ஆணைக்குழுக்கள் – பரிந்துரைகள்: தீர்வுக்காக எங்கும் தமிழ் மக்கள்!! (கட்டுரை)

Read Time:13 Minute, 10 Second

புத்தரை இன்னமும் தங்களது வீடுகளில் வைத்திருப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் ஏதோ ஒருவகையில் வயது கடந்தவர்கள். அவ்வாறு புத்தரை மதித்தவர்களுக்குப்பிறகு இப்போது புத்தரை ஓர் அவமானப் பொருளாகப்பார்க்கின்ற நிலைமையே தமிழர்களிடம் உருவாகியிருக்கிறது. அதற்குக் காரணம் சிங்களப் பெரும்பான்மையினரால் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவந்த செயற்பாடுகளேயாகும். யுத்தம், யுத்தகாலம், யுத்த இழப்புகள், யுத்தக் கொடுமைகள், இன்னல்கள் என்ற வரிசையுடன் கடந்த 40 வருடகாலம் அதற்கு இறுக்கமான காரணமாக அமைந்தன. சுதந்திரத்துக்குப்பின்னரான மொத்த வருடத்தை இதில் கணக்கில் கொள்ளாமலிருப்போம்.

இலங்கையில் ஒவ்வொன்றுக்கும் ஆணைக்குழுவையே நியமிக்கும் வழக்கம் ஒரு வரலாறாகவே இருந்து வருகிறது. அது போன்று ஓர் அரசாங்கம் புதிதாக ஆட்சிக்கு வந்தால், ஏற்கெனவே ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அனைத்துச் செயற்பாடுகளையும் தவறென்று கைவிட்டு புதிதாக தாம் ஒரு செயற்பாட்டைத் தொடங்குவதும் வரலாறுதான்.

அந்த ஒழுங்கில்தான் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக புதிதாக ஓர் ஆணைக்குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நியமித்தார். கடந்த ஜனவரி 21, பெப்ரவரி 12 ஆம் திகதிகளில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியூடாக புதிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

ஏற்கெனவே மனித உரிமை, சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுக்களும் ஏனைய குழுக்களும் விசாரணைகளை மேற்கொண்டு பல பரிந்துரைகளையும் அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளன. அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகள், பரிந்துரைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்யவேண்டும் என்பதே இப் புதிய ஆணைக்குழுவின் செயற்பாட்டு எல்லையாகும். உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையில் ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி, யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு இக்குழு அமைக்கப்பட்டது.

இவ் ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கை ஒன்றை பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதியிடம் கையளித்தும்விட்டது. அதில், பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு ஆணைக்குழு இணங்கவில்லை.

பயங்கரவாதத் தடைச்சட்டம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை அவர்களுடைய விடுதலை சார்ந்த போராட்டங்களை அடக்குவதற்காக உருவாக்கப்பட்டது. பல்வேறு நிலைமைகளுக்கப்பால் அது இப்போது எல்லாவற்றுக்குமானதாக உள்ளதாக விதந்துரைக்கப்படுகிறதே தவிர வேறொன்றுமில்லை. முன்னாள் சட்டமா அதிபர் டி.ஆர்.டி சில்வா தலைமையிலான நல்லிணக்க ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கை, ஓரளவுக்கேனும் சிங்களவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதாக இருந்தது. ஆனாலும் அது கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை.

நிலைமாறுகால நீதிச் செயற்பாட்டினை முன்னெடுக்கும் கடந்த அரசாங்கத்தின் செயற்பாட்டில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டாலும், காணாமல் போன அலுவலகம், இழப்பீட்டு காரியாலயம், உண்மையை கண்டறிதல் போன்ற செயற்பாடுகள் இன்னமும் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் சரியாக நடைபெற்றிருந்தால் வருடங்கள் தாண்டியும் வடக்கில் காணாமலாக்கப்பட்டவர்களது உறவினர்களது போராட்டம் தொடர்ந்த வண்ணமிருக்காது. இலங்கையில் யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்கள், மக்களின் பிரதிநிதிகளின் இணக்கப்பாட்டுடன், அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொறிமுறைகள் உருவாக்கப்படவேண்டும். அதுவே சிறந்த தீர்வாகவும் இருக்கக்கூடும்.

இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பது குறித்த சிந்தனைகள் தோற்றம்பெற்றாலும் இன்னமும் நம்மால் எதனையும் அடைந்துவிட முடியாமைக்கு என்ன காரணம் என்றே இந்த ஆணைக்குழுக்கள் சிந்தித்திருக்க வேண்டும்.

இதுவரை அமைக்கப்பட்ட பல பொறிமுறைகள் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதாக அமையாமல் நம்பிக்கை இழப்புக்கானதாகவே அமைந்திருக்கின்றன.

