பொன்னாங்கண்ணி!! (மருத்துவம்)

Read Time:13 Minute, 57 Second

இறைவன் உலக உயிர்களைப் படைக்கும்போதே அவ்வுயிர்கள் வாழ பல்வேறு தாவரங்களையும் உணவாகவும் படைத்துள்ளான். முக்கியமாக, அவ்வுணவுகளே மருந்தாகவும் அமையும் வகையில் படைத்தருளியுள்ளான். அப்படிப்பட்ட முக்கிய தாவரங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் பொன்னாங்கண்ணி கீரை.

பொன்னாங்கண்ணி கீரை நீர் நிலைகள் அருகில் அல்லது ஈரப்பதம் நிறைந்த நிலப்பகுதியில் விளையும் சிறு செடி வகையைச் சேர்ந்தது. இது நிலத்தின் மீது படர்ந்து வளரக்கூடிய ஒன்று. இலைகள் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தோடு காட்சியளிக்கும். இந்த கார்த்திகை மாதத்தில் மிகவும் செழிப்பாக வளர்ந்திருக்கும் பொன்னாங்கண்ணி, குளிர் காலத்தில் பூக்களைத் தரக்கூடியது.

இதன் பூக்கள் தோற்றத்தில் பயறு வகைகளைப் போல் காணப்படும். வெயில் காலத்தில் இச்செடி உலர்ந்து போய் மழைக்காலத்தில் அருகம்புல் போல் மீண்டும் துளிர்க்கும். உலகின் பல்வேறு நாடுகளிலும் இது உணவாகப் பயன்படுகிறது.

தமிழில் ஒவ்வொரு பெயரும் அது குறிக்கும் பொருளின் தன்மையை வெளிப்படுத்துவதாக அமையும். அந்த வகையில் பொன்னாங் கண்ணியும் அர்த்தம் பொதிந்த பெயரையே கொண்டுள்ளது என்பதில் வியப்பேதும் இல்லை. பொன் + ஆம் + காண் + நீ என்று அப்பெயரைப் பிரித்துப் பொருள் கொள்வது தகுதியுள்ளதாய் இருக்கும்.

நம் முனிவர்களும் சித்தர்களும் செம்பு, வெள்ளி, பொன் போன்ற உலோகங்களை சாம்பலாகவோ(பஸ்மம்) நீராகவோ மாற்ற இயலும் என்பதை தெரிந்து வைத்திருந்தனர். இன்றைய நவீன ஆய்வாளர்களால் கூட சாதிக்க இயலாத பல்வேறு மருத்துவ சாதனைகளை அவர்கள் செய்துகாட்டியதோடு அவற்றை சமுதாயம் பயன்படுத்தும் வகையில் ஓலைச்சுவடிகளிலும் எழுதி வைத்துச் சென்றுள்ளனர்.

பொன்னாங்கண்ணிக் கீரை பூமியில் இருந்து பொன் சத்தை உறிஞ்சி நீரான நிலையில் தன்னுள் பெற்று இருக்கிறது. அதுபோலவே மஞ்சள் கரிசாலையும் பொன் சத்தை பெற்று இருக்கிறது. வெள்ளைக் கரிசாலை தன்னுள் வெள்ளிச்சத்தை நீராகப் பெற்றிருக்கிறது. இத்தாவரங்களை ஆராய்ந்த சித்தர் பெருமக்கள் உலோகங்கள் நீராகும் தன்மையது என்று தெளிந்து ஆய்வுகள் மேற்கொண்டு வெற்றியையும் கண்டனர்.

Alternanthera sessilis என்பது பொன்னாங்கண்ணியின் தாவரப் பெயர் ஆகும். Alligator weed என்பது இதன் ஆங்கிலப் பெயர் ஆகும். ‘மத்ஸ்யாக்ஷி’, ‘பிராம்மி’, ‘மத்ஸ்யகந்தா’, ‘மீனாக்ஷி’, ‘பாலி’, ‘வாலிக்கா’ என்பவை இதன் ஆயுர்வேதப் பெயர்கள் ஆகும். தமிழில் பொன்னாம் கண்ணி என்ற பெயருடன் ‘கொடுப்பை’, ‘சீதை’ என்றும் குறிக்கப்படும்.

பொன்னாங்கண்ணி பற்றி தேரையர்

குணபாட நூல் :‘காசம் புகைச்சல் கருவிழிநோய் வாதமனல்கூசும் பீலிகம் குதாங்குரநோய் – பேசிவையால்என்னாங்கா ணிப்படிவம் எமமம் செப்பலென்னைப்பொன்னாங்கா ணிக்கொடியைப் போற்று’

– தேரையர் குணபாடம்.

கண்காசம், கருவிழி நோய், கண் புகைச்சல், வதம், பித்தம், கூச்சமுண்டாக்கும் கோழை, வாயில் உண்டாகும் நோய்கள் போவதோடு பொன்னிறமான உடலையும் கொடுப்பதால் பொன்னாங்கண்ணியைப் போற்றியுண்ணல் வேண்டும் என்பது மேற்
கூறிய பாடலின் பொருளாகும்.

