By 5 June 2021 0 Comments

நாம ஜெயிக்கணும்னா குரலை உயர்த்தணும்! (மகளிர் பக்கம்)

சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கற்பகம் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் ‘கொரோனா நிவாரண நிதி அளித்தவர்கள் யார் யார்? எவ்வளவு நிதி பெறப்பட்டது?’ என்கிற விபரத்தை வெளிப்படையாய் அறிவிக்ககோரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. வழக்கறிஞர் கற்பகத்தை சந்தித்தபோது அவர் குறித்து நிறைய ஆச்சரியங்கள் நமக்கு காத்திருந்தது. காரணம் அவர் பார்வை குறைபாடுள்ள (visually impaired) மாற்றுத் திறனாளி பெண் வழக்கறிஞர்.

மாற்றுத்திறனாளியில் பெண் வழக்கறிஞர்கள் இல்லை எனப் பேசத் தொடங்கியவர், ‘‘பை பெர்த் எனக்கு கன்சென்டிடல் கிளாக்கோமா (Congenital Glaucoma). 15000 குழந்தையில் ஒரு குழந்தைக்கு இந்த பிரச்சனை உண்டு. பிறந்ததுமே நான் சர்ஜரி தியேட்டரில் இருந்தேன். ஒரு வயதுக்குள் என் இருவிழிகளும் நான்கு சர்ஜரிகளை சந்தித்தது. எட்டாவது படிக்கும்போது முதல் வால்வ் இம்ப்ளான்டேஷன் சர்ஜரி நடக்க, இதுவரை மூன்று வால்வ் இம்ப்ளான்ட்களைச் செய்துள்ளேன்.

வருடத்திற்கு இருமுறை லேசர் செய்வேன். இதுவரை 15 அறுவை சிகிச்சைகள் வரை சந்திச்சாச்சு. வலது கண்ணில் பார்வை சுத்தமாக இல்லை. இடது கண்ணும் மிக அருகில் இருப்பவை மட்டும் மங்கலாய் 50% தெரியும்’’ எனத் தன் பிரச்சனையை விளக்கிய கற்பகம் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் கோல்ட் மெடலுடன் யுனிவெர்சிட்டி டாப்பராம்.‘‘பழவேற்காடு அருகே காட்டூர் கிராமம் என் ஊர். பெற்றோர் படிக்காதவர்கள். அப்பா விவசாயி. எனக்கு ஒரு தம்பி. தெரிந்தவரையில் என் குடும்பத்தில் யாருக்குமே இந்தப் பிரச்சனை இல்லை. எனது குறைபாட்டின் வீரியத்தை படிக்காத எனது பெற்றோர்களால் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. என் எதிர்காலம்.

படிப்பு பற்றியெல்லாம் பெரிதாய் அவர்களுக்கு யோசிக்கத் தெரியவில்லை.ஒவ்வொரு முறையும் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை சங்கர நேத்ராலயா போய் வருவோம். எனவே சென்னையிலே நிரந்தரமாய் தங்கத் தொடங்கினோம். சென்னையில் இருந்த எனது பெரியப்பாவின் உதவியில் நார்மல் பள்ளியில் சேர்ந்தேன். என் பார்வைக் குறைபாட்டை அறிந்த பள்ளி நிர்வாகம் முதலில் என்னை சேர்க்க சம்மதிக்கவில்லை. நான் உறுதியாக நின்ற பிறகே அட்மிஷன் கிடைத்தது.

‘இந்தப் பெண் எப்பவும் கரும்பலகை(board) பக்கத்திலே நிக்கிறாள்..’ என ஆசிரியர்கள் புகார் அளிக்க, என் பெற்றோரை அழைத்த பள்ளி நிர்வாகம் பிரெயில் மெத்தெட் பள்ளியில் சேர்க்கச் சொன்னார்கள். மற்ற மாணவர்களோடு அதே பள்ளியில் படிக்க நானும் என் பெற்றோரும் உறுதி காட்டினோம். நல்ல மதிப்பெண் எடுக்கலைனா அனுப்பலாம் எனத் தலைமை ஆசிரியர் என் மீது அனுதாபம் காட்ட என் படிப்பு தொடர்ந்தது. ஆரம்பத்தில் தடுமாறினாலும் என் விடாமுயற்சியால் எழுந்து நின்றேன். பள்ளிக்கு என்னை அழைத்துச் செல்வது, மீண்டும் அழைத்து வருவது, மாலை நேர வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வது என அனைத்திலும் என் தம்பி பக்க பலமாய் இருந்தான்.

