By 17 August 2021 0 Comments

ஃபேஷன் A-Z!! (மகளிர் பக்கம்)

இன்னும் வேண்டும் என்பது தான் மனிதனுடைய இயல்பு. அது பொருளாக இருந்தாலும் சரி அல்லது பணமாக இருந்தாலும் சரி. அதேப் போல் தான் உடுத்தும் உடையும். கண்கவர் மற்றும் மக்கள் விரும்பும் இந்த ஆடைகள் பலதரப்பட்ட பரிணாம வளர்ச்சியினை கண்டுள்ளது. வரலாற்று நிகழ்வுகளிலிருந்து பார்க்கும் போது, முந்தைய காலத்தில் வாழ்ந்து வந்த ஆண்கள் கூட தங்களின் உடலில் ஓவியங்கள், பச்சை குத்துவது மற்றும் அணிகலன் கொண்டு தங்களை அலங்கரித்து அழுகு படுத்தி வந்துள்ளனர். அவர்கள் ‘இயற்கை அன்னை’யை கடவுளாக வணங்கி வந்தனர். இயற்கை மூலம் உருவான பல பொருட்களைக் கொண்டு வண்ணங்கள், டிசைன்கள் மற்றும் கைவினைப் பொருட்களை வடிவமைத்தனர். இயற்கை முறையில் எளிதான நுட்பங்கள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தி சாயமிடுதல், அச்சிடுதல் மற்றும் பல வகையான கலை மற்றும் கைவினைகளை அமைப்பதற்கு தொடக்கமாக மாறியது.

ஊசி மற்றும் நூல் உதவியுடன் நாம் அணிந்திருக்கும் உடையினை அலங்காரம் செய்வதைதான் நாம் எம்பிராய்டரி என்கிறோம். பண்டைய காலத்தில் இருந்தே பெண்கள் இது போன்ற அழகான மற்றும் மென்மையான எம்பிராய்டரி டிசைன்களை உருவாக்குவதில் திறமையானவர்களாக திகழ்ந்துள்ளனர். ஆரம்ப காலத்தில் ஜவுளி, கூடை பின்னுதல், நெசவு, மிதியடி தைப்பது போன்ற கைவண்ணத்தில் இருந்து தான் பெரும்பாலான எம்பிராய்டரி டிசைன்கள் உருவாகியுள்ளன. அந்த காலத்தில் இரண்டு துணிகள் மற்றும் தோல்களை ஒன்றாக இணைக்க தையல்கள் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் அழகான உடை மற்றும் அலங்கார பொருட்கள் அமைக்கப்பட்டன. பிற்காலத்தில் அதுவே எம்பிராய்டரி டிசைன்களாக வடிவமெடுத்தது.

இந்தியாவில், 16ம் நூற்றாண்டில் இருந்து வந்த சிந்து சமவெளி நாகரிகத்தில் சுவற்றில் உள்ள சித்திரங்கள், சிற்பங்கள் மூலம் தையல்கள் மற்றும் எம்பிராய்டரிகள் பழக்கப்பட்டு இருப்பதாக வரலாற்று சுவடுகள் தெரிவிக்கின்றன. எம்பிராய்டரியின் ஒட்டுமொத்த வரலாற்று வளர்ச்சியைப் பற்றிய ஆழமான பகுப்பாய்வைப் பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஆனால் இதன் தோற்றத்தின் மூலம் ‘எம்பிராய்டரி’ என்ற ஒரு பொது தலைப்பிற்கு கீழ் பல மாறுபட்ட நுட்பங்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை கண்டறிவது மிகவும் எளிது.

இந்தியாவைப் பொறுத்தவரை இங்கு வாழும் மக்கள் மற்றும் பழக்கவழக்கங்களில் இருந்து எம்பிராய்டரியின் மாறுபட்ட டிசைன்களை கண்டறிய முடியும். உதாரணத்திற்கு எம்பிராய்டரி பருத்தி, பட்டு, கம்பளி, வெல்வெட்… என ஒவ்வொரு துணிகளின் தன்மைக்கு ஏற்ப இதன் டிசைன்கள் மாறுபடும். இதனால் அந்த துணிகளுக்கு ஒரு அழகான தோற்றத்தை கொடுக்கும். இந்தியர்கள் தங்கள் அற்புதமான கலைத்திறனுக்காக உலகப் புகழ்பெற்றவர்கள்.

ஆனால் அவை அனைத்தும் பாதுகாக்கப்பட்டு வந்தாலும், மேற்கத்திய வரலாற்று மையங்கள் மூலம் தான் இந்தியர்களால் அமைக்கப்பட்ட கலை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு வரும் ஏராளமான பார்வையாளர்கள், கவிஞர்கள், ஆய்வாளர்கள், சுற்றுலாப் பயணிகள் நம்முடைய நெசவு மற்றும் கலைப் பொருட்களை இன்றும் மிகவும் விரும்புகின்றனர். கிமு 3 முதல் 5ம் ஆண்டு காலம் வரை சீனாவில் எம்பிராய்டரி கலை புழக்கத்தில் இருந்து வந்துள்ளது. தையல், பேட்ச் அமைத்தல், மென்டிங் மற்றும் துணிகளை வலுப்படுத்தவும் எம்பிராய்டரி கலை பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் மூலம் தையல் கலையில் புதிய நுட்பங்கள் உருவாக்கவும் ஊக்குவிக்கவும் எம்பிராய்டரி உதவியது.

