சொப்பு பாத்திரங்களில் ரியல் சமையல்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 43 Second

சின்ன வயசில் எல்லாருடைய வீட்டிலும் மரத்தாலோ அல்லது பிளாஸ்டிக்கால் ஆன சொப்பு சாமான்கள் இருக்கும். அடப்பு, குடம், சமைக்கும் பாத்திரங்கள், தோசைக்கல், இட்லி பாத்திரம்… என சமையல் அறையில் அம்மாக்கள் பயன்படுத்தும் அத்தனை பாத்திரங்களும், குழந்தைகளின் விளையாட்டு பொருளாக வடிவமைக்கப்பட்டு இருக்கும். எந்த ஒரு குழந்தையும், அந்த பொருட்களை தங்களின் விளையாட்டு பருவத்தில் பயன்படுத்தாமல் இருந்திருக்கமாட்டார்கள். அதே குட்டி குட்டி பாத்திரங்கள் தான். ஆனால் அதில் உண்மையாகவே சமைத்து அசத்தி வருகிறார் மும்பையை சேர்ந்த கீத்துமா.

‘‘பிறந்து வளர்ந்தது, படிச்சது எல்லாம் சென்னையிலதான். எம்.காம், எம்.சி.ஏ முடிச்சதும், வீட்டில் கல்யாணம் செய்திட்டாங்க. என் கணவருக்கு மும்பையில் வேலை என்பதால், இங்கு வந்து செட்டிலாயிட்டோம். நான் ஒரு சாப்பாட்டு பிரியை. எல்லா வகையான உணவுகளையும் ருசி பார்த்து சாப்பிடுவேன். அதனாலேயே எனக்கு சமைக்கவும் பிடிச்சது. வீட்டில் ஏதாவது வித்தியாசமா சமையல் செய்து பார்ப்பேன். இரண்டு குழந்தைகளுக்கு பிறகு தான் எனக்கான ஒரு வேலையை அமைத்துக் கொண்டேன். என் மகள் படித்து வந்த பள்ளிக்கூடத்திலேயே ஆசிரியராக வேலைப் பார்த்தேன்.

பள்ளிக்கூடத்திற்கு நான் எடுத்து செல்லும் மதிய உணவினை மற்ற ஆசிரியர்கள் மட்டுமில்லாது, மாணவிகளும் விரும்பி சாப்பிடுவாங்க. அந்த சமயத்தில் தான் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் ஆசிரியர்கள் ஃபுட் ஸ்டால் அமைக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தனர். அதில் நாம் சமைத்து வரும் உணவுகளை பள்ளி வளாகங்களில் விற்பனையும் செய்யலாம் என்று அறிவித்திருந்தனர்’’ என்றவரின் உணவுக்கான பயணம் அங்கிருந்து தான் ஆரம்பித்துள்ளது.

‘‘பொதுவாக வீட்டில் கணவர், மகளுக்கு பிடித்த மாதிரி மூணு விதமாக சமையல் செய்வேன். அவ்வாறு சமைக்கும் உணவினை நான் சமூக வலைத்
தளங்களில் பதிவு செய்தேன். நிறைய பேர் என்னுடைய சமையல் புகைப்படத்தை பார்த்து பாராட்டினர். அதன் மூலம் மும்பையில தொலைக்காட்சியிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மும்பையில் பிரபலமான குட்ஃபுட் சேனல், கானா கஸானா, ஃபுட் ஷோஸ், செஃப் சஞ்சீவ் கபூரின் யூடியூப் பலவற்றில் கலந்து கொண்டேன். அந்த சமயத்தில் மாஸ்டர் செஃப் சீஸன் 4 சமையல் நிகழ்ச்சியில் என் கணவர் பங்கேற்க சொன்னார். 2000 பேர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் நான் இறுதிச் சுற்று வரை வந்தேன். அது எனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. நான் பெருசா எதுவுமே சமைக்கல.

எங்க வீட்டு சாம்பார் பொடியை வைத்து சாம்பார் செய்தேன். அதுதாங்க என்ன இங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு. காரணம், என்னதான் ஓட்டல் சாப்பாடு சாப்பிட்டாலும், வீட்டுச் சாப்பாட்டுக்கு என தனி சுவை உண்டு. அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பதில் நாமே ஏன் சமையல் குறித்து பிளாக் ஒன்றை ஆரம்பிக்க கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. ‘இந்தியன் ஃபுட் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அந்த பிளாக்கினை 1000த்துக்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கிறார்கள். அதன் மூலம் எனக்கென ஒரு வருமானமும் கிடைத்தது’’ என்றவரின் அடுத்த படைப்பு தான் மினியேச்சர் கிச்சன்.

‘‘பொதுவாக சமையலில் ஆர்வமுள்ளவர்கள் விதவிதமாக சமைச்சு பார்ப்பார்கள். இந்த கொரோனா நேரத்தில் நான் சற்று வித்தியாசமாக என் பேரக் குழந்தைகளுக்காக வாங்கி வைத்திருந்த சொப்பு சாமான்களை பயன்படுத்தி சமையல் செய்யலாம் என்று யோசித்தேன். நான் எதிர்பார்க்காத அளவிற்கு நல்லா வந்தது. புதுவிதமா இருந்ததால், தினமும் ஏதாவது ஒரு உணவினை சமைத்து, அதை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தேன்.

நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் என்னவென்றால், நான் சமைக்கும் பாத்திரம் மட்டுமல்ல, காய்கறி நறுக்கும் கத்தி, கரண்டி என சகலமும் சிறிய பாத்திரங்களாகவே பயன்படுத்துகிறேன். என்னதான் சொப்பு சாமான்களில் சமையல் செய்தாலும், பார்க்கும் போது நம்முடைய நாவில் எச்சில் ஊறத்தான் செய்கிறது. இந்த மினியேச்சர் சமையலால் வயிறு நிறையுதோ இல்லையோ, கண்டிப்பா எல்லாருடைய மனசும் நிறையும். திறமைக்கு வயதாவதில்லை’’ என்றவர் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் அன்னையாக இருந்து வருகிறார். ‘‘என்னுடைய அம்மா உடல் நிலை சரியில்லாமல் இறந்து போனார். அவரின் இழப்பை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் நான் ரொம்பவே மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தேன். அதில் இருந்து மீண்டு வருவதற்காகவே, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சேவை செய்ய ஆரம்பித்தேன்.

அவர்களுடன் பழகிய போது தான், இவர்களை போல் உடல்நிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள் மட்டுமல்லாமல் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் என்னால் முடிந்த உதவியினை செய்ய வேண்டும் என்று நினைச்சேன். வாரம் ஒரு முறை இந்த குழந்தைகளுக்கு நானே உணவினை சமைப்பது மட்டுமில்லாமல், அதை அவர்களுக்கு பரிமாறி அந்த நாள் முழுவதும் அவர்களுடன் இருப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறேன். ஒரு பக்கம் அவர்களுக்கு சுவையான உணவு கொடுக்க முடிகிறதை நினைக்கும் போது மனசுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது’’ என்கிறார் கீத்துமா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மல்லிகா ஷெராவத்தும் நான்தான்… அசினும் நான்தான் ! (மகளிர் பக்கம்)
Next post செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)