யுத்தத்தின்போது மனித உரிமை சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்படுவது வழமையே! இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வதற்கான மனப் பக்குவம் இருக்கும்போதுதான் அங்கு நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு கள் ஏற்படும். இல்லையானால் அதற்கான சுந்திரமான விசாரணை மேற்கொள்ள சுதந்திரமான பொறிமுறை ஒன்று அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்குள் அதன்மூலம் நம்பிக்கையை ஏற்படுத்தலாம். அதன் ஊடாக போராட்ட காலங்களிலும், போரின் போதும் மனித உரிமைகளை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் இதுவே இப் பொறிமுறையின் செயற்பாடாக இருக்க வேண்டும்.

நாட்டில் கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த ஒவ்வோர் ஆட்சியாளரும் முயற்சித்த விடயமே இனப்பிரச்சினைக்கான தீர்வு. இருந்தாலும் அது கைகூடவே இல்லை. அதற்கு முக்கியமான காரணமாக தென்னிலங்கை சிங்கள மக்களது எதிர்ப்பையே சொல்லமுடியும். மஹிந்த ஆட்சியில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமைக்கப்பட்ட எல்.எல்.ஆர்.சி. ஆணைக்குழுவின் பல பரிந்துரைகளும் தூக்கி வீசப்பட்டு, புதிதான பரிந்துரைகளுக்கு வழி தேடப்படுகிறது. ஆனால் பெரும்பான்மை பலம்மிக்க ஆட்சியானது அதனைச் செய்துமுடிக்கக்கூடியதே. ஆனால், சர்வதேசத்திடம் இருக்கும் பிடிகொடுப்புகளை விட்டுவிட்டு தனியே நகர முனையும் போக்குதான் இன்னமும் நம்பிக்கையீனத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.

முன்னைய ஆணைக்ககுழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல் தொடர்பாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வியாழக்கிழமை (05.08.2021) சாட்சியமளித்த கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன் “இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையே இறுதித் தீர்வாக இருக்கவேண்டும். என்றாலும் இன்றைய நிலையில் தென்னிலங்கை மக்கள் அதற்கு தயாரான நிலையில் இல்லை. அதனால் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளாமலேயே இதனை மேற்கொள்ளலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதே போன்று கடந்த 27.07.2021 அன்று இவ் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்துள்ள தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா, “இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண 1956இல் இருந்து ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் முயற்சித்தார்கள். என்றாலும் அந்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. இருப்பினும் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டுள்ள இந்த அரசாங்கத்தால் அதனை செய்யமுடியும். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் நாடு ஒருபோதும் முன் செல்ல முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவருடைய கருத்துகளும் இரண்டு விதமானதாக இருந்தாலும் இரண்டும் ஒன்றே. நாட்டு முன்னேற்றம், நாட்டின் அமைதியிலும் ஒருமித்த செயற்பாட்டிலுமே இருக்கிறது. வடக்கு கிழக்கு மக்களை வேறாகவும் ஏனைய பிரதேச மக்களை வேறாகவும் காணும் தன்மையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் வேண்டுகோள்.

எந்த ஓர் அரசாங்கத்திலும் இல்லாத அடக்குமுறை தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் இருந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக மாவீரர் தினம், முள்ளிவாய்க்கால் நினைவு, திலீபன் நினைவு, அன்னைபூபதி நிகழ்வு, கருப்பு ஜுலை நினைவு, டெலோ அமைப்பின் வெலிக்கடைப் படுகொலை நினைவு- தேசிய வீரர்கள் தினம், புளொட் அமைப்பின் வீரமக்கள் தினம், ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தியாகிகள் தினம், காணாமல்போனோர் நினைவுகள் என தடுப்புகளும், தடையுத்தரவுகளும், கைதுகளும், விசாரணைகளும் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. பாதுகாப்புத் தரப்பினரின் அதிகார எல்லைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் அமைக்கப்பட்டிருக்கும் முன்னைய ஆணைக்குழுகள், குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல், அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்தல் தொடர்பாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருக்கும் விசாரணை ஆணைக்குழு எதனைச் சாதிக்கும் என்பதுதான் புதிய கேள்வி.

இனப்பிரச்சினைக்கு தீர்வும் இன நல்லிணக்கமும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகவே காணப்படுகிறது. யுத்தத்தின்போதும் யுத்தத்துக்கு பின்னரும் தமிழ் மக்கள் எதிர்கொண்டுவரும் இன்னல்களுக்கு முடிவுகட்டுவதாக அதற்கான பதில் அமையுமாக இருந்தால் நல்லதே.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தன் இறந்த மனைவியிடமிருந்து வரும் PHONE CALL!! (வீடியோ)
Next post மணம் கமழும் மூலிகை சாம்பிராணி!! (மகளிர் பக்கம்)