ஸ்வீடனில் இடம் பெயர்வு (சுமார் 300 முதல் 700 CE) காலத்தின் போது, ரன்னிங் தையல், பின்புறமாக போடப்படும் தையல், ஸ்டெம் தையல், டெய்ரலின் பட்டன் ஹோல் தையல் மற்றும் விப் தையல் போன்றவை ஒரு துணியின் நுனிப் பிரியாமல் இருக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அப்போது இவை இதற்காகவே மட்டுமே இல்லாமல் ஒரு துணியினை மேலும் அழகுப்
படுத்தவும் பயன்படுத்தப்பட்டது. தொல்பொருள் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பில் கிமு 2000 ஆம் ஆண்டில், ஊசிகள், எம்பிராய்டரி துணிகள் போன்றவை பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்துள்ளனர். இது தான் பின்னர் எம்பிராய்டரி என்ற நுட்பம் உருவாக காரணம். 16 ஆம் நூற்றாண்டின் பேரரசரான அக்பர் அவர்களுக்கு துணிகள் மேல் இருக்கும் மோகத்தின் காரணமாக, அவரின் ஆட்சிக் காலத்தில் இந்த கலைக்கு மேலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

லாகூர், ஆக்ரா, ஃபதேபூர் மற்றும் அகமதாபாத்தில் சுற்றுவட்டாரங்களில் உள்ள பல பிரபலமான பட்டறைகள் அழகான எம்பிராய்டரி வேலைப்பாடுகளுக்கு புகழ் பெற்றவை. கண்கவர் இந்த வேலைப்பாடுகள் இன்றும் அங்குள்ள மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்து வருபவர்களையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. எம்பிராய்டரி கலை இடைக்கால இஸ்லாமிய உலகில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. முஸ்லீம் சமூகத்தில், எம்பிராய்டரி உடைகள் அந்தஸ்தின் அடையாளமாக கருதப்பட்டு வந்ததால், அது மேலும் இந்த கலைக்கான மதிப்பினை அதிகப்படுத்தியது. இஸ்லாமிய ஆதிக்கம் செலுத்தும் சில நகரங்களான டமாஸ்கஸ், கெய்ரோ மற்றும் இஸ்தான்புல் ஆகியவற்றில் கைக்குட்டை, சீருடை, கொடிகள், காலணிகள், அங்கிகள், டூனிக்ஸ், குதிரை பொறிகள், பைகள், லெதர் பெல்ட்டுகள் என அனைத்து உடைகளிலும் எம்பிராய்டரி டிசைன்கள் அமைக்கப்பட்டு இருக்கும்.

பண்டைய காலங்களில் எம்பிராய்டரி பெரும்பாலும் தங்கம் மற்றும் வெள்ளி நூல்களைப் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில் இதன் தேவைகள் அதிகரிக்க ஆரம்பித்ததன் விளைவாக எம்பிராய்டரி குடிசைத் தொழிலாக துவங்கப்பட்டு, 500 முதல் 800க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது. பண்டைய பெர்சியா, இந்தியா, சீனா, ஜப்பான், பைசான்டியம் மற்றும் இடைக்கால மற்றும் பரோக் ஐரோப்பா நாடுகளில் எம்பிராய்டரி கலை கொண்ட துணியினை பயன்படுத்துவது அவர்களின் அந்தஸ்தை குறிப்பிடும் அடையாளமாக திகழ்ந்தது.

இந்தியா விரிவான கடலோரக் கோட்டைக் கொண்ட நாடு. அதனால் போர்ச்சுகல், ஹாலந்து, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளுடன் பல நூற்றாண்டு காலமாக வர்த்தகம் செழிக்க உதவியது. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் கைவினைப் பொருட்கள் மேல் ஏற்பட்ட மோகம் காரணமாக வர்த்தகத்திற்கு பதில் அந்நாட்டின் மேல் வெளிநாட்டினர் படை எடுக்க ஆரம்பித்தனர். வங்காளம் மற்றும் குஜராத்தை சுற்றியுள்ள பகுதிகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஐரோப்பிய நிறுவனங்களின் வர்த்தக மையமாக இருந்தன. இதன் மூலம் அதிக அளவு எம்பிராய்டரி மற்றும் ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஜவுளி, எம்பிராய்டரி வேலை மற்றும் அதன் எண்ணற்ற வடிவமைப்புகளைப் பொறுத்தவரை நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் தனித்துவமானது. மக்களின் பன்முகத்தன்மை, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிப் பொருள், அடிப்படை துணி, சுற்றுச்சூழலின் செல்வாக்கு, மரபுகள் மற்றும் சடங்குகள், திருவிழாக்கள், தெய்வம், தொழில், திறமைகள், விருப்பங்கள், நம்பிக்கைகள் மட்டுமல்லாமல் தையல் மற்றும் தையல் முறையில் ஏற்பட்ட நுட்பங்கள் அனைத்தும் எம்பிராய்டரியினை தனித்துவமாக எடுத்துக்காட்டின.

இருப்பினும், ஒவ்வொரு மாநிலத்தை சார்ந்த மக்கள்தான், அழகான மற்றும் தனித்துவமான எம்பிராய்டரி டிசைன்கள் உருவாக முன்னோடிகளாக கருதப்படுகிறார்கள். மேலும், இந்த எம்பிராய்டரி டிசைன்கள் அதனை அமைப்பவர்களை பொருத்து அதன் டிசைன்கள் மற்றும் வண்ணங்கள் மாறுபடும். உதாரணத்திற்கு பழங்குடியினர் அமைக்கும் எம்பிராய்டரி டிசைன்களும் நகர்ப்புறத்தில் வடிவமைக்கப்படும் டிசைன்களும் வித்தியாசப்படும். இவ்வாறு ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடும் எம்பிராய்டரி டிசைன்கள் மற்றும் அதன் அமைப்புகள் குறித்து அடுத்த இதழில் தெரிந்து கொள்ளலாம்.Post a Comment

Protected by WP Anti Spam