எனக்கான பாதை இது! (மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 0 Second

முதல் திருநங்கை கவுன்சிலர் ரியா

எளிமையாய்.. பாந்தமாய்.. அழகான ஈரோடு காட்டன் புடவையில் வந்து நிற்கிறார் ரியா. ஆச்சரியமாய் இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தன்னை, முதல் திருநங்கை கவுன்சிலராய் அடையாளப்படுத்தியவர். ரியாவின் வெற்றியை அவரின் கருவேப்பம்பட்டி கிராமமே கொண்டாடித் தீர்த்தது. இந்த மாற்றத்தை சாத்தியமாக்கிய ரியாவை சந்தித்தபோது..

உங்கள் குழந்தைப் பருவம் குறித்து…

என் பெற்றோருக்கு நான் முதல் மகன். என் குழந்தைப் பருவம் ரொம்பவே அழகானது. எனக்கொரு தம்பி மட்டுமே. நான் வளரவளர கண்களுக்குப் புலப்படாத அந்தப் பாலினக் குளறுபடியும் கூடவே வளர்ந்தது. பெண்ணாக என்னை உணர ஆரம்பித்து, குழப்பமான விடலைப் பருவத்தையும் கடக்க ஆரம்பித்த நேரமது. சுற்றியிருக்கும் உறவினர், நண்பர்கள் சீண்டல்களோடு, கரடு முரடான பாதைகளில் எனது வாழ்க்கை பயணிக்கிறது. ஆண் உடை தறிப்பதே அருவறுப்பாய் எனக்கு மாறிய நேரமது. என்னுடல் முட்புதருக்குள் சிக்கிக்கொண்ட தவிப்பில் புழுங்கினேன். இந்த மனநிலையிலே 9ம் வகுப்பில் தொடர்கிறேன்.

அப்போது பாலியல் கல்வி குறித்து வகுப்பெடுத்த என் அறிவியல் ஆசிரியர் XX பெண், XY ஆண், XX Y என்பது இவனென என்னை நோக்கி விரல் நீட்டுகிறார். சுற்றியிருக்கும் மாணவர்கள் கொல்லென சிரிக்க அதற்குமேல் பள்ளியில் இருந்த கனங்கள் அவஸ்தையாய் மாறியது. பேருந்தில் பயணிக்கையில் எனதருகில் அமர பலரும் யோசிக்க, நடத்துனரால் இருக்கையில் இருந்து எழுந்து, நின்ற நிலையில் பயணிக்க வைக்கப்பட்டேன். இது என் தோற்றமில்லை.

இந்த உடையும் எனக்குறியதில்லை என்கிற தவிப்பில், பெண்ணுக்கான அழகோடும் நளினத்தோடும் கனவு கானத் தொடங்கினேன். எனதூரில் ஒரு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உண்டு. ஆண்பாதி பெண்பாதியாய் இருந்த அந்த தெய்வத்திடம், கடவுளே காலையில் நான் எழும்போது பெண்ணாக மாறனும் என வேண்டத் தொடங்கினேன். அம்மாவும் என் நிலையை உணரத் தொடங்கியிருந்தார்.

ஆனால் அப்பாவிற்கு? ஊராரின் கேலி கிண்டலுக்கு தன் மகன் ஆளாவதை ஏற்க முடியாமல், என்னைப் பற்றிய செய்திகள் காதில் விழவிழ உணர்வை கட்டுப்படுத்தத் தெரியாதவராய், அவற்றை அடிகளாக என் மீது பிரயோகிக்க ஆரம்பித்தார். அடி ஒவ்வொன்றுமே உடலில் இடியாக இறங்க ஆரம்பித்தது.

நள்ளிரவு தூக்கத்திலும் பலத்த அடிகள் விழுந்தன. புதையலை மறைப்பதுபோல் என் பாலினத்தை மறைக்க முடியாமல், வீட்டை விட்டுக் கிளம்பும் நிலைக்கு தள்ளப்பட்டேன். அப்போது என் வயது 14. மலங்க மலங்க விழித்தவனுக்கு ஒரு திருநங்கை அம்மா ஆதரவுக்கரம் நீட்டி உணவும், தங்க இடமும் கொடுத்தார். மாற்றிக்கொள்ள அவர் கொடுத்த சுடிதார் உடையை அணிந்த நொடி பட்டாம்பூச்சியாய் மனம் பறந்தது.