‘பொன்னாங்கண்ணி கீரையை எவ்வகையிலேனும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் மனிதர் தம் ஆயுள் நிலை பெறும். நூற்றாண்டு வாழ இயலும். கண் பார்வை தெளிவு பெறும்’ என்று வள்ளல் பெருமான் ராமலிங்க சுவாமிகளும் பொன்னாங்கண்ணியைப் பரிந்துரை செய்துள்ளார்.
‘கல்ப மருந்தாக பொன்னாங்கண்ணியை உண்டு வந்தால் பகலில்கூட நட்சத்திரங்களைப் பார்க்க இயலும்’ என்று சித்தர் பெருமக்கள் பலரும் சொல்லியுள்ளனர்.

பகலில் நட்சத்திரத்தைப் பார்த்து நாம் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை என்றாலும் கண்பார்வை மிகக்கூர்மையாகவும், தெளிவாகவும் பொன்னாங்கண்ணியின் மூலம் கிடைக்கும் என்பதை இதில் புரிந்துகொள்ளலாம்.

பொன்னாங்கண்ணியின் மருத்துவ குணங்கள் :

*இன்று தங்க பஸ்பம் என்பது கோடீஸ்வரர்களுக்குக் கூட எட்டாத ஒரு மருந்தாகி விட்டது. ஆனாலும், அதை ஏழைகளும் பலன் பெறும் விதத்தில் இறைவன் பொன்னாங்கண்ணியில் பொதிந்து வைத்திருப்பது வியக்கத்தக்க ஒன்று. நவீன மருத்துவத்தில் Gold chloride என்று தங்கத்தை உப்பு நிலையில் மாற்றி மருந்தாகக் கொடுப்பர். இது உடல் வலியைப் போக்கக் கூடியது மட்டுமின்றி உடலுக்கு பலத்தையும் தரவல்லது. இதுபோல் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து தங்க பஸ்பத்தின் மூலம் அடைகிற பலனை அன்றாடம் பயன்படுத்துகிற பொன்னாங்கண்ணி கீரையின் மூலமாகவே நாம் பெற முடியும்.

*பொன்னாங்கண்ணி தாய்ப்பாலை பெருக்கக்கூடிய ஒன்று, பித்தப்பையை சீர் பெற இயங்கச் செய்யக் கூடியது, இந்திய ஆயுர்வேத மருத்துவ நூல் பொன்னாங்கண்ணியின் சமூலம்(இலை முதல் வேர் வரையிலான முழு செடியும்) ரத்தத்தில் உள்ள குற்றங்களையும், தோல் நோய்களையும் போக்கக்கூடியது என்றும் பரிந்துரைக்கிறது.

*பொன்னாங்கண்ணி தூக்கத்தைத் தூண்டக் கூடியது. மத்திய நரம்புக் கூட்டத்தை சீர் செய்து சாந்தப்படுத்தக் கூடியது. இதனால் பல்வேறு நரம்பு நோய்கள் இல்லாமல் போகின்றன.

*பொன்னாங்கண்ணி ஞாபக சக்தியைத் தூண்டக் கூடியது, கண்களுக்கும், மூளைக்கும் குளிர்ச்சி தரவல்லது. தலைவலி,மயக்கத்தைத் தணிக்கக் கூடியது.

*பொன்னாங்கண்ணிச்சாறு பாம்புக்கடி விஷத்தை முறிக்கும் தன்மை உடையது. எவ்வகையிலேனும் ஏற்படும் ரத்த வாந்தியை நிறுத்தக் கூடியது.

*பொன்னாங்கண்ணி ஈரலை பலப்படுத்தவல்லது. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகக் கூடியது.

*பொன்னாங்கண்ணிக் கீரையை உள்ளுக்கு சாப்பிடுவதாலும் எண்ணெயில் இட்டு (நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்) நன்கு காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு தலைக்குத் தடவுவதாலும் தலை முடி செழுமையாக வளரும். உடலும் உஷ்ணம் நீங்கி குளிர்ச்சி பெறும்.

*பொன்னாங்கண்ணிக் கீரையை உணவில் அடிக்கடி சேர்ப்பதால் ரத்த அழுத்தம் குறைவுபடும். இரைப்பைக் கோளாறுகள் இல்லாமல் போகும், கொனேரியா என்னும் பால்வினைநோய் குணமாகும்.

*பொன்னாங்கண்ணிக் கீரை ஆண்களின் மலட்டுத் தன்மையையும் இயலாமையையும் போக்கக் கூடிய அற்புதமான மருந்தாகும்.

*பொன்னாங்கண்ணியை மேற்பூச்சி மருந்தாப் பயன்படுத்தும்போது முகப் பருக்கள் போவதோடு கரும் புள்ளிகளும் காணாமற்போகும். முகமும் பொலிவுடன் திகழும்.