10 ம் வகுப்பு தேர்வில் 91.2 சதவிகிதமும், +2 தேர்வில் 94.5 சதவிகிதமும் எடுத்து பள்ளி நிர்வாகத்தையும் என் உறவினர்களையும் வியப்பில் ஆழ்த்தினேன். இயற்பியல் பாடத்தில் 197, வேதியியல் பாடத்தில் 199, உயிரியல் பாடத்தில் 198 என 197.25 கட் ஆஃப் மதிப்பெண்களுடன் மருத்துவப் படிப்புக்குத் தேவையான மதிப்பெண்கள் எனக்கிருந்தது. எனக்குள்ளும் மருத்துவக் கனவு இருந்தது. ஆனால் நான் +2 படித்தபோது பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகளை மருத்துவப் படிப்பிற்கு அனுமதிக்கவில்லை. அடுத்தது சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பயோமெடிக்கல் இஞ்சினியரிங் கிடைத்தது.

அதற்காக மாற்றுத் திறனாளி தகுதி சான்றிதழ் பெற மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலகம் சென்றபோது, சான்றிதழை தரும் மருத்துவர் ‘நீயெல்லாம் இஞ்சினியரிங் படித்து என்ன செய்யப்போற’ என ஏளனமாய் கேட்டு அசிங்கப்படுத்தி அழ வைத்தார். எனது கண்ணீரைப் பார்த்த கே.எம்.சி. மருத்துவமனை மருத்துவர்கள், நாங்கள் சான்றிதழ் தருகிறோம் என முன் வந்தார்கள். அதன் பிறகே அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைந்து, கல்லூரி வளாக விடுதியிலே தங்கி படித்தேன்.

+2 வரை இடது கண்களுக்கு மிக அருகில் புத்தகத்தை வைத்து கூர்ந்து பார்த்தே படித்து வந்தேன். பொறியியல் படிக்கும்போது, புத்தகங்களில் உள்ள எழுத்தின் அளவு (font size) மிகச் சிறிதாய் இருக்க, பாடங்களை படிப்பதில் சிரமம் ஏற்பட்டது. நண்பர்கள் வாசிக்க பாடங்களை உள் வாங்கி தேர்வுகளை எழுத தொடங்கினேன். படிப்பு செலவுகளுக்கு பெற்றோரை எதிர்பார்க்காமல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகளை வீட்டுக்கே சென்று எடுக்கத் தொடங்கியதோடு, கூடவே வசதியற்ற மாணவர்களையும் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு மட்டும் இலவசமாய் பாடம் சொல்லிக் கொடுத்தேன். யாரையும் சார்ந்து இருக்காமல் தனித்துவத்தோடு வாழ்வதில் அப்போதில் இருந்து உறுதி காட்டி வந்தேன்.

ஒரு முறை எனது மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து பயண அட்டை தொலைந் துவிட, என்.ஒ.சி. சான்றிதழ் பெற காவல் நிலையம் சென்றபோது, அங்கிருந்தவர்கள் என்னை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் நடந்து கொண்டனர். குறிப்பிட்ட சம்பவத்தை சி.எம். செல்லுக்கு விவரித்து விளக்கமாய் கடிதம் எழுதியபோது. சகல மரியாதையுடன் என்னை உட்கார வைத்து சான்றிதழை வழங்கினர். அதிகாரம் கையில் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பது புரியத் தொடங்கியது. பதவிக்கான பவர் என்னை புரட்டிப்போட, நாம ஜெயிக்கணும்னா குரலை உயர்த்தணும் என முடிவெடுத்தேன். என் கவனம் சட்டத்தின் பக்கம் திரும்பியது.

