எரியும் விவகாரங்கள்; பொறுப்பற்ற கதைகள் !! (கட்டுரை)

Read Time:14 Minute, 52 Second

அரசியல்வாதிகளாலும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளாலும் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் குறித்து, பொதுமக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களோ ‘பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடிப்பது போன்று’ செயற்பட்டு, வேண்டத்தகாத எதிர்விளைவுகளுக்கு முகம்கொடுக்கிறார்கள்.

மக்களுக்கு எழும் கேள்விகளுக்கு, ‘கேட்கிறவன் கேணயனாக இருந்தால், கோப்பையில் நெய்வடியுதென்று சொல்வதைப் போல’, பொறுப்புக்கூறல் இல்லாமல் அளிக்கப்படும் விளக்கங்கள், அதைவிட மோசமான விளைவுகளுக்கு விதையிடுகின்றன.

பெரும்பான்மை அரசியலிலும் சிறுபான்மை அரசியலிலும் பொறுப்புக்கூறலை மனதில் கொள்ளாமல், தீர்மானங்கள் எடுக்கப்படுவது புதிதல்ல. நாட்டில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு, அரசாங்கத்தின் பக்கத்தில் இருந்து மட்டுமன்றி, ஏனைய தரப்புகளில் இருந்தும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே காரணமாக அமைந்தன.

அண்மைக்காலமாக, இலங்கையில் பல்வேறு குழப்பங்களும் நெருக்கடிகளும் பற்றி எரியும் விவகாரங்களாக இருக்கின்றன. தொடர்ச்சியாக, ஏதாவது ஓர் அரசியல், பொருளாதார, இனத்துவ நெருக்கடி, நாட்டில் இருந்து கொண்டே இருக்கக் காண்கின்றோம்.

இந்தப் பின்னணியில், மக்கள் துயரத்துக்கு உள்ளாகியிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில், எரிபொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டு உள்ளமை அரசியல், சமூக அரங்கில், பெரும் விமர்சனங்களையும் எதிர்ப்பலையையும் தோற்றுவித்திருக்கின்றது. ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பல் விவகாரத்தைத் தொடர்ந்து, எரிபொருள் விலையேற்ற விவகாரமும் தீப்பிடிக்கத் தொடங்கி இருக்கின்றது.

ஆனால், வழக்கம் போல அரசாங்கமும் பொறுப்பு வாய்ந்தவர்களும் மக்களை முட்டாள் எனக் கருதும் தோரணையிலான கற்பிதங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே தவிர, அவர்களின் விளக்கங்கள் தேசப்பற்றையோ மக்கள் மீதான பற்றையோ வெளிப்படுத்தும் பாங்கிலமைந்த பொறுப்புக்கூறலுடனான விளக்கங்களாகத் தெரியவில்லை.

கொரோனாவின் முதலாவதும் இரண்டாவதும் அலைகள் ஏற்படுத்தாத தாக்கத்தை, மூன்றாவது அலை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நிலைமை ஏற்படுவதற்கு அரசாங்கமே காரணம் என்று, மருத்துவத் துறையினரும் எதிரணியும் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், மக்களே காரணம் என்கின்றது அரசாங்கம்.

இவ்வாறு, கொரோனா அச்சத்திலும் அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலும் நாடு சிக்கித் தவித்துக் கொண்டிருந்த வேளையிலேயே, ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ என்ற கப்பல் வடிவில், இன்னுமொரு பிரச்சினை, கொழும்புக் கடலை வந்தடைந்தது.

பிளாஸ்டிக் உற்பத்திக்கான உள்ளீடுகள், நைத்திரிக் அமிலம், வாகன எதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றிய இந்தச் சரக்குக் கப்பலில், அமிலக் கசிவு ஏற்பட்ட நிலையிலும் கூட, கொழும்புத் துறைமுக எல்லைக்குள் வருவதற்கு பொறுப்பற்ற விதத்தில் அனுமதி அளித்தது யார் என்று இதுவரை தெரியவில்லை.

இதில், அமிலக் கசிவு ஏற்பட்ட விடயம், இந்தியா, கட்டார் ஆகிய நாடுகளின் துறைமுகங்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தும், அத்துறைமுகங்கள் கப்பலைப் பொறுப்பெடுக்கவில்லை. இந்தியாவின் ஹசீரா துறைமுகத்தில் கப்பல் நிற்கும் போதே, அமிலக் கசிவு இருப்பதை கப்பல் கப்டன் அறிந்திருந்தார் என்றால், இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைவதற்கு முன்னதாகவே அதுபற்றி இலங்கை அதிகாரிகளுக்கு அறிவித்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், கொழும்புத் துறைமுகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் வரும் வரைக்கும், இவ்விடயத்தை கப்பல் கப்டன் அறிவிக்கவில்லை என்று அரசாங்க தரப்பில் கூறப்படுகின்றது.

