நேர்மறையான எண்ணம் இருந்தாலே எல்லாமே பெஸ்ட்டாக அமையும்! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 56 Second

இல்லத்தரசி, தொழில் முனைவோர், மிஸ்ஸஸ் சென்னை, நடிகை… என பன்முகம் கொண்டு, தனது நேர்மறை சிந்தனையால் தானும், தன்னை சார்ந்திருப்பவர்களையும் மகிழ்வில் வைத்திருக்கும் ஆர்த்தி ராம்குமார், தனது சீக்ரெட் ஆஃப் எனர்ஜியை பகிர்ந்து கொண்டார். ‘‘பெங்களூர் யுனிவர்சிட்டியில் MBA கோல்ட் மெடலிஸ்ட். பெரிய பெரிய ஐடி நிறுவனங்களில் உயர்பதவிகளில் பணியாற்றியுள்ளேன். திருமணத்திற்கு பின் எல்லோருக்கும் இருப்பது போல் என் வாழ்விலும் மாற்றங்கள் ஏற்பட்டது. குழந்தை, கணவர், வீட்டு பொறுப்புகள் என ஆன போது வேலையை விட வேண்டியிருந்தது. வேலை பார்த்து பழகியதால், ஆறு மாதம் தான் என்னால் வேலையில்லாமல் இருக்க முடிந்தது. அந்த நேரத்தில் ஒரு யோசனை வந்தது. வெறும் பணம் மட்டும் சம்பாதிக்கும் வேலையில்லாமல், அந்த வேலையினால் சமூகத்திற்கும் ஏதாவது ஒரு நன்மை இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கணவரிடம் விவாதித்தேன்.

பொதுவாக சர்வீஸ் அப்பார்ட்மென்ட் பார்த்துக் கொள்பவர்கள் ஆண்களாக இருப்பார்கள். அவர்களுக்கு பதிலாக விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள் போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று ‘Posh Stays’ என்ற பெயரில் சர்வீஸ் அப்பார்ட்மென்ட், பெண்களுக்கான விடுதிகள் உருவாக்கினோம். எங்கள் விடுதியில் மொத்தம் 20 பெண்கள் வேலைப் பார்க்கிறார்கள். அவங்க குழந்தை கல்விக்காக எங்கள் நிறுவனம் சார்பாக ஸ்பான்சர் செய்கிறோம்.
முதலாளி என்றெல்லாம் நான் சொல்லிக் கொள்ள மாட்டேன். அவங்க வேலையை பார்த்துக் கொள்கிறார்கள். அதற்கான வாய்ப்புகள் மட்டுமே ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம். இதுவரை என் கையால் யாருக்கும் சம்பளம் கொடுத்தது கிடையாது. அவங்க சம்பளம் எல்லாம் எடுத்து, அதில் மீதி இருந்தால் என்னிடம் கொடுப்பாங்க. 12 வருடமாக இயங்கி வரும் எங்கள் விடுதி, தற்போது சென்னையில் ஐந்து இடங்களில் உள்ளது” என்று கூறும் ஆர்த்தி, தான் மிஸ்ஸஸ் சென்னை ஆன கதையை கூறினார்.

‘‘2018 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ்ஸஸ் சென்னை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டேன். மூன்று மாத உழைப்பின் பயனாய் இரண்டாம் இடம் பிடித்தேன். இது புற அழகு, உடல் வாகு மட்டும் கொண்டு வெல்ல முடியாது. ஒரு பெண்ணாக, குழந்தைக்கு அம்மாவாக, சமூகத்தில் உங்களின் பங்கு, திறமை போன்ற காரணிகளும் அடங்கும். போட்டியின் நடுவர்களில் ஒருவரான சாக்‌ஷி அகர்வால், ‘மிஸ்ஸஸ் சென்னைஆவதால் என்ன சாதிக்க போறீங்க’ என்று கேட்ட கேள்விக்கு, Maslow’s Hierarchy of Needs Theory அடிப்படையில் பதில் சொன்னேன். அதாவது, ஒரு மனிதனின் அடிப்படை தேவையான உணவு, உடை கிடைத்த பின் அடுத்து சொந்தமாக வீடு வேண்டுமென்று ஆசைப்படுவோம். வீடு கிடைத்த பின், self-activation stage. ஒரு மனிதன் தங்களை உணர்ந்து கொள்ளும் நிலை. நான் யார்? நாலு பேருக்கு அறிந்தவனாக இருக்கேனா? என்று எல்லாம் முடிந்த பின் அந்த இடம் நோக்கி நகர்கிறோம். அதற்குத் தானே எல்லாம் போராடிக் கொண்டிருக்கிறோம். நான் வந்திருப்பதும் அதற்காக தான் என்று கூறினேன்.

