நாக்கு சுட்டு சேர்க்கும் முட்டாள்தனம் !! (கட்டுரை)

Read Time:11 Minute, 16 Second

நாவுக்கு ருசியாக சாப்பிடுவதற்கு ஒன்றுமே கிடைப்பதில்லை, அசைவத்தை கண்டு பல நாள்களாகின்றன என புலம்பிக்கொண்டிருப்போர் இருக்கையில், இருப்பதை வைத்து சமாளித்து வாழ்க்கையை நகர்த்துவோரும் இருக்கத்தான் செய்கின்றனர். இன்னும் சிலர், நாக்கு செத்துவிட்டது என்பர்.

வீடுகளில் பெரியவர்கள் ஒன்றுக்கூடிய ஏதாவது, நல்லவிடயங்கள் தொடர்பில் கதைத்துக்கொண்டிருக்கும் போது. பல்லிகள் சீச்சிட்டால், “பார்த்தாய்தான் பல்லியே சொல்லிவிட்டது” என்பர்; யாராவது தும்மிவிட்டாலும், அதனையே அனுமதிக்கான குறியீடாக எடுத்துக்கொள்வர்.

ஆனால், ​அதிர்ஷ்டலாபச் சீட்டில், ஒரு கோடி ரூபாய் பரிசு கொட்டப்போகிறது என, வீட்டுக்குள் ஒருவர் கூறும்போதுக்கூடக், தவறுதலாக யாராவது தும்மிவிட்டால், அவரை சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலைமையே உருவாகியிருக்கிறது. ‘கொரோனாவாக இருக்குமோ’ என்ற சந்தேக பார்வை அவர் மீது பட்டுவிடும்.

கொரோனா வைரஸ் தொற்றிக்கொள்ளாமல் இருக்க என்னென்னமோ செய்யப்படுகின்றன. இறுதியில் சாணத்தை கரைத்து உடம்போடு பூசிக்​கொண்டு கோமியத்தை பருகும் (பசு மாட்டின் சிறுநீர்) நிலைமையும் ஏற்பட்டுள்ளது. அவையிரண்டும் விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்படவில்லை.

மங்கலச் சடங்காக இருந்தாலென்ன, அமங்கலச் சடங்காக இருந்தாலென்ன பல சடங்குகளுக்கு இவையிரண்டும் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறான பழக்கவழக்கங்களை உடனடியாக மாற்றுவதென்பது கடினமானது.

ஆனாலும், விஞ்ஞான உலகில், மெஞ்ஞானமாக சிந்திப்பதே மனிதனுக்கு அழகு. இவ்வாறான, சம்பவங்கள் இந்தியாவிலேயே கூடுதலாக இடம்பெறும். குஜராத், உத்திரப் பிரதேச மாநிலங்களில், சாணமும் கோமியமும் பணத்துக்கு விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அங்கு கோமியத்தைப் பயன்படுத்தி எட்டுவிதமான ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், இவை கொரோனா, புற்றுநோய், எயிட்ஸ், தைரொய்ட், உயர் குருதி அமுக்கம் போன்ற நோய்களை குணப்படுத்தும். எவ்விதமான பக்கவிளைவுகளும் அற்றவை என்றும் கூறப்படுகின்றது.

‘கோமியம்’ என்றழைக்கப்படும் பசுவினது சலம் போன்றவை இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் அருமருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கோமியத்தில் சக்தி வாய்ந்த கிருமி நாசினிப்பொருள்கள் அடங்கியுள்ளதால், தீங்குகளை விளைவிக்கக்கூடிய பல்வேறான கொடிய கிருமிகளை அழித்துவிடும் என்ற நம்பிக்கை நிலவுகின்றது.

இது இவ்வாறு இருக்க இவ்விடயம் தொடர்பான அறிவியல் சார்ந்த உண்மைகளை ஆராய முற்படுவோர் கூறும் கருத்துகள் இவ்வாறு அமைகின்றன.

வீட்டு வாசலில் சாணம் கரைத்த நீரைத்தெளித்துக் கோலமிடும் பழக்கம் தமிழர் வாழ்வியலில் பன்நெடுங்காலமாக இருந்துவருகிறது. பூமியிலிருந்து புறப்படக்கூடிய கிருமிகளை அழிக்கக் கூடிய வல்லமை சாணத்துக்கு இருப்பதால், சூரிய உதயத்துக்கு முன்பாகவே வாசலில் சாணம் தெளிப்பதாக கூறப்படுகிறது.

‘பஞ்ச கவ்வியம்’ என்றழைக்கப்படும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் போன்றவை, பசுமூலமே பெறப்படுகின்றன. ‘திருநீறு‘ பசுவினது சாணத்தை எரிப்பதன் மூலம் பெறப்படுகின்றதொன்றாகும். திரு நீற்றை உடலில் பூசி நோய் நீங்கியதான புராணக் கதைகள், திருநீற்றுப் பதிகம் போன்றவை இதன் பெருமையை உணர்த்தி நிற்கின்றன.

சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுவரும் இச்செயற்பாடுகள் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் கோசலத்தைப் பருகும் செயற்பாடுகள் பற்றிய கருத்துகளும் இவ்வாறு அமைந்துள்ளன.

கோமியத்தை மருத்துவ தேவைகளுக்குப் பயன்படுத்துவதாயின் அவற்றைச் சேகரித்து ஆறு மணிநேரத்திற்குள் பயன்படுத்துவதே சிறப்பு என்றும் இரண்டாவது ஆறு மணி நேரம், மத்திம பலனைத் தரும் என்றும், அதன்பின்னர் பயன்படுத்துவது அதர்மம் என்று கூறப்படுகின்றது.

