ஆயுள் காக்கும் ஆயுர்வேத கஷாயங்கள்!! (மருத்துவம்)

Read Time:8 Minute, 41 Second

‘ஆரோக்கியம் கொடுக்கவும் நோய்களைப் போக்கவும் அதிகளவில் ஔஷதங்கள் என்ற மருந்துகளை ஆயுர்வேதம் நமக்கு வழங்கி இருப்பதோடு, அதன் மூலம் நமது ஆயுளைக் காக்க பெரிதும் உதவுகிறது’’ என்கிற ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன் ஆயுர்வேத கஷாயங்கள் குறித்து மேலும் விளக்கமாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியம் காக்கும் இருவகை மருந்துகள் ஆரோக்கியம் காக்க ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் உட்புறம் பயன்படுத்தப்படும் மருந்துகள், வெளிப்புறம் பயன்படுத்தப்படும் மருந்துகள் என்று இரு வகைகள் இருந்தாலும், சரகர் என்ற ஆயுர்வேத மகரிஷி பின்வரும் இரண்டு வகைகளாக பிரித்துள்ளார்.

ஒன்று ஸ்வஸ்தஸ்ய ஊர்ஜஸ்கரம், மற்றொன்று ஆதுரஸ்ய ரோகாநுத் அதாவது ஒன்று ஆரோக்கிய நிலையை மேம்படுத்த அல்லது நிலை நிறுத்தக்கூடிய மருந்துகள், மற்றொன்று நோய்களை களையக்கூடிய மருந்துகள். இதில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருந்துகள், நோய் எதிர்ப்பாற்றலை கொடுக்கக்கூடிய மருந்துகளாகவும் இருக்கிறது. இதுவே ரசாயன மருந்துகள் என்று அழைக்கப்படுகிறது.

ரசாயன சிகிச்சை

ஆயுர்வேத மருத்துவத் துறையில் அக்காலத்தில் 8 பிரிவாக பிரிந்து சிறப்பு மருத்துவத் துறைகள் இயங்கி வந்திருக்கின்றன. அந்த எட்டு பிரிவில் ஒன்றுதான் ரசாயன சிகிச்சை. ரசாயனம் என்றால் வேதிப்பொருள் என்று கருத வேண்டாம். வயது முதிர்வை தடுத்து இளமை பருவத்தை நிலைநிறுத்தி நோய்களை தடுக்கும் முறைக்கு ரசாயன சிகிச்சை என்று பெயர்.

ரசாயன சிகிச்சை எப்படி எடுப்பது?

இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளும் முன் குடலில் உள்ள சீரண சக்தியை மேம்படுத்தி, வயிற்றை சுத்தம் செய்த பின்புதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இது போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்ளாமலே ரசாயன மருந்துகளை எடுத்துக் கொண்டால் அழுக்குத் துணியில் சாயம் ஏற்றுவதைப் போலாகிவிடும். சீரண சக்தியை ஏற்படுத்துவதற்கும், குடலை சுத்தப்படுத்துவதற்கும் ஆயுர்வேத மருத்துவத் துறையில் பல்வேறு விதமான மருந்து வகைகள் சொல்லப்பட்டிருந்தாலும் கஷாயத்திற்கு என்று தனித்துவம் இருக்கத்தான் செய்கிறது. ஆயுர்வேதத்தில் கஷாய மருந்துகளை ஜீரண சக்தியை மேம்படுத்தவும் நோய்களைப் போக்கவும் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

இந்து காந்த கஷாயம்

ரசாயனம் என்ற நோய் எதிர்ப்பாற்றலை கொடுக்கக்கூடிய மருந்துகளிலேயே கஷாயம் செய்து கொடுக்கும் பழக்கம் ஆயுர்வேதத்தில்
பரவலாக இருக்கிறது. உதாரணமாக இந்து காந்த கஷாயம் என்பது ஜீரண சக்தியை மேம்படுத்தி குடலை சுத்தம் செய்து பலம் என்ற நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தக்கூடியது. இதை பெரியவர்கள் காலை, மாலை வெறும் வயிற்றில் 50 மில்லி வீதமும், சிறுவர்கள் 20 மில்லி வீதமும் எடுத்துக் கொள்ளலாம்.