பொறியியல் படிப்பை முடித்ததுமே தரமணி அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இணைந்து எல்.எல்.பி. ஹானர்ஸ் படிப்பை மூன்று ஆண்டுகளில் முடித்தேன். சட்டப் புத்தகங்கள் அனைத்துமே பெரிதுபெரிதாய் இருக்க, யாரையும் தொந்தரவு செய்யாமல் அனைத்து பக்கங்களையும் கைபேசியில் ஸ்கேன் செய்து இ-புத்தகங்களாக மாற்றி கம்ப்யூட்டர் திரையில் பெரிதாக்கி படிக்கத் தொடங்கினேன்.

நண்பர்கள் என்னை சீஃப் ஜஸ்டிஸ் என கிண்டலடிக்க, அவர்களது விருப்பம் அதுவாகவே இருந்தது. கூடவே சென்னை பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வியில் ஹியூமன் ரைட்ஸ் அண்ட் டியூட்டிஸ் எஜுகேஷனில் எம்.ஏ. முடித்தேன். சட்டக் கல்லூரியில் இருந்து வெளியில் வரும்போது கோல்ட் மெடலோடு, கல்லூரி டாப்பர் சான்றிதழை தமிழக கவர்னர் மற்றும் அப்போதைய சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தகில் ரமணி, இப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ஆகியோர்களின் கைகளால் பெற்றேன். 2018ல் எனக்கு மலால விருதும் கிடைத்தது. கவர்னர் மாளிகையில் நடந்த குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் சட்டப் பிரிவிற்கான மெரிடோரியல் கேன்டிடேட் பிரிவிலும் நான் இடம் பெற்றேன். வெளிநாட்டில் எல்.எல்.எம். படிக்கும் கனவும் எனக்கு இருக்கிறது’’ என்கிறார் கற்பகம்.

‘‘இப்போது உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரபாகரன் சார் ஜூனியராய் பிராக்டீசை தொடர்கிறேன். அவரது அலுவலகம் எப்போதுமே டிசபிள் பிரெண்ட்லி. மாற்றுத் திறனாளிகளுக்கான பொதுநல வழக்குகளிலும் பிரபாகரன் சார் கவனம் செலுத்தி வருகிறார். அவரிடத்தில் ஜூனியராய் சேர்ந்த பிறகே சமூகம் சார்ந்த பிரச்சனை களை கையிலெடுக்கும் வாய்ப்புகள் அமைந்திருக்கிறது. இதில் மாற்றுத் திறனாளிகள் பலரோடு பழகும் வாய்ப்பும், களப் செயல் பாட்டாளர்களின் (social activist) நட்பும் கிடைக்கிறது.

எங்கெல்லாம் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் பாதிக்கப்படுகிறேதா அங்கெல்லாம் அதுசார்ந்த பொதுநல வழக்குகளை கையில் எடுக்கிறேன். அதில் ஒன்றுதான் கொரோனா நிவாரண நிதியில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்ற எனது வழக்கு. அதில் வெற்றியும் கிடைத்திருக்கிறது. ஜூனியர் வழக்கறிஞர்கள் வழக்குகளை எடுத்து வாதம் செய்ய நீதிமன்றங்கள் பெரும்பாலும் அனுமதிப் பதில்லை. ஆனால் என் மீதான நம்பிக்கையில், முதல் நாளே ஆர்க்யூமென்டிற்கு அனுமதித்தார்கள். வழக்கின் சுருக்கங்களை (brief) கைபேசியில் ஸ்கேன் செய்து முழுமையாகப் படித்த பிறகே பிரசென்ட் செய்கிறேன்.

மாற்றுத் திறனாளியாய் ஒருவர் பிறப்பது சவால்கள் நிறைந்தது. அந்தக் குழந்தைக்கு பெற்றோராய் இருப்பது அதைவிட சவால் நிறைந்தது. எல்லாப் போராட்டங்களையும் வென்றாலும், மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடப்பதும் எளிதல்ல என்றவர், இவர்களுக்காகவே குரல் கொடுக்கும் ‘வாய்ஸ் ஃபார் த வாய்ஸ்லெஸ் இன்டியன் பியூப்பிள் ஃபவுண்டேஷன்’ என்கிற தன்னார்வ அமைப்பில் ஹானரெரி சி.யு.ஒ.வாக செயல்படுவதையும் தெரிவித்தார். சட்டப் போராட்டங்களை நடத்தி அவர்களுக்கான உரிமைகளைப் பெற்ற பிறகு, சமூகம் சார்ந்தும் அவர்களுக்காக சில உதவிகளைச் செய்ய தொடங்கப்பட்டதே இந்த அமைப்பு.

மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி ரொம்பவே முக்கியம். பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் சாதிப்பதும் சவால்கள் நிறைந்தது. எனக்கு கல்விதான் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுத்தது. ‘நான் எந்திரிக்கணும் என்ற எண்ணமே என்னை கை தூக்கியது. நான் படித்த பள்ளியும் அதற்கு ஒரு காரணம். மாற்றுத்திறனாளிப் பெண்கள் அதிகம் படித்தவர்களாய் வெளியில் வர வேண்டும் என்பதை மிகவும் அழுத்தம் திருத்தமாக இங்கே பதிவு செய்கிறார் கற்பகம்.

எல்லா பள்ளிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்பெஷல் எஜுகேட்டர் கண்டிப்பாய் இருக்க வேண்டும். தனியார் பள்ளிகள் குறைந்தது 25 சதவிகிதமாவது மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். உடல் சவால் கொண்டவர்களை தனித்துவத்துடன் இயங்க வைக்காத அரசாங்கம் நம்முடையது. பார்வையற்ற ஒருவர் சூப்பர் மார்க்கெட்டிற்கு பொருட்களை வாங்கச் சென்றால் அவரால் விலைபட்டியலை படிக்க முடியுமா? அதற்கென ஒருவர் உதவியை நாட வேண்டியுள்ளது. இப்போதெல்லாம் ஆக்குமென்டெட் ரியாலிட்டி க்ளாஸ் (Augmented reality glass) பயன்படுத்தும் அளவுக்கு டெக்னாலஜிகள் வளர்ந்தாச்சு. அதை அணிந்தால் வார்த்தைகளை ரீட் செய்து காதுகளுக்கு அதுவே அனுப்பிவிடுகிறது.

இதுமாதிரியான வளர்ந்த டெக்னாலஜிகளை வழங்கி உடல் சவால் கொண்டவர்களை எம்பவர் செய்வதை விட்டுவிட்டு குச்சியும் குருட்டு கண்ணாடியும் கொடுப்பதே அவர்களுக்கான அக்ஸபிளிட்டியாக அரசாங்கம் நினைத்து அவர்களை நிரந்தர மாற்றுத்திறனாளியாக மாற்றுகிறது. கேட்டால் நிதி இல்லை என்பார்கள்’’ எல்லாவற்றையுமே பொதுநல வழக்குகளாய் கையிலெடுக்க இருப்பதாய் தெரிவிக்கிறார் இந்த சட்டப் போராளி.

பிரபாகரன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

10 வருடத்திற்கு மேல் மாற்றுத்திறனாளிகளோடு பயணிக்கிறேன். கற்பகம் செய்ய முடியாதெனச் சொல்வதை சவாலாய் எடுப்பவர். ஸ்டீரியோ டைப் விசயங்களை உடைத்து, சிறகை எவ்வளவு விரித்து பறக்க முடியுமோ அவ்வளவு பறக்க நினைப்பவர். சுருக்கமாய் சட்டத் துறையின் ஜான்ஸி ராணி.
வேலையில் ரொம்பவே போக்கஸ்ட். தனிநபர் வழக்கை கம்யூனிட்டிக்கான விசயமாக மாற்ற நினைப்பவர். சிம்பத்தி அவருக்கு சுத்தமாய் பிடிக்காது. யாரையும் டிபன்ட் பண்ணாமல் தனித்துவத்தோடு இருக்க நினைப்பவர். தன் பார்வை குறையை எந்த இடத்திலும் வெளிக்காட்டாமல் நார்மல் மாதிரியே வாதங்களை வைப்பார். சாதாரண சிந்தனைகளே அவரிடத்தில் இருக்காது. சட்டத் துறையில் சாதித்த ஜாம்பவான்கள் வெளிநாட்டவராய் இருந்தாலும் அவர்களின் சாதனைகளைத் தேடிப் படிப்பவர். முக்கியமாக சாதித்த பெண் நீதிபதிகளின் வாழ்க்கையை விரும்பிப் படிப்பார்.Post a Comment

Protected by WP Anti Spam