இரசாயனப் பாவனையற்ற உணவு வகைகளே கால்நடைகளின் தீவனமாக பண்டைய காலங்களில் இருந்தன. இன்று அவ்வாறான நிலைமைகள் இல்லை. எனவே, இரசாயனம் கலந்த புல், வைக்கோல் போன்றவற்றை உண்ணுகின்ற பசுவின் சாணமும் இரசாயனக் கலப்பற்றதாக இருப்பது சாத்தியமில்லை. எனவே இவ்விடயத்திலும், இந்தக் காலத்தில் இதன் நம்பகதத் தன்மை குறைவடைய வாய்ப்பு இருக்கின்றது.

கோசலம் என்பது உடலால் கழிவாக வெளியேற்றப்படும் பதார்த்தம் என்ற வகையில் இதன் உள்ளடக்கம் என்ன என்பதைப் பார்ப்போமானால், நீர் – 95 சதவீதமும், யூரியா, யூரிக் அசிட், அமோனியா, சல்பேட், பொஸ்பேட், குளோரைட், மக்னீசியம், கல்சியம், பொட்டாசியம், சோடியம் போன்றவை எஞ்சிய 5 சதவீதத்தையும் கொண்டுள்ளன.

கோமியத்தை பருகுவது அருவருப்பான ஒரு செயலாகும். எனவேதான், இதனைப் பருகுவோர் கேலிசெய்யப்படுகின்றனர். கோமியத்தை பருகியதன் பின்னர், ஏனைய சுவைகளை நாக்கு உணர்வதில்லை என்றும் கூறப்படுகிறது. மருத்துவ உலகு சார்ந்த அறிக்கைகளும், இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என வலியுறுத்துகின்றன.

இவ்விடயம் தொடர்பாக, ஊடகவியலாளர் ஒருவரின் வினாவுக்கு மருத்துவ நிபுணர் ஒருவர் பதிலளிக்கையில், “இது ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. உடலில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுப்பொருளான சிறுநீரை, மீண்டும் உடலுக்குள் அனுப்புவது கேடினை விளைவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

பசுவின் பால் தூய்மையானது; என்றாயினும் அதனை காய்ச்சிய பின்னரே பருகுவதற்கான அடிப்படைக் காரணம், அதனைப் பெறும்போது ஏற்படக்கூடிய கிருமித்தொற்றுகளிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்வதே ஆகும். ஆனால், கோசலத்தைப் பருகுவோர் நேரடியாக பெற்றுப் பருகுகின்றனர்.

விஞ்ஞானம் வியத்தகு விதத்தில் விருத்தியடைந்துவரும் இக்கால கட்டத்தில் இவ்வாறான செயற்பாடுகள், அறிவுக்கு அப்பாற்பட்ட மூடத்தனமான செயற்பாடுகளாகவே உள்ளன.

கோமியம், பிணி நீக்கும் மருந்தாகும் என்பது ஆய்வுகள் ஊடாக நிரூபிக்கப்பட்டால் அன்றி, எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை அறிவியல் சார்ந்து சிந்திக்கும் ஒவ்வொருவரும் மனங்கொள்ளவேண்டும்.

இதைப்பற்றிய கற்கைகள் தொடரும் சந்தேகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்.

மங்கலச் சடங்குக்கும் அமங்கலச் சடங்குக்கும் சாணம் முக்கிய இடத்தை வகிக்கிறது. இதில், ‘சாக்கு சுட்டு சேர்த்துக் கொள்ளுதல்’ அக்காலத்தில் முக்கிய சடங்காகும்.

சாதிய முறைமை இன்னுமே புழக்கத்தில் உள்ளது. எனினும், அதனையும் மீறி காதல் வயப்பட்டு, திருமணம் முடித்து, நன்றாக குடும்பம் நடத்துவோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

சாதிவிட்டு சாதியை மீறி காதல்வயப்பட்டு மணம்புரியும் நிலைமை ஏற்படுவதுண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில், சாதி கெட்டவர்களாகக் கருதி ஒதுக்கி வைக்காமல் மீண்டும் தம்மவராகவே சேர்த்துக் கொள்வதற்கான ஒரு சடங்காகவே ‘நாக்கு சுட்டு சேர்த்துக் கொள்ளுதல்’ சடங்கு அமைந்துள்ளது.

குல தெய்வத்தின் முன்பாக தீபமேற்றி, பாதங்கள் மறையும் அளவு குழி வெட்டி அக்குழியினுள் பசுவினுடைய சாணத்தைக் கரைத்து ஊற்றி, அதனுள் மணத்தம்பதியரை நிறுத்தி வைத்து, அந்த தீபத்தின் திரியின் மூலமாக, இருவரின் நாக்கையும் நீட்டச் செய்து நுனியைச் சுட்டுவிடுவர்.

இவ்வாறு செய்ததன் ஊடாக சாதி தீட்டு கழிந்ததாகக் கருதுகின்றனர். அதற்குப் பின்னர், எவ்விதத் தடையுமின்றி தம்மவராக ஏற்றுக் கொள்கின்றனர்.

வேற்றுமை பார்க்கப்படுவதில்லை. அவ்வாறான சடங்குகள் புழக்கத்தில் இருப்பதாக கேள்விப்படவில்லை என்றாலும் சாணமும் இருந்திருக்கிறது; முட்டாள் தனமும் இருந்திருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
Next post ட்வின்ஸ்!! (மருத்துவம்)