அப்படியென்றால், உண்மையில் கப்பல் கப்டன் அறிவிக்கவில்லையா? அல்லது, பொறுப்பற்ற தனமான, கப்பல் உள்நுழைவதற்கு உரியதரப்பினர்அனுமதி வழங்கியுள்ளனரா என்ற கேள்வி எழுகின்றது.

இந்தக் கப்பல் கொழும்பு கடற்பரப்பில் எரிந்து, மூழ்கிக் கொண்டிருப்பதால், முழு நாடும் பெரும் இழப்புகளைச் சந்திக்க நேரிட்டுள்ளது. மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது; சுற்றுலாத்துறை முடங்கியுள்ளது. கடற் சூழல் இயற்கை வளங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இன்னும் 40 வருடங்களுக்கு இதன் தாக்கம் இருக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

சீனத் துறைமுக நகருக்கு சில கிலோ மீற்றர் தொலைவில், பொருளாதாரத்தின் மையப்புள்ளியான கொழும்பின் கடற்பரப்பில், சுற்றுலாத்தொழில் கொடிகட்டிப் பறக்கும் கடற்கரைக்கு அப்பால், ஒரு கப்பல் உள்நுழைந்து, இத்தனை தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கின்றமை, ஒரு தற்செயல் நிகழ்வுதானா அல்லது, இது ஒரு சதித்திட்டமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

அரசாங்கமும் அமைச்சர்களும் அதிகாரிகளும் இன்னும் சில வருடங்களில் அப்பதவிகளில் அதிகாரத்தில் இருக்கமாட்டார்கள். இருப்பினும், இதனால் ஏற்பட்ட எதிர்விளைவுகளை மக்களே அனுபவிக்க வேண்டி வரும் என்பதே நிதர்சனமாகும்.

ஆனால், இதுவிடயத்தில் அரசாங்கமோ அதிகாரிகளோ மக்களுக்குத் தெளிவாக விளக்கமளிக்கவும் இல்லை; பொறுப்பான பதில்களைக் கூறவும் இல்லை. ‘இதோ அடுத்த மாதம் கடல் சுத்தமாகி விடும்; இனி எல்லோரும் வழக்கம் போல மீன்பிடித்துச் சாப்பிடலாம்’ என்ற தோரணையிலேயே கதையளந்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாட்டு மக்கள் உயிரச்சத்தை எதிர்கொண்டுள்ளனர். வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கப்பல் எரிந்ததால் கடல்சார் தொழிற்றுறையில் உள்ளவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

இவ்வாறான ஒரு பின்னணியில், அரசாங்கம் இரவோடிரவாக எரிபொருள் விலைகளை கணிசமான ரூபாயால் அதிகரித்திருக்கின்றது. கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில், மசகு எண்ணெயின் விலை அதிகரித்திருந்தது. அதனடிப்படையில், அமைச்சரவை உப குழுவின் ஒப்புதலுடனேயே உள்நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதற்கு இது பொருத்தமான காலமல்ல.

உண்மையில், இது மக்களுக்கு மானியங்களை வழங்க வேண்டிய காலப்பகுதியாகும். ஆனால், இந்தப் பயணத்தடையைப் பயன்படுத்தி, வியாபாரிகள் பொருட்களை விலையேற்றி விற்பதன் ஊடாக, பகற் கொள்ளை அடிப்பது போதாது என்று, அரசாங்கமும் விலையேற்றம் செய்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

இவ்விலையேற்றம், அரசியல் அரங்கில் மட்டுமன்றி, சமூக மட்டத்திலும் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. எரிவாயு உள்ளிட்ட வேறு பல பொருட்களின் விலைகளை அதிகரிக்கவும் அரசாங்கம் தயங்கமாட்டாது என்பதை குறிப்புணர்த்தும் ஒரு நடவடிக்கையாகவும், இதனை மக்கள் பார்க்கின்றனர்.

நாட்டில் என்ன நடந்தாலும் எத்தனை கோடியைக் கொள்ளையடித்தாலும் கீழ்நடுத்தர, கீழ்த்தட்டு சிங்கள மக்கள் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால், அன்றாடம் பயன்படுத்துகின்ற பொருட்களின் விலை அதிகரிப்பு, அவர்களிடையே குறிப்பிடத்தக்க அதிர்வொன்றை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்ததாகும்.

