேளை, Pfizer-BioNTech, Moderna தடுப்பூசிகளின் விலை, சராசரியாக 37 அமெரிக்க டொலர். அதேவேளை, ‘ஸ்புட்னிக் வீ’ தடுப்பூசியின் விலை, சராசரியாக 8 அமெரிக்க டொலர். இங்குதான் இன்னொரு தடுப்பூசியின் கதையையும் சொல்ல வேண்டியிருக்கிறது.

பிரித்தானியாவில் உள்ள ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ராசெனிக்கா நிறுவனமும் இணைந்து Oxford-AstraZeneca தடுப்பூசியை, 2020 இறுதியில் கண்டுபிடித்தார்கள். அஸ்ராசெனிக்கா நிறுவனம் பிரித்தானியா, சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்குரியது. இந்தத் தடுப்பூசியை, 2020ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 30ஆம் திகதி பிரித்தானியா அங்கிகரித்து. இன்றுவரை இந்தத் தடுப்பூசியை 145 நாடுகள் அங்கிகரித்துள்ளன. அங்கிகரிக்காத ஒரு நாடு அமெரிக்கா.

ஏற்கனவே, புழக்கத்தில் உள்ள Pfizer-BioNTech, Moderna தடுப்பூசிகளை உற்பத்தி செய்பவை, அமெரிக்க நிறுவனங்கள் என்பனை இங்கு நினைவூட்ட வேண்டும். Pfizer-BioNTech தடுப்பூசியை 99 நாடுகளே அங்கிகரித்துள்ளன. அதேவேளை, Moderna தடுப்பூசியை 56 நாடுகளே அங்கிகரித்துள்ளன.

முன்சொன்ன ஏனைய மூன்று தடுப்பூசிகளுக்கும் Oxford-AstraZenecaக்கும் இரண்டு முக்கிய வேறுபாடுகள் உண்டு. இதனால், Oxford-AstraZeneca முதன்மையானதாகக் கருதப்பட்டது. முதலாவது வேறுபாடு, இந்தத் தடுப்பூசியை 2°C முதல் 8°C வரையான வெப்பநிலையில் திரவவடிவில் பேண முடியும். எனவே, சாதாரண குளிர்சாதனப் பெட்டிகள் போதுமானவை.

இரண்டாவது, இந்தத் தடுப்பூசி ஒன்றின் விலை 3 அமெரிக்க டொலர் மட்டுமே. மூன்றாமுலக நாடுகளுக்கு வாய்ப்பான ஒரு தடுப்பூசியாக Oxford-AstraZeneca மாறியிருந்தது. ஏனைய கொரோனாத் தடுப்பூசிகள் போல, இந்தத் தடுப்பூசியின் பயன்பாட்டின் போதும் பக்க விளைவுகள் ஏற்பட்டன. இது, இந்தத் தடுப்பூசிக்கு எதிரான ஒரு காரணியானது.

அதேவேளை, இதன் வினைதிறன் 80% என அளவிடப்பட்டது. இதே தடுப்பூசியே, இந்தியாவில் Covishield என்ற பெயரில் உற்பத்தியாகிறது. இந்தியாவில் இதை உற்பத்தி செய்யும் நிறுவனம், இந்த தடுப்பூசி ஆய்வுக்காகத்தான் கோடிக்கணக்கில் செலவிட்டதாகச் சொல்லி, இந்திய அரசாங்கத்திடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றது தனிக்கதை.

இப்போது பயன்பாட்டில் உள்ள இன்னொரு பிரதானமான தடுப்பூசி, சீனாவில் உருவாக்கப்பட்ட Sinopharm ஆகும். சீனாவின் முக்கியமான உயிர்காக்கும் உதவிக்கான ஆயுதமாக, இந்தத் தடுப்பூசியே விளங்குகிறது. இது 86% வினைதிறனானது. இதையே சீனா உலகெங்கும் ஏற்றுமதி செய்கிறது; இலவசமாக வழங்குகிறது.

உலகில் மனித உரிமைகள் பற்றியும் அடிப்படை உரிமைகள் குறித்தும், ஓங்கிக் குரல்கொடுக்கும் யோக்கியர்கள் யாரையும் காணவில்லை. ஆறம் விழுமியங்கள் என, மேற்குலக நாடுகள் மற்ற நாடுகளுக்குப் போதித்தவை எதையும், அவர்களால் பின்பற்ற முடியவில்லை.

சில நாள்களுக்கு முன், ஈரானியப் பேராசிரியர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு முக்கியமான விடயத்தைச் சொன்னார். “ஈரானின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உள்ளமையால், அவர்களால் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய முடியாது. எனவே அவர்கள் தங்களுக்கான தடுப்பூசியை அவர்களே தயாரித்துக் கொண்டுள்ளார்கள். அந்தத் தடுப்பூசி, 90% வினை திறனானது என, முதற்கட்ட ஆய்வுமுடிவுகள் நிரூபித்துள்ளன” என அந்தப் பேராசிரியர் தெரிவித்தார்.

இதேபோலவே, பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும், கியூபா தனக்கான இரண்டு தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளது. Soberana 02, Abdala ஆகிய பெயர்களை உடைய தடுப்பூசிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இங்கு விளங்கிக் கொள்ள வேண்டியது யாதெனில், பெருந்தொற்று உலகளாவிய ரீதியில் இருந்தாலும், அரசியலே கோலோச்சுகிறது. மனிதாபிமானம் என்ற பெயரில் கோரமுகம் காட்டப்படுகிறது.

கடந்தாண்டு நிறைவில், உலகளாவிய தடுப்பூசிகளில் அரைவாசிக்கும் மேற்பட்டதை, முன்பதிவுசெய்து வாங்கியவை மேற்குலக நாடுகள். அந்நாடுகளில் வாழும் மக்களின் மொத்த சனத்தொகை, உலக சனத்தொகையில் 14% மட்டுமே!
இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது, கனடா தனது சனத்தொகைக்குத் தேவையானதை விட, ஐந்து மடங்கு அதிகளவான தடுப்பூசிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. பிரித்தானிய 3.7 மடங்கும், ஐரோப்பிய ஒன்றியம் 2.7 மடங்கும் அவுஸ்திரேலியா 2.5 மடங்காகவும் தடுப்பூசிகளை முன்பதிவு செய்துள்ளன.

செல்வம் குவிவது போலவே, தடுப்பூசிகளும் ஒருசிலரிடம் குவிகின்றன. உலக மக்கள் அனைவரையும் சமத்துவமாக நோக்க மறுக்கும் இதே யோக்கியர்கள் தான், நாளை சமத்துவம், உரிமை, என்று பேசியபடி உள்நாட்டு விடயங்களில் மூக்கை நுழைப்பார்கள். அதற்காக, இங்கும் ஒரு கூட்டம் ஏங்கிக் கிடக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்டாலின் இந்தியாவிற்கு தலைமை ஏற்பார்- கரு பழனியப்பன் நம்பிக்கை!! (வீடியோ)
Next post குழந்தைகளை பேச வைப்போம்!!! (மருத்துவம்)