நீ இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பறக்கலாம் என்ற மாதிரியான நாட்கள் அவை. பிறகு மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பால்மாற்று அறுவை
சிகிச்சையும் முடிந்தது. முழுமையான பெண்ணாகவே என்னை உணரத் தொடங்கியிருந்தேன்.

மீண்டும் பெற்றோரோடு இணைந்தது குறித்து…

அன்றைய நாள் என் நினைவில் இருக்கு. மூன்றாண்டு கடந்த நிலையில் பெற்றோர் நினைவுவர, அவர்களைக் காண சேலம் திரும்பினேன். தொலைபேசியில் அம்மாவை அழைக்க, அவரின் கதறல் கேட்கிறது. சேலம் வந்து இரவில் வீட்டுக்கு என்னை அழைத்துச் செல்கிறார் அம்மா. அப்பா வீட்டுக்குள் வந்தால் வெட்டிவிடுவேன் என மிரட்டுகிறார். ஆனாலும் துணிந்து அப்பாவைக் காணச் செல்கிறேன். அவர் தூரத்தில் அமர்ந்திருக்க ஓடிச் சென்று அவரின் கால்களில் விழுந்து கதறுகிறேன். “நான் பொண்ணுதான்பா.

குழந்தையில் இருந்து சொல்ல முடியாமல் தவிச்சேன்பா. அதுநாளதான் வீட்டைவிட்டு போனேன். இப்ப நான் பெண்ணா மாறிட்டேன்பா” என ஓலமிட்டு கதறுகிறேன். என் அப்பாவுக்கு எங்கிருந்துதான் பாசம் பீறிட்டதோ. வாரி அணைத்து என்னை தழுவி அவரும் கதறினார். “நீ எதுவும் இனி நினைக்காத. எனக்கு ஒரு பொண்ணுன்னு உன்னை நினைச்சுக்குறேன். மகளாகவே உன்னை ஏற்கிறேன். இந்த ஊர்ல எவன் என்ன சொன்னாலும் நீ என் புள்ளை” என்ற பிறகே, என் வீட்டில் நிரந்தரமாய் இருக்கும் நிலை ஏற்பட்டது.

பிறகு பெற்றோரே எனக்கு பெண்கள் அணியும் உடை, பூ, பொட்டு, அணிகலன்களை வாங்கிக் கொடுக்கத் தொடங்கினர். இப்போதுவரை அம்மாவும் அப்பாவும் என் பழைய பெயரை மறந்து, ரியா என்றே அழைக்கிறார்கள். எந்த முடிவை எடுக்கவும் வீட்டில் ரியாதான். நான் இல்லை என்றால் வீட்டில் எதுவுமே இல்லை. அம்மா மற்றும் அப்பா வழி உறவினர்களும், முடிவை ரியா சொல்லட்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள்.

தங்களின் அரசியல் நகர்வு குறித்து…

என் அம்மா வழித் தாத்தா திராவிட இயக்கச் சிந்தனைகளைக் கொண்டவர். கலைஞர் மீது மிகப் பெரும் மதிப்புக் கொண்டவர். தன் மகன் அல்லது மகள் வழியில் யாரையாவது அரசியலுக்குள் கொண்டுவரவேண்டும் என்பதே அவரின் விருப்பம். அவர் மூலம் இயக்க சிந்தனைகள் எனக்குள்ளும் இருந்தது. அப்போது நான் பெங்களூரு, சென்னை போன்ற ஊர்களில் திருநங்கைகள் நலன் சார்ந்து அமைப்பு ரீதியாக இயங்கிக் கொண்டிருந்தேன். 2008ல் கலைஞர் ‘திருநங்கை’ என்கிற வார்த்தையை எங்களுக்கு அடைமொழியாக்கி அரசுடமையாக்கினார்.