ஆகவேதான், இதனைப் பயன்படுத்திக் கொள்வதற்காகவே நல்லாட்சிக் காலத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டபோது, அப்போது, ஒன்றிணைந்த எதிரணியாக இருந்த இப்போதைய ஆளும்கட்சி, சைக்கிள்களில் நாடாளுமன்றத்துக்குச் சென்றிருந்தனர் என்பதையும் நினைவுபடுத்த வேண்டியிருக்கின்றது.

எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, விமர்சனங்கள் மேலெழத் தொடங்கியதும் அரசாங்கமே, ‘பல்டி’ அடிக்கத் தொடங்கியது. அதாவது, ஆளும் மொட்டுக் கட்சி, இந்தப் பழிச்சொல்லில் இருந்து தப்பித்துக் கொள்ளும் எத்தனங்களை எடுத்தது. “இவ்வாறான விலை அதிகரிப்பை மேற்கொண்டமைக்காக, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டும்” என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் அறிவித்தார்.

இவ்வறிவிப்பு, ஆளும்தரப்புக்குள் இருக்கின்ற உள்முரண்பாடுகளை முதற்கண் வெளிப்படுத்தியது. அதேநேரம், எரிபொருள் விலை அதிகரிப்பால் மக்கள் மத்தியில் ஏற்படும் எதிர்ப்பலையை சமாளிக்க, வழக்கமாகச் செய்வது போல, இம்முறை உதய கம்மன்பில இதற்காக ‘பலிகொடுக்கப்படப்’ போகின்றாரோ என்ற சந்தேகத்தையும் உண்டுபண்ணியது.

ஆனால், “இது மேலிடத்து அனுமதியுடன், முறைப்படி மேற்கொள்ளப்பட்ட விலை அதிகரிப்பாகும்” என்று அமைச்சர் கம்மன்பில பதிலளித்தார். இதுவெல்லாம், பொறுப்புக்கூறல் எனும் ‘பந்தைக் கைமாற்றும்’ பாங்கிலான, ‘அரசியல் நாடகம்’ என மக்கள் அனுமானித்தார்கள்.

இந்நிலையிலேயே, அரசாங்கம் உத்தியோக பூர்மாக ஓர் அறிவிப்பை வெளியிட்டது. எரிபொருள் விலை அதிகரிப்பானது தேசிய பொருளாதாரம், வங்கி வட்டி வீதங்கள், வெளிநாட்டு இருப்புகளை உறுதிப்படுத்துவதற்கும் பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, வாழ்க்கைச் செலவு நெருக்கடிகளுக்கு மக்கள் முகம்கொடுத்துள்ள நிலையில், மானியங்களை வழங்க வேண்டிய அரசாங்கம், அரசியல்வாதிகளுக்கு, சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்யும் முஸ்தீபுகளை மேற்கொள்ள முடியுமாயின், ஆகக் குறைந்தபட்சம் குறைந்த தொகையிலாவது எரிபொருள் விலையை அதிகரித்திருக்க வேண்டும்.

அதைவிடுத்து, ஆட்சியாளர்களே பொறுப்பான அமைச்சரைப் பதவி விலகச் சொல்வதும், அவர் அதனை மறுத்துரைப்பதும், பின்னர், பொருளாதாரம், மக்களின் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்படுத்தி விளக்கமளிப்பதும் எந்தவகை நியாயப்படுத்தல் எனத் தெரியவில்லை.

ஆனால் ஒன்று, கொரோனா பரவியபோதும், கப்பல் எரிந்த போதும், பெற்றோல் விலை அதிகரிப்பின் போதும் பொறுப்பற்ற, நழுவல் போக்கான, நாடக பாணியிலான கதைகளையே அரசாங்கம் அநேகமாகக் கூறி வருகின்றது.

ஆக மொத்தத்தில், நாட்டில் எது நடந்தாலும், சொல்வதை, ஒரு பொறுப்பான பதில் சொல்கின்ற மாதிரி மக்களுக்கு கூறினால், மக்கள் நம்பி விடுவார்கள்; அல்லது, காலவோட்டத்தில் மறந்து விடுவார்கள் என்பதை, எல்லா அரசியல்வாதிகளும் புரிந்து வைத்திருக்கின்றார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழ்வென்பது பெருங்கனவு – கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்! (மகளிர் பக்கம்)
Next post டீச்சர் லவ் டார்ச்சர் Tamil Dubbed Reviews & Stories of movies!! (வீடியோ)