By 5 June 2021 0 Comments

எளிய கேள்விகளோடு அன்பை விதைக்கும் சகுந்தலாதேவி !! (மகளிர் பக்கம்)

இந்தி சினிமாவின் சென்ற மாதத்தின் OTT பரபரப்பு ‘சகுந்தலா தேவி’. மொத்த இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையும் தன் கணிதத் திறமையால் திரும்பி பார்க்க வைத்தவர் சகுந்தலா. இளமையும், திறமையுமாகக் கலங்கடித்ததில் திடுமென்று தேசத்தின் கவர் ஸ்டோரியானார். ‘மனிதக் கம்ப்யூட்டர்’ என புகழப்பட்டவருக்கு வாழ்க்கை அவ்வளவு சுலபமாக இல்லை. எண்களுக்கும் அவருக்குமான உறவைத்தாண்டியும் செல்கிறது ‘சகுந்தலா’.

பெண்ணாக, மனைவியாக, அம்மாவாக அடுத்தடுத்த பருவங்களின் வளர்ச்சி காட்டப்படுகிறது. கணிதத்தில் பெற்ற பயிற்சியும், போட்ட கணக்கும் அசல் வாழ்க்கையில் தப்புகிறது. சகுந்தலாவிற்கு எண்களுடனான பயணம் அவரின் சிறு வயதில் இருந்தே துவங்குகிறது. விளையாட வேண்டிய வயதில் குடும்பத்தின் பாரத்தை சுமக்க ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.

மற்ற குழந்தைகள் பள்ளிக்கு படிக்க செல்லும் போது, இவள் அதே பள்ளிக்கு தன் திறமையை வெளிக்காட்ட செல்கிற ஆற்றாமையும் வர, ‘‘இந்த வீட்ல சம்பாதிக்கிறதும் குடும்பப் பொறுப்பை கவனிக்கறதும் நான்தானே?! அப்போ இந்த வீட்ல நான்தான் அப்பா’’ என்ற கூறும் போது பயமற்ற, சுதந்திரமான, துணிச்சலான, தனது சொந்த விதிகளில் வாழும் பெண்ணாக சகுந்தலாவை பார்க்க முடிகிறது.

அப்பா முன் வாய்த் திறக்காத அம்மா, ஏழ்மையால் இறக்கும் மூத்த சகோதரி, பணத்திலேயே குறியாக இருக்கும் தந்தை, சகுந்தலா மகளுக்குமான உறவு என அத்தனை உறவுகளும் அவளுக்கு பெரிய அளவில் மனக்கசப்பினை ஏற்படுத்துகிறது. உறவுகளின் போதாமையே இதற்குக் காரணம்.

நிறைய காரியங்களுக்கு அர்த்தம் புரிவதில்லை. பிரியமும், பேரன்பும் நிறைந்த வாழ்க்கைக்கு அலைய வேண்டியிருக்கிறது. Survival இல்லை, Existence என்று ஏன் வாழ்க்கையை சொல்கிறார்கள் என அவருக்குப் புரிகிறது. இவை போன்ற எளிய கேள்விகளை விதைக்கும்படியாகவே வாழ்க்கை அவளுக்கு இருக்கிறது. ஒரு கால் பந்தைப் போல அவள் உதைத்து அனுப்பப்படும் போது அவள் நின்று நிதானித்து யோசிக்கிறாள். பின் அவளுக்கான நாட்கள் ெதாடர்கிறது.

முதல் பாதி 1950ம் நூற்றாண்டில் லண்டனில் சகுந்தலா எவ்வாறு தன் திறமையால் பல தடைகளை ஸ்பானிஷ் நண்பர் ேஜவியர் உதவியுடன் கடந்தார் என்பதை அடுத் தடுத்து விவரிக்கிறது. அதன் பின் பரிதோஷ் பேனர்ஜி மேல் காதல், திருமணம், குழந்தை, குடும்பம் என்று அவரிடம் ஏற்படும் மாற்றம் மிகவும் உயிரோட்டமாக வெளிப்படுகிறது. ஒரு காலத்தில் எப்போதும் எல்லோராலும் பேசப்பட்டவர், குடும்பம் என்ற கட்டுக்குள் அடைந்து விட்டதாக உணரும் போது, வாழ்க்கை குறித்து சில அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் படுகிறார். கணவரும் அவரை புரிந்து கொள்ள, மகள் அனுபமாவுடன் வெற்றிப் பாதையை நோக்கி பயணிக்கிறாள்.