அந்த பெயர் சூட்டியபோது நாங்கள் நாங்களாகவே இல்லை. 2009ல் திருநங்கைகள் நல வாரியத்தையும் எங்களுக்காகவே உருவாக்கினார். இந்தியாவில் எந்தவொரு மாநிலமும் நிறைவேற்றாத, தமிழகத்தில் மட்டுமே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அது. தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் அப்போதைய துணை முதல்வராக இருந்தார். நலவாரியத் திட்டங்களை அவர் வரிசையாக அறிவித்தபோது, “ஒட்டு மொத்த சுதந்திரத்தையும் அவர்களுக்கு இந்த இடத்தில் பிரதிபலிக்கிறேன்.

அவர்கள் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் சராசரி மனிதர்களாகப் பயணிக்கலாம். சுதந்திரக் காற்றை அவர்களும் சுவாசிக்க வேண்டும்” எனப் பேசினார். நலவாரியத் திட்டங்களை அறிவித்து இது உனது உரிமை என, எங்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை, அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை என அனைத்திற்கும் வழிவகை செய்து அறிவிப்பை வெளியிட்டது, முத்தமிழ் அறிஞர் கலைஞரும், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்களுமே.

சொந்த நாட்டில் அகதிகளாய் வாழ்ந்த நாங்கள், அதன் பிறகே சுதந்திரக் காற்றை சுவாசித்தோம். 2014ல் மாநிலங்களவையில் திருநங்கைகளுக்கான மசோதாவை திருச்சி எம்.பி சிவா அண்ணன் அவர்கள் முனைப்போடு தாக்கல் செய்து ஒருமனதாக நிறைவேற்றிக் காட்டினார். இது எவ்வளவு பெரிய மாற்றம். தமிழ்நாட்டில் எங்களுக்கு நலவாரியம் அமைத்ததற்காகவும், மாநிலங்களவையில் மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றியதற்காகவும் கலைஞர் அவர்களை இரண்டு முறை நேரில் சந்தித்து அவரது அன்பையும், ஆசீர்வாதத்தையும் பெற்றேன்.

2019ல் திருநங்கைகள் அடிப்படை உறுப்பினராக கட்சியில் சேர்க்கப்படலாம் என்கிற சிறப்புத் தீர்மானத்தை தளபதி ஸ்டாலின் கொண்டுவந்தார். அவரை கலைஞரின் மறு உருவமாகவே நாங்கள் பார்க்க ஆரம்பித்தோம். அப்போது உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பும் வெளியானது. நான் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், கருவேப்பம்பட்டி தொகுதியில் நிற்பதற்காக அவரை நேரில் சந்தித்தேன்.

அவரும் அனுமதிக்க, 24 குக்கிராமங்கள் இணைந்த என் ஊரில் அனைவரின் ஒப்புதலைப் பெற்று மீண்டும் தளபதி ஸ்டாலினைச் சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்கிறேன். திருநங்கை ஒருவர் தேர்தலில் நிற்கிறார் என்கிற செய்தி ஊடகங்களில் வெளியாக, என் கிராமத்தை நோக்கி ஊடக வெளிச்சம் பாய்கிறது. என் கிராமம் நட்சத்திரத் தொகுதியாக மாறி நிற்க, மக்கள் என்னை கொண்டாடுகிறார்கள்.

தேர்தல் வெற்றிக்கான அன்பை எப்படி சம்பாதிச்சீங்க?

எனது கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு குடும்பமும் என்னை அவர்கள் வீட்டு பெண்ணாகப் பார்க்கத் தொடங்கினர். என் தொகுதியைச் சேர்ந்த பெண் குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரின் ஆதரவும் எனக்கே இருந்தது. அவர்கள் எப்போதும் என்னுடனே இருக்கத் தொடங்கினர். என்னுடனே பயணித்தார்கள். அவர்களின் வீடுகளிலும் எனக்கே ஓட்டுபோட பெற்றோரை வலியுறுத்தினர். ஒரு வயதான அம்மா என்னிடம், “என் கை எப்போதும் இரட்டை இலைக்குதான் போகும். என் பேத்தி சொன்னதால் உனக்காக முதன் முதலாக கை மாறி உதய சூரியனுக்கு போடுறேன்மா” என்றார்.