தசமூலக் கடுத்ரய கஷாயம்

சுவாச உறுப்புகளை சீராக செயல்பட வைத்து நோய் எதிர்ப்பாற்றலை கொடுக்க தசமூலக் கடுத்ரய கஷாயம் பயன்படுத்தப்படுகிறது. இதில் தசமூலம் என்ற 10 விதமான மூலிகை வேர்களும், திரிகடுகு என்ற சுக்கு, மிளகு, திப்பிலி மற்றும் ஆடாதோடை ஆகிய 14 மருந்துகளின் கூட்டுக் கலவையாகும். இதில் தசமூலம் என்ற மருந்து உடலுக்கு பலத்தை கொடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. திரிகடுகு ஜீரண சக்தியை அதிகரித்து குடலை சுத்தம் செய்கிறது. ஆடாதோடை நுரையீரல் மற்றும் தொண்டைக்கு மிகச் சிறந்தது. இந்த மருந்தை காலை, மாலை ஆகிய இருவேளைகளில் 50 மில்லி வீதம் தேனுடன் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.

வாசாதி கஷாயம் 1:

ஆடாதோடை, கண்டங்கத்தரி, சீந்தில் கொடி ஆகிய மூன்றும் சேர்ந்த வாசாதி கஷாயம் வைத்து காலை, மாலை இருவேளைகளில் 50 மில்லி அளவில் தேன் கலந்து வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம்.

வாசாதி கசாயம் 2:

ஆடாதோடை, உலர்திராட்சை, கடுக்காய் இவை மூன்றும் சேர்ந்த வாசாதி கசாயம் வைத்து 50 மில்லி அளவில் எடுத்து, அதில் தேன் கலந்து காலை, மாலை இருவேளைகளில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். இந்த கஷாயம் இருமல், மூச்சிரைப்பு போன்றவைகளுக்கு மிகச் சிறந்தது.

வியாக்கிரியாதி கஷாயம்

வியாக்கிரியாதி கஷாயம் கண்டங்கத்தரியை முக்கிய மருந்தாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் இருக்கும் சீந்தில் கொடி என்ற மருந்தும் திப்பிலி என்ற மருந்தும் நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கக்கூடியது. வெற்றிலை, மிளகு, பூண்டு ஆகிய மூன்றும் சேர்ந்த கசாய கலவை உடலில் உள்ள விஷங்களைப் போக்கி, உடலில் உள்ள சுரப்பிகளை சுரக்கச் செய்து நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கக்கூடியது. இதனை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்
கொள்ளலாம்.

மத்திய ஆயுஷ் அமைச்சகம்

பரிந்துரைத்துள்ள கஷாயம் மத்திய ஆயுஷ் அமைச்சகம் நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்துவதற்காக நான்கு மூலப் பொருட்களைக் கொண்ட ஒரு சிறப்பு கஷாயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. துளசி இலை, லவங்கப்பட்டை, சுக்கு, மிளகு ஆகிய இந்த நான்கு மூலிகைகளையும் ஒன்றிரண்டாக இடித்து தண்ணீரில் கொதிக்க வைத்து காலை, மாலை இருவேளைகளில் உணவுக்கு முன் எடுத்துக் கொள்ளலாம். இதே கலவையில் உலர் திராட்சை கலந்து தேநீர் போல தயாரித்து பனைவெல்லம் கலந்து சிறு துளி எலுமிச்சைச் சாறு கலந்து பருகி வரலாம். இதன் மூலம் நோய் எதிர்ப்பாற்றலை பெற முடியும் என்கிறது மத்திய ஆயுஷ் அமைச்சகம். மகரிஷி சுஸ்ருதரின் கூற்றுப்படி, ஆடாதோடை ரசாயனம் நோய் எதிர்ப்பாற்றலைக் கொண்டது. மேலும் சீந்தில் கொடிக்கும், கடுக்காய்க்கும் இந்த குணம் இருக்கிறது என்கிறார். ஜீரண சக்தியை மேம்படுத்தி, குடலை சுத்தப்படுத்தி, நோய்க்கு தகுந்த வண்ணம், அந்த நோயை குணமாகச் செய்து, நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தக்கூடிய பல கஷாயங்கள் குறித்தும் ஆயுர்வேத மருத்துவத் துறையில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெப்பம் தணிக்கும் வெட்டி வேர்!! (மருத்துவம்)
Next post பெண்களின் இடுப்புக்கு அழகூட்டும் ஒட்டியாணம்!! (மகளிர் பக்கம்)