மறுபடியும் கணித மேடை சகுந்தலாவை சிவப்பு கம்பளம் விரித்து தன் வசம் அழைத்துக் கொள்கிறது. இதில் வெற்றி பெற்றவர் தன் மகளுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொள்ள தவறுகிறார். இவரின் வெற்றிகள் அப்பாவுக்கும் மகளுக்கும் இடையே உள்ள பாசத்திற்கு பெரிய தடைக்கல்லாக மகளுக்கு சகுந்தலா தேவி மீது ெவறுப்பினை ஏற்படுத்துகிறது.

‘‘உன்னால் மற்ற அம்மாக்கள் போல் சாதாரணமாக இருக்க முடியாதா?’’ என்ற மகளின் கேள்விக்கு சிரித்துக் கொண்டே ‘‘நான் ஆச்சரியமாக இருக்கும் போது… ஏன் சாதாரணமாக இருக்க வேண்டும்’’ என்று அவர் கூறினாலும், மகளுக்காக தன் கணித மேடைகளை சில காலம் தள்ளிப்போடுகிறார். மகள்தான் தன் உலகம் என்று நினைக்கும் வேளையில் தன் காதலுக்காக அம்மாவை உதறித்தள்ளிவிட்டு மகள் செல்லும் போது நொறுங்கிப் போகிறாள் சகுந்தலா. அவரின் எண்கள் எல்லாம் மேகக்கூட்டம் போல் கலைந்து போகிறது. தான் செய்த தவறை தன் மகளும் செய்வதாக உணரும் சகுந்தலா, அந்த தருணத்தில் தன்னை இவ்வளவு தூரம் இயக்கி இருப்பது அவரின் அன்னையின் இயலாமை என்று புரிந்து கொள்கிறாள். அதே தவறை தன் மகளும் செய்யக்கூடாது என்று அதிரடியாக ஒரு முடிவினை எடுக்கிறாள்.

கணித மேதை, சாதனைகள் என கடக்கும் பயோபிக் படமாக மட்டுமல்லாமல் அம்மா, மகள் உறவு எவ்வளவு அழகானது என்பதை ஒருமித்தக் குரலாக ஒலிக்கிறது இந்த ‘சகுந்தலாதேவி’. ‘அம்மா என்றால் அம்மாதானா? அவளை ஒரு பெண்ணாக ஏன் பார்க்கக் கூடாது? அவளுக்கென தனி வாழ்க்கையை அமைக்கக்கூடாதா? என கேள்விகளோடு உடன் பதில்களும் தருகிறது படம்.

உங்களை நீங்கள் நேசிக்கவில்லையென்றால் அடுத்தவர்களை எப்படி உங்களால் நேசிக்க முடியும் என அடிமனசில ஒரு கேள்வியை எழுப்புகிற படமாகவும் இருக்கிறது. உலகம் முழுமைக்கான அன்பின் வலிமையையும் பேசுகிறது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் உலகம் மட்டுமல்ல, மனசும் ரொம்ப சுருங்கிவிட்டது. கையில் அலைபேசியை வைத்துக் கொண்டு ஒரே குறுந்தகவலை இயந்திரத்தனமாக எல்லாருக்கும் பரிமாறிக் கொண்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட வேளையில் அன்பின் மகத்துவம் பற்றி பேசுகிறது படம்.

வித்யாபாலன் வலியையும், வேதனையையும் அருமையாக பதிவு செய்கிறார். புன்னகையும், பேரன்பும், அழுகையும், பிரிவும், ஆற்றாமையும் அவருக்கு திரையில் கை வந்த கலையாகிறது. இயக்குனர் அனு மேனன் ஆரம்பித்து ஒளிப்பதிவாளர், எடிட்டர் வரைக்கும் பெண்களின் பங்கே இருப்பது அபூர்வ நிகழ்வு.சகுந்தலாவின் நம்பிக்கை வரலாறு தான் இது… ஆனால் நாமும் சகுந்தலா மாதிரி ஃபீனிக்ஸ் ஆக எழுந்து வரமுடியும் என்பதை உணர்த்தி இருக்கிறார்கள்.Post a Comment

Protected by WP Anti Spam