நாம் என்னதான் சமூகம் சார்ந்து வேலைகள் செய்து கொண்டிருந்தாலும், தெரிந்த முகமாக மாறும் போது, ஓர் இடத்தில் கதவு தட்டுகையில் உடனடியாக திறக்கப்படுகிறது. அப்படித்தான் குழந்தைகளுக்காக நிறைய வேலைகள் செய்து கொண்டிருக்கும் “அருவி” என்ற அமைப்பிற்காக சென்ற போது உணர்ந்தேன்” என்று கூறும் ஆர்த்தி, தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமானது பற்றி பேசினார். ‘‘மிஸ்ஸஸ் சென்னை பட்டம் பெற்ற ஒரு மாதத்தில், தமிழ் சீரியல்களின் தாய் வீடான சன் டிவியிலிருந்து சீரியலில் நடிக்க அழைப்பு வந்தது. இது குறித்து கணவர் ராம்குமாரிடம் கேட்ட போது, “எந்த ஒரு வாய்ப்பாக இருந்தாலும் நாம் எவ்வாறு கையால்கிறோம் என்பதுதான் முக்கியம். வருவதை நேர்மறையாக எடுத்துக் கொண்டு பயணித்தால் உனக்கு மேலும் மேலும் வாய்ப்புகள் உருவாகும். வரும் வாய்ப்புகளில், எதற்கு என்று ஒரு சிறு சந்தேகமோ, தயக்கமோ இருந்தாலும் அந்த வாய்ப்பு நம் கையை விட்டு நழுவ வாய்ப்புண்டு.

கிடைக்கும் போது அது என்ன என்பதை புரிந்து கொள்வதில் தவறு கிடையாது” என்று அவர் சொன்ன வார்த்தைகள்தான் இன்று, பல பிரபல தொலைக்காட்சி தொடர்களில் முதன்மை கதாபாத்திரமாக நடித்திருப்பதோடு மட்டுமில்லாமல், மக்கள் மத்தியில் நல்ல பெயரை ஏற்படுத்தியிருக்கிறது. எந்த ஒரு வாய்ப்பும் தேடி வரட்டும் என்றில்லாமல், வருவதை அரவணிக்கிற பொண்ணு நான்” என்று கூறும் ஆர்த்தி, தான் நடத்தி வரும் விடுதிகள் பற்றி பகிர்ந்து கொண்டார்.
“நான் நடத்தி வரும் விடுதிகளிலிருந்து இது வரை 1500க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி சென்றிருப்பார்கள். எங்கள் விடுதியில் வேலைப் பார்ப்பவர்கள் அனைவரும் பெண்கள் தான். செக்யூரிட்டி வேலைக்காக மட்டும் ஆண்களை நியமித்து இருந்தேன். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மது பழக்கம் இருந்தது. அவர்களை வைத்துக் கொண்டு என்னை நம்பி வரும் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும். இன்று பெரும்பாலான பிரச்னைகளுக்கு ஆணி வேரே மதுதான்.