15 ஆண்டுகளாக அதிமுகவின் ஆதிக்கம் நிறைந்த என் தொகுதியில், அவர்களே ஆட்சிப் பொறுப்பிலும் இருந்தனர். நான் எதிர்த்து நிற்பதை அறிந்து, ‘இதுவா? இது நின்னா நான் அசால்டா ஜெயிப்பேன்’ என்று எள்ளி நகையாடினர். ஆண்களும் பெண்களுமாக 7600 ஓட்டுகள் கொண்ட கருவேப்பம்பட்டி தொகுதியில் நான் ஒருத்தி மட்டுமே திருநங்கை. எல்லா வார்டிலும் 100 ஓட்டு வித்தியாசத்தில் 947 வாக்குகள் முன்னிலையில், 2698 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன்.

இந்த மாற்றத்தை எப்படி உணர்கிறீர்கள்?

தமிழ் நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மிகப் பெரிய அரசியல் கட்சியில் முதல் திருநங்கை கவுன்சிலர் நான். சமூகம் எங்களைப் புறக்கணித்து, கேலி கிண்டல் செய்கிறது என்கிற எண்ணம் தகர்ந்த நேரமது. திருநங்கைகளுக்கு அரசியல் தெரியாது என்கிற போலியான பிம்பத்தையும் நான் உடைத்திருக்கிறேன். பாலினச் சீண்டல்கள் தற்போது சுத்தமாக எனக்கில்லை. மரியாதையுடன் ரியாவா என அவர்கள் வீட்டுப் பெண்ணாய் என்னைப் பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் அடித்தளம் அமைத்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்.

அவர் இல்லையென்றால் நாங்கள் இல்லை. அவர் எங்களுக்கு பெயர் மாற்றம் செய்யவில்லை என்றால் அதே கேலி கிண்டல்களுடன் எங்கள் சமூகம் அப்படியேதான் இருந்திருக்கும். கலைஞர் ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் திருநங்கைகளுக்காக உதவியது தொடர்பாய் ஆயிரம் புகைப்படங்களை ஆதாரமாய் என்னால் காட்ட முடியும். தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆட்சியிலும் அதுவே தொடர்கிறது.

திருநங்கை சமூகம் சார்ந்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஊரார் என் மீது பூசிய சாயத்தை.. கிண்டல் கேலிகளை.. வீட்டை விட்டு நான் ஓடிய நிகழ்வுகளை மாற்றி இன்று அதே ஊரில் என் மக்களுக்காக நிற்கிறேன். அது எனது பெற்றோர் என்னைப் புரிந்து ஏற்றுக் கொண்டதால் தானே நிகழ்ந்தது. பாலினம் எல்லோருக்கும் வேறாக இருக்கலாம். ஆனால் உணர்வுகள் ஒன்றுதான்.

உடல் சவால்களை எதிர்கொள்ளும் குழந்தைகள் எந்த நிலையில் பிறந்தாலும் என் குழந்தையென ஏற்றுக்கொள்ளும் பெற்றோர், பாலினக் குளறுபடியோடு பிறக்கும் குழந்தைகளை ஏற்க மறுப்பதேன்? இது யார் குற்றம்? எந்தக் குடும்பத்திலும் இந்த குளறு படிகள் நிகழலாம்தானே. பெற்றோர் இதைப் புரிந்துகொண்டால், வீட்டைவிட்டுச் செல்லும் நிலை எந்த மாற்றுப் பாலினக் குழந்தைக்கும் நேராது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கணும்!! (மகளிர் பக்கம்)
Next post உடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! தெரியவில்லை என்றால் இதைப் படிங்க!! (அவ்வப்போது கிளாமர்)