*பொன்னாங் கண்ணி சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சத்து நிறைந்த உணவாகி அவர்களின் சோர்வைப் போக்குவதோடு சர்க்கரை நோய்க்கும் ஒரு துணை மருந்து ஆகிறது.

*பொன்னாங்கண்ணி சிறுநீரைப் பெருக்குந் தன்மை உடையது. பேதி மற்றும் சீதபேதியைக் கண்டிக்க வல்லது. தலைவலி, தலைச்சுற்றலை தணிக்க வல்லது. குடலிறக்க நோயான ‘ஹெர்னியா’ தணிவதற்குத் துணையாவது.

*பொன்னாங்கண்ணி நெஞ்சுச் சளியைக் கரைக்க வல்லது. மார்பு இறுக்கத்தைப் போக்கவல்லது. ஆஸ்த்துமா போன்ற நுரையீரல் கோளாறுகளையும் அகற்ற வல்லது. மூலத்தையும் குணப்படுத்தவல்லது.

பொன்னாங்கண்ணியில் பொதிந்திருக்கும் வேதிப் பொருட்கள் : 100 கிராம் பொன்னாங்கண்ணி கீரையில் நீர்ச்சத்து – 80 கிராம், எரிசக்தி – 60 கலோரி, புரதச்சத்து – 4.7 கிராம், கொழுப்புச்சத்து – 0.8 கிராம், மாவுச்சத்து – 11.8 கிராம், நார்ச்சத்து – 2.1 கிராம், சுண்ணாம்புச்சத்து – 14.6 மி.கி. பொட்டாசியம் – 45 மி.கி அடங்கியுள்ளது.

இதனோடு பால்மிட்டிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், ஒலியிக் அமிலம், லினோலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், இரும்புச்சத்து, புத்துணர்வு தருவதும் உடலுக்குச் சோகையை நீக்கி ரத்த உற்பத்திக்குத் துணை செய்வதுமான ‘கரோட்டீன்’ ஆகியனவும் அபரிமிதமாக உள்ளன.
பொன்னாங்கண்ணி மருந்தாகும் விதம் :

* பொன்னாங்கண்ணியை உப்பு ேசர்க்காமல் வேக வைத்து, இளஞ்சூட்டோடு வெண்ணெய் சேர்த்து ஒரு மண்டல காலம் சாப்பிட்டுவர கண் பார்வை தெளிவு பெறும்.

*பொன்னாங்கண்ணி சாறு, நல்லெண்ணெய், நெல்லிக்காய்ச்சாறு, பசுவின் பால், கரிசலாங்கண்ணி சாறு இவை சம அளவு எடுத்து இதனோடு சிறிதளவு அதிமதுரத்தை பாலில் அரைத்து சேர்த்துக் காய்ச்சி மெழுகு பதத்தில் வந்ததும் வடிக்கட்டி, தலைக்குத் தேய்த்து குளித்துவர கண் நோய்கள் தொலைந்து போகும்.

*பொன்னாங்கண்ணி கீரையை நெய்யிட்டு வதக்கி உடன் மிளகு, உப்பு போதிய அளவு சேர்த்து கற்ப மருந்தாக ஒரு மண்டலம்(48 நாட்கள்) உண்ண உடலுக்கு வனப்பு, பொன் நிறம், கண்களுக்கு குளிர்ச்சி ஆகியன உண்டாகும். கண் புைகச்சல், கண் எரிச்சல், ஈரல் நோய்கள் போன்றவை குணமாகும்.

*ஒரு பிடி பொன்னாங்கண்ணி கீரையை காலையில் வெறும் வயிற்றில் மென்று தின்றுவிட்டு பசும்பால் அருந்தி வர உடல் குளிர்ச்சி பெறும். ஈரல் நோய்கள் இல்லாது போகும். கண் நோய்கள் நீங்கிப் பார்வையும் தெளிவு பெறும்.

*எலுமிச்சம் பழ அளவு பொன்னாங்கண்ணியின் வேரை எடுத்து சுத்திகரித்து 2 லிட்டர் எருமைப்பால் விட்டு கலக்கி காய்ச்சி தயிராக உறைய வைத்து கடைந்தெடுத்த வெண்ணெயை மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு விட்டு மோரையும் குடித்து வர சிறுநீரில் ரத்தம் கலந்து போதல், சிறுநீர் எரிச்சல் ஆகியன குணமாகும்.

பொன்னாங்கண்ணி கீரை பொன்மேனி தருவதோடு, கண்களுக்கு நன்மையையும், தலைமுடிக்கு வளத்தினையும், ரத்த சுத்தியையும், ரத்தப் பெருக்கையும், உடல்குளிர்ச்சியையும் தரக்கூடிய பொன்னான கீரை என்பதை நினைவில் நிறுத்தி நித்தமும் பயன்படுத்துவோர் நூறாண்டு வாழ்வர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வறண்ட சருமத்துக்கு மருந்தாகும் பருப்பு கீரை!! (மருத்துவம்)
Next post படம்னா இப்படி இருக்கணும் பள்ளி பருவத்தை நினைவு படுத்தும் காதல் கதை!! (வீடியோ)