IAS- படிப்பிற்காக படிக்கும் பெண்களுக்கென்று சிறப்பு விடுதி அண்ணா நகரில் அமைத்துள்ளோம். அதில் ஒவ்வொருவரின் பணவசதிக்கு ஏற்ப கட்டணங்களை நியமித்து இருக்கிறோம். விவசாயியின் மகள் படிக்க வருகிறார் என்றால் அதற்கேற்றார் போல் கட்டணங்கள் வைத்துள்ளோம். மாதம் 3000 ரூபாயில் தங்கி படிக்கலாம். சொந்த இடமாக இருப்பதால் கொடுக்க முடிகிறது. என்னுடைய நோக்கம் பெரிய லாபம் சம்பாதித்து வாழ வேண்டியதில்லை” என்கிறார் ஆர்த்தி.
‘‘கணவன்-மனைவியிடையே நல்ல புரிதல் வேண்டும்” என்று கூறும் ஆர்த்தி, ‘‘எந்த ஒரு துறைக்கு சென்றாலும் குடும்பத்தாரின் ஆதரவும், அரவணைப்பும் ரொம்ப முக்கியம். குடும்ப உறுப்பினர்கள் எவ்வளவு ஆதரவாக நிற்கிறார்கள். அவர்களை எப்படி நாம் நிற்க வைக்கிறோம். இது எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது. நாம் எப்படியோ அப்படித்தான் நம்மை சுற்றி இருப்பவர்களும் அமைவார்கள். வெற்றி என்பது கஷ்டம் கிடையாது.

நேர்மறையான எண்ணம் கொண்டு இயங்குவதும், சுற்றி இருப்பவர்களை சந்தோஷமாக வைத்து இருந்தாலே நம்மை தேடி எல்லாம் பெஸ்ட்டாக அமையும் என்பதுதான் சிம்பிள் மந்திரம். எல்லா கணவர்களிடமும் நான் வைக்கும் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். உங்க மனைவி ஏதாவது செய்தால் ஆதரிங்க. சமூகத்தில் நீங்கள் இல்லை என்றால் அவர்களுக்கு முகவரி கிடையாது. அதே போல் இவங்க இல்லையென்றால் நீங்களும் இல்லை என்பதை உணருங்கள். இருவரும் சமமே. உங்களைப் பார்த்து தான் உங்கள் குழந்தைகள் வளர்கிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்போம். திருமணம் ஆன, ஆகக்கூடிய பெண்களுக்கு நான் சொல்வது ஒன்று தான். மாமனார்-மாமியார் போல் சப்போர்டா யாரும் இருக்க மாட்டாங்க. குழந்தைகளுக்கு பாட்டி-தாத்தா அன்பு மாதிரி யாருடைய அன்பும் அவ்வளவு தூய்மையா அமையாது.

அவர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒரு சில வருடங்களில் இருவருக்குமான புரிதல் ஏற்படும். அவர்களை என்றுமே புறக்கணிக்காதீங்க. அவங்க இல்லையென்றால் உங்களுக்கு கணவர் என்கிற உறவு கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை. இது ஆண்களுக்கும் பொருந்தும். இன்று நிறைய பேர் வேலை பளு காரணமாக ஸ்ட்ரெஸ், கோவம் படுபவர்களாக மாறியுள்ளனர். தயவு செய்து ஒரு நல்ல மனநல மருத்துவரையோ அல்லது யோகா போன்ற உடற்பயிற்சி செய்யுங்கள். இது அவமானம் கிடையாது. திடீரென்று நம் நடத்தையில் மாற்றம் நிகழ்ந்தால் முதலிலேயே கவனிப்பது உங்களுக்கும், உங்களை சார்ந்திருப்பவர்களுக்கும் நல்லது. முன்னோக்கி நகரும் போது, குடும்பத்தையும் அரவணைத்து, கைக்குள் வைத்து கொண்டு எதையும் புறந்தல்லாமல் நம் இலக்கை நோக்கி போனோம் என்றால் ஒரு முழு பெண்ணாக நிற்க முடியும். இலக்கை நோக்கி நேர்மறையாக ஓடினால் வெகு சீக்கிரமாக அதற்கான அடையாளம் கண்டிப்பாக கிடைக்கும். இது என் அனுபவம்” என்றார் ஆர்த்தி ராம்குமார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறுதி நாட்கள் வரை அவர்கள் என் பொறுப்பு !! (மகளிர் பக்கம்)
Next post ஒயின் குடித்தால் ஹார்ட் அட்டாக் வராதா? (மருத்துவம்)